Saturday, July 4, 2015

திருக்கடை காப்பு - தோடுடைய செவியன்

திருக்கடை காப்பு - தோடுடைய செவியன்


 சில பாடல்கள் எத்தனை முறை படித்தாலும், ஒவ்வொரு முறையும்   புதுப் புது அர்த்தங்களை தந்து கொண்டே இருக்கும்.

அப்படிப்பட்ட  ஒரு பாடல் தான் தோடுடைய செவியன் என்ற இந்தப் பாடல்.

பாடல் என்னமோ மிக எளிமையான ஒன்றுதான்

பாடியவர் திருஞான சம்பந்தர்.

சம்பந்தர் சிறு குழந்தையாக இருந்தபோது ஒரு நாள் அவருடைய தந்தையார் சம்பந்தரை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவிலுக்குள் நுழையும்முன் அங்குள்ள திருக்குளத்தில் நீராடிச்  செல்லலாம்  என்று குளத்திற்கு சென்றார். சம்பந்தரை குளக்கரையில் அமர்த்தி விட்டு  நீராடச்  சென்றார்.

அவர்   குளத்தில் மூழ்கியவுடன், தந்தையைக் காணோமே என்று குழந்தை அழுதது. குழந்தையின் அழுகை கேட்டு சிவனும் பார்வதியும் அங்கே  வந்தார்கள்.பார்வதி குழந்தைக்கு  பால் கொடுத்தாள். பின் அவர்கள் மறைந்து விட்டனர்.

நீராடி வந்த சம்பந்தரின் தந்தை , குழந்தையின் வாயில் பால் ஒழுகுவதைக் கண்டு, யார் பால் தந்தது என்று கேட்டார்.

குழந்தை பாடியது....



பாடல்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

 பிரித்த பின்

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முன்னை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமா புரம் மேவிய  பெம்மான் இவன் அன்றே


பொருள்

தோடு உடைய செவியன் = காதில் தோட்டினை அணிந்தவன்

விடை ஏறி = எருதின் மேல் ஏறி

ஓர் = ஒரு

தூ = தூய

வெண் = வெண்மையான

மதி = நிலவை

சூடி = தலையில் சூடி

காடு உடைய = சுடுகாட்டில் உள்ள

சுடலைப் பொடி = சாம்பலை

பூசி = உடலெங்கும் பூசி

என் உள்ளம் கவர் கள்வன் = என் உள்ளத்தை கவர்ந்த கள்வன்

ஏடு உடைய மலரான் = ஏடுகளைக் கொண்ட தாமரை மலரில் இருக்கும் பிரமன்

முன்னை நாள்  = முன்பு ஒரு நாள்

பணிந்து =  பணிந்து

ஏத்த = போற்ற

அருள் செய்த = அவனுக்கு அருள் செய்த

பீடு உடைய = பெருமை உடைய

பிரமா புரம் = பிரமாபுரம் (பிரமன் வழி பட்ட இடம் )

மேவிய = சென்று இருந்த

பெம்மான் = பெருமான்

இவன் அன்றே = இவன் அல்லவா

சரி, இந்த பாடலில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது ?

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

1. ஏன் தோடுடைய செவியன் என்று சொல்ல வேண்டும் ? கழல் அணிந்த அடியன் என்ற, நிலவு சூடிய தலையன் என்று சொல்லி இருக்கலாம் தானே ? குழந்தை அழுத போது , அந்த அழு குரலை கேட்டுத்தானே இறைவனும் இறைவியும்  வந்தார்கள். எனவே, காதை சிறப்பித்து "தோடுடைய செவியன்" என்று  ஆரம்பித்தார்.

