Wednesday, January 29, 2014

திருவாசகம் - அமுதம் வேண்டாம்

திருவாசகம் - அமுதம் வேண்டாம்


இறை அருள் எங்கும் பொங்கி வழிகிறது.

மெல்லிய வானத்தில், தலை கலைக்கும் தென்றலில், உயிர் நனைக்கும் மழையில்,  கால் உரசும் கடல் அலையில் புன்னைகைக்கும் பூக்களில், குழந்தைகளின் கள்ளமில்லா சிரிப்பில், மனைவியின் கள்ளச் சிரிப்பில், உணவில், நீரில், இசையில் எங்கெங்கும் அருள் பிரவாகம் கரை புரண்டு ஓடுகிறது.

நமக்கு தான் நேரம் இல்லை...இதை பார்கவோ, அனுபவிக்கவோ.

பணம், பொருள், புகழ், அதிகாரம், செல்வாக்கு, எதிர்காலம் என்று அலைந்து கொண்டு இருக்கிறோம்.

நல்லனவற்றை விடுத்து அல்லனவற்றின் பின்னால் சாமாறே விரைகின்றோம்.

புலன்களுக்கும், அறிவுக்கும் ஒரு முடிவில்லா போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.

அறிவு ஒன்றைச் சொல்கிறது. புலன் அதற்கு எதிர் மாறாக வேறொன்றைச் சொல்கிறது. இடையில் கிடந்து அலைகிறோம்.

இந்த போராட்டத்தை மணிவாசகர் படம் பிடிக்கிறார்.


பாடல்

செழிகின்ற தீப் புகு விட்டிலின், சில் மொழியாரில் பல் நாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய்? வெறி வாய் அறுகால்
உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
வழி நின்று, நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே.

பொருள் 

செழிகின்ற = செழிப்பாக, கொளுந்து விட்டு எரியும்

தீப் புகு விட்டிலின் = தீக்குள் செல்லும் விட்டில் பூச்சியைப் போல. விட்டில் என்னமோ வெளிச்சம் தேடித்தான் போகிறது. சூட்டில் வெந்து சாகிறது. வெளிச்சத்திற்கு கூடவே சூடும் வரும் என்று தெரியாது. புலன் இன்பங்கள் வேண்டும் என்று தான் போகிறோம். சுடும் என்று தெரியாமல்.

ஒவ்வொரு இன்பத்தின் பின்னாலும் ஒரு துன்பம் இருக்கிறது.

இன்பத்தை பார்க்கும் போது, அதன் பின்னால் மறைந்து கிடக்கும் துன்பத்தையும் பார்க்க வேண்டும்.

இல்லை என்றால் விட்டிலுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?


சில் மொழியாரில் = "சில்" (chill ) என்று பேசும்  மொழியார்.சில வார்த்தைகள் மட்டும் பேசும் பெண்கள்.

 பல் நாள் = பல நாட்கள்

விழுகின்ற என்னை = விழுந்து கிடக்கின்ற என்னை. விழுவது என்றால் தெரியாமல் செய்வது. தடுக்கி விழுவது. யாரும் வேண்டும் என்றே விழுவது கிடையாது. அறியாமை.

விடுதி கண்டாய்? = என்னை விட்டு விடுவாயா ? விட மாட்டாய்

வெறி = தேன்

வாய் = வாயில் கொண்ட

அறுகால் = ஆறு காலை கொண்ட வண்டுகள்

உழுகின்ற = ஆழமாக தேடுகின்ற

பூ = பூக்களை கொண்ட

முடி = முடியை உள்ள

உத்தரகோசமங்கைக்கு அரசே = திரு உத்தரகோசமங்கைக்கு அரசே,

வழி நின்று = என் வழியில் நீ வந்து நின்று

 நின் அருள் ஆர் அமுது = உன்னுடைய அமுதத்தினை எனக்கு நீ என் வாயில் ஊட்டிய போதும்

ஊட்ட மறுத்தனனே = நான் வேண்டாம் என்று மறுத்தேனே


சிவனின் தலை மேல் பூ இருக்கிறது. அதில் தேன் இருக்கிறது. 

அந்த தேனிக்கு சிவன் வேண்டாம், அந்த தேன் தான் வேண்டும். 

நாமும் அந்த தேனீ போலத்தானோ ?...தேனைத் தேடுகிறோம்...

ஒன்றை நோக்கிப் போகிறோம் என்றால் , வேறு ஒன்றை விட்டு விலகிப் போகிறோம் என்று அர்த்தம். 

நாம் எதைத் தேடுகிறோம் ? அது முக்கியம் 

எதை விட்டு விலகிப் போகிறோம் ? அது அதை விட முக்கியம். 

இராமாயணம் - வயிற்றிடைவாயினர்

இராமாயணம் - வயிற்றிடைவாயினர்


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள்.

அவளைச் சுற்றி அரக்கியர் காவல் இருக்கின்றனர்.

அந்த அரக்கியர் எப்படி இருப்பார்கள் ? கம்பன் சொல்லுகிறான்...

"வாய் வயிற்றில் இருக்கும். நெற்றி வளைந்து இருக்கும். கண்கள் இரண்டும் ஏதோ குழ போல இருக்கும். கொடிய பார்வை. அவர்களின் பற்களுக்கு இடையே யானை, பேய், யாளி போன்றவை படுத்து உறங்கும். குகை போல பெரிய வாய்"

பாடல்

வயிற்றிடைவாயினர்; வளைந்த நெற்றியில் 
குயிற்றியவிழியினர்; கொடிய நோக்கினர்;
எயிற்றினுக்குஇடை இடை, யானை, யாளி, பேய்,
துயில் கொள்வெம் பிலன் என, தொட்ட வாயினர்.

பொருள்


வயிற்றிடைவாயினர் = வாய் வயிற்றிக்கு இடையில் இருக்கும். அப்படி என்றால் என்ன அர்த்தம். வாயும் வயிறும் ஒன்றாக இருக்கும். எந்நேரமும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பர்கள். வாயில் போட்டு, மென்று தின்று, அது வயிற்றிற்கு போவதற்கு நேரம் ஆகும். வாயை வயிற்றில் வைத்து விட்டால் எப்படி இருக்கும் ? அரக்கியர் என்பவர் பெரும் தீனி தின்பவர்கள். அல்லது, பெரும் தீனி தின்பவர்கள் அரக்கர்கள்.

ஒரு படி மேலே போவோம். அரக்கர் என்பவர் புலன்களால் செலுத்தப் படுபவர்கள். சாப்பாட்டைக் கண்டால் உடனே அதை தின்ன வேண்டும்.

அழகான பெண்ணைக் கண்டால் அவளை அடைய வேண்டும், அவள் மாற்றான் மனைவியாக இருந்தாலும்.

புலன்களால் செலுத்தப் படும் யாரும் அரக்கர்/அரக்கியர் தான். 

வளைந்த நெற்றியில் = வளைந்த நெற்றியில்

குயிற்றியவிழியினர் = குழி பறித்து அதில் பதித்து வைத்ததை போன்ற கண்களைக் கொண்டவர்கள்

கொடிய நோக்கினர் = கொடூரமான பார்வை கொண்டவர்கள். கண்ணில் அருள் நோக்கம் வேண்டும்.

எயிற்றினுக்குஇடை இடை = பற்களுக்கு இடையே

யானை, யாளி, பேய் = யானை, யாளி, பேய்

துயில் கொள் = படுத்து தூங்கும்.

