Sunday, June 29, 2014

அச்சோ பத்து - சித்த மலம் அறுவித்து

அச்சோ பத்து - சித்த மலம் அறுவித்து


நாம் யாரோடு சேர்ந்து இருக்கிறோமோ அவர்களின் குணம், எண்ணம் போன்றவை நம்மை கட்டாயம் பாதிக்கும்.

நம் நண்பர்கள் எப்படிப்  பட்டவர்கள்?  நம் உறவினர்கள் எப்படிப  பட்டவர்கள் ? நம்மோடு வேலை செய்பவர்கள் எப்படிப் பட்டவர்கள் ?.... சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

முக்தி நெறியை அறியாத மூர்கர்களோடு சேர்ந்து  கொண்டு முக்தி அடைய வேண்டும் என்று  நினைத்தால் எப்படி நடக்கும் ?

மூர்க்கர் என்றால் பிடிவாதக்காரன் என்று அர்த்தம்.

மூர்கர்களோடு சேர்ந்து கொண்டு முக்தி நெறியில் செல்ல முடியுமா ?

அப்படி, கண்ட மூர்கர்களோடு  சேர்ந்த அலைந்த எனக்கும் பக்தி நெறியை காட்டி, என் பழைய வினைகள் அறுந்து போகும்படி செய்தாய்.

நம் மனம் எவ்வளவு குப்பைகளுக்கு இடமாக இருக்கிறது.

காமம், கோபம், பொறாமை, பேராசை, மதம், மாச்சரியம், ஆணவம்,  இப்படி ஆயிரம் குப்பைகள். கசடுகள். மலங்கள்.

இந்த மலங்களை நீக்கி....

நீக்கினால் என்ன ஆகும் ?

மலம் நீங்கினால் சீவன் சிவன் ஆகும்.

"சித்த மலம் தெளிவித்து சிவமாக்கி எனை ஆண்ட "

நீ எனக்கு அருள் செய்த மாதிரி வேறு யார் எனக்கு செய்வார்கள் என்று ஆச்சரியப் படுகிறார் மணிவாசகர்

பாடல்

முத்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை,
பத்தி நெறி அறிவித்து, பழ வினைகள் பாறும்வண்ணம்,
சித்த மலம் அறுவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட
அத்தன் எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

பொருள்

முத்தி நெறி  = முக்தி அடையும் வழி

அறியாத = அறியாத

மூர்க்கரொடும் முயல்வேனை = மூர்கர்களோடு சேர்ந்து சேர்ந்து அலையும் என்னை


பத்தி நெறி அறிவித்து = பக்தி நெறி என்ன என்பதை நான் அறியும் படி செய்து

பழ வினைகள் பாறும்வண்ணம் = என் பழைய வினைகள் அழியும்படி

சித்த மலம் அறுவித்து = என் சித்தத்தின் மலங்களை நீக்கி

சிவம் ஆக்கி = என்னை சிவமாக்கி

எனை ஆண்ட = என்னை ஆட் கொண்ட

அத்தன் எனக்கு அருளிய ஆறு = அத்தன் எனக்கு அருள் செய்தவாறு

ஆர் பெறுவார்? அச்சோவே! = யார் பெறுவார்கள், அச்சோவே



இராமாயணம் - வினை அறு நோன்பினாள்

இராமாயணம் - வினை அறு நோன்பினாள் 


நோய், பிணி என்று இரண்டு சொல் உண்டு.

நோய் என்றால் வரும், மருந்து உட்கொண்டால் போய் விடும்.

பிணி, போகவே போகாது. அதனால் தான் நம் முன்னவர்கள் பசிப் பிணி, பிறவிப் பிணி என்றார்கள்.

எவ்வளவு சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் மீண்டும் பசிக்கும்.

பிறவியும் அப்படித்தான்....

நல்ல வினை செய்தாலும் அதை அனுபவிக்க மறு பிறவி உண்டு.

தீ வினை செய்தாலும் அதை அனுபவிக்க மறு பிறவி உண்டு.

அறம் பாவம் என்னும் அருங்கையிற்றால் கட்டி என்பார் மணிவாசகர்.

அறமும், பாவமும் நம்மை இந்த பிறவியோடு சேர்த்து கட்டும் கயிறுகள்.

தவம் இரண்டில் இருந்தும் நம்மை விடுவிக்கும்.

வினை அறு நோன்பினாள்  .என்றான் கம்பன்.

இராமனும், இலக்குவனும் அன்று இரவு அவளுடைய ஆசிரமத்தில் தங்கி இருந்தார்கள். அது மதங்க முனிவரின் ஆசிரமம்.

அது வரை தனக்கு வேண்டி தவம் செய்த சவரி , இனி இராம இலக்குவனர்களுக்கு எது நல்லது என்று நினைப்பதற்கு கடினமானதும், ஆராய்ந்து அறிந்தால் மட்டுமே அறியக் கூடியதுமான வழிகளை ஆராய்ந்து சொன்னாள். அந்த வழி சுக்ரீவன் இருக்கும் ரிஷ்ய முகம் என்ற மலைக்கு செல்லும் வழி.

பாடல்

அனகனும் இளைய கோவும் அன்று 
     அவண் உறைந்தபின்றை, 
வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் 
     நோக்கி, வெய்ய 
துனை பரித் தேரோன் மைந்தன் இருந்த 
     அத் துளக்கு இல் குன்றம் 
நினைவு அரிது ஆயற்கு ஒத்த 
     நெறி எலாம் நினைந்து சொன்னாள்.

பொருள்


அனகனும் = குற்றம் இல்லாத இராமனும்

இளைய கோவும் = இலக்குவனும்

அன்று = அன்று

அவண்  = அங்கு

உறைந்தபின்றை = இருந்த பின்

வினை அறு நோன்பினாளும் = வினைகளை அறுக்கும் தவத்தினை கொண்ட சவரி 

மெய்ம்மையின் நோக்கி = உண்மையை ஆராய்ந்து

வெய்ய = வெப்பம் உள்ள

துனை பரித் தேரோன் மைந்தன் = குதிரைகளை கொண்ட தேரை கொண்டவனின் மைந்தன். (சூர்ய குமாரன் சுக்ரீவன் )

 இருந்த = வாழும்

அத் துளக்கு இல் குன்றம் = அந்த குற்றமற்ற மலை

நினைவு அரிது = நினைவுக்கு எட்டாத

ஆயற்கு ஒத்த = ஆய்ந்து அறியக் கூடிய

நெறி எலாம் நினைந்து சொன்னாள். = வழிகளை நினைந்து சொன்னாள்.நெறி என்றால் நல்ல நெறி மட்டும் தான் என்று பெரியவர்கள் கொள்வார்கள். நெறி என்று தானே சொல்லி இருக்கிறது.....நல்ல நெறியா தீய நெறியா என்று சொல்லவில்லையே என்று நினைக்கக் கூடாது. பெரியவர்கள் நல்லதையே நினைப்பார்கள்.

நெறி அல்லா நெறி தன்னை நெறியாகக் கொள்வேனை என்பார் மணிவாசகர்.

"நெறி அல்லா நெறி" என்றால் தீய நெறி.

நெறி என்றாலே நல்ல நெறிதான்.


நான் நினைத்தது உண்டு....ஏன் இராமன் வாலியின் துணையை நாடாமல் அவனிடம்  தோத்துப் போன சுக்ரீவனின் துணையை நாடினான் என்று ?

வாலி , இராவணனை விட பலசாலி.

பின் ஏன் இராமன் சுக்ரீவனிடம் போனான் ?

சவரி சொல்லித் தான் இராமன் சுக்ரீவன் துணையைப் பெற்றான்.

ஏன் அவ்வாறு செய்தான் ?

அது நம் நினைவுக்கு எட்டாத ஒன்று.  ஆராய்ந்து அறிய வேண்டிய ஒன்று என்கிறான்  கம்பன்....

நினைவு அரிது ஆயற்கு ஒத்த
     நெறி எலாம் நினைந்து சொன்னாள்.

நீங்களும் நானும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. 

இராமனின் அவதார நோக்கம் நிறைவேற எது சிறந்த வழியோ அதை நினைந்து சொன்னாள். 

பெரியவர்கள் சொல்லியதை அப்படியே கேட்டு நடக்கிறான் இராமன்.

ஆகமப் பிரமாணம். பெரியவர்கள் சொல்லியதில் நம்பிக்கை. 

சவரி வழி நடத்தாவிட்டால் இராமன் வேறு எங்கோ போய் இருப்பான். காப்பியத்தின் போக்கு மாறி இருக்கும். 

கதையின் போக்கை, அவதார நோக்கை நிறைவேற்றினாள் சவரி.

இதை இன்னொரு கோணத்தில் யோசித்துப் பார்ப்போம்.


இராவணன் தீங்கு செய்கிறான். அவன் தீமையின் உச்சம் மாற்றான் மனைவியை கவர்ந்தது. அவன் அழிக்கப் பட வேண்டியவன். அதற்கு வழி கோல எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்து தவம்  செய்த சவரி உதவுகிறாள். 

தீமை பிறக்கும் போதே அதை அழிக்க ஒரு நல்லதும் எங்கோ தோன்றுகிறது. 

சவரியின் நோக்கம் இராவணனை அழிப்பது  அல்ல.ஆனால் அவள் உதவினாள். 

அறம் ஒரு மிகப் பெரிய சக்தி. தீமை அழிந்தே தீரும். 

தசரதனின் கன்னத்தில் தோன்றிய ஒரு நரை மயிர், கூனியின் கோபம், கைகேயின் வரம், சூற்பனகையின் காமம், சீதையின் அழகு, சவரியின் அறிவு என்று ஒன்றோடு  ஒன்று தொடர்பில்லாதவை எல்லாம் ஒன்று சேர்ந்து இராவணன் என்ற  தீமையை அழிக்க துணை நின்றன. 

அறம் வெல்லும். மறம் தோற்கும். 

நம் இலக்கியங்கள் மீண்டும் மீண்டும் சொல்வது இதைத்தான். 

Saturday, June 28, 2014

திருக்குறள் - அவர்கள் அறியாதது என் பாக்கியம்

திருக்குறள் - அவர்கள் அறியாதது என் பாக்கியம்

"நீயும் தான் அவள விடாம சுத்துறா , அவ உன்ன திரும்பிக் கூட பாக்க மாட்டேங்குறா...அவள விட்டுட்டு வேற வேலையைப் பார்ரா " என்று அவன் நண்பர்கள் அவனுக்கு அட்வைஸ் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

அவனுக்கோ அவளை விட மனமில்லை.

அவள் மேல் உயிரையே வைத்து இருக்கிறான்.

அவ அந்த பக்கம் இந்த பக்கம் வரும் போதும் போகும் போதும் , "மச்சி உன் ஆளு வர்றாடா " என்று நண்பர்கள் சொல்லும் போது சிலிர்த்துப் போவான்.

இப்படி, இவன் காதல் குறுகிய நண்பர்கள் வட்டத்தில் இருந்தது கொஞ்ச கொஞ்சமாக கசிந்து அவளின் தோழிகள் மத்தியிலும் பரவியது. "ஏண்டி , அவன் தான் கிடந்து இப்படி உருகுரான்ல ...சரின்னு சொல்ல வேண்டியது தானே ... உனக்கு என்ன அவ்வளவு ராங்கி " என்று அவளிடம் சொல்லத் தலைப் பட்டார்கள்.

இந்த விவகாரம் இவர்களின் வட்டத்தையும் தாண்டி இன்னும் வெளியில் செல்ல ஆரம்பித்து விட்டது.

இப்படி எல்லோரும் தன் காதலைப் பற்றிப் பேசுவது அவனுக்கு உள்ளுக்குள் ரொம்ப சந்தோஷம். இதனால், நாளடைவில் அவள் மனமும் இளகும் , தன் மேல் ஒரு கருணை பிறக்கும்,  அது அன்பாகக் கனியும், காதலாக மாறும்  என்று அவன்  நம்பத் தொடங்கினான்.

இப்படி ஊர் பேசுவதற்குப் பெயர் - அலர் தூற்றல் என்று பெயர்.

இப்படி, அந்த  ஊர், அவர்கள் அறியாமலேயே , அவனுடைய காதலுக்கு உதவி செய்தது. அது என் பாக்கியம் என்கிறான் அவன்.

பாடல்

அலரெழ வாருயிர் நிற்கு மதனைப் 
பலரறியார் பாக்கியத் தால்.

சீர் பிரித்த பின்

அலர் எழு ஆருயிர் நிற்கும் அதனை 
பலர் அறியார் பாக்கியத்தால் 

பொருள்

அலர் எழு  = காதலைப் பற்றி ஊர் பேசுவது

ஆருயிர் நிற்கும் = அதனால் என் காதல் பலப் பட்டு,  என் உயிர் என்னை விட்டு பிரியாமல் நிற்கும். இங்கே உயிர் என்பதை காதலி என்றும் கொள்ளலாம்...அல்லது காதல் கை கூட இருப்பதால் அவன் உயிர் அவனை விட்டு போகாமல் இருப்பதாகவும் கொள்ளல்லாம்.


அதனை = அதனை

பலர் அறியார் = பலர் அறிய மாட்டார்கள்

பாக்கியத்தால் = நான் செய்த புண்ணியத்தால்


இராமாயணம் - ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது

இராமாயணம் - ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது

இராமனிடம் சவரி சொல்கிறாள்...."இராமா, நீ வருவதற்கு முன்னால் ஈசனும், பிரமனும், எல்லா தேவர்களும் , இந்திரனும் இங்கு வந்து இருந்தார்கள். வந்தவர்கள் என்னிடம் உன் குற்றமற்ற தவத்தின் பலன் உனக்கு கிடைக்கப் போகிறது. இராமனுக்கு வேண்டிய பூசைகளை செய்து நீ எம்மிடம் வந்து சேர்வாயாக என்று கூறிச் சென்றனர் என்றார்.

பாடல்

ஈசனும், கமலத்தோனும், இமையவர் 
     யாரும், எந்தை! 
வாசவன் தானும், ஈண்டு வந்தனர் 
     மகிழ்ந்து நோக்கி, 
"ஆசு அறு தவத்திற்கு எல்லை 
     அணுகியது; இராமற்கு ஆய 
பூசனை விரும்பி, எம்பால் 
    போதுதி" என்று, போனார்.

பொருள்

ஈசனும் = சிவனும்

கமலத்தோனும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

இமையவர் யாரும் = தேவர்கள் எல்லோரும்

எந்தை! = எம் தந்தை போன்ற

வாசவன் தானும் = இந்திரன் தானும்

ஈண்டு வந்தனர் = இங்கு வந்தனர்

மகிழ்ந்து நோக்கி = என்னை மகிழ்ந்து நோக்கி

"ஆசு அறு தவத்திற்கு = குற்றம் அற்ற தவத்திற்கு

 எல்லை அணுகியது = பலன் கிடைக்கப் போகிறது

இராமற்கு = இராமனுக்கு

ஆய பூசனை விரும்பி = செய்ய வேண்டிய பூஜைகளை எல்லாம் செய்து

எம்பால் போதுதி" என்று, போனார் = எம்மிடம் வந்து சேர்வாயாக என்று கூறிச் சென்றார்


கம்பன் காட்டிய கடவுள் என்று தனியாக எழுதலாம். 

இராமனை திருமாலின் அவதாரம் என்று சொல்லாமல் சொல்லிய இன்னொரு பாடல் இது. 

சிவனும், பிரமனும், இந்திரனும் மற்ற எல்லா தேவர்களும் வந்தார்கள் ஆனால்  அந்த வரிசையில் திருமால் இல்லை . ஏன் ?

திருமால் தான் இராமனாக அவதரித்து இருக்கிறான் என்று சொல்லாமல் சொல்லிய  பாடல் இது. 

சவரியின் குற்றமற்ற நீண்ட கால தவப் பயன் இராமன் அவளிடம் வந்தான். 

தவம் , கடவுளை உங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தும். 

வருகிறவன் இராமன் என்று அவளுக்குத் தெரியாது. சிவனும், பிரமனும் , இந்திரனும், மற்றைய தேவர்களும் அவளிடம் வந்து சொல்கிறார்கள்...