2. ஏன் தோடுடைய செவியன் என்று சொல்ல வேண்டும் ? தோடு என்பது பெண்கள் அணியும் அணிகலன். தோடுடைய செவியள் என்று இருந்திருக்க வேண்டும். அப்படிச் சொல்லி  இருந்தால் , அவள் யார் என்ற கேள்வி எழும்.  தோடுடைய  செவியன் என்றால் உலகிலேயே ஒருவன் தான் உண்டு....   அது மாதொரு பாகனான சிவனையே  குறிக்கும். எனவே, தோடுடைய செவியன் என்று கூறினார்.

3. விடை ஏறி ஓர் - விடை என்றால் எருது. எருதின் மேல் ஏறி என்பது ஒரு பொருள். தோன்றிய பொருள் எல்லாம் அழியும். உயிர்கள், பொருள்கள் எல்லாம் அழியும் ஒரு நாள்.  இந்த பூமி, சூரியன், நிலவு, கோள்கள், இந்த அண்டம் அனைத்தும் ஒரு நாள் அழியும். அதற்கு மகா மகா சங்காரம் என்று  பெயர்.அந்த, ஊழிக் காலத்தில், எல்லாம் அழிந்த பின்னும் , அழியாத ஒன்று இருக்கும். அது தான் அறம் . நீதி. உண்மை.  அந்த உண்மை ஒரு எருதின் வடிவம் கொண்டு வந்தது. அதன் மேல் ஏறினான் சிவன் என்கிறது சைவ சித்தாந்தம். விடை என்பதற்கு answer  என்றும் ஒரு பொருள் உண்டு. அனைத்து கேள்விகளுக்கும்  விடையாய் இருப்பவன் அவன் என்ற பொருள் பட, விடை ஏறி   என்றார்.

4. தூ வெண் மதி சூடி = தூய்மை அகத்தை குறிப்பது. வெண்மை புறத்தை குறிப்பது. வெண்மை கண்ணுக்குத் தெரியும். தூய்மை கண்ணுக்குத்  தெரியாது.உள்ளும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும், கறை இன்றி இருப்பவர்களை தன்னோடு சேர்த்துக் கொள்வான் என்ற பொருள பட - தூ வெண் மதி சூடி என்றார்.

5. காடுடைய சுடலை பொடி பூசி =   நாம் யாரையாவது பார்த்து அவர்களுக்கு நம் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் வர வேண்டும் என்றால், தலை  சீவி, பவுடர் எல்லாம் போட்டுக் கொண்டு போவோம் அல்லவா. இறைவனும், காட்டில் உள்ள சாம்பலை பூசிக் கொண்டு வருகிறான். எதற்கு எதற்கு ?

6. என் உள்ளம் கவர் கள்வன் = ஞான சம்பந்தரின் உள்ளத்தை கவர. கள்வன் என்றார் ஏன் என்றால், நம் அனுமதி இல்லாமலே நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்வான்.

இராமாயணத்தில், சீதை சொல்வாள், என்னையும் என் நாணத்தையும் கொண்டு செல்ல என் அனுமதி இல்லாமல் என் கண் வழி நுழைந்த கள்வன் அவன் என்று ராமனைப் பற்றி செல்லமாக கோபிக்கிறாள்.


பெண்வழி நலனொடும்,
    பிறந்த நாணொடும்,
எண் வழி உணர்வும் நான்
    எங்கும் காண்கிலேன்,
மண் வழி நடந்து, அடி
    வருந்தப் போனவன்,
கண் வழி நுழையும் ஓர்
    கள்வனே கொல் ஆம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர். அவனே அருள் செய்தால் தான் உண்டு.

படிக்கப் படிக்க புது புது அர்த்தங்கள் ஊறும் பாடல்.



 








1 comment:

  1. அருமையான விளக்கம்.

    கம்ப இராமயணத்தில் வரும் இந்த இரண்டு வரிகளும் தூள்:

    கண் வழி நுழையும் ஓர்
    கள்வனே கொல் ஆம்.

    அந்தக் கம்ப இராமாயணப் பாடலையும் பற்றி எழுதலாமே?

    ReplyDelete