வெம் பிலன் என = பிலம் என்றால் குகை. வெம்பிலன் என்றால் பெரிய குகை

தொட்ட வாயினர் = போன்ற பெரிய திறந்த வாயினர். குகைக்கு ஏது கதவு. உள்ளே செல்லும் உணவுக்கும், வெளியே செல்லும் வார்த்தைகளுக்கும் ஒரு கட்டுபாடு  கிடையாது. அது அரக்க குணம்.

கம்பர் ஏதோ அரக்கர்களை சொல்லி விட்டு போகிறார் என்று நினைக்கக் கூடாது.

இந்த குணங்கள் அரக்கர்களுக்கு இருக்கும்.

இந்த குணங்கள் இருப்பர்வர்கள் அரக்கர்கள்.

நம்மில் எத்தனை அரக்கர்களோ ?



Tuesday, January 28, 2014

திருவாசகம் - இறைவன் கருணை வேண்டாம்

திருவாசகம் - இறைவன் கருணை வேண்டாம் 


மனித மனம் விசித்திரமானது. 

நல்லது என்று தெரிந்தும் அதை நாடாமல், கெட்டது என்று தெரிந்தும் சிலவற்றின் பின்னால் போகிறது. 

ரொம்ப பெரிய விஷயங்களுக்கு எல்லாம் போக வேண்டாம். 

நம் நடை முறை வாழ்க்கையை பார்ப்போம்....

இனிப்பு, எண்ணெய் பலகாரங்கள் , காப்பி, டீ , ஐஸ் கிரீம் இது எல்லாம் உடலுக்கு கெடுதல் என்று தெரியும். விடுகிறோமா? 

பச்சை காய் கறிகள், பழங்கள் நல்லது என்று தெரியும், அதைத் தோடுகிரோமா ? இல்லையே 

இறை  உணர்வுக்கும்,உலக வாழ்க்கைக்கும் இடையில் கிடந்து  போராடுகிறோம்.

நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில் கிடந்து  அலைகிறோம் .  

கெட்டதை விட  முடியவில்லை.

நல்லதை நோக்கி போக முடியவில்லை. 

வாழக்கை ஒரு முடிவில்லா போராட்டமாக இருக்கிறது. 

நமக்கு மட்டும் இல்லை, மாணிக்க  வாசகருக்கும்.

இறைவன் தன் கருணையைத் தருகிறான். அது வேண்டாம் என்று விட்டு விட்டு , உலக இன்பங்களின் பால் அலையும் என்னை கை விட்டு விடாதே என்று இறைவனை கெஞ்சுகிறார் மணிவாசகர். 

பாடல் 


வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்? வெண் மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
தெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே.


பொருள் 

வளர்கின்ற நின் கருணைக் = இறைவனின் கருணை நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

கையில் வாங்கவும் நீங்கி = கையில் வாங்கினேன், பின் அதை விட்டு விட்டு நீங்கினேன். வேண்டாம் என்று விட்டு விட்டு ஓடினேன் 

இப்பால் = இந்தப் பக்கம் 

மிளிர்கின்ற என்னை = உலக இன்பங்களில் திளைத்து மகிழ்ந்து இருக்கின்ற என்னை 

விடுதி கண்டாய்? = கை விட்டு விடாதே 

வெண் மதிக் கொழுந்து ஒன்று = சிவனின் தலையில் பிறைச் சந்திரன் இருக்கிறது. அது ஒரு கீற்று. அதைப் பார்க்க ஏதோ ஒரு மரத்தின்  தளிர் போல இருக்கிறதாம். கொழுந்து என்றால் இளம் தளிர். 

ஒளிர்கின்ற நீள் முடி = ஒளி பொருந்திய நீண்ட மூடி கொண்ட 

உத்தரகோசமங்கைக்கு அரசே = திரு உத்தர கோசை என்ற ஊருக்கு அரசனே 

தெளிகின்ற பொன்னும்  மின்னும் = சிறந்த பொன்னைப் போல மின்னும் 

அன்ன தோற்றச் செழும் சுடரே = தோற்றம் கொண்ட சுடர் விடும் ஒளியை போன்ற தோற்றம் கொண்டவனே 

Maanikka Vaasgar brings out the struggle between spiritual life and materialistic life in every one of us. 



Sunday, January 26, 2014

இராமாயணம் - சீதையை காணவில்லை

இராமாயணம் - சீதையை காணவில்லை 


அனுமன் இலங்கைக்கு போய்விட்டு வந்தான். எல்லோரும் ஆவலாய் காத்து இருக்கிறார்கள், அனுமன் நல்ல செய்தி கொண்டு வந்திருப்பான் என்ற நம்பிக்கையில்.

ஆனால், அனுமனோ, "நான் சீதையை காணவில்லை " என்கிறான்.

நிறைய பேர் "கண்டேன் சீதையை" என்று கூறினான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 முதற்கண், "கண்டேன் சீதையை" என்ற தொடர் கம்ப இராமாயணத்தில்  இல்லை.

அது மட்டும் அல்ல, சீதையை கண்டேன் என்று ஒரு வேளை அனுமன் கூறி இருந்தால், இராமன் மனதில் எழுகிறதோ இல்லையோ, மற்றவர்கள் மனதில் "சீதை எப்படி இருக்கிறாள்...கற்போடு இருக்கிறாளா " என்ற சந்தேகம் இழையோடலாம்.

அது அவ்வளவு நல்லது அல்ல.

அனுமன் சொல்கிறான் "நங்கையை கண்டேன் அல்லேன்"  என்றான்.

கேட்பவர்கள் மனதில் உடனே என்ன தோன்றும்?

சீதையை பார்க்க வில்லையா ? அப்ப என்னதான் பார்த்தாய் என்று கேட்கத் தோன்றும் அல்லவா ?

அந்த கேள்விக்கு விடையாக அனுமன் சொல்கிறான் " உயர்குடி பிறப்பு என்பதும்,  பொறுமை என்பதும், கற்பு என்பதும் ஒன்று சேர்ந்து இருக்கக் கண்டேன்"

இப்போது சீதையை கண்டது மட்டும் அல்ல, அவள் நல்ல நிலையில் இருக்கிறாள் என்பதும் சொல்ல முடிகிறது அல்லவா? அவள் எப்படி இருக்கிறாள் என்ற கேள்வி எழாமலேயே அதை சொல்லி முடிக்கிறான் அனுமன். 

பாடல்

விற் பெருந் தடந் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,
 நற் பெருந் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்; 
இற் பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும், 
கற்பு எனும் பெயரது ஒன்றும், களி நடம் புரியக் கண்டேன்.


பொருள்

விற் = வில்

பெருந் = பெரிய , வலிய

தடந் தோள் வீர! = வீரமான தோள்களை கொண்ட வீரனே

வீங்கு நீர் = நிறைந்த நீரால் சூழப் பட்ட

இலங்கை = இலங்கை

வெற்பில் = திரிகூட மலையின் மேல் உள்ள இலங்கை

நற் பெருந் = நல்ல பெரிய

தவத்தள் = தவம் செய்தவளான

ஆய நங்கையைக் = பெண்ணை

கண்டேன் அல்லேன் = காணவில்லை

இற் பிறப்பு என்பது ஒன்றும் = உயர் குடிப் பிறப்பு என்பதும்

இரும் பொறை என்பது ஒன்றும் = பொறுமை என்ற ஒன்றும் 

கற்பு எனும் பெயரது ஒன்றும் = கற்பு என்ற ஒன்றும்

களி நடம் புரியக் கண்டேன் = மகிழ்வுடன் நடனம் புரியக் கண்டேன்



பெண்ணிற்கு இலக்கணம் மூன்று சொல்கிறான்....

