Monday, December 22, 2014

இராமாயணம் - பெண்கள்ன் எனும் படை - தாரையின் ஆளுமை

இராமாயணம் - பெண்கள்ன் எனும் படை - தாரையின் ஆளுமை 


பல பெண்கள் மத்தியில் மாட்டிக் கொண்ட ஆண்களுக்குத் தெரியும், அது எவ்வளவு சங்கடமான விஷயம் என்று.

அதிலும், மிக மிக அழகான பெண்கள் மத்தியில் , தனி ஆளாக மாட்டிக் கொண்டால் தெரியும்....

இலக்குவன் அப்படி  மாட்டிக் கொண்டான்.

மிகுந்த கோபத்தோடு வரும் அவன் முன், ஒரு பெண்கள் பட்டாளாமே, ஒரு படையே சென்றது.

வாளும் , வேலும், கொடியும், அசைய, முரசு ஒலிக்க ஒரு பெண் படையே சென்று நின்றது.


வில் போல் வளைந்த உடல், கண்ட நொடியில் இதயத்தை அறுக்கும் கண்கள், பளபளக்கும் அணி கலன்கள் , ஒலி எழுப்பும் மேகலை, வளைந்து நெளியும் புருவங்கள்...

என்ன செய்வான் அவன்....

பாடல்

வில்லும், வாளும், அணிதொறும் மின்னிட,
மெல் அரிக் குரல் மேகலை ஆர்த்து எழ,
பல் வகைப் புருவக் கொடி பம்பிட,
வல்லி ஆயம் வலத்தினில் வந்ததே.

பொருள்

வில்லும் = வில்லும்

வாளும் = வாளும்

அணிதொறும் மின்னிட = ஒவ்வொரு அணிகலனிலும் மின்ன

மெல்  = மென்மையான

அரிக் குரல் = ஆரவாரிக்கும்

மேகலை ஆர்த்து எழ = மேகலை விம்மி எழ

பல் வகைப் = பலவிதமான

புருவக் கொடி = புருவங்கள், கொடி போல

பம்பிட = உயர்ந்து பறக்க

வல்லி ஆயம் = வலிமையான போர்ப் படை போல 

வலத்தினில் வந்ததே. = வலம் வந்ததே



3 comments:

  1. அருமையான பாடல்தான், ஆனாலும் என் கற்பனையில் ஒரு விஷயம் நிரடுகிறது... வாலி, சுக்ரீவன், தாரை, இந்தப் பெண்கள் எல்லோருமே குரங்குகள்தானே? அவர்களுக்கு மனித அழகுக்கு (இடை, மார்பு, ...) என்று சொல்வது கொஞ்சம் நிரடுகிறது. எவ்வளவு அழகான குரங்கு என் முன்னே வந்தாலும், நான் அசர மாட்டேன்!

    ReplyDelete
  2. நம் சினிமாக்களில், ஹீரோ கோபமாக வரும்போது, வில்லன் ஒரு பெண்ணை அனுப்பி அவரைத் தாஜா பண்ண முயல்வான். அப்படியென்றால், அந்தப் பெண் ஒரு கருவி (instrument, object) ஆகிவிடுகிறாள் அல்லவா? இதுவும் அதுபோலத்தானே?

    ReplyDelete
  3. முகம் மட்டுமே குரங்கு

    மனித உடல்

    ReplyDelete