தவத்தின் பெருமையை என்ன என்று சொல்லுவது. 

 

Friday, June 27, 2014

இராமாயணம் - மாண்டது என் மாயப் பாசம்

இராமாயணம் - மாண்டது என் மாயப் பாசம் 


இராமனை நினைத்து பன்னெடுங்காலம் தவம் இருந்தாள் சவரி .

இறுதியில்,  அவளின் தவத்தின் பயனாய் , இராமன் நேரில் அவள் முன் தோன்றினான்.

அவளின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.

அவனை பார்க்க பார்க்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல  கொட்டுகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றது மாதிரி.

சவரி சொல்கிறாள்

"என் மாயப் பாசம் மாண்டது. கணக்கில்கணக்கில்லா காலம் நான் செய்த தவத்தின் செல்வம்  வந்தது. என் பிறவிப் பிணி போய் விட்டது "

பின் அவர்களுக்கு வேண்டிய விருந்தினை செய்தாள்

 பாடல்

ஆண்டு, அவள் அன்பின்
     ஏத்தி, அழுது இழி அருவிக்கண்ணள், 
'மாண்டது என் மாயப் பாசம்; 
     வந்தது, வரம்பு இல் காலம் 
பூண்ட மா தவத்தின் செல்வம்; 
     போயது பிறவி' என்பாள் 
வேண்டிய கொணர்ந்து நல்க, 
     விருந்துசெய்து இருந்த வேலை,

பொருள்

ஆண்டு = அப்போது

அவள் அன்பின் ஏத்தி = அவள் அன்பினால் இராமனை புகழ்ந்து

அழுது = அழுது

இழி அருவிக்கண்ணள் = அருவி போல நீர் விழும் கண்களோடு

'மாண்டது என் மாயப் பாசம் = இறந்தது என் மாயமான பாசம்

வந்தது, வரம்பு இல் காலம்  பூண்ட மா தவத்தின் செல்வம் = வந்தது இத்தனை காலம் செய்த  தவத்தின் பயன்

போயது பிறவி' என்பாள் = போனது என் பிறவி என்றாள்

வேண்டிய கொணர்ந்து நல்க = வேண்டியதை கொண்டு வந்து தந்து

விருந்துசெய்து இருந்த வேளை = விருந்து செய்து இருந்த போது

இது என்ன பெரிய விஷயம் ...ஒரு பக்தை அவளின் இறைவனை கண்டபோது கண்ணீர் ததும்புவதும், விருந்து செய்வதும் பெரிய விஷயமா என்றால்...இல்லைதான்.  ஆனால்,கம்பர் இதில் பல ஆழமான விஷயங்களை சொல்கிறார்.

முதலில், இராமன் அவளுக்கு ஒரு வரமும் தரவில்லை. அவளே சொல்லிக் கொள்கிறாள். மாண்டது என் மாயப் பாசம், வந்தது செல்வம், போயது பிறவி என்று.  அவளுக்குத் தெரிகிறது. இது எல்லாம் தந்து பெறுவது அல்ல. அவை நிகழும்போது தெரியும்.  தவத்தின் பயன் இயல்பான ஒன்று.

இரண்டாவது, அவளின் மகிழ்ச்சி எல்லை கடந்து நிற்கிறது. மாயப் பாசம் மாண்டது என்று தான் சொல்ல வேண்டும். தவத்தின் பயன் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.   ஆனால், அவள் மாண்டது மாயப் பாசம் என்று மாண்டதை முதலில்  சொல்கிறாள். அவ்வளவு அவசரம். அவ்வளவு மகிழ்ச்சி.
மாண்டது, வந்தது, போயது என்று முதலில் நடந்ததை சொல்லி பின் என்ன நடந்தது என்று சொல்கிறாள்.

மூன்றாவது, கிடைத்தது தவத்தின் பயன் என்று சொல்லவில்லை. "வந்தது, வரம்பு இல் காலம்  பூண்ட மா தவத்தின் செல்வம்  ". இராமன் வந்ததை தவத்தின் பயனாகச் சொல்கிறாள்.

நான்காவது, நாம் எல்லாம் செல்வம் என்றால் ஏதோ காசு பணம், வீடு, நகை, நட்டு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது அல்ல. தவத்தின் பயனாக கிடைபதுதான் செல்வம்.

ஐந்தாவது, ஏதோ கொஞ்ச காலம் செய்த தவம் அல்ல. வரம்பு இல் காலம் செய்த தவத்தின் பயன் இராமன் வந்தான் என்கிறாள். நமக்குதான் எவ்வளவு அவசரம். ஒரு பூஜை, ஒரு கோவிலுக்கு போவது, ஒரு வேண்டுதல்...உடனே பலன் கிடைக்க  வேண்டும் என்று நினைக்கிறோம். கிடைக்காவிட்டால் சந்தேகம் வருகிறது. இந்த பூஜை புனஸ்காரங்களை தொடர வேண்டுமா என்று. சவரி வரம்பு இல் காலம் தவம் செய்து இராமனை காணப் பெற்றாள். இறைவனை காண, தவத்தின் பலனைப் பெற பொறுமை, விடா முயற்சி வேண்டும். வரம்பு இல் காலம்.

பக்தியின் உச்சம். தவத்தின் உச்சம்.









Thursday, June 26, 2014

இராமாயணம் - சவரி - ஓர் மூலம் இல்லான்

இராமாயணம் - சவரி -  ஓர் மூலம் இல்லான் 


ஆரண்ய காண்டத்தின் கடைசிப் பகுதி சவரி  மோட்சம்.  வெகு சில பாடல்களே உள்ள படலம்.

இராமனும், இலக்குவனும் சவரியைப் பார்த்தார்கள். சவரி அவர்களை உபசரித்தாள். அவர்களை சுக்ரீவன் இருக்கும் மலைக்குப் போகச் சொன்னாள். பின் இந்த உடலை விடுத்து விண்ணுலகம் சென்றாள் . அவ்வளவுதான்.

இராமனுக்கும் சவாரிக்கும் நடக்கும் உரையாடல் மிக மிகச்  சிறிய ஒன்று. இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் நீண்ட காலம் அறிந்தவர்களைப் போல பேசிக் கொள்கிறார்கள்.

நீண்ட நாள் கழித்து ஒரு நண்பனை சந்தித்தால் எப்படி இருக்குமோ, அந்த மன நிலையை கம்பர்  கட்டுகிறார்.

சவரி  இராமனின் வரவுக்காக நீண்ட நாள் காத்து இருக்கிறாள். அவன் வருவான் என்று அவளுக்குத் தெரியும்.

இராமன் அந்த கானகம் வர வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. அவன் முடி சூட்டிக் கொண்டு அயோத்தியில் இருந்து அரசாள இருந்தவன்.

விதி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு இராமனை இங்கு கொண்டு வந்து சேர்த்தது. ஆனால், எப்படியோ இராமன் வருவான் என்று சவரி நம்பினாள் .

அவன் நம்பிக்கை வீண் போகவில்லை.

இராமன் அவளைப் பார்த்து "ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறாய் போல் இருக்கிறது " என்று அன்புடன் வினவுகிறான்.

அப்படி கேட்டவன் யார் ?

அவனுக்கு முன்னால் ஏதோ ஒன்று இருந்தது என்று எண்ணக் கூட முடியாத அளவுக்கு எல்லாவற்றிற்கும் மூல காரணமாய் நின்ற இராமன்.

அவன் தான் ஆதி மூலம். அவனுக்கு முன்னால் எதுவம் கிடையாது.


எல்லாவற்றையும் இறைவன் படைத்தான் என்றால் இறைவனைப் படைத்தவன் யார் என்ற கேள்வி  எழும் . அப்படி இறைவனைப் படைத்தவன் அல்லது படைத்தது என்று ஒன்று உண்டா இல்லையா என்று தெரியாது. அப்படியே ஒன்று இருந்தாலும், அதை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்கிறார் கம்பர்.

"அவனுக்கு முன்னால் " எது என்பதை எண்ணிக் கூட பார்க்க முடியாது.


பாடல்

அன்னது ஆம் இருக்கை நண்ணி, 
     ஆண்டுநின்று, அளவு இல் காலம் 
தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத் 
     தலைப்பட்டு, அன்னாட்கு 
இன்னுரை அருளி, 'தீது இன்று 
     இருந்தனைபோலும்' என்றான் - 
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது 
     ஓர் மூலம் இல்லான்.


பொருள்

அன்னது ஆம் இருக்கை நண்ணி = அப்படி அவள் இருந்த  இடத்தை அடைந்து

ஆண்டுநின்று = அங்கிருந்த

அளவு இல் காலம் = அளவில்லாத காலம். நீண்ட காலம்

தன்னையே நினைந்து = தன்னையே நினைந்து

நோற்கும் = நோன்பு இருக்கும். தவம் இருக்கும்

சவரியைத்  = சவரியை


தலைப்பட்டு,= நெருங்கி

அன்னாட்கு இன்னுரை அருளி, = அவளுக்கு பல இனிய உரைகளை நல்கி


'தீது இன்று  இருந்தனைபோலும்' என்றான் = ஒரு    தீமையும் உன்னை அண்டாமல் இருந்தாய் போலும் என்றான்

முன் இவற்கு இது = இவனுக்கு முன்னால் இது இருந்தது 

என்று எண்ணல் ஆவது = என்று எதையுமே எண்ண முடியாத

ஓர் மூலம் இல்லான்.= ஒரு  மூலப் பொருள் ஆனான்



Tuesday, June 24, 2014

இராமாயணம் - காமத்தை வெல்ல ....

இராமாயணம் - காமத்தை வெல்ல ....


காமத்தை வெல்ல முடியுமா ?

சீதையின் நினைவால் உழன்ற இராவணன் அரண்மனை விடுத்து ஒரு சோலை சென்று அடைந்தான். அவன் போட்ட அதட்டலில் பருவ காலங்கள் எல்லாம் மாறிப் போயின. என்ன பருவ காலம் வந்து என்ன ? அவன் உள்ளுக்குள் வெந்து கொண்டிருந்தான்.

காமம் இராவணனை மட்டும் வாட்டுவது அல்ல.

காமம் ஒரு உயிர்  சக்தி. அது எல்லா உயிர்களையும் பிடிக்கும். எல்லா உயிர்களுக்கும் அது பிடிக்கும். அது எல்லை மீறும் போது , வரம்பு மீறும் போது எல்லா சிக்கலும் வருகிறது.

காமத்தை எப்படி வெற்றிக் கொள்ளுவது.

காமம் விச்வாமித்திரனைப்  பற்றியது, பராசரரைப் பற்றியது, இந்திரனை, சந்திரனை, வியாரை, சந்தனுவை என்று எல்லோரையும் ஆட்டிப் படைத்தது.

காமத்தை வெல்ல கம்பர் வழி  சொல்லுகிறார்.அந்த ஒரு வழியைத் தவிர வேறு எந்த வழியிலும் காமத்தை வெல்ல முடியாது.

அது - ஒழுக்கம் என்ற வழி. ஒழுக்கத்துடன் நடந்தால் காமத்தை வெல்லலாம்.

பாடல்

கூலத்தார் உலகம் எல்லாம்
    குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க,
நீலத்து ஆர் அரக்கன் மேனி
    நெய் இன்றி எரிந்தது; அன்றே
காலத்தால் வருவது ஒன்றோ?
    காமத்தால் கனலும் வெம் தீச்
சீலத்தால் அவிவது அன்றிச்
    செய்யத்தான் ஆவது உண்டோ?


பொருள் 

கூலத்தார் = கடல் சூழ்ந்த

உலகம் எல்லாம் = இந்த உலகம் எல்லாம்

குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க = குளிரும் வெம்மையும் போயிற்று (இராவணனின் ஆணையினால் )

நீலத்து ஆர்  அரக்கன் மேனி = நீலம் சேர்ந்த அரக்கனின் உடல்

நெய் இன்றி எரிந்தது; = நெய் இன்றி எரிந்தது. காமம் உள்ளே எரிக்கிறது.

அன்றே = அல்லாமல்

காலத்தால் வருவது ஒன்றோ? = அந்த காம வெப்பம் காலத்தால் வருவது இல்லை

காமத்தால் கனலும் வெம் தீச் = காமத்தால் பொங்கும் அந்தத்  தீ

சீலத்தால் = ஒழுக்கத்தால் , நன்னடத்தையால்

அவிவது அன்றிச் = அழியுமே அன்றி

செய்யத்தான் ஆவது உண்டோ? = வேறு எதாலும் ஒன்றும் செய்ய முடியாது.

காமத்தை அறிவால் , ஆற்றலால்,  செல்வத்தால், அழகால்,அதிகாரத்தால் எதனாலும் வெற்றி கொள்ள முடியாது.

இராவணனிடம் இது எல்லாம்  இருந்தது. இருந்தும் அவனால் காமத்தை வெல்ல  முடியவில்லை.அழிந்தான். காரணம் அவனிடம் ஒழுக்கம் இல்லை. 

ஒழுக்கம் ஒன்றே காமத்தை வெல்லும் வழி. 

இந்த ஒரு பாடம் போதாதா ? இராமாயணத்தில் எவ்வளவோ அறிவுரைகள், புத்திமதிகள் இருக்கின்றன. 

இது அவற்றுள் நவரத்தினம்  போன்றது.

 

Monday, June 23, 2014

தேவாரம் - மற்றவர்கள் சிரிக்கும் முன்

தேவாரம் - மற்றவர்கள் சிரிக்கும் முன் 


காலம் உருண்டு ஓடியது.

இளமை முடிந்து, முதுமை வந்து பின் மரணமும் வந்து சேர்ந்தது.

இறந்து கிடக்கும் அவர் அருகில் சுற்றமும் நட்பும்.

இருக்கும் காலத்தில் அவர் பண்ணிய அட்டகாசங்களை மனதுக்குள் எல்லோரும் நினைத்துக்  கொள்கிறார்கள்.

கட்டிய மனைவி கூட நினைப்பாள் ... இந்த கிழத்துக்கு இருக்குற இடத்துல தண்ணி கொண்டு வந்து  தரணும் , கையப் பிடிச்சு விடு, காலப் பிடிச்சு விடு னு என்னா அழிச்சாட்டியம்..இப்ப பாரு கட்டை மாதிரி படுத்து கிடக்கு....

 நண்பர்கள், உடன் வேலை செய்தவர்கள் என்று எல்லோரும் மனதுக்குள் நினைப்பார்கள். அவர் செய்த  தவறுகளை நினைத்து சிரிக்கும் காலம் வந்தது.

அவருக்கு வந்ததுதான் நமக்கும்....அப்படி ஒரு காலம் வருமுன்னே திருச்சிற்றம்பலம் சென்று அடைந்து உய்யுங்கள் என்கிறார் நாவுக்கரசர்.

பாடல்

அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென்றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.


 சீர் பிரித்த பின் 


அரிச் சுற்ற வினையால் அடர்புண்டு நீர்
எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர்
சிரிச் சுற்றுப் பல பேசப் படா முனம்
திருச் சிற்றம்பலஞ் சென்று அடைந்து உய்ம்மினே.


பொருள் 

அரிச் சுற்ற வினையால் = அரிக்கின்ற வினையால்

அடர்புண்டு =  தாக்கப் பட்டு

நீர் = நீங்கள்

எரிச் சுற்றக் கிடந்தார் என்று = தீ சுற்றிலும் எரியக் கிடந்தார் என்று

அயலவர் = மற்றவர்கள்

சிரிச் சுற்றுப் பல பேசப் படா முனம் = சிரித்துப் பல பேசப்படா முன்னம்

திருச் சிற்றம்பலஞ் சென்று அடைந்து உய்ம்மினே.= திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து பிழைக்கின்ற வழியைப் பாருங்கள்.



இராமாயணம் - அவளை இதுக்கு முன்னால எங்கேயோ பாத்து இருக்கேன்

இராமாயணம் - அவளை இதுக்கு முன்னால எங்கேயோ பாத்து இருக்கேன் 


காதல் வசப்பட்ட நம் பசங்க சொல்லும் டயலாக் "என்னமோ தெரியலடா...அவள பாத்தவுடனேயே மனசு என்னவோ பண்ணுது...இதுக்கு முன்னாடி எப்பவோ அவள பாத்து இருக்கேன் ...ஒரு வேளை போன ஜன்மத்து தொடர்பா இருக்குமோ "

இது நம்ம பசங்க சொல்றது மட்டும் இல்ல....இராவணனும் சொல்கிறான்  - ஒரு படி மேலே போய்.

