Sunday, January 6, 2013

புற நானூறு - வராத குதிரை


புற நானூறு - வராத குதிரை 


இலக்கியங்கள் பொதுவாக அரசர்களையும், அவர்களின் வீர தீர பிரதாபங்களையும், அவர்களின் உறவுகளையும் பற்றியே பேசுகின்றன. அப்படி எழுதுவதால், அரசர்களிடம் இருந்து பரிசு கிடைக்கலாம். அரசியல் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாதாரண மக்களை பற்றி யார் கவலைப் படப் போகிறார்கள். சொல்லப் போனால், போர்களினால் அதிகம் பாதிக்கப் படுவது சாதாரண மக்கள் தான். குடும்பத் தலைவன் போரில் இறந்து போனால், அந்த குடும்பம் என்ன பாடு படும். இறந்தவனின் மனைவி, அவன் பிள்ளைகள் என்று அவர்களின் துக்கம் சொல்லி மாளாது. 

போரும், அதனால் எப்படி சாதாரண மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பது பற்றியும் புற நானூறு பேசுகிறது. 

போர் முடிந்து விட்டது. அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் அவர்கள் வீட்டு ஆண்கள் வீடு வந்து சேர்ந்து விட்டார்கள். என் கணவன் இன்னும் வரவில்லை. குட்டி பையன் வேறு அப்பா எங்கே , அப்பா எங்கே என்று கேட்கிறான். இரண்டு பெரிய ஆறுகள் ஒன்றோடு ஒன்று கலக்கும் இடத்தில் உள்ள பெரிய மரம் எப்படி விழுந்து விடுமோ அது போல் அவனும் விழுந்து விட்டானோ ?
 
பாடல் 


மாவா ராதே; மாவா ராதே;
எல்லார் மாவும் வந்தன; எம்இல்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வன் ஊரும் மாவா ராதே;

இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல,
உலந்தன்று கொல்அவன் மலைந்த மாவே.

பொருள் 

மாவா ராதே; மாவா ராதே = குதிரை வரவில்லையே, குதிரை வரவில்லையே (மா = குதிரை)

எல்லார் மாவும் வந்தன = அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் குதிரைகள் வந்து விட்டன, அதாவது அவர்கள் போரில் இருந்து திரும்பி விட்டார்கள்

எம்இல் = எங்க வீட்டில்

புல்லுளைக் குடுமிப் = சிறு புற்கள் முளைத்ததை போல உள்ள குடுமியை கொண்ட 

புதல்வற் றந்த = புதல்வனை தந்த

செல்வன் = செல்வன், அதாவது சின்ன பையனின் அப்பா

ஊரும் மாவா ராதே = அவரின் குதிரை ஊர் வந்து சேரவில்லை

இருபேர் யாற்ற = இரண்டு பெரிய ஆற்றின்

ஒருபெருங் கூடல் = ஒன்றாக மோதி கலக்கும் போது

விலங்கிடு பெருமரம் = குறுக்கே நின்ற பெரிய மரம்

போல = போல 

உலந்தன்று கொல் = விழுந்ததை போல் 

அவன் மலைந்த மாவே. = அவன் போரிட கொண்டு சென்ற குதிரையே 

அவனுக்கு ஏதோ ஆகி இருக்குமோ என்று அவள் நினைக்க கூட அஞ்சுகிறாள். குதிரைக்கு ஏதோ ஆகி விட்டது, அதனால் தான் வரவில்லை போல என்று நினைக்கிறாள். 

இரண்டு ஆறுகள் கலப்பது , இரண்டு அரசர்கள் மோதிக் கொள்வதற்கு உதாரணம். இரண்டு ஆறுகள் மோதி கலந்தாலும், பின் அவை ஒரே ஆறாக மாறி விடும். அது போல் வென்ற அரசன், தோற்ற அரசனின் நாட்டை தன்னோடு சேர்த்துக் கொண்டு அதை ஒரே நாடாக ஆக்கி விடுவதற்கு உதாரணம். 

ஆறுகள் கலக்கும் இடத்தில் உள்ள மரம், அடியோடு விழுந்து விடும்...மண் அரித்து, வேர் பிடிப்பு விட்டு, மரம் சாய்ந்து விடும். அது போல், இவர்களின் சண்டையில் என் கணவன் விழுந்து விட்டானோ என்றோ பயப்படுகிறாள். 

வீட்டிலே சின்ன பையன் இருக்கிறான். கணவன் இல்லாமல்,  அவனை எப்படி வளர்த்து பெரிய ஆளாக ஆக்குவது என்ற கவலை அவளை வாட்டுகிறது. 

குதிரை வரவில்லையே என்று சொல்லி இத்தனை உணர்சிகளையும் கொண்டு வரும் அருமையான பாடல். 



4 comments:

  1. Without your introduction it is very difficult to understand the poem.Doing a great job.Thnks a lot.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. குதிரை வந்தால், அதன் மேல் கணவனும் வருவான். அதை சொல்லாமல் சொல்கிறாள். அருமையான, உணர்ச்சி நிறைந்த பாடல். நன்றி.

    ReplyDelete