கம்ப இராமாயணம் - பிரிவின் மன நிலை
மனைவி: ஏங்க இன்னைக்கு சினிமாவுக்கு போலாமா ?
கணவன்: சரி, சாயங்காலம் office முடிஞ்சு நேரா தியேட்டருக்கு வந்திர்றேன். நீயும் வந்திரு...
மனைவி: சரிங்க....
சாயங்கலாம் கணவன் வர கொஞ்ச நேரம் ஆச்சு....
மனைவி: (தனக்குள்ளேயே)....எப்பவுமே இப்படித்தான்...ஒரு நாள் கூட சொன்ன நேரத்துக்கு வர்றது கிடையாது. ஒரு விஷயம் சொன்னா அது படி நடக்கிறது கிடையாது. ஒரு காரியம் உருப்படியா செய்யத் தெரியுதா....எப்படித்தான் இவரை எல்லாம் வச்சு வேலை வாங்குறாங்களோ....
இப்படி கணவன் மேல் எரிந்து விழும் பெண்கள் இருப்பார்கள். இருக்கிறார்கள். எரிச்சல் வர கொஞ்ச முன்ன பின்ன ஆகலாம் ....ஆனால் கட்டாயம் வரும்.
சரி, அது அப்படியே இருக்கட்டும்.....
அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். இராமன் வந்து சிறை மீட்பான் என்ற நம்பிக்கையோடு.
சீதை என்ன நினைத்திருக்க வேண்டும்.....இராமன் மேல் கோபித்திருக்க வேண்டும், குறைந்த பட்சம் எரிச்சலாவது பட்டிருக்க வேண்டும்....
சீதை நினைக்கிறாள் ...
"அவருக்கு உணவை தானா எடுத்துப் போட்டுச் சாப்பிடத் தெரியாதே..யார் அவருக்கு வேளா வேளைக்கு உணவு தருகிறார்களோ ? அவரைப் பார்க்க யாராவது வந்தால் வந்தவர்களை எப்படி உபசரிப்பார் ? " என்று விம்முகிறாள்.
"எனக்கு வந்த இந்த நோய்க்கு மருந்து இருக்கிறதா ?" என்று இருந்த இடத்தை விட்டு நகர வில்லையாம். இருந்த இடம் செல் அரித்துப் போனது. இருந்தும் அவள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.....
பாடல்
அருந்தும் மெல் அடகு ஆர் இட
அருந்தும்? ‘என்று அழுங்கும்;
‘விருந்து கண்டபோது என் உறுமோ? ‘
என்று விம்மும்;
‘மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட
நோய்க்கு? ‘என்று மயங்கும்;
இருந்த மா நிலம் செல் அரித்து
எழவும் ஆண்டு எழாதாள்.
பொருள்
அருந்தும் = உண்ணும்
மெல் அடகு = மென்மையான காய் கனிகளை
ஆர் இட அருந்தும்? = யார் போட சாப்பிடுவார் ?
என்று அழுங்கும் = என்று மனதுக்குள் அழுந்தினாள்
‘விருந்து கண்டபோது என் உறுமோ? = விருந்தினர் வந்தால் என்ன பாடு படுவாரோ
என்று விம்மும் = என்று நினைத்து விம்முவாள்
‘மருந்தும் உண்டுகொல் = மருந்து இருக்கிறதா ?
யான்கொண்ட நோய்க்கு? = எனக்கு வந்த இந்த நோய்க்கு
என்று மயங்கும் = என்று மயங்குவாள்
இருந்த மா நிலம் = இருந்த இடத்தில்
செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள் = செல் (கரையான்) அரித்துப் போன பின்பும் அந்த இடத்தை விட்டு எழாமல் அதே இடத்தில் இருந்தாள்
தன்னைப் பற்றி அவள் கவலைப் படவில்லை.
இராமனைப் பற்றி கவலைப் படுகிறாள்.
இதில் சில வாழ்க்கைப் பாடங்கள் நமக்கு கிடைக்கிறது.
உயர்ந்தவர்களின் வாழ்கையே ஒரு பாடம் தானே:
1. மனைவி பரிமாறி கணவன் சாப்பிட வேண்டும் ? ஏன் ? அவருக்கு கை கால் இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது. மனைவி பரிமாறி கணவன் உண்பதில் சில தாம்பத்திய இரகசியங்கள் இருக்கிறது.....
- கணவனோடு இடைஞ்சல் இல்லாமல் பேசலாம்
- அவன் வேறு எங்காவது சாப்பிட்டு விட்டு வந்தானா என்று தெரியும்
- எனக்காக இவள் விழித்திருந்து உணவு பரிமாறுகிறாள் என்ற எண்ணம் வரும்போது , அவள் மேல் இன்னும் காதல் பிறக்கும்.
- உணவு சரியாக இருக்கிறதா என்று அவன் முகம் பார்த்து அறிய முடியும்
- எங்க ஊர் சுற்றப் போனாலும், கணவன் உண்ணும் நேரம் வீட்டுக்கு வர வேண்டும் என்று தோன்றும். "எல்லாம் டேபிள் மேலதான் இருக்கு...போட்டு சாப்பிடுங்க" என்று sms அனுப்பத் தோன்றாது. ஐயோ, நான் இல்லை என்றால் அவர் பசித்து இருப்பாரே என்ற அன்பு தோன்றும். "அவள் வரட்டும் " என்று கணவன் காத்திருக்க வேண்டும். இது தாம்பத்ய இரகசியம்.
தானாக போட்டு சாப்பிட ஆரம்பித்தால் பலதும் தானாகச் செய்ய தொடங்கி விடுவான்.
கணவனுக்கு மனைவி மேல் ஒரு சார்பு இருக்க வேண்டும். மனைவிக்கும் அப்படித்தான். நீ இல்லாமல் நான் இருக்க முடியும், நான் இல்லாமல் அவள்/வான் சமாளித்துக் கொள்வான் என்று காண்பிக்கத் தொடங்கிவிட்டால் குடும்பப் பிடிப்பு தளரும்.
சீதை பரிமாறி இருக்கிறாள். நான் பெரிய சக்கரவர்த்தி மகள். நான் ஏன் பரிமாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை.
2. விருந்தோம்பல் எந்த அளவிற்கு உயர்ந்து இருந்திருக்கிறது. கணவனும் மனைவியும் பிரிந்து துன்பப் படுகிறார்கள். அவர்கள் கவலை விருந்தினரை எப்படி உபசரிப்பது என்று. நாகரீகத்தின் உச்சம் தொட்டவர்கள் நம்மவர்கள். விருந்தோம்பல் என்று ஒரு அதிகாரத்தை அறத்துப் பாலில் வைத்தவர்கள் நம்மவர்கள். இந்த கால குழந்தைகள் விருந்தினர் வந்தால் "வாங்க " என்று கூட சொல்லுவது இல்லை. பண்பாடுகள் சிதைந்து வருகிறது.
இலக்கியம் படிக்கும் போது சிறிது வாழ்க்கைப் பாடமும் படிப்போமே.
இது வரை எப்படியோ. இதைப் படித்த பின் இன்று முதல் கடை பிடித்துப் பாருங்கள்.
வாழ்க்கையில் இன்னமொரு இனிமை சேரும்.