குடிப் பிறப்பு, பொறுமை, கற்பு.  இந்த மூன்றும் இலங்கையில் ஒன்றாக ஒரு இடத்தில்  இருக்கும் என்றால் அது சீதையிடம் மட்டும் தான் இருக்கும் என்பது சொல்லாமல்  சொன்ன கருத்து. 


Saturday, January 25, 2014

கந்தர் அநுபூதி - ஆசையை விட வழி

கந்தர் அநுபூதி - ஆசையை விட வழி 


எல்லா அற நூல்களும் ஏறக் குறைய ஆசையே துன்பத்திற்கு காரணம், ஆசையை விட்டால் துன்பம் இல்லை என்று கூறுகின்றன.

ஆனால் ஆசையை எப்படி விடுவது ?

அதற்கு முன்னால், ஆசை எப்படி வருகிறது என்று தெரிய வேண்டாமா ?

ஆசை இல்லாத வாழக்கை ஒரு வாழ்க்கையா ? மரக் கட்டை போல, ஒரு கல்லைப் போல வாழும் வாழக்கை ஒரு வாழ்க்கையா ?

எல்லாவற்றிற்கும் நாலு வரியில் பதில் சொல்கிறார் அருணகிரிநாதர்.

ஆசை புலன்கள் வழியாக வருகிறது.

புலன்கள் இருக்கும் வரை ஆசை இருக்கும். ஆசையை ஒழிக்க முடியாது. ஆசை, மனித இயற்கை.

ஆனால், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று அலையும் மனதை வேறொரு  ஆசை மேல் திருப்பலாம்.

அது, இறைவன் மேல் கொள்ளும் ஆசை. அப்படி இறைவன் மேல் ஆசை கொண்டால், மனம் உலக ஆசைகளை விட்டு விடும்.

பாடல்

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்

ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

பொருள் 

கைவாய் = கையில் உள்ள

கதிர் வேல் = ஒளி வீசும் வேல்

முருகன் = முருகன்

கழல் பெற்று = திருவடிகளைப் பெற்று

உய்வாய் = வழி காண்பாய்

மனனே = மனமே

ஒழிவாய் ஒழிவாய் = விலகுவாய் விலகுவாய்

மெய் = உடல்

வாய் = வாய் (நாக்கு)

விழி = கண்

நாசியொடும் = மூக்கோடு

செவி ஆம் = காது என்ற


ஐவாய் =  ஐந்து புலன்கள்

வழி செல்லும் அவாவினையே = வழியாக செல்லும் ஆசைகளையே


திரு மந்திரம் - நிலையாமை

திரு மந்திரம் - நிலையாமை 


மரணம் என்பது நிச்சயம் என்று தெரிந்தாலும் , அது என்னோவோ இப்போதைக்கு இல்லை, என்றோ வரப் போகிறது என்று மனிதன் நினைக்கிறான். என்றோ என்றால் நாளையோ, நாளை மறுதினமோ, அடுத்த வாரமோ இல்லை...பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் இருக்கிறது ஒவ்வொருவனும் நினைக்கிறான்.

ஏறக்குறைய நமக்கு இல்லை என்றே நினைக்கிறான்.

இருப்பது பொய் போவது மெய் என்ற நினைப்பிருந்தால் மனிதன் இவ்வளவு ஆட்டம் போடுவானா ?

நல்ல காரியங்களை அப்புறம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறான்.

அன்றென்று எண்ணாமல் அறம் செய்க என்றார்  வள்ளுவர்.

நாம் சுற்றி முற்றி பார்த்தால் நம் நண்பர்களோ உறவினர்களோ அடிக்கடி இறப்பது போலத் தெரியவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக எப்போதோ நடப்பதால் நமக்கு மரணம் என்பதின் நினைப்பு அடிக்கடி வருவது இல்லை.

திருமூலர் சொல்கிறார்....நீ மற்றவர்களை பார்க்காதே...

நாள் தோறும் சூரியன் காலையில் எழுந்து மாலையில் மறைகிறது...ஒவ்வொரு நாளும்  அது பிறக்கிறது இறக்கிறது.

ஹா...சூரியன் என்பது பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை என்று சொன்னால் ... உங்கள் வீட்டு கன்றுக் குட்டியை பாருங்கள். கன்று பிறக்கிறது, தாய் பசு மறைகிறது....உங்களை சுத்தி பாருங்கள்....இயற்கை உயிர்களை நாளும் உண்டாக்குகிறது, மறைய வைக்கிறது....அவற்றை கண்டாவது  ....

வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்று உணர வேண்டும்.

நெருங்கியவர்கள் மறைந்தால் அது இயற்கையான ஒன்று என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்

நமக்கும் அதுதான் என்று எண்ணி இருக்கும் வரை நல்ல படியாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்....

பாடல்

 
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே.


சீர் பிரித்த பின்

கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே 
விழக் கண்டும்  தேறார் விழியிலா மாந்தர்
குழக் கன்று  முத்து எருதை சில நாளில்
விழக் கண்டும்  தேறார் வியனுல கோரே.


பொருள்

கிழக்கு  = கிழக்கில்
எழுந்து = உதித்து
ஓடிய = மேல் நோக்கி எழுந்து
ஞாயிறு = சூரியன்
மேற்கே = மேற்கு திசையில் 
விழக் கண்டும் = மறைவது கண்டும்
தேறார் = அறிய மாட்டார்கள்
விழியிலா மாந்தர் = கண்ணிலாத மாந்தர்கள். சூரியன் எவ்வளவு பிரகாசமானவன், நாளும் இது நடக்கிறது. ஆனால் காண்பது இல்லை நாம்.
குழக் கன்று = குழந்தையான கன்று
மூத்து = வயதாகி
எருதை = எருதாக மாறி
சில நாளில் = சிறிது நாட்களில்
விழக் கண்டும் = இறந்து விழக் கண்டும்
தேறார் = அறிய மாட்டார்
வியனுல கோரே = இந்த உலக மாந்தரே



பிறந்தோம். வளர்ந்தோம். உழைத்தோம். நாலு காசு சம்பாதித்தோம். இறந்தோம்.

இது தானா வாழக்கை ?

சிந்தியுங்கள் என்கிறார் திருமூலர்

சமயம் கிடைக்கும் போது சிந்தியுங்கள்.



திருப் புகழ் - காகம் முற அருள்

திருப் புகழ் - காகம் முற அருள் 


மனைவியை மற்றவன் பார்த்தால் எவ்வளவு கோபம் வரும் ?

அதிலும், காம இச்சையோடு பார்த்தால் ?

அதிலும், அவளை தீண்டினால் ?

அதிலும், அவளை அவள் மார்பில் தீண்டினால் ? 

எவ்வளவு கோபம் வரும் ?

இராமாயணத்தில்,  இராமனும் சீதையும் சித்ர கூட மலைக்கு அருகில் மந்தாகினி நதிக் கரையில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். சீதையின் மடியில் இராமன் தலை வைத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியே வந்த இந்திரனின் மகன் சயந்தன் சீதை மேல் காமம் கொண்டான். 

தந்தை எவ்வழி , மகன் அவ்வழி. 

சீதையை எப்படியாவது தீண்டி விட வேண்டும் என்று நினைத்தான். 

ஒரு காகத்தின் வடிவை எடுத்து பறந்து வந்து அவள் மார்பை கொத்தினான். 

சீதையின் மார்பில் இருந்து இரத்தம் வந்தது. அசைந்தாலோ, சப்தம் எழுப்பினாலோ இராமனின் தூக்கத்திற்கு இடையுறாக இருக்கும் என்று எண்ணி அவள் அமைதியாக அந்த துன்பத்தை பொறுத்துக் கொண்டாள் . 

