Tuesday, June 10, 2014

கோயில் திருப்பதிகம் - ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை

கோயில் திருப்பதிகம் - ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை


திருவாசகத்தின் சாரம் என்று சொல்லக் கூடிய பாடல் இது. மிக மிக ஆழ்ந்த கருத்துகளைக் கொண்டது. நினைந்து நினைந்து ஆராய்ந்து பொருள் கொள்ள வேண்டும்.

முதலில் பாடலைப் பார்த்து விடுவோம் .


பாடல்

இன்று, எனக்கு அருளி, இருள் கடிந்து, உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று

நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்; நீ அலால் பிறிது மற்று இன்மை;

சென்று சென்று, அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து, ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே!

ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை; யார் உன்னை அறியகிற்பாரே?

பொருள்:

இன்று = இன்று என்றால் என்று ? அவன் அருள் புரிந்த நாளே இன்று. அதற்குப் பின் காலம் நகர்வது இல்லை. அந்த "இன்று" என்றுமாய் நிலைத்து  நிற்கிறது. இல்லை என்றால் "அன்று" என்று சொல்லி இருப்பார்.

வேத ஆகம சித்ர வேலாயுதன் வெட்சிபூத்த தண்டைப்
பாத அரவிந்தம் அரண் ஆக அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே தெரியாத ஒரு பூதருக்குமே.

என்பார் அருணகிரி.

இரவும் பகலும் அற்றுப் போய் விடும். இரவும் பகலும் இல்லை என்றால் நாள் ஏது ?  நாள் இல்லை என்றால் நேற்று ஏது , இன்று ஏது , நாளை என்பதும் ஏது ? எல்லாம்   இன்றுதான்,இந்த நொடிதான். இறந்த காலமும் இல்லை, எதிர் காலமும் இல்லை. 


எனக்கு அருளி = எனக்கு அருள் செய்து

இருள் கடிந்து = என் அறியாமை என்ற இருளைப் போக்கி

 உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று = உள்ளத்து எழுகின்ற அறிவு சூரியனைப் போல


நின்ற = நீ என்னுள் நின்ற

நின் தன்மை = உன்னுடைய தன்மையை

நினைப்பு அற நினைந்தேன் = நினைப்பு என்று ஒன்று இல்லாமல்  நினைத்தேன். அது என்ன நினைப்பு இல்லா நினைப்பு ? நான் வேறு அவன் வேறு என்று இருந்தால் நான் அவனைப் பற்றி நினைக்க முடியும். நானும் அவனும் ஒன்று என்று அறிந்த பின் நானே எப்படி  நினைக்க முடியும் ?  ,நினைப்பதும், நினைக்கப் படுவதும் ஒன்றே



நீ அலால் பிறிது மற்று இன்மை = இந்த உலகில் நீ தான் எல்லாம். நீ இல்லாமல் வேறு ஒன்றும் இல்லை.

சென்று சென்று = சென்று சென்று

அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து = கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து

ஒன்று ஆம் = ஒன்றானவன்

உண்மையைத் தேடிச் சென்றால் , இது  உண்மையா,இது உண்மையா என்று ஒவ்வொன்றாய் ஆராய்ந்து , இது இல்லை, இதுவும் இல்லை என்று ஒவ்வொன்றாக கழித்துக் கொண்டே இருப்போம். அங்கும் இங்கும் அலைந்து, இது அல்ல, அது அல்ல என்று எல்லாவற்றையும் விலக்கி கடைசியில் ஒரு புள்ளியில் வந்து நிற்ப்போம். அந்த ஒன்று தான்  இறைவன்.

வெளியில் உள்ள புறத் தோற்றங்கள் , வடிவங்கள் எல்லாம் அடிப்படையில் ஏதோ ஒன்றின் வெளிப்பாடுதான். அந்த ஏதோ ஒன்று தான் அவன்.

மாணிக்க வாசகர் அது தான் இறைவன் என்று  சொல்லவில்லை. அவர் சொன்னது "ஒன்று ஆம்"  என்கிறார். அந்த ஒன்று எது ?

திருப்பெருந்துறை உறை சிவனே! =  திருபெருந்துறையில் உறைகின்ற சிவனே

ஒன்றும் நீ அல்லை = இந்த பொருள்களும் உயிர்களும் நீ இல்லை

அன்றி, ஒன்று இல்லை; = நீ இல்லாமல் வேறு எதுவும் இல்லை

யார் உன்னை அறியகிற்பாரே? = உன்னை யார் அறிவார்கள் ?

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பாடல்.


3 comments:

  1. மிகவும் நுணுக்கமான, சிக்கலான பாடல்.

    ReplyDelete
  2. மணிவாசகரின் ஆழ்ந்த சிந்தனை அவரின் அத்வைத வேதாந்த கருத்தை நிர்குண ப்ரம்மத்தை ஈஸ்வர சொரூபமாக விஸ்வ ரூப தரிசனமாக பார்பதும் ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை நினைப்பு அற நினைந்தேன் என்னும வார்த்தைகளில் அருமையாக விளக்கியமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. 🙏🙏🙏 தினமும் இரவு தூங்கும் முன் இந்த திரு பதிகத்தை பாடி சிவபெருமானுக்கு நன்றி சொல்லி உறங்க செல்வேன். மிகவும் சக்தி வாய்ந்த பதிகம். மாணிக்கவாசகருக்கு நன்றி
      🙏🙏🙏

      Delete