Sunday, January 25, 2015

திருக்குறள் - அடக்கமுடைமை - நிலையில் திரியாது அடங்குதல்

திருக்குறள் - அடக்கமுடைமை - நிலையில் திரியாது அடங்குதல்


அடக்கமுடைமை என்றால் ஏதோ எல்லா புலன் இன்பங்களையும் விடுத்து, சாமியாராகப் போய் விடுவதா ?

ஒன்றையுமே அனுபவிக்காமல் மரக் கட்டை போல இருப்பதா ? ஒரு கல்லைப் போல உணர்ச்சி இல்லாமல் இருப்பதா ?

ஒன்றுக்குமே ஆசைப் படாவிட்டால் வாழ்கை எப்படி நடக்கும் ?

வள்ளுவர் விடை  தருகிறார்.

பாடல்

நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற
மலையினு மாணப் பெரிது.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.

அது என்ன நிலையில் திரியாது ?

நாம் வாழ்வில் பல நிலைகளை கடந்து வருகிறோம்.

குழந்தையாக இருக்கும் நிலை, பின் மாணவன், பின் மணம் முடித்து இல்லற நிலை , பின் முதுமை நிலை என்று பல நிலைகள்.

அதே போல,  பிள்ளையாக,மாணவனாக, கணவனாக,  சகோதரனாக, தந்தையாக,  பாட்டனாக பல நிலை. பெண்கள் அதே போல்  மாணவியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என்று பல நிலைகள்.

இப்படி நம் வாழ்வை உற்று நோக்கினால் நாம் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு நிலையில் இருக்கிறோம்.

அந்த நிலைக்கு ஏற்ப வாழ  வேண்டும்.  அதில் இருந்து மாறுபடக் கூடாது.

ஆசிரியர் கேள்வி கேட்டால், அடக்கமாக இருக்கிறேன் என்று பதில் சொல்லாமல் இருக்கக் கூடாது.

எதிரி மன்னன் படை எடுத்து வந்தால் என் படை பலத்தை காட்டாமல் அடக்கமாக இருக்கிறேன் என்று ஒரு மன்னன் இருக்கக் கூடாது.

இல்லறத்தில் இருப்பவன் மனைவி மேல் ஆசை கொள்ளாமல் புலன்களை அடக்கி ஆளப் போகிறேன் என்று இருக்கக் கூடாது. பின் எதற்கு திருமணம் செய்வது ?

நிலையில் திரியாது இருக்க வேண்டும்.

தேவைக்கு அதிகமாக அலையக் கூடாது. ஒரு மனைவி இருக்கும் போது இன்னொன்றை தேடி அலையக் கூடாது. அது அடக்கமின்மை.

உடலுக்கு வேண்டியவற்றை உண்ணத்தான் வேண்டும். அதற்கு மேல் உண்டால் அது அடக்கமின்மை.

அப்படி இருப்பவனின் தோற்றம் மலையை விடப் பெரியது என்கிறார் வள்ளுவர்.

ஏன் மலை ?

மலை தன்னிடம் எவ்வளவோ செல்வங்களைக் கொண்டிருந்தாலும், பெரிதாக அலட்டிக் கொள்வது  கிடையாது. அமைதியாக  இருக்கும்.  கம்பீரமாக இருக்கும்.   அதைப் போல நிலையில் திரியாதவனின் நிலை இருக்கும் என்கிறார் வள்ளுவர்.



1 comment:

  1. "அந்தந்த நிலையில் அதை அதை அனுபவிக்க வேண்டும்" - இது சரியான சொல்.

    இதை விட்டு, சும்மா புலன் இன்பத்தை அடக்கி, பெண்களை வெறுத்து எல்லோரும் ஒதுக்க வேண்டும் என்று வரும் பாடல்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    ReplyDelete