கண் விழித்துப் பார்த்த இராமன், சீதையின் மார்பில் இருந்து வழிந்த இரத்தத்தை கண்டு பதறி   காரணம் வினவினான். சீதை காகத்தை காண்பித்து, அந்த காகம் கொத்தியது என்றாள் . 

இராமன் புரிந்து கொண்டான். 

அருகில் இருந்த புல்லை எடுத்து மந்திரம் சொல்லி விடுத்தான். அது இராம பானமாக மாறி சயந்தனை மூவுலகும் துரத்தியது. அவனை காப்பார் யாரும் இல்லை. அவன் இராமனிடமே வந்து அடைக் கலம் புகுந்தான். 

சரண் என்று அடைந்தவனை அவன் எதிரியாக இருந்தால் கூட அவனை மன்னித்து  ஏற்றுக் கொள்ளும் குணம் கொண்டவன் இராமன். 

சயந்தனுக்கு உயிர் பிச்சை அளித்து, "நான் மன்னிப்பேன், என் பாணம் மன்னிக்காது" என்று சொல்லி அந்த பானத்திற்கு சயந்தனின் ஒரு கண்ணை இலக்காக்கி அவனை காப்பாற்றினான்  இராமன்.

அந்த கதையை இரண்டு வரியில் சொல்கிறார் அருணகிரி.....


பாடல் 

காது மொருவிழி காக முற அருள்
                      மாய னரிதிரு                             மருகோனே

பொருள் 

காது =கொல்லென்று விடுத்த 

ஒரு விழி காகம் உற = ஒரு விழியை மட்டும் எடுத்து 
  
அருள் = அவனுக்கு உயிர் பிச்சை தந்து அருள் புரிந்த 

மாயன் = மாயங்கள் செய்ய வல்ல 


அரி = பாவங்களை போக்குபவன் 

திரு = உயர்ந்த, சிறந்த 

மருகோனே = மருமகனே 


இதையே பெரியாழ்வாரும் 

சித்திரகூ டத்திருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட
அத்திரமே கொண்டெறிய அனைத்துலகுந் திரிந்தோடி
வித்தகனே இராமாவோ நின்னபய மென்றழைப்ப
அத்திரமே யதன்கண்ணை யறுத்ததுமோரடையாளம் 


விருந்தினர்களை உபசரிப்பது ஒரு பண்பு என்றால், அடைக்கலம் என்று வந்தவர்களை  காப்பதும் ஒரு பண்பு தான். ஏனோ அந்த பண்பு வழக்கொழிந்து போய் விட்டது. பழிக்குப் பழி என்று உலகம் புறப்பட்டு விட்டது. 

எவ்வளவு சண்டை. எவ்வளவு சிந்திய இரத்தங்கள். 

மன்னிக்கும் குணம் குறைந்து கொண்டே வருகிறது. 

இராமாயணம் படிப்பது அதன் இலக்கியம் நயம் அறிந்து கொள்ள மட்டும் அல்ல. .....


திருவாசகம் - என்னை ஏன் ஆண்டு கொண்டாய்

திருவாசகம் - என்னை ஏன் ஆண்டு கொண்டாய் 


இறை அருள் பெற்ற பின்னும் மனிதனின் குணம் மாறுவது இல்லை. அவரா, அப்படிச் செய்தார் என்று நாம் சிலரின் செயல்களை பற்றி ஆச்சரியப் படுகிறோம்.

மனிதன் எவ்வளவு உயர்ந்த இடத்திற்கு சென்றாலும் அவன் இயற்கை குணம் மாறுவதே இல்லை.

இறை அருள் பெற்ற பின் ஏதோ புது மனிதர்கள் என்று நினைக்க  வேண்டாம்.அவர்களும் சாதாரண மனிதர்களே. நம்மை போலவே அவர்களுக்கும் ஆசா பாசங்கள்  இருக்கின்றன.

மாணிக்க வாசகர் சொல்கிறார்....

அழகான பெண்களின் மேல் கொண்ட ஆசையை, உன் அருள் பெற்ற பின்னும்,  நான் விடவில்லை. இருந்தும் நீ என்னை விட்டு விடாமல் அருள் செய்கிறாய். என்ன காரணம் ? என்று இறைவனை வினவுகிறார். 

இதையே சற்று மாற்றி யோசித்தால் நமக்கு இரண்டு விஷயங்கள்  புலப் படும்....

ஒன்று, பெண்ணாசை என்பது மிக மிக இயற்கையான ஒன்று. இறைவன் இயற்கைக்கு எதிரானவன் அல்ல. பெண்ணாசை கொண்டவர்களை அவன் வெறுத்து ஒதுக்குவது இல்லை.

இரண்டு, இறைவனை அடைய, அறிய, அவன் அருள் பெற பெண்ணாசை ஒன்றும் தடை இல்லை. எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கி விட வேண்டும் என்று இல்லை.

பாடல்

கொள் ஏர் பிளவு அகலாத் தடம் கொங்கையர் கொவ்வைச் செவ் வாய்
விள்ளேன் எனினும், விடுதி கண்டாய்? நின் விழுத் தொழும்பின்
உள்ளேன்; புறம் அல்லேன்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளேன் ஒழியவும், கண்டுகொண்டு ஆண்டது எக் காரணமே?

உரை 

அழகான மார்பகங்களை கொண்ட பெண்களின் சிவந்த இதழ்களை விட மாட்டேன்  என்றாலும் என்னை விட்டு விட மாட்டாய், நான் உன் தொண்டில்  இருக்கிறேன், உனக்கு வெளியே இல்லை, உத்திரகோச மங்கைக்கு  அரசனே, நான் ஒரு  கள்வன்,இருந்தும் என்னை ஏன் நீ ஆட்கொண்டாய் ?

பத உரை 

கொள் ஏர் = அழகினை கொண்ட

பிளவு அகலாத் தடம் கொங்கையர் = இரண்டு மார்பகங்களுக்கு நடுவில் பிரிவே (பிளவு)  கிடையாது. அப்படி ஒட்டி இருக்கும். பெரிய மார்புகள்.

கொவ்வைச் செவ் வாய் = அப்படிப்பட்ட அழகிய பெண்களின் சிவந்த இதழ்களை

விள்ளேன் எனினும் = விட்டு விட மாட்டேன் என்றாலும்

விடுதி கண்டாய்? = நீ என்னை கை விட்டு வடமாட்டய்

நின் = உன்னுடைய

விழுத் = சிறந்த

தொழும்பின் = பணியில்

உள்ளேன் = இருக்கிறேன்

புறம் அல்லேன் = நான் உனக்கு வெளியன் அல்ல

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

கள்ளேன் = கள்ள மனம் கொண்ட நான்

ஒழியவும் = உன்னை விட்டு விலகி நின்றாலும்

கண்டு கொண்டு = என்னை கண்டு கொண்டு

ஆண்டது எக் காரணமே? = ஆட் கொண்டது என்ன காரணத்தினாலோ

  

Friday, January 24, 2014

திருவாசகம் - தளர்ந்தேன் என்னைத் தாங்கி கொள்ளே

திருவாசகம் - தளர்ந்தேன் என்னைத் தாங்கி கொள்ளே 


என்னால் முடியவில்லை, என்னை தாங்கிப் பிடித்துக் கொள் என்கிறார் மணிவாசகர்.

ஏதோ மணிவாசகர் ஏழ்மையில் துன்பப் படுகிறார், நோயில் வாடுகிறார், வேலை இல்லாமல் அலைகிறார் என்று நினைத்து விடக் கூடாது.