நம்ம பசங்களாவது பாத்து விட்டு பின் ஜொள்ளு விடுவார்கள்.

இராவணன் பார்க்காமலேயே ஜொள்ளு விடுகிறான்.

இதற்கு முன் சீதையைப் பார்த்தது கூட கிடையாது. இருந்தும் சொல்கிறான்...."கொன்றை காய் போல கூந்தலைக் கொண்ட அந்தப் பெண் என் மனதில் வந்து தங்கி விட்டாள் . அவளை நான் இதற்கு முன்னால் பார்த்து இருக்கிறேன்...".

 பாக்கவும் இல்ல ஒண்ணும் இல்ல...தலைவரு சும்மா உருகுராரு....

பாடல்

'கொன்றை துன்று கோதையோடு ஓர் 
     கொம்பு வந்து என் நெஞ்சிடை 
நின்றது, உண்டு கண்டது' என்று, 
     அழிந்து அழுங்கும் நீர்மையான், 
மன்றல் தங்கு அலங்கல் மாரன் 
     வாளி போல, மல்லிகைத் 
தென்றல் வந்து எதிர்ந்த 
     போது, சீறுவானும் ஆயினான்.


பொருள்

'கொன்றை துன்று = கொன்றை கையைப் போன்ற கூந்தல் உள்ள

கோதையோடு = பெண்ணோடு

 ஓர் கொம்பு வந்து = ஒரு பூங்கொம்பு போன்ற அவள்

என் நெஞ்சிடை நின்றது = என் மனதில் வந்து நின்றாள்

உண்டு கண்டது = அவளை நான் இதற்கு முன் கண்டிருக்கிறேன்

என்று = என்று

அழிந்து = அழிந்து

அழுங்கும் = வருந்தும்

நீர்மையான் = இராவணன்

மன்றல் தங்கு = மணம் பொருந்திய

அலங்கல் = மாலை சூடிய

மாரன் = மன்மதன்

வாளி போல,= அம்பு போல

மல்லிகைத் தென்றல் வந்து எதிர்ந்த  போது = மல்லிகை மணத்தை ஏந்தி வந்த தென்றல் காற்று வந்தபோது. மன்மதனின் அம்புகளில் ஒன்று மல்லிகை மலர். இங்கே தென்றல் மல்லிகை மணத்தை அள்ளிக் கொண்டு வருகிறது. எனவே அது மன்மதனின் அம்பைப் போல இருக்கிறது.

 சீறுவானும் ஆயினான்.= சீற்றம் கொண்டான்.

காதல் படுத்தும் பாடு. 

அப்பேற்பட்ட இராவணனுக்கே இந்த கதி .....


அடைக்கலப் பத்து - தாழியைப் பாவு தயிர் போல்

அடைக்கலப் பத்து - தாழியைப் பாவு தயிர் போல் 




இறைவன் யார் ? அப்படி ஒருவன் இருக்கிறானா ? இருக்கிறான் என்றால் எங்கே இருக்கிறான் ? அவன் ஆணா , பெண்ணா? அலியா ? உலகில் இவ்வளவு துன்பங்களும் பிரச்சனைகளும் இருக்கிறதே ....இறைவன் என்று ஒருவன் இருந்தால் ஏன் இவ்வளவு துன்பம் ?

இது போல பல கேள்விகள் அவ்வப்போது நம் மனதில் எழுந்து போகின்றன. இதையெல்லாம் அறிந்து கொள்ளலாம் என்றால் எங்கே நேரம் இருக்கிறது ? காலை எழுந்து இரவு படுக்கப் போகும் வரை அந்த வேலை, இந்த வேலை, என்று அங்கும் இங்கும் அலைகிறோம் .

பானையில் தயிரை இட்டு கடையும் போது ஒரு முறை இந்தப் பக்கம் போகும், மறு முறை அந்தப் பக்கம் போகும். ஒரு நிலை இல்லாமல் அலையும். அது போல, மாவடு போன்ற கண்களை கொண்ட பெண்களின் பின்னால் அலைகிறேன். என்று , எப்போது உன்னை வந்து காணப் போகிறேன் தெரியவில்லையே. விட்டு விட்டால் நான் இப்படியே இருந்து அழிந்து போவேன். நான் உன் அடைக்கலம். என்னை காப்பாற்று என்று ஓலமிடுகிறார் மணிவாசகர்.


பாடல்

மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட, உடைந்து,
தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த் தாள்,
வாழி! எப்போது வந்து, எந் நாள், வணங்குவன் வல் வினையேன்?
ஆழி அப்பா! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.


பொருள்

மாழை = மா போன்ற. அதாவது மாவடு போன்ற

மைப் பாவிய = மை தீட்டிய

கண்ணியர் = கண்களைக் கொண்ட

வன் மத்து இட = வலிமையான மத்தை இட

உடைந்து = உடைந்து

தாழியைப் பாவு தயிர் போல் = தாழியில் (பானையில் ) பரவுகின்ற தயிர் போல

தளர்ந்தேன் = தளர்ந்தேன். கட்டியான தயிர் எப்படி மெலிந்து நீர்த்துப் போகிறதோ அது போல தளர்ந்து போகிறேன்

தட மலர்த் தாள் = சிறந்த மலர் போன்ற பாதங்கள்

வாழி! = வாழ்க

எப்போது வந்து = எப்போது வந்து

எந் நாள் = எந்த நாள்

வணங்குவன் = வணங்குவேன்

வல் வினையேன்? = கொடிய வினை உடைய நான்

ஆழி அப்பா! = கடல் போன்ற அருள் கொண்டவனே

 உடையாய்!  = என்னை உடையவனே

அடியேன் உன் அடைக்கலமே. = அடியேன் , உன் அடைக்கலமே

Sunday, June 22, 2014

மெய்யுணர்தல் - நரகம் புகினும் எள்ளேன்

மெய்யுணர்தல் - நரகம் புகினும் எள்ளேன் 


இந்த உலகில் வாழ்வதே எவ்வளவு சிக்கலாக இருக்கிறது ? எத்தனை பிரச்சனைகள் ? ஒரு நாள் போல் இன்னொரு நாள் இல்லை. ஒரு நாள் மகிழ்ச்சியாக இருக்கிறது...இன்னொரு நாள் துன்பம் வருகிறது.

மூப்பு கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறது ?

நோய் உள்ளுக்குள் காத்து இருக்கிறது.

மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் -  நமக்கு மட்டும் அல்ல, நம்மைச் சேர்ந்தவர்களுக்கும்.

இந்த உலக வாழ்வே இப்படி என்றால் நரக வாழ்வு எப்படி இருக்கும் ? நரகம் என்று ஒன்று இருக்கும் என்றால் அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்க முடியுமா ?

மாணிக்க வாசகர் சொல்கிறார்,

இறைவா, உன் திருவருள் இருக்கும் வரை, நரக வாழ்க்கை கிடைத்தாலும் கவலைப் பட மாட்டேன் என்கிறார்.

அவன் திருவருள் இருந்தால், நரக வாழ்கையே ஒரு பொருட்டு இல்லை என்றால், இந்த உலக வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு பெரிய சிக்கலாக இருக்காது.

உன் திருவருள் இருந்தால் போதும்....இந்திரன் பதவியும் பெரிதல்ல, நரக வாழ்வும் பெரிது அல்ல. சொர்கமும் நரகும் ஒரு பொருட்டே அல்ல என்கிறார். உன் அருள் ஒன்றே போதும் என்கிறார்.

பாடல்

கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்,
எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா!
உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!


பொருள்

கொள்ளேன் = ஏற்றுக் கொள்ள மாட்டேன்

புரந்தரன் = இந்திரன்

மால் = திருமால்

அயன் = பிரமன்

வாழ்வு = வாழ்வு. அவர்கள் பெற்ற வாழ்வு வேண்டாம்.

குடி கெடினும் = என் குடியே (குடும்பமே) கெட்டாலும்

நள்ளேன்  = மற்றவரோடு உறவு கொள்ள மாட்டேன்

நினது அடியாரொடு அல்லால் = உன் அடியார்களைத் தவிர

நரகம் புகினும் = நரக வாழ்வே கிடைக்கும் என்றாலும்

எள்ளேன் = அதற்காக வருத்தப் படமாட்டேன்

திரு அருளாலே இருக்கப் பெறின் = உன் திருவருள் இருக்கப் பெற்றால்

இறைவா! = இறைவா

உள்ளேன் பிற தெய்வம் = மற்ற தெய்வங்களை நினைக்க மாட்டேன்

உன்னை அல்லாது =உன்னைத் தவிர

எங்கள் உத்தமனே! = எங்கள் உத்தமனே



இராமாயணம் - காம நோய்க்கு மருந்து உண்டா ?

இராமாயணம் - காம நோய்க்கு மருந்து உண்டா ?


காம நோய்க்கு மருந்து உண்டா ?

சீதையின் மேல் காமம் கொண்டான் இராவணன். அரண்மனை பிடிக்காமல் சோலைக்குச் சென்றான். அவனுக்குப் பயந்து அங்குள்ள கிளிகளும், குயில்களும் வாய் மூடி மெளனமாக இருந்தன என்று பார்த்தோம்.

அவன் போட்ட அதட்டலில் வாடைக் காலம் போய் வேனிற் காலம் வந்தது.

வாடை குளிர்ந்தது என்றால் வேனில் காலம் சுடுகிறது.

காமம் மனதில் வந்து விட்டால், காலம் தான் என்ன செய்யும் ?

பாடல்

வன் பணை மரமும், தீயும், 
     மலைகளும் குளிர வாழும் 
மென் பனி எரிந்தது என்றால், 
     வேனிலை விளம்பலாமோ? 
அன்பு எனும் விடம் உண்டாரை 
     ஆற்றலாம் மருந்தும் உண்டோ?- 
இன்பமும் துன்பம்தானும் உள்ளத்தோடு 
     இயைந்த அன்றே?

பொருள்

வன் = உறுதியான

பணை மரமும் = பெரிய மரமும். பணை என்றால் பெரிய. பணைத் தோள்கள் என்றால் பெரிய தோள்கள்

தீயும் மலைகளும் = தீ கொண்ட மலைகளும்

குளிர வாழும் = குளிரும் படி வாழும்

மென் பனி எரிந்தது என்றால் = மென்மையான பனியே எரியும் என்றால்

வேனிலை விளம்பலாமோ? = வேனில் காலத்தை பற்றி என்ன சொல்ல

அன்பு எனும் விடம் உண்டாரை = காமம் என்ற விஷத்தை உண்டவர்களை. இங்கு அன்பு என்பது காமம் என்ற பொருளில் வருகிறது.

ஆற்றலாம் மருந்தும் உண்டோ? = குணப் படுத்தும் மருந்து உண்டா ?

இன்பமும் துன்பம்தானும் = இன்பமும், துன்பமும்

உள்ளத்தோடு இயைந்த அன்றே? = நம் மனதோடு சேர்ந்த ஒன்று

இடமும் (அரண்மனை, சோலை ), காலமும் (வாடைக் காலமும் வேனில் காலமும் ) ஒன்றும் செய்யாது.

இன்பமும் துன்பமும் மனதில் இருந்து வருகிறது.

அறிவும், ஆற்றலும், செல்வமும், அதிகாரமும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் இல்லை. அவை தான் காரணம் என்றால் இராவணன் இன்பமாக இருந்திருக்க வேண்டுமே ? இத்தனையும் இருந்தும் அவன் துன்பப் படுகிறான்.

மனம் தான் காரணம்.

மனம் மாறினால் இன்பமும் துன்பமும் மாறும்.



Saturday, June 21, 2014

அடைக்கலப் பத்து - கல்வி ஞானம் இல்லா அழுக்கு மனம்

அடைக்கலப் பத்து - கல்வி ஞானம் இல்லா அழுக்கு மனம் 


கல்வி வேறு ஞானம் வேறா ?

கல்விக்கு ஒரு அதிகாரம் வைத்த வள்ளுவர், அறிவுடைமைக்கு தனியாக ஒரு அதிகாரம் வைத்து இருக்கிறார் . இரண்டும் ஒன்று என்றால் எதற்கு இரண்டு அதிகாரம்.

கல்வி வெளியில் இருந்து உள்ளே போவது.

ஞானம் உள்ளிருந்து வெளியே வருவது.

படிக்கும் எல்லோருக்கும் ஒரே பொருளா தோன்றுகிறது ? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பொருள் தோன்றுகிறதே ஏன்?

உள்ளிருக்கும் ஞானம்.

மணி வாசகர் சொல்கிறார்...

இந்த உடம்பு ...புழுக்கள் நிறைந்த உடம்பு. அதில் கல்வியும் இல்லை, ஞானமும் இல்லை. பொல்லாத சிந்தனைகள், ஆசைகள் மட்டும் நிறைய இருக்கிறது. அழுக்கு படிந்த மனம். கரை படிந்த மனம். இவற்றை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்.

உடம்பாலும் புண்ணியம் இல்லை. அறிவும் ஞானமும் இல்லை. மனமாவது ஒழுங்காக இருக்கிறதா என்றால், அதுவும் அழுக்கு அடைந்து இருக்கிறது.

நான் என்ன செய்வேன் ?

இது ஏதோ மணிவாசகர் தனக்கு சொன்னது போலத் தெரியவில்லை. நம் எல்லோருக்கும் சேர்த்து சொல்லி இருக்கிறார் என்றே படுகிறது.

இறைவா, உன்னிடம் அடைக்கலமாக வந்து விட்டேன். எனக்கு ஒன்றும் தெரியாது. நீ பார்த்து  ஏதாவது செய் என்று தன்னை முழுமையாக அடைக்கலம் தந்து விடுகிறார்.

பாடல்


செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த
பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்;
புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா,
அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே.


பொருள்

செழுக் = செழுமையான

கமலத் = தாமரை மலர்களின்

 திரள்  அன = தொகுப்பு போன்ற

நின் சேவடி சேர்ந்து = உன் திருவடிகளை அடைந்து

அமைந்த = அமைதி அடைந்த

பழுத்த = கனிந்த

மனத்து = மனம் உள்ள

அடியர் உடன் போயினர் = அடியவர்கள் உன் உடன் போயினர்

யான் = நான்

பாவியேன் = பாவியேன்

புழுக்கண்  = புழுக்கள்

உடைப் புன் குரம்பை =உடைய இந்த உடம்பு

பொல்லா = பொல்லாதது

 கல்வி ஞானம் இலா = கல்வியும் ஞானமும் இல்லாதது

அழுக்கு மனத்து அடியேன் = அழுக்கு மனம் கொண்ட அடியவன்

உடையாய்! = என்னை உடையவனே

உன் அடைக்கலமே = நான் உன் அடைக்கலம்

அகங்காரம் அறிவுக்குத் தடை.

அடைக்கலம், அகங்காரத்தை அழிக்கிறது.

எல்லாம் அற என்னை இழந்த நலம் என்றார் அருணகிரி.

இழந்து பாருங்கள். புதியதாய் ஏதாவது கிடைக்கும்.




இராமாயணம் - காலமும் அஞ்சிய காவலன்

இராமாயணம் - காலமும் அஞ்சிய காவலன் 


சூர்பனகை சொல்லக் கேட்டு, சீதையின் மேல் மோகம் கொண்ட இராவணன், தான் இருக்கும் அரண்மனை விட்டு ஒரு சோலை அடைந்தான்.

அது ஒரு குளிர் காலம்.

மன்மதனின் அம்பு பட்டு புண்ணான அவன் நெஞ்சில் வாடைக் காற்றும் பட்டது.

உள்ளே காமத் தீ கொளுந்து விட்டு எரிகிறது. வெளியே வாடைக் காற்று வாட்டுகிறது.

"என்னடா இது காலம் " என்று ஒரு அதட்டு போட்டான்....அவ்வளவுதான், வாடைக் காலம் ஓடிப் போய்விட்டது, வசந்த காலம் வந்தது.

