Saturday, November 9, 2013

திருக்குறள் - வையத்தின் வானம்

திருக்குறள் - வையத்தின் வானம் 



ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

ஐயத்தை நீங்கி தெளிந்தவர்களுக்கு இந்த வையமும் வானமும் அருகில் இருக்கும்.


ஐயத்தின் = ஐயத்தில் இருந்து

நீங்கித் = நீங்கி

தெளிந்தார்க்கு = தெளிவு பெற்றவர்களுக்கு

வையத்தின் = உலகின்

வானம் = வானமும்

நணிய = அருகில்

உடைத்து = இருக்கும், கிடைக்கும்


இது திருக்குறள். 

நாம் எதையும் அறிந்து கொள்ள முயலும் போது மூன்று நிலைகள் நிகழும். 

ஐயம், திரிபு, தெளிவு. 

ஐயம் திரிபற கற்றல்   என்று சொல்லுவார்கள்.

ஐயம் என்றால் இதுவோ அதுவோ என்ற சந்தேகம் 

திரிபு என்றால் ஒன்றை மற்றொன்றாக நினைப்பது. சந்தேகம் இல்லை, மாற்றி , தவறாக கொள்வது. 

இரவில் வழியில் நெளிவாக ஒன்று கிடக்கிறது 

பாம்பா , கயிறா என்று சந்தேகம் கொள்வது ஐயம். 

பாம்பை கயிறு என்றோ, கயிறை பாம்பு என்றோ மாற்றி உறுதியாக எண்ணுவது திரிபு. தவறுதான் இருந்தாலும்  அறிவு  அப்படி ஒரு முடிவை எடுக்கிறது. 


ஐயம் நீங்கி தெளிவு பெற்றவர்கள் அதாவது ஐயமும், திரிபும் நீங்கியவர்கள் இந்த உலகத்தில் இருக்கும்போதே வீடு பேறு என்று சொல்லும் அந்த மறு உலகத்தையும் அருகில் காண்பார்கள். 

பரிமேல் அழகர் உரை 

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு - ஐயத்தினின்று நீங்கி உணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணிய துடைத்து - எய்தி நின்ற நில உலகத்தினும் எய்தக்கடவதாய வீட்டுலகம் நணித்தாதலுடைத்து. 

(ஐயமாவது, பலதலையாய உணர்வு. அஃதாவது மறுபிறப்பும் இருவினைப் பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றின் துணிவு பிறவாது நிற்றல், பேய்த்தேரோ புனலோ? கயிறோ அரவோ? எனத்துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றான் பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு ஆகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோகமுதிர்ச்சி உடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வார் ஆகலின், அவரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் என்றும் அவர்க்குஅவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியல்உணர்வு தூர்ந்துவரும் ஆகலின், அதனைப் பயன் மேலிட்டு 'வையத்தன்வானம் நணியதுடைத்து' என்றும் கூறினார். கூறவே ஐயஉணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.)








1 comment:

  1. 1. உனது எளிய நடையில், பரிமேலழகர் உரைக்கு உரை தருக.

    2. "பிறர் மதம்களைந்து தம் மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பு". எனவே, "அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென" நாம் நமது அனுபவத்தால் பரிசீலிக்க வேண்டும். ஆகா, என்ன ஒரு அழகான கருத்து. பைபிள் ஆகட்டும், குரான் ஆகட்டும், கீதையாகட்டும் ... எதுவானாலும் நாம் யோசித்துப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

    நன்றி.

    ReplyDelete