பாண்டியனின் அரசவையில் அமைச்சர் அவர். செல்வத்திற்கு ஒரு குறையும் இல்லை.  அதிகாரம், புகழ், செல்வாக்கு என்று எதிலும் குறைவு இல்லை.

அறிவு  - நாட்டை நிர்வாகம் பண்ணும் அளவுக்கு அறிவு. ஒன்றிலும் குறைவு இல்லை.

அவர் சொல்கிறார் தளர்ந்தேன் என்று.

எதில் தளர்ந்து இருப்பார் ?

இறைவனைத் தேடித்  தேடி தளர்ந்து இருக்கலாம்...

வாழ்வின் அர்த்தத்தை தேடித் தேடி தளர்ந்து இருக்கலாம்...

பிறந்து இறந்து பிறந்து இறந்து தளர்ந்து இருக்கலாம்....

பணம், செல்வம், புகழ், அதிகாரம் என்று அர்த்தம் இல்லாத இவற்றின் பின்னே ஓடி ஓடி தளர்ந்து இருக்கலாம்....

எதைத் தேடுகிறோம் என்று அறியாமல் தேடித் தேடி தளர்ந்து இருக்கலாம்....


நீத்தல் விண்ணப்பம் என்ற பகுதியில் வரும் ஒரு பாடல். நீத்தல் என்றால் விலக்குதல். என்னை விலக்கி விடாதே என்று இறைவனிடம் வேண்டுகிறார் மணிவாசகர் ...

இதில் மொத்தம் ஐம்பது பாடல்கள் உள்ளன. உள்ளத்தை உருக்கும் பாடல்கள். தேனாகத் தித்திக்கும் செந்தமிழ் பாமாலை....

படித்துப் பாருங்கள்...கல் உருகும், புல் உருகும்...உங்கள் உள்ளமும் கூட உருகலாம்....


பாடல்

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட 
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் 
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே 

சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.

சீர் பிரித்தபின்

கடையவனேனை கருணையினால் கலந்து ஆண்டு கொண்ட 
விடையவனே விட்டுடுதி கண்டாய் விறல் வேங்கையின் தோல் 
உடையவனே மன்னும் உத்தர கோசைக்கு அரசே 
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக் கொள்ளே 

பொருள்


கடையவனேனை = மிகக் கீழானவனான என்னை

கருணையினால் = உன்னுடைய கருணையினால்

கலந்து = என்னோடு கலந்து. கலத்தல் என்றால் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதபடி இணைதல். நான் வேறு அவன் வேறு என்று இல்லாமல் அவனும் நானும் ஒன்றாகக் கலத்தல். 

ஆண்டு கொண்ட = என்னை ஆட்கொண்ட

விடையவனே = விடை என்றால் எருது. எருதின் மேல் அமர்ந்தவனே

விட்டுடுதி கண்டாய் = என்னை விட்டு விடாதே

விறல் = வீரம் மிக்க

வேங்கையின் தோல் = புலியின் தோல்

உடையவனே = உடுத்தவனே

மன்னும் = நிலைத்து நிற்கும்

உத்தர கோசைக்கு = உத்தர கோசம் என்ற ஊருக்கு

அரசே = அரசனே

சடையவனே = சடை முடி கொண்டவனே

தளர்ந்தேன் = நான் தளர்ந்து விட்டேன்

எம்பிரான் = என்னை விட்டு என்றும் பிரியாதவனே

என்னை தாங்கிக் கொள்ளே = என்னை தாங்கிக் கொள்ளேன்


Sunday, January 19, 2014

குறுந்தொகை - காடா ? வீடா ? எது சுகம்

குறுந்தொகை - காடா ? வீடா ? எது சுகம் 



உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன்தலை
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங்காடு
இன்னா என்றிர் ஆயின்,
இனியவோ – பெரும – தமியர்க்கு மனையே!


அவன் பொருள் தேட வெளி நாடு செல்ல விரும்புகிறான். அவனுடைய காதலி தானும் கூட வருவேன் என்கிறாள். அவனுக்கு அவளை அழைத்துச் செல்ல .விருப்பம் இல்லை. அவன் கையில் காசு இல்லை. அவனே எப்படியோ அங்கே இங்கே தங்கி எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். இவளை வேறு எப்படி கூட்டிக் கொண்டு  என்று அவன் தயங்குகிறான். செல்லும் வழி வேறு கடினமான பாதை. இன்று போல் அன்று வாகன வசதி கிடையாது. 

சுட்டெரிக்கும் வெயில். பாதம் சுடும் மணல். 

பசியும் தாகமும் அழையா விருந்தாளியாக கூடவே வரும்.

செல்லமாக வளர்ந்த பெண் அவள். இதை எல்லாம் தாங்குவாளா ? என்று அவன் யோசிக்கிறான். 

அவளுக்கும் புரிகிறது. இருந்தாலும் அவன் கூட செல்ல வேண்டும் என்ற விருப்பம் நாய் குட்டியாக காலை சுற்றி சுற்றி வருகிறது. 

தன் தோழியிடம் சொல்லி அவனை தன்னையும் அழைத்துச் செல்லும்படி சொல்லுகிறாள். 

தோழி வந்து தலைவனிடம் சொல்லுகிறாள்...

"நீ நினைப்பது சரிதான். பாலை நிலம் கொடுமையானது தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், நீ போன பின் அவள் தனியாக இருக்கும் வீடு எப்படி இருக்கும் என்று  நினைக்கிறாய் ? வணிகர்கள் ஒன்று கூடி வியாபரத்திற்காக ஊர் கோடியில் கூடாரம் அடித்து , தங்குவார்கள். வணிகம் நடக்கும். ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருக்கும். வாங்குவதும் , கொடுப்பதும் ஒரே குதூகலமாய் இருக்கும். இராட்டினம், இசை, உணவு விற்பவர்கள், பொம்மை விற்பவர்கள், வண்டி கட்டிக் கொண்டு வருபவர்கள் என்று ஒரே கொண்டாட்டமாய்  இருக்கும். பொருள் எல்லாம் விற்று தீர்ந்தவுடன், இடத்தை காலி செய்து விட்டு போய்  விடுவார்கள். அந்த இடமே வெறிச்சோடி போய் விடும். அது போல நீ போன பின், அவள் இருக்கும் வீடு வெறிச்சோடிப் போய் விடும்.  எனவே,அவளையும் கூட்டிக் கொண்டு போ"  என்கிறாள். 

பொருள் 

உமணர் = உப்பு விற்பவர்கள். உப்பு விற்பவர்கள் என்று குறிப்பாக சொன்னாலும், விற்பவர்கள், வியாபாரிகள் என்று பொதுவாக பொருள் கொள்வது நன்றாக இருக்கும்.

சேர்ந்து = ஒன்றாகச் சேர்ந்து 

கழிந்த = விற்று முடித்தவுடன் விலகி சென்ற பின் 

மருங்கின் = இடத்தின் 

அகன்தலை = விலகிய இடத்தில் 

ஊர் பாழ்த்தன்ன = பாழ் பட்ட, வெறிச்சோடிப் போன ஊர் போல 

ஓமை = ஒரு விதமான மரம். (tooth brush tree என்று பொருள் சொல்கிறார்கள். ஒரு வேளை சவுக்கு மரமாக இருக்குமோ ?)

அம் பெருங்காடு = ஊருக்கு வெளியே உள்ள அந்த பெரிய காடு 

இன்னா = கொடியது

என்றிர் ஆயின் = என்று நீ சொன்னால் 

இனியவோ = இனிமையானதா ?

பெரும = பெரியவனே 

தமியர்க்கு மனையே = தனித்து நிற்கும் எங்கள் வீடே ?