காலமும் அவன் முன் கை கட்டி நின்றது.

பாடல்

பருவத்தால் வாடைவந்த
    பசும்பனி, அநங்கன் வாளி
உருவிப் புக்கு ஒளித்த புண்ணில்
    குளித்தலும், உளைந்து விம்மி,
“இருதுத்தான் யாது அடா? “என்று
    இயம்பினன்; இயம்பலோடும்,
வெருவிப் போய்ச் சிசிரம் நீங்கி,
    வேனில் வந்து இறுத்தது அன்றே.

பொருள் 

பருவத்தால் = பருவ காலத்தால்

வாடை வந்த = வாடைக் காற்று வந்து

பசும்பனி = குளிர்ந்த பனி

அநங்கன் வாளி = மன்மதனின் அம்பு

உருவிப் புக்கு = உடலில் உருவி புகுந்து

ஒளித்த = ஒளிந்து கொண்ட

புண்ணில் = புண்ணில்

குளித்தலும் = நுழைதலும்

உளைந்து = வருந்தி

விம்மி = விம்மி

“இருதுத்தான் யாது அடா?  “ = இருது என்பது உருது, அதாவது பருவகாலம். இது என்ன பருவ காலம் என்று

என்று = என்று

இயம்பினன்; = கேட்டான்

இயம்பலோடும் = அதைக் கேட்டதும்

வெருவிப் போய்ச் = பயந்து போய்

சிசிரம் நீங்கி = அந்த பனிக் காலம் நீங்கி

வேனில் வந்து இறுத்தது அன்றே. = இளவேனில் காலம் வந்தது.

என்ன வந்து என்ன செய்ய ?

காலத்தை கட்டியவனுக்கு காமத்தை கட்டத் தெரியவில்லை.

காலம் அவனை குழந்தையாக்கி தொட்டிலில் போட்டது.

அகில உலகையும் மண்டியிடச் செய்தவன் சீதையின் அழகின் முன் தோற்றுப் போனான்.

அது தோல்வியா என்ன ?



Friday, June 20, 2014

திருத் தெள்ளேணம் - கண்களில் நீர்த் திரையாட

திருத் தெள்ளேணம் - கண்களில் நீர்த் திரையாட 


என்றாவது நமக்கு கிடைத்து இருக்கும் செல்வங்களுக்காக நாம் மகிழ்ந்தது உண்டா ? ஊனம் இல்லாத உடல், பெரும்பாலும் ஊனம் இல்லா மனம், கல்வி, உறவு, நட்பு, குழந்தைகள், சண்டை இல்லாத நாடு, மிக உயர்ந்த தமிழ் மொழி வாசிக்கும், இரசிக்கும் அறிவு ....கொஞ்சம் பொருட் செல்வம், குழந்தைகள், கணவன்/மனைவி.....


இவற்றையெல்லாம் அடைய நாம் என்ன செய்து விட்டோம் ?

இத்தனையும் இலவசமாக நமக்குத் தரப் பட்டு இருக்கிறது.

எவ்வளவு பெரிய விஷயம்.

இவற்றையும் தாண்டி, இறை அருளும் தனக்குக் கிடைத்தது என்று எண்ணி மனிவாசகர் உருகுகிறார்....

இறைவன் சந்நிதியில் நிற்கிறார்....கண்ணீர் ததும்புகிறது...

 இடையில் நாக பாம்பை கட்டிய எம் பிரான், இந்த உலகில் மலையின் மேல் விளையாடிய  பெண்ணான பார்வதியை தன் உடலில் ஒரு பங்காகக் கொண்டு, இங்கு வந்து என்னை ஆட் கொண்ட திறத்தை நினைக்கும் போது , மனதில் ஒளி  விடுகிறது, கண்களில் நீர் திரையாடுகிறது....அதை எண்ணி ஆனந்த கூத்தாடுவோம்  என்கிறார்.

பாடல்

அரையாடு நாகம் அசைத்தபிரான் அவனியின்மேல்
வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம்
உரையாட உள்ளொளி யாடஒண்மாமலர்க் கண்களில்நீர்த்
திரையாடு மாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.

பொருள்

அரையாடு நாகம் = இடுப்பில் ஆடுகின்ற நாகம். அரை என்றால் இடுப்பு. அரை என்றால் பாதி. உடம்பின் பாதியில் அமைந்தது இடுப்பு.

"பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து "


அசைத்தபிரான் = அணிந்த பிரான். பிரியாதவன் என்பதன் மரூவு பிரான்

அவனியின் மேல் = இந்த உலகில்

வரையாடு மங்கை = வரை என்றால் மலை. மலை மகள் பார்வதி. அவள் சிறுமியாக இருக்கும் போது அந்த மலையில் தானே விளையாடி இருப்பாள் ?


தன் பங்கொடும் = தன் உடலில் பாதியை கொண்டு

வந் தாண்டதிறம் = வந்து ஆட்கொண்ட திறனை

உரையாட = சொல்ல

உள்ளொளி யாட = உள்ளத்தில் ஒளி ஆட

ஒண்மாமலர்க் கண்களில் = பெரிய மலர் போன்ற கண்களில்

நீர்த் திரையாடு = நீர் திரையாட

மாபாடித் = அதைப் பாடி

தெள்ளேணங் கொட்டாமோ. = தெள்ளேணம் கொட்டாமோ (ஒருவித கும்மி பாட்டு )

பாடலின் ஆழ்ந்த அர்த்தம் ஒருபுறம் இருக்க, தமிழ் எப்படி விளையாடுகிறது. 

நன்றிப் பெருக்கில் உள்ளம் நெகிழ்ந்து கண்ணில் நீர் திரையாடுகிறது....


இராமாயணம் - பேசாத கிளியும் பாடாத குயிலும்

இராமாயணம் - பேசாத கிளியும் பாடாத குயிலும் 


இடம் மாறினால் மனம் மாறுமா ? சீதையின் நினைவால் வாடிய இராவணன் அரண்மனையை விட்டு பூஞ்சோலை அடைந்தான்.

அவன் காமம் அவனை விட்டு போவதாக இல்லை.

அந்த சோலையில் அவனுக்கு அமைதி கிடைத்ததா ?

அங்கு அவன் பட்ட அவஸ்த்தையை கம்பர் விவரிக்கிறார்....


அந்த சோலையில் குயில்களும், கிளிகளும், அன்னங்களும் உண்டு. அவை இனிமையாக பேச மற்றும் பாடக் கூடியவை. இராவணன் இருக்கும் நிலையை பார்த்து, எங்கே வாய் திறந்தால் அவன் கோவித்துக் கொள்வானோ என்று அவைகளும் வாய் மூடி மெளனமாக இருந்தன.


பாடல்

கனிகளின், மலரின் வந்த
    கள் உண்டு, களிகொள் அன்னம்,
வனிதையர் மழலை இன்சொல்
    கிள்ளையும், குயிலும், வண்டும்,
இனியன மிழற்றுகின்ற யாவையும்,
    ‘இலங்கை வேந்தன்
முனியும் ‘என்று அவிந்த வாய,
    மூங்கையர் போன்ற அன்றே.

பொருள்

கனிகளின் = கனிகளில்

மலரின் = மலர்களில்

வந்த = இருந்து வந்த

கள் உண்டு = தேனை உண்டு

களிகொள் = இன்பம் கொண்ட

அன்னம் = அன்னப் பறவைகள்

வனிதையர்  = பெண்களின்

மழலை இன்சொல் = குழந்தை போல பேசும் இனிய சொற்களை கொண்ட

கிள்ளையும் = கிளிகளும்

குயிலும் = குயில்களும்

வண்டும் = வண்டுகளும்

இனியன மிழற்றுகின்ற யாவையும் = இனிமையான சப்தம் தரும் எல்லாம்

‘இலங்கை வேந்தன் = இலங்கை வேந்தன்

முனியும் ‘ = கோவிப்பான்

என்று = என்று

அவிந்த வாய = வாயை மூடிக் கொண்டு

மூங்கையர் போன்ற அன்றே = ஊமைகளைப் போல இருந்தன



மலை மேல் ஏறி நின்றாலும் காமம் சுடும் 

நீரில் மூழ்கினாலும் காமம் சுடும். 

இந்த காமத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது ? இதை எப்படி சமாளிப்பது  ?

பின்னால் கம்பர் சொல்கிறார்....




Wednesday, June 18, 2014

கம்ப இராமாயணம் - இன்ன ஆறு செய்வென்

கம்ப இராமாயணம் - இன்ன ஆறு செய்வென்

சீதையின் எண்ணம் இராவணனை வாட்டுகிறது.

என்ன செய்வது என்று தெரியவில்லை ....யாருக்கு .... நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவைக் கொண்ட இராவணனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

அரண்மனையில் இருக்கப் பிடிக்கவில்லை அங்கிருந்து எழுந்து அருகில் உள்ள சோலைக்குப் போகிறான்.

பாடல்


அன்ன காலை, அங்குநின்று எழுந்து, 
     அழுங்கு சிந்தையான், 
'இன்ன ஆறு செய்வென்' என்று, ஓர் 
     எண் இலான், இரங்குவான்; 
பன்னு கோடி தீப மாலை, 
     பாலை யாழ் பழித்த சொல் 
பொன்னனார், எடுக்க, அங்கு, 
     ஓர் சோலையூடு போயினான்.


பொருள்

அன்ன காலை, = அந்த நேரத்தில்

அங்கு நின்று எழுந்து = அங்கிருந்து எழுந்து நின்று

அழுங்கு சிந்தையான்,= நொந்த சிந்தனையுடன்

'இன்ன ஆறு செய்வென்' என்று, = என்ன செய்வது என்று

ஓர்  எண் இலான் = ஒரு எண்ணம் இல்லாதவன் 

இரங்குவான்; = வருந்துவான்

பன்னு கோடி தீப மாலை,= நிறைய தீபங்களை ஏந்திய

பாலை யாழ் = பாலை யாழ் என்ற இசைக் கருவியை

 பழித்த சொல் = பழித்த இனிய குரலை உடைய

பொன்னனார், = பொன் போன்ற மேனி கொண்ட பெண்கள்

எடுக்க = ஏந்தி வர

அங்கு = அங்கு உள்ள

ஓர் சோலையூடு போயினான் = ஒரு சோலைக்குச் சென்றான்

அழகான பெண்கள் ஆயிரம் உண்டு அவன் அரண்மனையில்.

அவனுக்கு சீதை தான் வேண்டும்.

விதி.

காமம் மனதில் குடி ஏறும்போது என்ன செய்வது என்று   தெரிவதில்லை. வாழ்வில்  இது வரை பெற்றது எல்லாம் ஒரு பொருட்டாய் தெரிவது இல்லை.

எத்தனை சீதைகளோ

எத்தனை இராவனன்களோ .....


கலிங்கத்துப் பரணி - போர்களத்தில் யானைகள்

கலிங்கத்துப் பரணி - போர்களத்தில் யானைகள் 


கடலில் கப்பல் போவதை பார்த்து இருக்கிறீர்களா ?

ஒன்றன் பின் ஒன்றாகப் போகும். பெரிய பெரிய கப்பல்கள், நீரில் மிதந்து போகும்.

கலிங்கத்துப் போரில் இரத்த வெள்ளம்.

அந்த வெள்ளம் தேங்கியது மட்டும் அல்ல, போர்களம் நிறைந்து வெளியில் போகிறது.

அந்த வெள்ளத்தில் இறந்த யானைகள் அடித்துச் செல்லப் படுகின்றன.

அப்படி அந்த இரத்த வெள்ளத்தில் யானைகள் மிதந்து போவது கடலில் கப்பல்கள் மிதந்து போவதைப் போல இருக்கிறதாம்.

பாடல்

உடலின்மேல் பலகாயஞ் சொரிந்து பின்கால்
      உடன்பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை
கடலின்மேல் கலந்தொடரப் பின்னே செல்லுங்
     கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின்.

பொருள்

உடலின்மேல் = (யானைகள் தங்கள் ) உடலின் மேல்

பலகாயஞ் = பல காயங்களை கொண்டு

சொரிந்து = (இரத்தம்) கொட்ட

பின்கால் = பின்னால்

உடன்பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை = உடல் பதித்து உதிரம் ஒழுகி யானைகள்

கடலின்மேல் = கடலின் மேல்

கலந்தொடரப் = கப்பல்கள் , தொடர

பின்னே செல்லுங் = ஒன்றன் பின் ஒன்று செல்லும்

கலம்போன்று  = கப்பல்கள் போல

தோன்றுவன = தோன்றின

காண்மின் காண்மின்.= காணுங்கள் , காணுங்கள்



Tuesday, June 17, 2014

கலிங்கத்துப் பரணி - அறிவுடையவரும் நிலை தளரும்

கலிங்கத்துப் பரணி - அறிவுடையவரும் நிலை தளரும் 


எவ்வளவு படிச்சவரு...அவரு போய் இந்த பொண்ணு விஷயத்தில இப்படி நடந்துகிட்டாரே...என்று சில பேரை பற்றி செய்தித்தாளில் படிக்கும் போது நாம் வியந்திருக்கிறோம்.

பெண்ணின் மேல் உள்ள ஈர்ப்பு படித்தவன் படிக்காதவன் என்றெல்லாம் பார்ப்பது இல்லை. உலகு அறிந்த அறிவுடையவர்களும் நிலை தளரும் இடம் அது என்கிறார் ஜெயங்கொண்டார்.

பாடல்

புடைபட இளமுலை வளர்தொறும்
     பொறைஅறி வுடையரும் நிலைதளர்ந்து 
இடைபடு வதுபட அருளுவீர் 
   இடுகதவு உயர்கடை திறமினோ.

பொருள்

சீரை பல விதங்களில் பிரித்தும் சேர்த்தும் இரசிக்க வேண்டிய பாடல்


புடைபட = பக்கங்கள் திரண்டு வளர்ந்த

இளமுலை = இளமையான மார்புகள்

வளர்தொறும் = நாளும் வளரும் போது

பொறைஅறி வுடையரும் = பொறுமையும், அறிவும் உள்ளவர்களும்

நிலைதளர்ந்து = தங்கள் நிலை தளர்ந்து

இடை படுவது பட = பெண்களே , உங்கள் இடை எந்த பாடு படுமோ அந்த அளவு அவர்களும் பட. மார்புகள் நாளும் வளர்வதால் இடை பாரம் தாங்காமல்  வருந்தும்.அது போல பொறை உடை அறிவுடையவர்களும் வருந்தாவர்கள்.

இன்பமும் இல்லாமல், துன்பமும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் கிடந்து தவிப்பது - பட. பட என்றால் பட்டுப் போக. விலகிப் போக.

இடையை நோக்கிய துன்பங்கள் பட்டுப் போக...என்று பலப் பல அர்த்தங்கள் சொல்லிக் கொண்டே  போகலாம்.

அருளுவீர் = அந்த துன்பங்கள் எல்லாம் அற்றுப் போக அருள் தருவீர்

இடுகதவு = உங்களுக்கும் எனக்கும் இடையில் உள்ள கதவு

 உயர்கடை திறமினோ.= உயர்ந்த வாசலில் உள்ளது, அதைத் திறவுங்கள்.

சொல்லுக்கும் ஜொள்ளுக்கும் ஒரு அளவு வேண்டாமா ?

சட்டை எல்லாம் நனைகிறது.....


கந்தர் அநுபூதி - மறைக்கும் கல்வி உள்ளவர்கள்

கந்தர் அநுபூதி - மறைக்கும் கல்வி உள்ளவர்கள் 


நாம் உண்மையை மற்றவர்களிடம் இருந்து கேட்டுப் பெற்றுக் கொள்ள முடியுமா.

ஞானம் சொல்லித் தந்து வருமா ?

ஒருவர் எவ்வளவுதான் கற்று அறிந்த ஞானியாக இருந்தாலும், கற்ற அனைத்தையும் இன்னொருவருக்கு தந்து விட முடியுமா ?

முடியாது என்கிறார் அருணகிரி நாதர்.

