அறநெறிச்சாரம் - அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்
படிக்க வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.
எங்க நேரம் இருக்கு ? காலைல எந்துரிச்சா இராத்திரி படுக்க போற வரை நேரம் சரியா இருக்கு. இதுல நல்ல நூல்களை எங்க படிக்க நேரம் இருக்கு. எல்லாம் retire ஆனப்புறம் பாத்துக்கலாம் என்று தள்ளிப் போடாதீர்கள்.
யாருக்குத் தெரியும், கூற்றுவன் எப்போது ஓலை கொண்டு வருவான் என்று.
இப்பவே ஆரம்பித்து விடுங்கள். ஏற்கனவே ரொம்ப லேட்டு. இன்னும் காலம் தாழ்த்தாமல் , இன்றே தொடங்கிவிடுங்கள்.
பாடல்
மின்னு மிளமை உளதாம் எனமகிழ்ந்து
பின்னை யறிவெனென்றல் பேதைமை-தன்னைத்
துணித்தானும் தூங்கா தறஞ்செய்க கூற்றம்
அணித்தாய் வருதலு முண்டு.
சீர் பிரித்த பின்
மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து
பின்னை அறிவன் என்றால் பேதைமை - தன்னைத்
துணித்தானும் தூங்காது அறம் செய்க கூற்றம்
அணித்தாய் வருந்தலும் உண்டு
பொருள்
மின்னும் = மின்னலைப் போன்ற
இளமை = இளமை
உளதாம் = எப்போதும் உள்ளது
என மகிழ்ந்து = என்று மகிழ்ந்து
பின்னை அறிவன் என்றால் = பின்னால் அறிந்து கொள்ளலாம் என்றால்
பேதைமை = அது முட்டாள்தனம்
தன்னைத் = தன்னையே
துணித்தானும் = வெட்டினாலும். இங்கே, வருத்தினாலும் என்று பொருள் கொள்வது சரியாக இருக்கும்.
தூங்காது அறம் செய்க = காலம் தாழ்த்தாமல் அறம் என்பது என்ன என்று அறிந்து அதன் வழி நிற்க
கூற்றம் = எமன்
அணித்தாய் = இளமை பருவத்திலும்
வருந்தலும் உண்டு = வருவது உண்டு. வயதான பின் தான் மரணம் வர வேண்டும் என்று ஒரு சட்டமும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
மின்னும் இளமை....மின்னல் மிகப் பிரகாசமாக இருக்கும். கண் கூசும். மிக பலம் வாய்ந்தது. இருந்தாலும், மிக சொற்ப நேரமே இருக்கும். இளமையும் அப்படித்தான். ஆரவாரமாய் இருக்கும். சட்டென்று முடிந்து விடும்.
கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
வளரொளி மாயோன் மருவிய கோயில்
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை
தளர்விளராகில் சார்வது சதிரே. என்பார் நம்மாழ்வார்.
கிளர்ந்து எழும் இளமை. எதுனாலும் நான் செய்கிறேன் என்று முன்னால் வந்து நிற்கும் இளமை. அது முடிவதற்குள் , தளர்ந்து போவதன் முன்னம் திருமாலிருஞ்சோலைக்கு வாருங்கள் என்கிறார். இளமை போன பின், முட்டு வலிக்கும், முதுகு வலிக்கும், மலை ஏற முடியாது. உடம்பு நம் சொற்படி கேட்கும்போதே திருத் தலங்களுக்கு சென்று வந்து விடுங்கள். அப்புறம் ஒரு வேளை முடியாமல் போனாலும் போகலாம்.
இளமையிலேயே நல்லவற்றை செய்து விடுங்கள்.