கந்தர் அநுபூதி - தணியாத மோகம்

கந்தர் அநுபூதி - தணியாத மோகம் 


திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
பணியா? என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

முருகனுக்கு வள்ளி மேல் அவ்வளவு மோகம்.

மோகம் எப்போதும் தணிந்து போகும். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பார்களே அது போல. நாள் ஆக நாள் ஆக மனம் சலிக்கும், உடல் சலிக்கும்.

ஆனால் முருகனுக்கு வள்ளி மேல் "தணியாத மோகம்"

அதுவும் எப்படி பட்ட மோகம் ? அதி மோகம். அளவுக்கு அதிகமான தீராத மோகம்.

அந்த மோகத்தில் அவன் என்ன செய்கிறான் ?

வள்ளியின் பாதத்தை பிடித்துக் கொள்கிறான். பிடித்துக் கொள்வது மட்டும் அல்ல, அவள் பாதங்களை பணிகிறான்.

பணிந்து, "சொல்லு, நான் என்ன செய்ய வேண்டும்" என்று  கெஞ்சுகிறான்.

 "நீ என்ன சொன்னாலும் செய்கிறேன், எனக்கு இட்ட கட்டளை என்ன " என்று அவள் பாதங்களை  பணிந்து வேண்டுகிறான்.

அவன் கொண்டது காதல் மட்டும் அல்ல...மோகம் மட்டும் அல்ல...கருணையும் கூட.  "தயாபரனே" என்கிறார் அருணகிரி.

காதலும் கருணையும் கலந்தது அவன் மனம்.

ஒரு புறம் அவள் மேல் மோகம்.

இன்னொரு புறம் அவள் மேல் கருணை. பாவம், இந்த பொண்ணு என்னை நம்பி வந்து  இருக்கிறாள். இவளை நான் காக்க வில்லை என்றால் வேறு யார் காப்பார்கள் என்று  அவள் மேல் கருணை.

அவ்வளவு கருணை உள்ள நீ, உன் பாதத் தாமரையை கல் போன்ற என் மனத்திலும்  பூக்க வைக்க மாட்டாயா என்று உருகுகிறார் அருணகிரி.

"திணியான மனோ சிலை"

திணி என்றால் கடினமான என்று பொருள்.

மனோ என்றால் மனம்
சிலை என்றால் கல்

கல்லு போல கடினமான மனம்.

கல்லில் எங்காவது பூ பூக்குமா ?

பூக்காது, அதற்கு என்ன செய்ய முடியும். அவன் திருவடிகள் தாமரை போல மென்மையாக  இருக்கிறது. என் மனமோ கல்லு போல கடினமாக இருக்கிறது.

நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி பிறிதோர் இடத்தில்

நான் என் மனதை மாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், அவன்  நினைத்தால் அவன் திருவடித் தாமரை என் மனத்திலும் பூக்கும்.

ஏன் என்றால் அவன் கருணை உள்ளவன்.

வள்ளிக்காக அவள் பாதத்தை பிடித்தவன்.

எனக்காக இதைச் செய்யக் கூடாதா என்று கேட்கிறார் அருணகிரி.


பொருள்

திணியான = கடினமான
மனோ = மனம்
சிலை மீது = கல் மீது
உனதாள் = உனது தாள் = உனது பாதங்கள்
அணியார் = அழகான
அரவிந்தம்  = தாமரை
அரும்பு  மதோ = மொட்டு மலருமா ?
பணியா?  = எனக்கு இட்ட பணி  எது
என = என
வள்ளி பதம் பணியும் = வள்ளியின் பாதங்களை பணியும்
தணியா = தணியாத, எப்போதும் உள்ள
அதிமோக = அதிக மோகத்தை கொண்ட
 தயா பரனே.= கருணை கொண்டவனே


Saturday, January 18, 2014

திருவாசகம் - பொருள் உணர்ந்து சொல்வார்

திருவாசகம் - பொருள் உணர்ந்து சொல்வார் 


சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

பல பாடல்களுக்கு அர்த்தம் தெரியும். ஆனால் அதன் பொருளை "உணர" முடியுமா ? அறிதல் வேறு உணர்தல் வேறு.  ஒரு அகராதி (dictionary ) இருந்தால் யாரும் பொருளை அறிந்து கொள்ள முடியம்.

"கவி உள்ளம் காண்கிலர்" என்பார் பாரதியார்.

திருவாசகம் பற்றி எழுத ஆசை.

எங்கிருந்து தொடங்குவது ?

திருவாசகத்தின் முதல் பகுதி - சிவ புராணம்.

சிவ புராணத்தின் கடைசிப் பகுதி மேலே உள்ள பாடல்.

பாடலின் பொருளை பார்பதற்கு முன்னால், மணி வாசகர் சொல்லும் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.

"பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்கிறார்.

பொருள் அறிந்து சொல்லுவார் என்று சொல்லவில்லை. பொருள் உணர்ந்து சொல்லுவார் என்கிறார். பொருளை உணர வேண்டும்.

பொருள்

சொல்லற்கு அரியானைச் = சொல்லுவதற்கு அரியவன்.  அவனை முழுவதும் விளக்கிச் சொல்ல முடியாது. கடினம். 

சொல்லி = சொல்லாமலும் இருக்க முடியாது. எனவே "சொல்லி"

திருவடிக் கீழ்ச் = அவனுடைய திருவடியின் கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் = சொல்ல அரியவனைப் பற்றி சொல்லியாகி விட்டது. எப்படிப் பார்த்தாலும் அது முழுமையக இருக்காது. எவ்வளவு சொன்னாலும் அதை முழுமையாக சொல்லி விட முடியாது. எனவே, சொல்லிய பாட்டின் பொருள் "உணர்து" சொல்லுவார்.

செல்வர் = செல்வார்கள். அப்படி பொருள் உணர்ந்து சொல்பவர்கள் ஒரு இடத்திற்கு செல்வார்கள். அது எந்த இடம் ?

சிவபுரத்தின் = சிவன் இருக்கும் இடம் சிவபுரம். அங்கு செல்வார்கள். 

உள்ளார் = சென்று அங்கு இருப்பார்கள்.

சிவன் அடிக் கீழ் = அவனுடைய திருவடியின் கீழ்

பல்லோரும் ஏத்தப் பணிந்து = எல்லோரும் பணிந்து புகழும் படி அங்கு இருப்பார்கள்.

முக்கியாமாக வேண்டியது என்ன என்றால் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும்.

இனி வரும் ப்ளாகுகளில் - முயற்சி செய்வோம்

இராமாயணம் - கணவன் மனைவி உறவு

இராமாயணம் - கணவன் மனைவி உறவு 


'அல்லல்மாக்கள் இலங்கையது ஆகுமோ ?
எல்லை நீத்தஉலகங்கள் யாவும், என்
சொல்லினால்சுடுவேன்; அது, தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.

சீதை அசோக வனத்தில் சிறை இருக்கிறாள். அனுமன் அவளை சந்திக்கிறான். "வா, என்னோடு, உன்னை இராமனிடம் சேர்பித்து விடுகிறேன்" என்கிறான் அனுமன். அதை மறுத்து சீதை சொல்லுவாள்,

"எனக்கு துன்பம் தரும் இந்த இலங்கை மட்டும் அல்ல, எல்லை இல்லாத இந்த உலகம் அத்தனையும் என் சொல்லினால் சுட்டு பொசுக்கி விடுவேன். ஆனால், அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு விளைவிக்கும் என்று செய்யாமல் இருக்கிறேன்" என்று கூறுகிறாள்.