"கரவாகிய கல்வி உளார்"  கரவு என்றால் மறைத்தல் என்று பொருள். அறிந்தவர்கள் அனைத்தையும் மற்றவர்களுக்குச் சொல்லித்  .தருவது இல்லை. அது கல்வியின் இயற்கை குணம். கல்வியின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க, ஒருவன் தன்னை  திடப் படுத்திக் கொள்ள நினைப்பான். தான் நிலைத்த பின் மற்றவர்களுக்கு தரலாம் என்ற எண்ணம் வரும். அவன் எப்போது திருப்தி அடைந்து, மற்றவர்களுக்குத் தருவது ?


அது மட்டும் அல்ல, தனக்குத் தெரிந்த அனைத்தையும் இன்னொருவனுக்கு சொல்லுவது என்றால், கேட்பவனின் தகுதி பார்க்க வேண்டும். குரங்கு கை பூ மாலையாகப் போய் விடக் கூடாது.

இறைவா, தன்னிடம் உள்ள கல்வியை மறைத்து மீதியை மற்றவர்களுக்குத் தரும் கல்வியாளர்களிடம் சென்று என்னை நிற்க வைக்காமல் நீயே எனக்கு உபதேசம் செய். தலைவா, குமரா, படைகளைக் கொண்டவனே, சிவ யோகம் தரும் தயை  உள்ளவனே என்று முருகனிடம் உருகுகிறார் அருணகிரி.

பாடல்


கரவா கியகல் வியுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோ கதயா பரனே.

சீர் பிரித்த பின் 


கரவாகிய கல்வி உளார் கடை சென்று 
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ 
குரவா குமரா குலிச ஆயுதம் 
குஞ்சரவா சிவ யோக தயா பரனே 

பொருள் 


கரவாகிய கல்வி உளார் = மறைக்கக் கூடிய கல்வியை உடையவர்கள் 

கடை சென்று = வாசலில் சென்று 

இரவா வகை = வேண்டாது இருக்கும்படி 

மெய்ப் பொருள் ஈகுவையோ = மெய்யான பொருளை நீயே எனக்குத் தா 

குரவா = தலைவா 

குமரா = குமரா 

குலிச ஆயுதம் = குலிசம் என்ற ஆயுதம் தாங்கிய 
 
குஞ்சரவா = குஞ்சரவா 

சிவ யோக தயா பரனே = சிவ யோகத்தைத் தரக்கூடிய அன்புள்ளவனே 

 

Monday, June 16, 2014

இராமாயணம் - ஆயிரம் தாமரை மொட்டுக்களே

இராமாயணம் - ஆயிரம் தாமரை மொட்டுக்களே 


சூர்பனகை சீதையின் அழகை எல்லாம் சொன்ன பின் , இராவணன் மனம் சீதையின் பால் செல்கிறது.

காமம் அவனை வாட்டுகிறது. காம நோயால் நொந்து போகிறான்.

காதல் (கம்பன் காதல் என்றே சொல்கிறான். காமம் என்று அல்ல) அவன் மனதில் நூறு கோடியாகப் பூத்தது. மஞ்சத்தில் போய் விழுகிறான். எட்டு திசை யானைகளை வென்ற அவன் உடல் தேய்கிறது, உள்ளம் நைகிறது, ஆவி வேகிறது...

காதல் படுத்தும் பாடு

பாடல்


நூக்கல் ஆகலாத காதல் நூறு 
     நூறு கோடி ஆய்ப் 
பூக்க, வாச வாடை வீசு சீத நீர் 
     பொதிந்த மென் 
சேக்கை வீ கரிந்து, திக்கயங்கள் 
     எட்டும் வென்ற தோள், 
ஆக்கை, தேய, உள்ளம் நைய, 
     ஆவி வேவது ஆயினான்.

பொருள்

நூக்கல் ஆகலாத =விட்டு விலக முடியாத

 காதல் = காதல்

நூறு நூறு கோடி ஆய்ப் = நூறு நூறு கோடியாக

பூக்க = அவன் மனதில் பூக்க

வாச = வாசம் கொண்டு

வாடை வீசு = வீசும் வாடைக் காற்று

சீத நீர் = குளிர்ந்த நீர்த் துளிகளைக்

பொதிந்த மென் = கொண்ட மேகங்களால் ஆன

சேக்கை = படுக்கை

வீ = மலர்கள்

கரிந்து = கரிந்து (காமச் சூட்டில் )

திக்கயங்கள் = திக்கு யானைகள் 

எட்டும் வென்ற தோள் = எட்டையும் வென்ற தோள்கள்

ஆக்கை, தேய = கொண்ட அவன் உடல் தேய

உள்ளம் நைய = உள்ளம் நொந்து போக

ஆவி வேவது = ஆவி வேக

ஆயினான் = அவன் மாறினான்

எவ்வளவு பெரிய வீரனையும் காதல்/காமம் உருக்கிப் போடுகிறது.

கந்த புராணம் - தர்மம் என்று ஒரு பொருள் உளது

கந்த புராணம் - தர்மம் என்று ஒரு பொருள் உளது 



கச்சியப்ப சிவாசாரியார் அருளியது கந்த புராணம்.

கந்த புராணத்தில், சூரபன்மன் முதலானோருக்கு அவர்களின் தந்தை காசிப முனிவர் பாடம் சொல்லித் தருகிறார்.

தருமம் என்று ஒரு பொருள் உள்ளது என்று என்கிறார்.

நாட்டில் நடக்கும் அநீதிகளைப் பார்க்கும் போது , தர்மம் என்று ஒன்று உளதா என்ற சந்தேகம் நமக்கு அடிக்கடி வரும்.

தர்மம் வெல்லும். தர்மத்தின் வழி நடக்க வேண்டும்...என்றெல்லாம் நமக்குச் சொல்லப் பட்டது.

இருந்தாலும், தர்மம் இல்லாத வழியில் நடப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காண்கிறோம்.

தர்மத்தின் வழியில் நடப்பவர்கள் அப்படி ஒன்றும் வாழ்வில் முன்னேறிய மாதிரி தெரியவில்லை.

இதை எல்லாம் பார்க்கும் போது , நமக்கு பொதுவாக ஒரு சந்தேகம் வரும்.

தர்மம் என்று ஒன்று இருக்கிறதா ? என்று

கச்சியப்பர் அடித்து சொல்கிறார்

தர்மம் என்று ஒன்று ஒரு பொருள் உண்டு என்று.

மேலும்  சொல்வார், அது இம்மை மறுமை என்ற இருமைக்கும் எப்போதும் தாழ்விலாத இன்பத்தை எளிதாகத் தரும். கிடைத்தற்கரிய பொருளை அருகில் வரச்  செய்யும். அந்த தர்மம் என்பது எல்லாவற்றையும் வேற்றுமை நீங்கி ஒருமையுடன் பார்பவர்களுக்கே புலப் படும்.

பாடல்


தருமமென் றொருபொருள் உளது தாவிலா 
இருமையின் இன்பமும் எளிதின் ஆக்குமால் 
அருமையில் வரும்பொரு ளாகும் அன்னதும் 

ஒருமையி னோர்க்கலால் உணர்தற் கொண்ணுமோ

சீர் பிரித்த பின்

தருமம் என்று ஒரு பொருள் உளது தாழ்வு இல்லாத 
இருமையின் இன்பமும் எளிதின் ஆக்கும்
அருமையில் வரும் பொருளாகும் அன்னதும் 
ஒருமையினோர்க்கு அல்லால் உணர்தற்கு ஒண்ணுமோ ?


பொருள்

தருமம் என்று ஒரு பொருள் உளது = தருமம் என்ற ஒரு பொருள் உள்ளது. அதில் சந்தேகம் இல்லை.


தாழ்வு இல்லாத = ஒரு போதும் தாழ்வு இல்லாத

இருமையின் = இந்த பிறவி, மறு பிறவி என்ற இரண்டு பிறவிக்கும்

இன்பமும் எளிதின் ஆக்கும் = இன்பத்தையும் எளிதாக்கித் தரும்

அருமையில் வரும் பொருளாகும் = எளிதில் கிடைக்கதனவற்றையும் கிடைக்கச் செய்யும்

அன்னதும் =அப்பேற்பட்ட தர்மம்

ஒருமையினோர்க்கு அல்லால் = வேறுபாடுகள் ஒழித்து, ஒன்றிய காட்சி கொண்டவர்களைத் தவிர மற்றவர்கள்

உணர்தற்கு ஒண்ணுமோ ? = உணர முடியுமோ ?

தர்மம் இருக்கிறது. இருக்கும். 

தர்மத்தை நிலை நிறுத்த ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கிறேன் என்கிறான்  கண்ணன். 

தர்மத்தின் வழி நடக்காதவர்களை அந்த தர்மமே அழிக்கும். 

என்பில் அதனை வெயில் போலக் காயுமே அன்பில் அதனை அறம் என்றார் வள்ளுவர்.  

அற வழியில் நடக்காதவர்கள் வெற்றி பெற்றவர்களைப் போலத் தோன்றினாலும், அவர்கள் அழிக்கப் படுவார்கள். 

இது நமது இலக்கியங்கள் மீண்டும் மீண்டும் சொல்லும் தத்துவம். 

நமது இலக்கியங்கள் ஆழமாக நம்பிய தத்துவம். 

நாமும் நம்புவோமே 


Saturday, June 14, 2014

தேவாரம் - இன்னும் வேண்டும் இந்த மனிதப் பிறவி

தேவாரம் - இன்னும் வேண்டும் இந்த மனிதப் பிறவி 


இறைவனை தொழுவது இனிமையான ஒன்று என்றால், இறைவனை அறிவது சிறந்தது என்றால் அந்த இனிமையை, அந்த சுகத்தை தரும் இந்த மனிதப் பிறவி சிறந்ததாகத்தானே இருக்க வேண்டும் ?

பின் ஏன் எல்லோரும் இந்த மனிதப் பிறவியை துன்பம் நிறைந்தது என்று அலுத்துக் கொள்கிறார்கள்.

துறவிகள் கூட பிறவி பெரும் கடல், பிறவி என்ற பிணி என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள்.

திருநாவுக்கரசர் சொல்லுக்கிறார்....தில்லையில் உள்ள சிவனை காண்பது எவ்வளவு இன்பம் தரக் கூடியது....அந்த இன்பத்திற்காகவே மீண்டும் மீண்டும் இந்த மனிதப் பிறவி வேண்டும் என்கிறார்.

இறை அனுபவம் இன்பமானது என்றால், அந்த இன்பத்தைத் தரும் மனிதப் பிறப்பும் இனிமையாகத் தானே இருக்க வேண்டும் ?

பாடல்


அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் 
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை 
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற 
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே?

பொருள்

அன்னம் பாலிக்கும் = அன்னம் என்றால் வீடு பேறு , அல்லது சொர்க்கம். சோழ நாடு சோறுடைத்து என்றால் சோழ நாட்டில் சோறு கிடைக்கும் என்று அர்த்தம் அல்ல. அங்கு நிறைய கோவில்கள் உண்டு. அவற்றை தரிசித்தால் வீடு பேறு கிடைக்கும் என்று அர்த்தம். சொர்க்கத்தைத் தரும்

 தில்லைச் சிற்றம்பலம்  = சிதம்பரத்தில் உள்ள சிற்றம்பலத்தில் உள்ள

பொன்னம் பாலிக்கும் = பொன் அம்பலத்தில் இருந்து அருள் பாலிக்கும்

மேலும், = மேலும்

இப் பூமிசை = இந்த பூமியில்

என் நம்பு ஆலிக்கும் = என் அன்பு பெருகும் வண்ணம்

ஆறு கண்டு  = வழி கண்டு

 இன்பு உற = இன்பம் அடைய

இன்னம் பாலிக்குமோ = இன்னும் கிடைக்குமோ, மீண்டும் கிடைக்குமோ

இப் பிறவியே? = இந்தப் பிறவியே



திருக்குறள் - தவறு செய்த பின் ....

திருக்குறள் - தவறு செய்த பின் ....


பாடல்

எற்றென் றிரங்குவசெய்யற்க செய்வானேன்
மற்றன்ன செய்யாமை நன்று.

சீர் பிரித்த பின்

எற்றென்று இரங்குவது செய்யற்க செய்வானேன் 
மற்று அன்ன செய்யாமை நன்று 

"ஐயோ என்ன தவறு செய்து விட்டோம்" என்று நினைத்து வருந்தும்படியான தவறுகளை ஒருவன் செய்யக் கூடாது. ஒரு வேளை அவ்வாறு செய்து விட்டால், அதை நினைத்து இரங்காமல்  இருக்க வேண்டும்"

சற்றே சிக்கலான குறள். முதல் பாதி சரியாகப் புரிகிறது. தவறு செய்யக் கூடாது என்கிறார்.

தவறு செய்யாத மனிதனே இருக்க முடியாது.

அது வள்ளுவருக்கும் தெரியும்.

 எனவே,ஒரு வேளை தவறு செய்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்விக்கு விடை   தருகிறார்.

அந்த விடையில் தான் சிக்கல். உரை எழுதிய பெரியவர்கள் வேறுபட்ட உரைகளைத்  தருகிறார்கள். அனைத்தையும் தொகுத்துத் தருகிறேன்.

சரி என்று படுவதை எடுத்துக் கொள்ளுங்கள்.

பரிமேல் அழகர் சொல்கிறார் - செய்த தவறுக்காக இரங்கக் கூடாது என்று. அதற்கு  அவர் சொல்லும் காரணம், முதல் வரியில் 


எற்றென் றிரங்குவசெய்யற்க

எற்று என்று இரங்குவது செய்யற்க என்று வருகிறது. பின்னால் மற்றன்ன செய்யாமை நன்று என்பதில் வரும் மற்று என்ற வார்த்தை முன்னால் வரும் "இரங்கத் தக்க செயல்களையே " குறிக்கும்.

ஒரு தவறான செயலை செய்து விட்டு, செய்து விட்டோமே, செய்து விட்டோமே என்று  அதை நினைத்து இரக்கப்பட்டுக் கொண்டு இருப்பதில் ஒரு புண்ணியமும்  இல்லை. என்று வள்ளுவர் சொல்லுவதாக பரிமேலழகர் சொல்கிறார்.

அதாவது, அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடச் சொல்கிறார். குற்ற உணர்வு  எதையும் சாதிக்க பயன்படாது.

இது அனைத்து மதங்களிலும் கடை பிடிக்கப் படும் ஒன்றுதான்.

மனிதனை அவனின் பாவச் சுமையை குறைக்க ஒவ்வொரு மதமும் ஒரு வழியைச் சொல்கிறது.

பாவ மன்னிப்பு, கங்கையில் சென்று நீராடுதல், காசி போன்ற புனித தலங்களுக்குப் போதல் போன்றவை பாவத்தில் இருந்து விடுதலை தரும் என்று மதங்கள்  போதிக்கின்றன.

இன்னொரு அர்த்தம் - மணக்குடவர், தேவநேய பாவணர் போன்றோர் கூறியது.

மற்றன்ன செய்யாமை நன்று என்றால் - அது போல மீண்டும் தவறுகளைச் செய்யக் கூடாது  என்பதாகும்.

மீண்டும் மீண்டும் வருந்தத் தக்க தவறுகளை செய்யக் கூடாது  

நாம் இரண்டையும் எடுத்துக் கொள்வோமே ....

மீண்டும் அது போன்ற தவறுகளைச் செய்யக் கூடாது, செய்த தவறுக்கு வருந்திக் கொண்டே  இருக்கக் கூடாது . மேலே ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.

மற்றன்ன செய்யாமை நன்று.......

சிந்திக்க வேண்டிய தொடர்


Friday, June 13, 2014

இராமாயணம் - வருவது நாள் அன்றி வராது

இராமாயணம் - வருவது நாள் அன்றி வராது 


கம்பன் விதியை மிக ஆழமாக நம்புபவன்.

எல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்று பல இடங்களில் சுட்டிக் காட்டுக்கிறான்.

விதியை  எதிர்ப்பேன் என்று புறப்பட்ட இலக்குவன் கூட பின்னாளில் சீதை அவனை இராமனைத் தேடித் போ என்று அனுப்பியபோது விதியை நொந்து, நம்பி போனான் என்று காட்டுவான்.

இங்கே , சூர்பனகை இராவணனிடம் சொல்லுகிறாள்.

நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், சீதை கிடைக்க நீ இத்தனை காலம் காத்து இருக்க வேண்டி இருந்தது. பெரிய பெரிய தவம் செய்யும் முனிவர்களுக்குக் கூட விதிப் படித்தான் எல்லாம் நடக்கும். எனவே, கவலைப் படாதே, உன் தவப் பயன், நீ இன்று சீதையை அடையப் போகிறாய்.

அவள் அழகை இரண்டு கண்ணால் இரண்டு கையால் அனுபவிக்க முடியாது. உங்கக்குத் தான் இருபது  கண்களும்,இருபது கைகளும் இருக்கின்றதே. நீ அவளின் அழகை முழுவதும் அனுபவிக்க முடியும் என்று கூறுகிறாள்.

பாடல்

“தருவது விதியே என்றால்,
    தவம் பெரிது உடையரேனும்,
வருவது வரும் நாள் அன்றி,
    வந்து கைகூட வற்றோ?
ஒருபது முகமும், கண்ணும்,
    உருவமும், மார்பும், தோள்கள்
இருபதும், படைத்த செல்வம்
    எய்துவது, இனி நீ, எந்தாய்!‘‘


பொருள்

“தருவது விதியே என்றால் = மனிதனுக்கு நல்லதும் அல்லாததும் தருவது விதிதான்

தவம் பெரிது உடையரேனும் = பெரிய பெரிய தவங்கள் செய்தவர்களுக்குக்  கூட

வருவது வரும் நாள் அன்றி, = என்று நல்லவை வர வேண்டும் என்று விதி இருக்கிறதோ  அந்த நாள் இன்றி

வந்து கைகூட வற்றோ? = முன்னால் கிடைக்காது

ஒருபது முகமும் = பத்துத்  தலைகளும்

கண்ணும் = கண்களும்
   
உருவமும் = உருவமும்

மார்பும் = பரந்த மார்பும்

தோள்கள் இருபதும் = இருபது தோள்களும்

படைத்த செல்வம் = நீ பெற்றதன் பயன்

எய்துவது = அடைவது

இனி நீ, எந்தாய்! = இப்போது, என் தந்தை போன்றவனே

இந்த இருபது தோள்களும், இருபது கண்களும் பெற்றதன் பயன் , சீதையின் அழகை அனுபவிக்கத்தான் என்று கூறுகிறாள்.

முருகனை காண

"நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான் முகனே " என்று அருணகிரியார்  வருந்தினார்.

இருபது கண்களைக் கொண்டு அவளின் அழகை அள்ளிப் பருகு என்று அவனை தூண்டுகிறாள்  சூர்பனகை.



Thursday, June 12, 2014

அதிசயப் பத்து - வைப்பு மாடு

அதிசயப் பத்து - வைப்பு மாடு 



இறைவனை எப்போது நினைப்போம் ?

எப்போதாவது துன்பம் வந்தால் அவனை நினைப்போம். ஐயோ, இந்த துன்பம் என்னை இப்படி வாட்டுகிறதே, இதற்கு ஒரு விடை இல்லையா, நான் என்ன செய்வேன், இறைவா நீ தான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும், உன் கோவிலுக்கு வருகிறேன், பூஜை செய்கிறேன்  என்று மனிதன் துன்பம் வரும் போது இறைவனை நினைக்கிறான்.

துன்பம் வரும். அந்த காலத்தில் நமக்கு உதவுபவன் இறைவன் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும்.

துன்பம் வரவே வராது. வந்தாலும் நான் தனி ஆளாக அவற்றை சமாளித்துக் கொள்வேன் என்று ஆணவம் கொள்ளக் கூடாது.

அப்படி இறைவனை நினைக்காமல், பெண்கள் பின்னால் சுற்றித் திரிந்த என்னையும் ஆட்கொண்டு, தன் அடியவர்களோடு சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்ன என்று சொல்லுவது என்று அதிசயிக்கிறார் மாணிக்க வாசகர்.

பாடல்

வைப்பு, மாடு, என்று; மாணிக்கத்து ஒளி என்று; மனத்திடை உருகாதே,
செப்பு நேர் முலை மடவரலியர்தங்கள் திறத்திடை நைவேனை
ஒப்பு இலாதன, உவமனில் இறந்தன, ஒள் மலர்த் திருப் பாதத்து
அப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!


பொருள்

வைப்பு, மாடு, = இளைத்த காலத்தில் உதவும் செல்வம். சேமித்து வைத்த செல்வம். சேம நிதி. மாடு என்றால் செல்வம்.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. 

என்பது வள்ளுவம்


என்று = என்று

 மாணிக்கத்து ஒளி என்று = மாணிக்கத்தின் ஒளி என்று

மனத்திடை உருகாதே = மனதில்    நினைத்து உருகாமல்

செப்பு நேர் முலை = செப்புக் கிண்ணங்கள் போல உள்ள மார்பகங்களைக் கொண்ட

மடவரலியர்தங்கள் = இளம் பெண்களின்

திறத்திடை = மையலில்

நைவேனை = நைந்து கிடக்கும் என்னையும்

ஒப்பு இலாதன = தனக்கு ஒப்பு ஒருவன் இல்லாத

உவமனில் இறந்தன = உவமை என்று காட்ட ஒன்றும் இல்லாத

ஒள் மலர்த் திருப் பாதத்து = சிறந்த மலர் போன்ற திருவடிகளில்

அப்பன் ஆண்டு = என் அப்பன் என்னை ஆட்கொண்டு

தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! = தன்னுடைய அடியவர்களில் என்னையும் ஒருவனாக சேர்த்துக் கொண்ட அதிசயத்தை கண்டு வியக்கிறேன்

நான் என்ன செய்து விட்டேன் என்று என்னை இறவன் ஆட்கொண்டான் என்று அவ்வளவு பணிவுடன் சொல்கிறார் மணிவாசகப் பெருந்தகை.

உங்களுக்கும் அருள்வான் என்பது அவர் தரும்  நம்பிக்கை.



Wednesday, June 11, 2014

அதிசயப் பத்து - பொய்யான மெய்

அதிசயப் பத்து - பொய்யான மெய்  


நீங்கள் இந்தப் ப்ளாகைப் படிப்பது எவ்வளவு பெரிய அதிசயம் !

உங்களைப் போல ஒருவர் உண்டாகி, வளர்ந்து, தமிழ் படித்து, இதில் ஆர்வம் கொண்டு, கணணி இயக்கி, இதைப் படிப்பது என்பது எவ்வளவு பெரிய அதிசயம்.

நாம் பிறந்து, வளர்ந்தது, படித்தது, உடல் நலக் குறைவு இல்லாமல் இருப்பது..இப்படி எத்தனையோ அதிசயங்களின் தொகுப்பு நாம்.

உங்கள் கட்டுப் பாடில் இல்லாமல், உங்களையும் மீறி இத்தனையும் நிகழ்ந்துள்ளது.

அதிசயம் தானே !

மாணிக்க வாசகர் இவற்றை கண்டு எல்லாம் அதிசயப் படுகிறார்.

இது எப்படி நிகழ்ந்தது. எனக்கு எப்படி இறைவன் அருள் கிடைத்தது என்று அதிசயித்து பாடிய பத்துப் பாடல்கள் அதிசயப் பத்து என்ற தொகுப்பு.

மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அவனின் ஆணவம்.

ஆணவத்தின் இரண்டு கூறுகள் - நான், எனது என்பன.

நான் யார் தெரியுமா - படித்தவன், பண்பாளன், தலைவன், பணக்காரன், அழகன், திறமை சாலி என்று ஆயிரம் வழிகளில் நம் ஆணவம் வலுப் பெறுகிறது.

அந்த நான் என்ற ஒன்றை மேலே கொண்டு செல்ல, மேலும் மேலும் கிடந்து உழல்கிறோம். மேலும் படிக்கிறோம், மேலும் சம்பாதிக்கிறோம், மேலும் இந்த உடலை அழகு செய்கிறோம்.

உடலுக்கு எதுவும் ஆகி விடுமோ என்று மரண பயம் வாட்டுகிறது.

இந்த உடல் மெய்யானதா ?

துளைகள் உள்ள மாமிசத்தால் ஆன சுவர் இது. புழுக்கள் நிறைந்தது. அழுக்கு நீர்கள் எப்போதும் வடியும் உடல். பொய்யான கூரை உடையது. இதை மெய்யானது என்று எண்ணி துன்பம் என்ற கடலில் கிடந்து உழல்வேனை, அவன் தன் அடியார்களோடு சேர்த்துக் கொண்டது எவ்வளவு பெரிய அதிசயம்.

பாடல்

பொத்தை ஊன் சுவர்; புழுப் பொதிந்து, உளுத்து, அசும்பு ஒழுகிய, பொய்க் கூரை;
இத்தை, மெய் எனக் கருதிநின்று, இடர்க் கடல் சுழித்தலைப் படுவேனை
முத்து, மா மணி, மாணிக்க, வயிரத்த, பவளத்தின், முழுச் சோதி,
அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!


பொருள்

பொத்தை ஊன் சுவர் = பொந்துகள், துளைகள் உள்ள மாமிசத்தால் ஆன சுவர்

புழுப் பொதிந்து = புழுக்கள் நிறைந்து

 உளுத்து = நாளும் அரிக்கப்பட்டு

அசும்பு ஒழுகிய = நிண நீர் ஒழுகும்

பொய்க் கூரை = பொய்யான கூரை கொண்டு  இருக்கும்

இத்தை = இதனை (இந்த உடலை)

மெய் எனக் கருதிநின்று, = உண்மை என்று நம்பி இருந்து

இடர்க் = துன்பம்

கடல் = கடல்

சுழித் = சுழலில் 

தலைப் படுவேனை = கிடந்து உழல்வேனை

முத்து = முத்து

 மா மணி = பெரிய மணி

மாணிக்க = மாணிக்கம்

வயிரத்த = வைரம்

பவளத்தின் = பவளம்

முழுச் சோதி = முழுமையான ஜோதி

அத்தன் = என் அத்தன்

ஆண்டு = என்னை ஆட்கொண்டு

 தன் அடியரில் = தன்னுடைய அடியவர்களில் ஒருவனாக

கூட்டிய அதிசயம் கண்டாமே!  = சேர்த்துக் கொண்ட அதிசயத்தை கண்டோமே



இராமாயணம் - கடல் எனும் ஆடை உடுத்த நில மங்கை

இராமாயணம் - கடல் எனும் ஆடை உடுத்த நில மங்கை 


பெண்கள் உடுத்தும் உடைகள் காற்றில் லேசாக சிலு சிலுக்கும். அலை அலையாக அவர்கள் உடலோடு ஒட்டி உறவாடும். அதைப் பார்க்கும் போது கம்பனுக்கு ஒன்று தோன்றுகிறது.

இந்த நிலம் என்ற மங்கை கடல் என்ற ஆடையை எடுத்து உடுத்திக் கொண்டு இருக்கிறாள். அந்த ஆடை , அதன் ஓரங்களில் சிலிர்ப்பது , அந்தக் கடலில் அலை அடிப்பது போல இருக்கிறது.

சூர்பனகை சொல்லுகிறாள் இராவணனிடம்,

"மீன்கள் ஆடும் கடலை  மேகலையாக இந்த உலகம் உடுத்திக் கொள்ள, அந்த உலகில், தேன் கொண்ட மலர்களை சூடிய , சிறிய இடை கொண்ட சீதையோடு நீ உறவாடு, உன் வாளின் வலிமையை இந்த உலகம் காணும் படி, இராமனை வென்று எனக்குத் தா...நான் அவனோடு உறவாட"

பாடல்


“மீன்கொண்டு ஊடாடும் வேலை
    மேகலை உலகம் ஏத்தத்
தேன்கொண்டு ஊடாடும் கூந்தல்,
    சிற்றிடைச் சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ; உன்
    வாள் வலி உலகம் காண,
யான் கொண்டு ஊடாடும் வண்ணம்,
    இராமனைத் தருதி என்பால்.‘

பொருள் 

“மீன்கொண்டு = மீன்களை கொண்டு

 ஊடாடும் = ஆடும்

வேலை = கடல் எனும்

மேகலை = மேகலை. பெண்கள் இடையில் உடுத்தும் ஒரு ஆபரணம்.

உலகம் ஏத்தத் = நில மகள்  அணிந்து கொள்ள

தேன்கொண்டு ஊடாடும் கூந்தல் = தேன் கொண்ட மலர்களை கூந்தலில் சூடிக் கொண்ட

சிற்றிடைச் = சிறிய இடை

சீதை என்னும் = சீதை என்ற

மான் கொண்டு ஊடாடு நீ = மானை கொண்டு நீ ஊடல் ஆடு

 உன் வாள் வலி உலகம் காண = உன் வாளின் வலிமையை உலகம் காண

யான் கொண்டு ஊடாடும் வண்ணம் = நான் கொண்டு ஊடல் ஆடும் வண்ணம்

இராமனைத் தருதி என்பால் = இராமனை எனக்குத் தா

நீ சீதையை எடுத்துக் கொள். எனக்கு இராமனைத் தா என்கிறாள்.

சீதை மேல் காமத்தை விதைக்கும் அதே நேரத்தில் இராவணனின்  வீரத்தையும் விசிறி விடுகிறாள்.



Tuesday, June 10, 2014

மூத்த திருப்பதிகம் - எங்கள் அப்பன் ஆடும் திருவாலங்காடே

மூத்த திருப்பதிகம் - எங்கள் அப்பன் ஆடும் திருவாலங்காடே 


காரைக்கால் அம்மையார் பாடியது மூத்த திருப்பதிகம். தான் பேய் உரு பெற்றபின், சுடுகாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளைப் பற்றி பாடி  இருக்கிறார்.

ஒரு பெண் பேயைப் பற்றி பாடி இருப்பது ஆச்சரியமான விஷயம்.

சுடு காட்டில் பூஜை செய்பவர்கள் ஓமம் வளர்ப்பார்கள். அந்த ஓம குண்டத்தில் சோற்றினை போட்டு தீ வளர்ப்பார்கள். பூஜை முடிந்தவுடன், நெருப்பு தணிந்தவுடன், காட்டில் உள்ள நரிகள் அந்த சோற்றை தின்ன  வரும்."அடடா இது நமக்கு முன்னாலேயே தெரியாமலேயே போய் விட்டதே. தெரிந்திருந்தால் முன்னமேயே வந்து நாம் இதை உண்டிருக்கலாமே" என்று பேய்கள் ஓடி வந்து நரிகளோடு போட்டி போடும்.

அந்த சுடுகாட்டில் வசிப்பவள் காளி. அந்த காளியோடு வாதம் செய்து, போட்டி போட்டு, காலை ஆகாயம் வரை தூக்கி நடனம் ஆடும் எங்கள் அப்பன் சிவன் உள்ள இடம் இந்த சுடுகாடு

பாடல்

குண்டின்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்
குறுநரி தின்ன, ‘அதனை முன்னே

கண்டிலம் என்று கனன்று பேய்கள்
கையடித்(து) ஓ(டு)இடு காட்ட ரங்கா

மண்டலம் நின்றங்(கு) உளாளம் இட்டு,
வாதித்து, வீசி எடுத்த பாதம்

அண்டம் உறநிமிர்த்(து) ஆடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே. 

பொருள்

குண்டின்ஓ மக்குழிச் = ஓமக் குண்டத்தின் குழியில் உள்ள


சோற்றை வாங்கிக் = சோற்றினை எடுத்து

குறுநரி தின்ன, = குள்ள நரிகள் தின்ன

 ‘அதனை = அந்த சோறு அங்கே இருக்கிறது என்று

முன்னே = முன்பே

கண்டிலம் = நாம் காணவில்லையே

என்று = என்று

கனன்று = கோபம் கொண்டு

பேய்கள் = பேய்கள்

கையடித்(து) = கையை அடித்துக் கொண்டு

ஓ(டு) = ஓடி வரும் 

இடு  காட்ட ரங்கா = இடு காட்டை அரங்கமாக கொண்டு

மண்டலம் = மண்டலம் எங்கும்

நின்றங்(கு) = நின்று அங்கு

உளாளம் இட்டு = இருப்பவள் (காளி )

வாதித்து = அவளிடம் வாதம் செய்து

வீசி எடுத்த பாதம் = காலைத் தூக்கி ஆடி

அண்டம் உறநிமிர்த்(து) = அண்டம் நிமிர்ந்து பார்க்க 

ஆடும் எங்கள் = ஆடும் எங்கள்

அப்ப னிடம்திரு ஆலங் காடே.= அப்பன் (சிவன்) இருக்கும் இடம் திருவாலங்காடே

சுடு காடு என்பது வேறு எதுவும் அல்ல....நாம் இருக்கும் இடம் தான்.  பேய்களும், நரிகளும் உணவுக்கு அடித்துக் கொள்ளும் இடம்  இதுதான்.

