Tuesday, June 3, 2014

இராமாயணம் - நினைத்தது எல்லாம் தருமம்

இராமாயணம் - நினைத்தது எல்லாம் தருமம் 


இலக்குவனிடம் மூக்கு அறுபட்டு சூர்பனகை இலங்கை வருகிறாள். வருவதற்கு முன், பலப் பல பாடல்களில் தான் எவ்வாறு இராமனுக்கு உதவி செய்ய முடியும் என்று பட்டியல் இட்டுத் தருக்கிறாள். இராவணனைப் பற்றி கூறி பயமுறுத்துகிறாள். ஆசையும், பயமும் இராமனிடம் பலிக்கவில்லை. அவர்கள் இருந்த இடம் விட்டு இலங்கை வருகிறாள்.

வருவதற்கு முன் சூர்பனகை கூறிய பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டும் பாடல்கள். என்றேனும் நேரம் இருப்பின், அவற்றைப் படித்துப் பாருங்கள். மிக மிக அருமையான பாடல்கள்.

இலங்கையில் இராவணன் மணி மண்டபத்தில் அமர்ந்து இருக்கிறான். அந்த மண்டபம் எப்படி இருக்கிறது ?

இந்த உலகில் நிற்பன, நடப்பன என்று அனைத்தையும் படைத்த பிரமனுக்கும் படைக்க முடியாத அளவுக்கு சிறந்த மண்டபம். எப்படி தருமம் (அறம் ) செய்பவர்களுக்கு கேட்டது எல்லாம் கிடைக்குமோ அது போலவேண்டியதை எல்லாம் தேவ தச்சன் ஒருங்கிணைத்து செய்த மண்டபம்.  அந்த அரசவையில் இராவணன் இருந்தான்.


பாடல்

நிலை இலா உலகினிடை நிற்பனவும் 
     நடப்பனவும் நெறியின் ஈந்த 
மலரின்மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது, 
     நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல் 
உலைவு இலா வகை இழைத்த தருமம் என, 
     நினைந்த எலாம் உதவும் தச்சன் 
புலன் எலாம் தெரிப்பது, ஒரு புனை மணி 
     மண்டபம் அதனில் பொலிய மன்னோ,

பொருள்

நிலை இலா  = நிலைத்து இருக்கும் இயல்பு இல்லாத

உலகினிடை =உலகத்தில்

நிற்பனவும் = அசையாமல் நிற்பனவும் (உயிர் அற்ற பொருள்கள்)

நடப்பனவும் = அசைபனவும் (உயிர் உள்ளவை )

நெறியின் ஈந்த = முறைப்படி படைத்த

மலரின்மேல் = தாமரை மலரின் மேல் இருக்கும்

 நான்முகற்கும் =நான்கு முகம் கொண்ட பிரமனுக்கும்

வகுப்பு அரிது = செய்ய முடியாத

நுனிப்பது = கூர்மையான , நுண்மையான

ஒரு வரம்பு இல் ஆற்றல் = அளவில்லா ஆற்றல் கொண்ட

உலைவு இலா= தீமை செய்யாத

வகை = வகையில்

இழைத்த = செய்த

தருமம் என = தருமம் என

நினைந்த எலாம் உதவும் தச்சன் = மனதில் நினைத்ததை அப்படியே கொண்டு வரும் தச்சன்

புலன் எலாம் தெரிப்பது = தன்னுடைய திறமை எல்லாம் சேர்த்து

ஒரு புனை மணி = செய்த ஒரு அழகான

மண்டபம் = மண்டபம்

அதனில் பொலிய மன்னோ = அதில் பொலிவுடன் இருந்தான் இராவணன்


ஒருவன் அற வழியில் நின்றால் அவன் நினைத்தது எல்லாம் நடக்கும். அதிலும் கூட  சில சமயம் நம் நினைவுகள் நம்மை அறியாமல் நமக்கோ பிறருக்கோ தீமை  நினைத்து  விடலாம்.நல்லது என்று நினைத்து வேண்டுவோம், அது தீமையாக முடிந்து விடலாம். 

தருமம் நமக்கு ஒரு போதும் தீங்கு செய்யாது என்று சொல்ல வந்த கம்பன் ஒரு வார்த்தையைப்  போடுகிறான் 

"உலைவு இலா வகை இழைத்த தருமம்" 

உலைவு என்றால் (தமக்கும் பிறருக்கும்) தீமை  என்று அர்த்தம். அந்த தீமை தராத  தருமம் எப்படி நாம் மனதில் வேண்டியதைத் தருமோ அது போல அந்த தேவ  தச்சன் மனதில் நினைத்ததை அப்படியே நேரில் செய்து கொண்டு வந்தான்.

என்ன ஒரு உவமை. எதற்கு எது உவமை. 

இராவணன் இருந்த மணி மண்டபத்தை பற்றி சொல்ல வந்த கம்பன், அறத்தை கொண்டு வருகிறான். இராவணனுக்கும் அந்த மண்டபத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், நம் மனதில் அறம் பற்றிய ஒரு எண்ணத்தை இராவணனோடு சேர்த்து  விடுகிறது. 

 

1 comment:

  1. என்ன அருமையான விளக்கம் எழுதியிருக்கிறாய் ... கம்பன் பாடலை என்னைப் போன்றவர்கள் புரிந்துகொண்ட அனுபவிக்கும்படி!

    அருமையான உவமை. அற்புதமான பாடல். அனால் உன் விளக்கம் இல்லாவிட்டால் புரிந்திருக்காது.

    மிக்க நன்றி.

    ReplyDelete