பாட்டின் மேலோட்டமான பொருள் அவ்வளவு தான்.

அதில் பொதிந்து கிடக்கும் அர்த்தம், அதில் பின்னிக் கிடக்கும் உணர்வுகள் மிக அதிகம்.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 இந்த பாட்டிற்கு ஏன் "கணவன் மனைவி உறவு" என்று தலைப்பு ? இதில் கணவன் மனைவி உறவு எங்கே இருந்து வந்தது ?

தாம்பத்யம் என்பது ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது. கணவன் நினைக்க வேண்டும், நான் இல்லாமல் அவள் கஷ்டப் படுவாள், நான் தான் அவளை காக்க வேண்டும், துணை செய்ய வேண்டும் என்று நினைக்க வேண்டும். அது ஒரு புறம். இன்னொரு புறம், அவள் இல்லாமல் என் வாழ்க்கை கடினம் என்று கணவன் நினைக்க வேண்டும்.

அது போல மனைவியும், தான் கணவனை சார்ந்து இருக்கிறேன், அவன் என்னை பார்த்துக்  கொள்வான்  என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். அது ஒரு புறம்.  இன்னொரு புறம், நான் இல்லாமல் அவன் கஷ்டப் படுவான் என்று மனைவி நினைக்க வேண்டும்.

இப்படி யோசித்துப் பாருங்கள் , "நான் இல்லாவிட்டாலும் அவள் எப்படியாவது சமாளித்துக்  கொள்வாள் " என்று கணவன் நினைத்தாலோ, "அவன் இல்லாவிட்டால் என்ன, என்னால் தனித்து வாழ முடியாதா " என்று மனைவி நினைத்தாலோ அந்த தாம்பத்யம் எப்படி இருக்கும் ?

இங்கே, ஒரு வேளை சீதை தானாகவே இலங்கையை எரித்து விட்டு இராமனிடம் வந்து சேர்ந்து விட்டால் எப்படி இருக்கும் ?

பார்பவர்கள் என்ன சொல்லுவார்கள் "அதோ போகிறானே இராமன், பெரிய வீரன், சொந்த மனைவியை மாற்றானிடம் இருந்து மீட்டு வரத் தெரியாத வீரன்" என்று இராமனை உலகம் பழிக்கும்.

அவனின் திறமையை, புகழை மனைவியாகிய சீதை ஒரு போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

தனக்கு துன்பம் வந்தால் கூட பரவாயில்லை , அவன் புகழுக்கு மாசு வந்து விடக் கூடாது  என்று நினைக்கிறாள்.

இரண்டாவது அர்த்தம், யாருக்கு மாசு வந்து விடக் கூடாது ?

இராமனுக்கா ? இல்லை

அவன் வில்லுக்கா - இல்லை

அவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன் என்றாள் .

அவன் ஆற்றலை, திறமையை உலகம் மதிக்க வேண்டும் என்று நினைக்கிறாள்.

நாலு தடவை மனைவி கணவனின் திறமையை புகழ்ந்து மற்றவர்களிடம் சொன்னால், கணவன் மகிழ்வான். அவனிடம் அந்த அளவு திறமை இல்லாவிட்டாலும், அவளின் நம்பிக்கையை பொய் ஆக்கக் கூடாது என்று நினைத்தாவது  அவன் தன் திறமையை வளர்த்துக் கொள்ள தலைப் படுவான்.

மாறாக, "அவரு ஒண்ணுக்கும் பிரயோஜனம் இல்லை, ஒரு காரியம் சரியாகத் செய்யத் தெரியாது, எது செய்தாலும் அதில் ஒரு குறை இருக்கும் " என்று எந்நேரமும்  குறை சொல்லிக் கொண்டே இருந்தால் நாளடைவில் கணவன் "சரி தான் , இவ என்ன செய்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பாள், எதற்கு செய்ய வேண்டும் என்று செய்யாமலே இருந்து விடுவான்". பெரும்பாலான பெண்கள் செய்யும் தவறு இது.

ஆண்களின் திறமையை, வெளிக் கொண்டு வருவதில் பெண்ணின் பங்கு மிக அதிகம். தெரியாமலா சொன்னார்கள் பெண்ணை சக்தி என்று. அவள் தான் சக்தி. அவனை இயக்கம் சக்தி.

மூன்றாவது, ஒரு குடும்பத்தை ஒருவர் தான் நடத்தி செல்ல வேண்டும். எல்லோரும் ஒரு குடும்பத்தை வழி நடத்துகிறேன் என்று ஆரம்பித்தால் குடும்பம் ஒரு வழி செல்லாது.

இங்கே சீதையிடம் ஆற்றல் இருக்கிறது. இராமனை விட பல மடங்கு ஆற்றல் இருக்கிறது. இராவணின் மேல் படை எடுக்க இராமனுக்கு வானர சேனையின் துணை வேண்டி இருந்தது. அனுமன் போன்ற பலவான்களின் துணை வேண்டி இருந்தது. இலக்குவன், வீடணன், போன்றோரின் பங்களிப்பு வேண்டி இருந்தது.

சீதைக்கு இது எல்லாம் வேண்டாம். "ஒரே ஒரு சொல்" போதும். தனி ஒரு ஆளாக, ஒரே ஒரு  சொல்லின்னால் இலங்கை மட்டும் அல்ல இந்த உலகம் அனைத்தையும்  அழித்து விடுவேன் என்கிறாள். இராமனுக்கு இலங்கையை அழிக்கவே இவ்வளவு துணை வேண்டி இருந்தது. உலகம் முழுவதும் அழிப்பது என்றால் எவ்வளவு துணை வேண்டி இருக்குமோ ?

இருந்தும் அவள் செய்ய வில்லை. கணவனை முன்னிறுத்தி, தன் ஆற்றலை அடக்கி, அவனுக்கு முக்கியத்வம் தருகிறாள். இது பெண்ணடிமைத் தனம் அல்ல....குடும்பத்தை நடத்தி செல்லும் வழி.

யோசித்துப் பாருங்கள், சீதை தானே சிறையில் இருந்து வெளி வந்திருந்தால் சீதையின் ஆற்றல் பேசப் பட்டிருக்குமா அல்லது இராமனின் இயலாமை பேசப் பட்டிருக்குமா ?

மூன்றாவது, இராமன் மனைவியை மாற்றான் அபகரிக்க விட்டு விட்டான். ஒரு விதத்தில்  அது இராமனின் பிழைதான். அது பிழை என்று ஜடாயு சொன்னார்.

இருந்தும் சீதை இராமன் மேல் பிழை காணவில்லை. தன்னைத் தொலைத்ததை மட்டும் அல்ல, இத்தனை நாள் வராததையும் பிழையாகக் கருதவில்லை.


"அது தூயவன் வில்லின்......"

இராமனை தூயவன் என்கிறாள். அவன் மேல் எந்த தவறும் இல்லை என்று சான்றிதழ் தருகிறாள்.

அதற்கு முன்னால் இராமன் செய்த இரண்டு காரியங்கள் மக்களால் விமர்சிக்கப் பட்டது.

தாடகை என்ற பெண்ணை கொன்றது.
வாலியை மறைந்து இருந்து கொன்றது

இந்த இரண்டும் இராமனின் வில்லறத்திற்கு இழுக்கு என்று சொல்பவரும் உண்டு.

தன் கணவனைப் பற்றி உலகம் என்ன சொன்னாலும் சீதைக்கு கவலை இல்லை. அவனை "தூயவன்" என்று சீதை நம்புகிறாள்.