சுடு காடு என்பது நாம் வாழும் இடத்தின் ஒரு  பகுதி.அது ஏதோ வேறு கிரகத்தில்  உள்ளது அல்ல. 

சுடுகாட்டின் எல்லைகளை சற்று விரிவாக்கிப் பாருங்கள். உலகம் பூராவும் சுடுகாடாய்  தெரியும்.

 சண்டையும், போட்டியும் , ஆணவமும் ,  பொறாமையும் இங்குதான்.

இதற்கு நடுவில் ஊடாடும் அந்த இறை தன்மையை காண கண் வேண்டும். 


கோயில் திருப்பதிகம் - ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை

கோயில் திருப்பதிகம் - ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை


திருவாசகத்தின் சாரம் என்று சொல்லக் கூடிய பாடல் இது. மிக மிக ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டது. நினைந்து நினைந்து ஆராய்ந்து பொருள் கொள்ள வேண்டும்.

முதலில் பாடலைப் பார்த்து விடுவோம் .


பாடல்

இன்று, எனக்கு அருளி, இருள் கடிந்து, உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று

நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்; நீ அலால் பிறிது மற்று இன்மை;

சென்று சென்று, அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து, ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே!

ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை; யார் உன்னை அறியகிற்பாரே?

பொருள்:

இன்று = இன்று என்றால் என்று ? அவன் அருள் புரிந்த நாளே இன்று. அதற்குப் பின் காலம் நகர்வது இல்லை. அந்த "இன்று" என்றுமாய் நிலைத்து  நிற்கிறது. இல்லை என்றால் "அன்று" என்று சொல்லி இருப்பார்.

வேத ஆகம சித்ர வேலாயுதன் வெட்சிபூத்த தண்டைப்
பாத அரவிந்தம் அரண் ஆக அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே தெரியாத ஒரு பூதருக்குமே.

என்பார் அருணகிரி.

இரவும் பகலும் அற்றுப் போய் விடும். இரவும் பகலும் இல்லை என்றால் நாள் ஏது ?  நாள் இல்லை என்றால் நேற்று ஏது , இன்று ஏது , நாளை என்பதும் ஏது ? எல்லாம்   இன்றுதான்,இந்த நொடிதான். இறந்த காலமும் இல்லை, எதிர் காலமும் இல்லை. 


எனக்கு அருளி = எனக்கு அருள் செய்து

இருள் கடிந்து = என் அறியாமை என்ற இருளைப் போக்கி

 உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று = உள்ளத்து எழுகின்ற அறிவு சூரியனைப் போல


நின்ற = நீ என்னுள் நின்ற

நின் தன்மை = உன்னுடைய தன்மையை

நினைப்பு அற நினைந்தேன் = நினைப்பு என்று ஒன்று இல்லாமல்  நினைத்தேன். அது என்ன நினைப்பு இல்லா நினைப்பு ? நான் வேறு அவன் வேறு என்று இருந்தால் நான் அவனைப் பற்றி நினைக்க முடியும். நானும் அவனும் ஒன்று என்று அறிந்த பின் நானே எப்படி  நினைக்க முடியும் ?  ,நினைப்பதும், நினைக்கப் படுவதும் ஒன்றே



நீ அலால் பிறிது மற்று இன்மை = இந்த உலகில் நீ தான் எல்லாம். நீ இல்லாமல் வேறு ஒன்றும் இல்லை.

சென்று சென்று = சென்று சென்று

அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து = கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து

ஒன்று ஆம் = ஒன்றானவன்

உண்மையைத் தேடிச் சென்றால் , இது  உண்மையா,இது உண்மையா என்று ஒவ்வொன்றாய் ஆராய்ந்து , இது இல்லை, இதுவும் இல்லை என்று ஒவ்வொன்றாக கழித்துக் கொண்டே இருப்போம். அங்கும் இங்கும் அலைந்து, இது அல்ல, அது அல்ல என்று எல்லாவற்றையும் விலக்கி கடைசியில் ஒரு புள்ளியில் வந்து நிற்ப்போம். அந்த ஒன்று தான்  இறைவன்.

வெளியில் உள்ள புறத் தோற்றங்கள் , வடிவங்கள் எல்லாம் அடிப்படையில் ஏதோ ஒன்றின் வெளிப்பாடுதான். அந்த ஏதோ ஒன்று தான் அவன்.

மாணிக்க வாசகர் அது தான் இறைவன் என்று  சொல்லவில்லை. அவர் சொன்னது "ஒன்று ஆம்"  என்கிறார். அந்த ஒன்று எது ?

திருப்பெருந்துறை உறை சிவனே! =  திருபெருந்துறையில் உறைகின்ற சிவனே

ஒன்றும் நீ அல்லை = இந்த பொருள்களும் உயிர்களும் நீ இல்லை

அன்றி, ஒன்று இல்லை; = நீ இல்லாமல் வேறு எதுவும் இல்லை

யார் உன்னை அறியகிற்பாரே? = உன்னை யார் அறிவார்கள் ?

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பாடல்.


இராமாயணம் - நிலம் தந்த திருமகள்

இராமாயணம் - நிலம் தந்த திருமகள் 


சீதை நிலத்தில் இருந்து பிறந்தாள் என்று படித்து இருக்கிறோம்.

ஏன் நிலம் சீதையை தந்தது என்று சூர்பனகை சொல்கிறாள்.

தேவர்கள் பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து திருமகள் தோன்றினாள். அதற்குப் போட்டியாக நில மகளும் நாமும் திருமகளுக்கு இணையான ஒரு பெண்ணைத் தர வேண்டும் என்று சீதையை  தந்ததாம்.

தேரின் மேல் பாகம் போல இடுப்பைக்  கொண்ட சீதை, தேவலோகத்திலும், மண்ணுலகிலும், கச்சணிந்த பெண்களின் வயிற்றில் பிறந்தவள் அல்ல. தாமரை பூவில் இருக்கும் திருமகளை, தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது , அதில் வந்த சங்கில் இருந்து திருமகள் தோன்றினாள் . அதை விட சிறப்பாக மண் மகள் சீதையைத் தந்தாள் "

என்றாள்

பாடல்

“தேர் தந்த அல்குல் சீதை,
    தேவர்தம் உலகின், இம்பர்,
வார் தந்த கொங்கையார் தம்
    வயிறு தந்தாளும் அல்லள்;
தார் தந்த கமலத் தாளைத்
    தருக்கினர் கடையச் சங்க
நீர் தந்தது, அதனை வெல்வான்
    நிலம் தந்து, நிரம்பிற்று, அன்றே.‘‘


பொருள்

“தேர் தந்த அல்குல் சீதை = தேரின் மேல் பாகம்  போல இடுப்பைக் கொண்ட சீதை
   
தேவர்தம் உலகின் = தேவர்களின் உலகிலும்

இம்பர் = இந்த மண் உலகிலும்

வார் தந்த கொங்கையார் தம் = கச்சை அணிந்த பெண்களின்

வயிறு தந்தாளும் அல்லள் = வயிற்றில் பிறந்தவள் அல்லள்

தார் தந்த கமலத் தாளைத் =  மலர்ந்த தாமரையில் இருக்கும் இலக்குமியை

தருக்கினர் = சண்டை போட்டவர்கள் (தேவர்களும் அசுரர்களும் )

கடையச் = கடைந்த போது

 சங்க நீர் தந்தது = சங்கில் உள்ள நீரில் இருந்து வந்தவள் இலக்குமி

அதனை வெல்வான் = அதை வெல்லும் படி

நிலம் தந்து, நிரம்பிற்று, அன்றே. = நிலம் சீதையைத் தந்தது.

இலக்குமியை விட சிறந்தவள் சீதை.

சூர்பனகையின் வர்ணனையால் இராவணன் சீதை மேல் மோகம் கொள்கிறான். அவன் பார்க்காத பெண்கள் இல்லை. அவனை கிறங்க அடிக்க வேண்டும் என்றால்  சீதை எப்படி இருக்க வேண்டும் ? அதை தன் வார்த்தைகளில் கொண்டு வருகிறாள் சூர்பனகை.

இன்னும் சில பாடல்கள் இருக்கின்றன.

அதன் பின் இராவணன் காமத்தில் படும் பாட்டை கம்பன் சொல்லுவான். அந்த காம வேதனையிலும் சில வாழ்க்கை பாடங்களை நமக்கு உணர்த்துவான் கம்பன். "காமத்தை வெல்வது எப்படி " என்பது அதில் ஒரு பாடம்,

இரண்டையும்  பார்ப்போம்.

Monday, June 9, 2014

கோயில் மூத்த திருப்பதிகம் - மேய்ப்பன் இல்லாத மாடு போல

கோயில் மூத்த திருப்பதிகம் - மேய்ப்பன் இல்லாத மாடு போல 


மேய்ப்பவன் இல்லாத மாடு என்ன செய்யும் ? அது பாட்டுக்கு போகும், கண்ணில் கண்டதை தின்னும், நிற்கும், போகும் இடம் தெரியாமல் அது பாட்டுக்கு அலைந்து கொண்டிருக்கும். ஒதுங்க இடம் கிடையாது.

அது போல நான் அலைகிறேன். என்ன செய்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. தினமும், வேலைக்குப் போகிறேன், சம்பாதிக்கிறேன், செலவழிக்கிறேன்...சேமிக்கிறேன்...எதுக்கு இதெல்லாம் செய்கிறேன் என்று ஒன்றும் தெரியவில்லை. நீ எனக்கு அருள்வாய் என்று நினைத்து இருந்தேன். அதுவும் பெரிய ஏமாற்றமாகப் போய் விடும் போல் இருக்கிறது. தயவு செய்து என்னை வா என்று அழைத்து எனக்கு அருள் புரிவாய் என்று குழைகிறார் மணிவாசகர்

பாடல்

இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென் றேமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய் ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே வாவென் றருளாயே.



சீர் பிரித்த பின்

இரங்கும் நமக்கு அம்பலக்கூத்தன் என்றென்றே ஏமாந்து இருப்பேனை 
அருங் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார் இல்லாத மாடு ஆவேனோ நெருங்கும் அடியார்களும் நீயும் நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வர எங்கள் வாழ்வே வா என்று  அருளாயே.


பொருள்

இரங்கும் நமக்கு = நம் மேல் இரக்கப்பட்டு

அம்பலக்கூத்தன் = அம்பலத்தில் ஆடும் கூத்தன்

என்றென்றே = என்று என்றே. எப்போது எப்போது என்று

ஏமாந்து இருப்பேனை = ஏமாந்து இருப்பேனை
 
அருங் கற்பனை = அருமையான மந்திரம்

கற்பித்து = சொல்லித்தந்து

ஆண்டாய் = ஆட்கொண்டாய்

ஆள்வார் = மேய்ப்பவன்

இல்லாத மாடு ஆவேனோ = இல்லாத மாடு போல ஆவேனோ?

நெருங்கும் = உன் அருகில் இருக்கும்

அடியார்களும் = அடியவர்களும்

நீயும் = நீயும்

 நின்று  = இருந்து

நிலாவி = விளங்கி

விளையாடும் = விளையாடும்

மருங்கே சார்ந்து வர = அருகில் சேர்ந்து வர

எங்கள் வாழ்வே = எங்களின் வாழ்க்கை போன்றவனே

வா என்று  அருளாயே = வா என்று எங்களுக்கு அருள் புரிவாயே

மாடு என்பதற்கு செல்வம் என்று ஒரு பொருளும் உண்டு.  செல்வத்தை சரியான வழியில்   பராமரிக்கா விட்டால் அதனால் வரும் தீமைகள் அதிகம். 

நமக்கு கிடைத்த வாழ்க்கை ஒரு மிகப் பெரிய செல்வம். அதை சரி வர பயன் படுத்த  வேண்டும். 

செய்கிறோமா ?


இராமாயணம் - தீமை செய்யாமல் இருக்க

இராமாயணம் - தீமை செய்யாமல் இருக்க 


சீதையைப் பற்றி சூர்பனகை மேலும் இராவணனிடம் கூறுகிறாள்.

பெண்ணின் அன்பும்,  நெருக்கமும், பாசமும் ஆணை தீய வழியில் செல்லாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. அவளின் கோபமும், வஞ்சமும், பேராசையும் அவனை தீய வழியில் செலுத்தவும் கூடியது.

சீதை பக்கத்தில் இருந்தால், நீ அவளிடமே எந்நேரமும் இருப்பாய். வேறு எந்த தீங்கும் செய்ய மாட்டாய் என்கிறாள் சூர்பனகை இராவணனிடம். இராவணனை கட்டிப் போடும் அழகு சீதையின் அழகு.

அழகான, அன்பான பெண் அருகில் இருந்தால், வேறு என்ன வேண்டும் ?


"சீதையின் பேச்சு குழந்தையின் மழலை போல்  இருக்கும்.நீ அவளைப் பெற்றப் பின், உன் செல்வம் அனைத்தையும் அவளுக்கே கொடுத்து விடுவாய். உனக்கு நல்லதையே சொல்லுகிறேன். நீ அப்படி அவளிடம் அடிமை பட்டு கிடப்பதால் உன் அரண்மனையில் உள்ள மற்ற பெண்களை கவனிக்க மாட்டாய். அதனால், நான் அவர்களுக்கு நல்லது செய்யவில்லை "

என்கிறாள்.

பாடல்

'பிள்ளைபோல் பேச்சினாளைப் 
     பெற்றபின், பிழைக்கலாற்றாய்; 
கொள்ளை மா நிதியம் எல்லாம் 
     அவளுக்கே கொடுத்தி; ஐய! 
வள்ளலே! உனக்கு நல்லேன்; 
     மற்று, நின் மனையில் வாழும் 
கிள்ளைபோல் மொழியார்க்கு எல்லாம் 
     கேடு சூழ்கின்றேன் அன்றே?

பொருள்

'பிள்ளைபோல் பேச்சினாளைப் = பிள்ளை போல் மழலை மொழி பேசுபவளை

பெற்றபின், = நீ அடைந்த பின்

 பிழைக்கலாற்றாய் = நீ பிழையே செய்ய மாட்டாய். எப்போதும் அவள் அருகிலேயே இருப்பாய்.  எனவே,வேறு எதுவும் செய்ய மாட்டாய்.

கொள்ளை = கொட்டிக் கிடக்கும்

மா நிதியம் எல்லாம் = பெரிய செல்வங்களை எல்லாம்

அவளுக்கே கொடுத்தி = அவளிடமே கொடுத்து விடுவாய்

ஐய! = ஐயனே

வள்ளலே! = வள்ளலே

உனக்கு நல்லேன் = உனக்கு நான் நல்லது சொல்லுகிறேன்

மற்று = மற்றபடி

நின் மனையில் வாழும் = உன் அரண்மனையில் வாழும்

கிள்ளைபோல் மொழியார்க்கு எல்லாம் = கிளி போல பேசும் பெண்களுக்கு எல்லாம்

கேடு சூழ்கின்றேன் அன்றே? = கெடுதல் செய்கின்றேன்.

இந்த பாட்டில் இரண்டு அர்த்தம் தொனிக்கும் படி கம்பன் கவி புனைந்து  இருக்கிறான்.

"கொள்ளை மா நிதியம் " - கொள்ளை கொள்ளையாக கொட்டிக் கிடக்கும் செல்வங்கள் என்பது ஒரு அர்த்தம்.   கொள்ளை போகப் போகும் செல்வங்கள் என்று இன்னொரு அர்த்தம்.

