Friday, January 24, 2014

திருவாசகம் - தளர்ந்தேன் என்னைத் தாங்கி கொள்ளே

திருவாசகம் - தளர்ந்தேன் என்னைத் தாங்கி கொள்ளே 


என்னால் முடியவில்லை, என்னை தாங்கிப் பிடித்துக் கொள் என்கிறார் மணிவாசகர்.

ஏதோ மணிவாசகர் ஏழ்மையில் துன்பப் படுகிறார், நோயில் வாடுகிறார், வேலை இல்லாமல் அலைகிறார் என்று நினைத்து விடக் கூடாது.

பாண்டியனின் அரசவையில் அமைச்சர் அவர். செல்வத்திற்கு ஒரு குறையும் இல்லை.  அதிகாரம், புகழ், செல்வாக்கு என்று எதிலும் குறைவு இல்லை.

அறிவு  - நாட்டை நிர்வாகம் பண்ணும் அளவுக்கு அறிவு. ஒன்றிலும் குறைவு இல்லை.

அவர் சொல்கிறார் தளர்ந்தேன் என்று.

எதில் தளர்ந்து இருப்பார் ?

இறைவனைத் தேடித்  தேடி தளர்ந்து இருக்கலாம்...

வாழ்வின் அர்த்தத்தை தேடித் தேடி தளர்ந்து இருக்கலாம்...

பிறந்து இறந்து பிறந்து இறந்து தளர்ந்து இருக்கலாம்....

பணம், செல்வம், புகழ், அதிகாரம் என்று அர்த்தம் இல்லாத இவற்றின் பின்னே ஓடி ஓடி தளர்ந்து இருக்கலாம்....

எதைத் தேடுகிறோம் என்று அறியாமல் தேடித் தேடி தளர்ந்து இருக்கலாம்....


நீத்தல் விண்ணப்பம் என்ற பகுதியில் வரும் ஒரு பாடல். நீத்தல் என்றால் விலக்குதல். என்னை விலக்கி விடாதே என்று இறைவனிடம் வேண்டுகிறார் மணிவாசகர் ...

இதில் மொத்தம் ஐம்பது பாடல்கள் உள்ளன. உள்ளத்தை உருக்கும் பாடல்கள். தேனாகத் தித்திக்கும் செந்தமிழ் பாமாலை....

படித்துப் பாருங்கள்...கல் உருகும், புல் உருகும்...உங்கள் உள்ளமும் கூட உருகலாம்....


பாடல்

கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட 
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல் 
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே 

சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.

சீர் பிரித்தபின்

கடையவனேனை கருணையினால் கலந்து ஆண்டு கொண்ட 
விடையவனே விட்டுடுதி கண்டாய் விறல் வேங்கையின் தோல் 
உடையவனே மன்னும் உத்தர கோசைக்கு அரசே 
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக் கொள்ளே 

பொருள்


கடையவனேனை = மிகக் கீழானவனான என்னை

கருணையினால் = உன்னுடைய கருணையினால்

கலந்து = என்னோடு கலந்து. கலத்தல் என்றால் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதபடி இணைதல். நான் வேறு அவன் வேறு என்று இல்லாமல் அவனும் நானும் ஒன்றாகக் கலத்தல். 

ஆண்டு கொண்ட = என்னை ஆட்கொண்ட

விடையவனே = விடை என்றால் எருது. எருதின் மேல் அமர்ந்தவனே

விட்டுடுதி கண்டாய் = என்னை விட்டு விடாதே

விறல் = வீரம் மிக்க

வேங்கையின் தோல் = புலியின் தோல்

உடையவனே = உடுத்தவனே

மன்னும் = நிலைத்து நிற்கும்

உத்தர கோசைக்கு = உத்தர கோசம் என்ற ஊருக்கு

அரசே = அரசனே

சடையவனே = சடை முடி கொண்டவனே

தளர்ந்தேன் = நான் தளர்ந்து விட்டேன்

எம்பிரான் = என்னை விட்டு என்றும் பிரியாதவனே

என்னை தாங்கிக் கொள்ளே = என்னை தாங்கிக் கொள்ளேன்


3 comments:

  1. பதில்களை விட, சில கேள்விகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. அந்த வரிசையில் "எந்தர்க்காகத் தளர்ந்தேன் என்று சொல்கிறார்?" என்பது ஒன்று.

    மனிக்கவசகரே தளர்ந்தால், நாமெல்லாம் எப்பொருட்டு?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் திலிப் அவர்களே,

      புறம் புறந்திரிந்த இறைவன் தன்னையாட்கொண்டமையால், இனி அத்தகைய பெருமை வாய்ந்த இறைவன் தன்னை கைவிட்டு விடுவானோ இனித் திருப்பெருந்துறையில் கண்ட இறைவனின் திருவடியை இனி எங்கு? எப்போது காண்பேன்? எனத் தேடித்தேடி தளர்ந்தேன் என்று திருவண்ணாமலையில் உருகியதாக அமைவது இப்பாடலாகும்.

      நல்ல தமிழ் இலக்கியங்களை பகிர்ந்து வரும் ரிதின் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

      நன்றி
      பழ. தமிழார்வன்.

      Delete
  2. மணிக்கவாசகர் தன்னை நாயேன் என்றும் பாவி என்றும் புலையன் என்றும் தளர்ந்தேன் என்றும் பாடல்களில் பலவாறு கூறுகிறார்.
    மக்களுள் பலரும் பலசமயம் தாம் செய்த தவறுகளை இறைவனிடம் கூறி வருந்துகிறேம். அந்த மன நிலையிலுள்ளவர்களுக்கு இந்த மாதிரியான பாடல்கள் மிகவும் ஆறுதலாக இருக்கும். அதுதான் திருவாசகப் பாடலுக்கு சிறப்பு.
    பூதலிங்கம்.

    ReplyDelete