இப்படி, கணவன் மேல் நம்பிக்கை, அவன் ஆற்றல் மேல் நம்பிக்கை, அவன் ஆற்றலை மற்றவர்கள் குறை சொல்லி விடக் கூடாது என்ற கவலை, தன் திறமை கணவன் மூலம் வெளிப்படவேண்டும் என்ற நோக்கம்...

இப்படி ஒரு இனிய தாம்பத்யத்திற்கு வழி சொல்லித் தருகிறாள் சீதை - இந்த ஒரு பாடல் மூலம்.

பாடம் படிப்போமே...



Wednesday, January 8, 2014

குறுந்தொகை - நீ உண்ட என் நலனே

குறுந்தொகை - நீ உண்ட என் நலனே 


அது ஒரு கடற்கரையில் உள்ள சின்ன கிராமம் அல்லது சேரி. நீண்ட மணர் பரப்பு. அங்கங்கே புன்னை மரங்கள் இருக்கின்றன. அவற்றின் கிளைகள் தாழ்ந்து வளைந்து தரையை தொடுகின்றன. அதற்குள் யாரும் நின்றால் வெளியில் அவ்வளவாக தெரியாது. அந்த மரங்களில் சில பறவைகள் இருக்கின்றன.

அவனும் அவளும் அங்குதான் சந்தித்துக் கொள்வார்கள்.

மெத்தென்ற மணல் பரப்பு. தலை கோதும் கடற் காற்று. மடி தாங்கும்  புன்னை மரம். அழகான அவள். மேலும் அவன்.

ஆனால் இப்போ கொஞ்ச நாளாய் அவன் அவளை கண்டு கொள்வது இல்லை. வருவதும் இல்லை. பார்ப்பதும் இல்லை. அவளுக்கு கவலை. தோழியிடம் சொல்லி அனுப்புகிறாள்.

தோழி, தலைவனிடம் சென்று கூறுகிறாள்.

"நீ அவளை கை விட்டு விடும் நாளும் வந்து விடும் போல் இருக்கிறது. ஒரு வேளை நீ அப்படி அவளை கை விட்டு விட்டால், நீ அவளை சந்திப்பதற்கு முன் எப்படி இருந்தாளோ அப்படியே அவளை திருப்பிக் கொடு " என்று அவனிடம் சண்டை பிடிக்கிறாள்.


பாடல்

விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ
நேர்ந்தனை ஆயின், தந்தனை சென்மோ!-
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும்
தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே.


பொருள்


விட்டென விடுக்கும் நாள் வருக = நீ அவளை விட்டு விட்டு செல்லும் நாளும் வருக. அதாவது, அந்த நாளும் வந்து விடும் போல இருக்கிறது. அப்படி என்றால், அது வரட்டும். 

அது நீ = அதை நீ

நேர்ந்தனை ஆயின் = விரும்புவாய் ஆயின்

தந்தனை சென்மோ! = தந்து விட்டு செல்

குன்றத்தன்ன = குன்று போல

குவவு மணல் அடைகரை = குவிந்த மணலை கொண்ட கரையில்

நின்ற புன்னை  = நிற்கின்ற புன்னை மரங்கள்

நிலம் தோய் படு சினை = நிலம் தொடும் கிளைகள் (சினை = கிளை)

வம்ப நாரை சேக்கும் = இளைய நாரை (ஒரு வித பறவை) வந்து இருக்கும்

தண் கடற் சேர்ப்ப! = குளிர்ந்த கடலை கொண்ட தலைவனே

நீ உண்ட என் நலனே. = நீ அனுபவித்த எம் நலனே


ஏன் இந்த நாரையை இங்கு சொல்கிறார் என்று யோசித்துப் பார்த்தேன்....

நாரை ஒரு வித  மீன் கொத்தி பறவை. கடலுக்குச் செல்லாமால் நிலத்தில் மரக் கிளையில்  உட்கார்ந்து இருக்கிறது. அதற்கு உண்ண பிடிக்க வில்லை. பறக்க பிடிக்கவில்லை. தனியாக , மரத்தில் உட்கார்ந்து இருக்கிறது. அந்த தலைவியைப் போல. 

நீயும், என் தலைவியும் கூடி இருந்த போது இந்த நாரை சாட்சியாக இருந்திருக்கும். ஞாபகம் இருக்கிறதா ?

இந்த முட்டாள் நாரை கடலுக்கு சென்று, ஆனந்தமாக பறந்து , மீன் பிடித்து உண்பதை விட்டு விட்டு இப்படி மரத்தில் உட்கார்ந்து இருக்கிறது. அது போல நீயும் முட்டாள் தனமாக  என் தலைவியை விட்டு விட்டு தனியாக இருக்கப் போகிறாய். 

என்று அந்த தனிமையான நாரை பல பொருள்களை உணர்த்திக் கொண்டு இருக்கிறது. 

காலம் பல கடந்தும் , அந்த நாரையின் ஒற்றை விழி இன்றும் நம்மை பார்பதை நாம் உணர முடியும். 

குறுந்தொகை !


Monday, January 6, 2014

இராமாயணம் - கள்ளத்தை மறைக்க முடியுமோ ?

இராமாயணம் - கள்ளத்தை மறைக்க முடியுமோ ?




'வண்டு உளர் அலங்கலாய்! வஞ்சர் வாள் முகம்,
கண்டது ஓர் பொழுதினில், தெரியும்; கைதவம்
உண்டுஎனின், அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ?
விண்டவர் நம் புகல் மருவி வீழ்வரோ?

எல்லோரும், வீடணனை ஏற்றுக் கொள்ள கூடாது என்று சொல்லி விட்டார்கள். அனுமன் மட்டும் வீடணனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி அதற்காண காரணங்களை கூறுகிறான்.

வஞ்சகர்களின் முகத்தை பார்த்த உடனேயே தெரிந்து விடும். அவர்களிடம் வஞ்சகம் இருந்தால் அதை அவர்களால் மறைக்க முடியாது. பகைவர்கள் நம்மிடம் வந்து தங்கள் நிலையை தாழ்த்திக் கொண்டு இருக்க விரும்புவார்களா ? (ஒரு போதும் மாட்டார்கள் )

வீடணனை எல்லோரும்தான் பார்த்தார்கள். அவர்களுக்கு, வீடணன் நல்லவன் என்று தெரியவில்லை. வஞ்சகர்களை கண்டவுடன் அறிந்து கொள்ளலாம் என்று கூறுகிறான்.

அவன் அறிவின் விசாலம் அப்படி.

ஆற்றலும், நிறைவும், கல்வி அமைதியும், அறிவும், என்னும்

வேற்றுமை இவனோடு இல்லையாம்' என்று கூறுவான் கம்பன்.


பொருள்


'வண்டு உளர் = வண்டுகள் உள்ள
அலங்கலாய்! = மாலையை உடையவனே
வஞ்சர் = வஞ்சகர்களின்
வாள் முகம் = வஞ்சகம் பொருந்திய முகம்
கண்டது ஓர் பொழுதினில் = கண்ட ஒரு நொடியில்
தெரியும் = தெரிந்து விடும்
கைதவம் = வஞ்சகம்
உண்டுஎனின் = அவர்களிடம் இருந்தால்
அஃது = அது
அவர்க்கு = அவர்களுக்கு
ஒளிக்க ஒண்ணுமோ? = மறைக்க முடியுமா ?
விண்டவர் = பகைவர்கள்
நம் புகல் = நம்மிடம் புகலிடமாக
மருவி வீழ்வரோ? = தங்கள் நிலையை தாழ்த்திக் கொண்டு வாழ்வார்களா ?


கல்வியும், அறிவும் மனிதர்களை எடை போடும் ஆற்றலை தரும் என்பது இந்த பாடல் தரும் செய்தி.