"நின் மனையில் வாழும் கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம் கேடு   சூழ்கின்றேன் சூழ்கின்றேன் " - நீ எப்போதும் சீதையிடமே இருப்பதால் மற்ற பெண்களை  கவனிக்காமல் விடுவதால் அவர்களுக்கு கேடு என்பது ஒரு அர்த்தம். இராமனிடம் சண்டையிட்டு நீ இறந்து போவாய், அதனால் அவர்களுக்கு  கேடு என்பது இன்னொரு அர்த்தம்.

கேடு வருவதற்கு முன்னே வார்த்தைகள் அப்படி வந்து விழுகின்றன.

எப்போதும் நல்லதே சொல்ல வேண்டும்.

யார் கண்டது , சொல்லியது ஒரு வேளை பலித்து விட்டால் ? சூர்பனகை சொல்லியது   பலித்தது.


பிரபந்தம் - ஐம்புலன்களை அருள் எனும் வாளால் வெட்டி எறிந்து

பிரபந்தம் - ஐம்புலன்களை அருள் எனும் வாளால் வெட்டி எறிந்து 



மனைவியும் மக்களும் எவ்வளவு தூரம் உதவுவார்கள். ஏதோ கொஞ்ச காலம், கொஞ்ச நேரம் உதவி செய்வார்கள். பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போய் விடுவார்கள். மனைவி அலுப்பாள்.

முடியாத காலத்தில் அவர்கள் உதவுவார்கள் என்று கனவு காணக் கூடாது.

அவர்களை விடுங்கள்...அவர்கள் நமக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஆசா பாசங்கள் இருக்கின்றன.

நம்முடைய புலன்களே நமக்கு உதவி செய்யாது. கண் சரியாகத் தெரியாது, காது சரியாகக் கேட்காது.

நம் புலன்களே நமக்குத் துணை இல்லை.

நம் மனைவி மக்கள் நமக்குத் துணை இல்லை.

இதை எல்லாம் அறிந்து கொண்டு உன் திருவடி வந்து அடைந்தேன் என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

பாடல்

பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி ரென்றிவர் பின்னுதவா
தறிந்தேன் நீபணித் தவரு ளென்னுமொள் வாளுருவி
எறிந்தேன் ஐம்புலன் கள்இடர் தீர வெறிந்துவந்து
செறிந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே.


சீர் பிரித்த பின்

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவா 
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒரு வாள் உருவி 
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே.

பொருள்

பிறிந்தேன் = பிரிந்து வந்தேன்

பெற்ற மக்கள் = பெற்ற பிள்ளைகள்

பெண்டிர் = மனைவி

என்று  = என்று

இவர் = இவர்கள்

பின் உதவா  = பின்னாளில் உதவ மாட்டார்கள் என்று

அறிந்தேன் = அறிந்தேன்

நீ பணித்த = நீ அளித்த

அருள் என்னும் ஒரு வாள் உருவி = அருள் என்ற வாள் உருவி

எறிந்தேன் = வெட்டினேன்

ஐம்புலன்கள் = ஐந்து புலன்களை  (அவை தரும் இன்பங்களை)

இடர் தீர = துன்பம் தீர

வெறிந்து வந்து = ஆர்வத்துடன்

செறிந்தேன் = அடைந்தேன்

நின்னடிக்கே = உன் திருவடிகளுக்கே

திரு விண்ணகர் மேயவனே = விண்ணகரம் என்ற திருத்தலத்தில் உறைபவனே

"..கொட்டி முழக்கி அழுதிடுவார் மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ இறைவா  கச்சி ஏகம்பனே..." என்று பட்டினத்தாரும் புலம்பினார்.....





Sunday, June 8, 2014

நந்திக் கலம்பகம் - குனிந்து பார்

நந்திக் கலம்பகம் - குனிந்து பார் 


அவள் மிக மிக அழகான இளம் பெண்.

பார்ப்பவர் மனதை சுண்டி இழுக்கும் அழகு கொண்டவள்.

அவள் தகப்பனோ வயதானவன். வலிமை குன்றியவன். ஏழ்மையில் இருக்கிறான். 

அந்தப் பெண்ணை மணமுடிக்க வேண்டி பெண் கேட்டு அண்டை நாட்டு மன்னன் தூது அனுப்பி இருக்கிறான்.

கிழவன் தானே, என்ன செய்து விட முடியும் என்ற நினைப்பில்.

அந்த கிழவன் சொல்கிறான்....

"என்னிடம் இருப்பது ஒரு அம்புதான், வில்லும் ஒடிந்து போய் இருக்கிறது, அந்த ஒடிந்த வில்லிலும் நாண் அறுந்து போய் இருக்கிறது, நானோ வயதான கிழவன் என்று எண்ணியா உன் மன்னன் என் மகளை பெண் கேட்டு உன்னை தூதாக அனுப்பி இருக்கிறான் ? நந்தி மன்னன் இருக்கும் இந்த நாட்டில், என் வீட்டை கொஞ்சம் குனிந்து பார் ....என் குடிசையை சுற்றி வேலி போட்டு இருப்பது யானை தந்தங்கள் "

அப்பேற்பட்ட வீர  குடும்பம்என்பதை சொல்லாமல் சொல்கிறான்.


பாடல்

அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல் நான்கிழவன் அசைந்தேன்
என்றோ வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார் மன்னர் தூதா!
செம்பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றின் நந்திபதம் சேரார் ஆனைக்
கொம்(பு) ஒன்றோ நம்குடிலின் குறுங்காலும் நெடுவளையும் குனிந்து பாரே.

பொருள்


அம்பொன்று = ஒரே ஒரு அம்புதான் இருக்கிறது

வில்லொடிதல்= வில்லோ ஒடிந்து போய் இருக்கிறது

நாணறுதல் = நாண் அறுந்து போய் இருக்கிறது

நான்கிழவன் = நானோ கிழவன்

அசைந்தேன் = அசைய முடியாமல் இருக்கிறேன்

என்றோ = என்றா

வம்பொன்று குழலாளை  = பொன் போன்ற குழலை உடைய என் பெண்ணை

மணம்பேசி = திருமணம் பேசி

வரவிடுத்தார் = வரும்படி உன்னை அனுப்பி இருக்கிறார்

 மன்னர் தூதா! = மன்னனின் தூதனே

செம்பொன்செய் = செம்மையான பொன்னால் செய்யப்பட்ட

மணிமாடத் = மணி மாடங்களை கொண்ட

தெள்ளாற்றின் = தெள்ளிய ஆற்றின் கரையில் உள்ள

நந்திபதம் சேரார் = நந்தி அரசாளும் இடத்திற்கு வரமாட்டார்

ஆனைக் கொம்(பு) = யானையின் தந்தம்

ஒன்றோ = ஒன்றா, (இல்லை பல இருக்கிறது )

நம்குடிலின் = எங்கள் குடிசையின்

குறுங்காலும் நெடுவளையும் குனிந்து பாரே. = குறுக்கும் நெடுக்கும் இருக்கிறது...நீ சற்று குனிந்து பார்



இராமாயணம் - அமுதில் நனைந்த சொற்கள்

இராமாயணம் - அமுதில் நனைந்த சொற்கள் 


சீதையின் அழகை வர்ணிக்கிறாள் சூர்பனகை.

ஒரு பெண்ணை இன்னொரு பெண் அழகி என்று ஒத்துக் கொள்வது என்பது நடவாத காரியம்.  சூர்பனகை என்ற ஒரு பெண், சீதை என்ற இன்னொரு பெண்ணின் அழகை வர்ணிக்கிறாள் என்றால் சீதையின் அழகு அப்படி இருந்திருக்க வேண்டும்.


"மேகம் போல இருக்கும் அவளின் பின்னிய கூந்தல். அந்த கூந்தலை பிரித்து விட்டாலோ மழை போல இருக்கும். அவளுடைய பாதம் பஞ்சு போல இருக்கும். பவளம் போல இருக்கும் அவளின் விரல்கள். அமுதில் தோய்ந்து வந்தது போல இருக்கும் அவளின் பேச்சு. குறை இல்லாத தாமரை போல தாமரை போல இருக்கும் அவள் முகம். அவளின் கண்கள் கடல் போல இருக்கும் "

பாடல்

“மஞ்சு ஒக்கும் அளக ஓதி;
    மழை ஒக்கும் வடித்த கூந்தல்;
பஞ்சு ஒக்கும் அடிகள், செய்ய
    பவளத்தை விரல்கள் ஒக்கும்;
அம் சொற்கள் அமுதில் அள்ளிக்
    கொண்டவள் வதனம், ஐய!
கஞ்சத்தின் அளவிற்றேனும்,
    கடலினும் பெரிய கண்கள்.‘‘

பொருள்

“மஞ்சு ஒக்கும் அளக ஓதி = முடிந்த கூந்தல் மேகத்தைப் போல இருக்கும்

மழை ஒக்கும் வடித்த கூந்தல்; = மழை போல இருக்கும் விரித்த கூந்தல்

பஞ்சு ஒக்கும் அடிகள் = அவளுடைய பாதங்கள் பஞ்சு போல இருக்கும்

செய்ய பவளத்தை விரல்கள் ஒக்கும் = சிறந்த பவளத்தைப் போன்ற விரல்கள்

அம் சொற்கள் = அவளின் சொற்கள்

அமுதில் அள்ளிக் = அமுதில் தோய்ந்து வந்தவை

கொண்டவள் வதனம், ஐய! = அவள் முகம் இருக்கிறதே

கஞ்சத்தின் அளவிற்றேனும் = தாமரை போன்றது

கடலினும் பெரிய கண்கள்.  = கடலை விட பெரிய கண்கள். கடலின் ஆழம் அறிந்தவர் யார். அதற்குள் என்னென்ன இருக்கிறது என்று யார்க்குத் தெரியும் ? அனைத்தையும் தனக்குள் அடக்கிக் கொண்டு கரையோரம் லேசாக அலை அடிக்கும். அந்த சலனமா கடல் ? கடலுக்குள் மலை உண்டு, எரிமலை உண்டு, பெரிய பெரிய திமிங்கலங்கள் உண்டு, முத்து பவளம் போன்ற உயர்ந்த கற்கள் உண்டு...மர்மம் நிறைந்தது கடல். பெண்களின் கண்களும் அப்படித்தான். கம்பர் ஒரு படி மேலே போய் கடலை விட பெரிய கண்கள் என்கிறார்.


சீதையின் அழகை சொல்ல வந்த சூர்பனகை , சீதையின் பேச்சில் வந்து விழும் சொற்கள் அமுதில் தோய்ந்து வந்ததைப் போல இருக்குமாம். அவ்வளவு இனிமை. சொற்களின் இனிமையில் இருந்து கம்பன் விடு படவே இல்லை. கவிச் சக்கரவர்த்தி அல்லவா ?

அழகாகப் பேசுங்கள். அழகாவும் இருப்பீர்கள். 


Saturday, June 7, 2014

இராமாயணம் - சீதையின் அழகு - திருமகளும் சேடி ஆக மாட்டாள்

இராமாயணம் - சீதையின் அழகு - திருமகளும் சேடி ஆக மாட்டாள் 


சீதையின் அழகை சூர்பனகை இராவணனிடம் எடுத்துச் சொல்கிறாள்.

அண்ணனின் மனதில் காமத்தை மூட்டுகிறாள் தங்கை. நெருடலான விஷயம்.

அவளின் வலி, அவளின் அவமானம்...அவளை அந்த நிலைக்கு தள்ளியது என்று நினைக்கலாம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இரண்டு பெண் பாத்திரங்கள் இராமாயணக் கதையை நகர்த்த உதவுகின்றன. ஒன்று கூனி, மற்றொன்று சூர்பனகை.

கூனி , இராமனை காட்டுக்கு அனுப்பினாள் .

காட்டுக்கு வந்த இராமனை இலங்கைக்கு வரவழைத்தாள் சூர்பனகை.

இதுவும் ஒரு புறம் இருக்கட்டும்....


நாம் எத்தனையோ இலக்கியங்களில் , சினிமா பாடல்களில், அயல் நாட்டு இலக்கியங்களில் கதாநாயகிகள் வர்ணிக்கப்பட்டு இருப்பதை வாசித்தும் கேட்டும் இருக்கிறோம்.

கம்பன் சீதையை வர்ணிப்பதைப் பார்ப்போம்.....

உலகிலேயே மிக அழகானவள் திருமகள்.  பாற்கடலில் தோன்றியவள். அந்தத்  திருமகள் ஒருத்தியிடம் பணிபெண்ணாக இருக்கிறாள் என்றாள் அந்த பெண்ணின் அழகு எப்படி இருக்கும் ?

ஒரு படி மேலே போய் , திருமகள் பணிப் பெண்ணாகக் கூட இருக்க தகுதி இல்லாதவள் என்று நினைக்கும் படி ஒருத்தி இருந்தாள் அவள் எப்படி இருக்க வேண்டும்.  அவள் தான் சீதை என்று ஆரம்பிக்கிறாள் சூர்பனகை.


காமரம் என்ற இசை தொனிக்கும் பாடல்,  கள்ளைப் போல இனிமையான சொற்கள், தேன் நிறைந்து இருக்கும் மலர்களை சூடிய கூந்தல், தேவ லோக பெண்களும் போற்றும் தாமரை மலரில் இருக்கும் அந்தத் திருமகளும் பணிப் பெண்ணாகக் கூட ஆகும் தரம் இல்லை என்று சொல்லும் படி அழகாக இருக்கும் சீதையை பற்றி நான் எப்படி சொல்ல முடியும் என்று சூர்பனகை ஆரம்பிக்கிறாள்.

பாடல்

காமரம் முரலும் பாடல், கள், எனக் 
     கனிந்த இன் சொல்; 
தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும் 
     அணங்கு ஆம்" என்னத் 
தாமரை இருந்த தையல், சேடி 
     ஆம் தரமும் அல்லள்; 
யாம் உரை வழங்கும் என்பது 

     ஏழைமைப்பாலது அன்றோ?

பொருள்

காமரம் முரலும் பாடல் = காமரம் என்ற பண் இசை தொனிக்கும் பாடல்

கள்  எனக் கனிந்த இன் சொல்; = கள்ளை போல மயக்கும் இனிய கனிவான சொற்கள்.  உண்ட பின் மயக்கம் தரும், சுகம் தரும் கள்ளைப் போல அவள் சொற்கள் அவ்வளவு மயக்கம் தரக் கூடியவை


தே மலர் நிறைந்த கூந்தல் = தேன் நிறைந்த மலர்கள் சூடிய கூந்தல் 


"தேவர்க்கும்      அணங்கு ஆம்" என்னத் = தேவ லோக பெண்களே கண்டு வியக்கும்

தாமரை இருந்த தையல் = தாமரை மலரில் இருந்த திருமகள்

சேடி ஆம் தரமும் அல்லள் = சேடிப் பெண்ணாகக் கூட வரக் கூடிய தகுதி இல்லை

யாம் உரை வழங்கும் என்பது = அப்பேற்பட்ட அழகான சீதையைப் பற்றி நான் சொல்லுவது என்பது


ஏழைமைப்பாலது அன்றோ? = என்னுடைய அறியாமை அன்றோ

பெண்ணின் அழகை சொல்ல வந்த கம்பன், அவளின் பேச்சை முதலில் வைக்கிறான். கள் என கனிந்த இனிய சொற்களைக் கொண்டவள் என்று.

பெண்களுக்கு இயற்கையிலேயே இனிய குரல் வளம் உண்டு. பல இடங்களில் சீதையின் பேச்சைப் பற்றி கூறுவான் கம்பன். கிளி போன்ற பேச்சு, மழலை போன்ற பேச்சு  என்றெல்லாம்.

இங்கும் அவளின் பேச்சுத் தன்மையில் இருந்து ஆரம்பிக்கிறான்.

பாடலில் பாடம் இருக்கிறது.

பெண்ணுக்கு மட்டும் அல்ல ஆணுக்கும் பேச்சு சாமர்த்தியம் வேண்டும்.

இனிமையாக பேசுவது ஒரு அழகு. ஒரு வசீகரம்.

உடல் அழகை விட பேச்சு அழகு கட்டிப் போடும்.

சிந்திப்போம்.