Friday, November 20, 2015

பெரிய புராணம் - பெரியவர் பெயர்ந்து நீங்கி - காமத்தை வெல்ல முடியுமா ? - பாகம் 5

பெரிய புராணம் - பெரியவர் பெயர்ந்து நீங்கி - காமத்தை வெல்ல முடியுமா ? - பாகம் 5


திருநீலகண்டர், தன் மனைவி இருக்க, இன்னொரு பெண்ணிடம் சென்று வந்தார். அதைக் கண்டு பொறுக்க முடியாத அவரின் மனைவி, "திருநீலகண்டத்தின் மேல் ஆணை, நீர் வேறு எந்த பெண்ணையும் தொடக் கூடாது " என்று ஆணையிட்டார்.

அதைக் கேட்டவுடன், திருநீலகண்ட நாயனார், அவளை விட்டு மனதாலும், உடலாலும் விலகி, "எம்மை" என்று நீ பன்மையில் சொன்னதனால், மற்ற பெண்களையும் மனதாலும் தீண்டேன் என்றார்.

இங்கே சிறிது நிறுத்தி, திருநீலகண்டரின் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்போம்.

படிப்பறிவு இல்லாத, உடல் உழைப்பையே நம்பி வாழும் ஒருவர். ஏழை. அவருடைய மனைவி எந்தப் பெண்ணையும் தொடக் கூடாது என்று சிவனின் மேல் ஆணை என்கிறார். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம் ?

ஒன்று, மனைவியை அடக்கி அவளை நம் விருப்பத்துக்கு இணங்க வைத்திருப்போம்.

அல்லது,  நீ இல்லாட்டி என்ன,  எச்சில் கையை வீசினா ஆயிரம் காக்கை என்று  வேறு இடம் நாடிப் போயிருப்போம்.

சாதாரண மனிதர்களின் இயல்பு அப்படித்தானே இருக்கும்.

எந்தப் பெண்ணையும் மனதாலும் தீண்டமாட்டேன் என்று ஒதுங்கி நின்றார்.

பாடல்

ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
 பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி 
 ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
 மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார்


பொருள் 

ஆதியார் = எல்லாவற்றிற்கும் முதலான

நீல கண்டத்து  அளவு = திருநீலகண்டத்தவரான சிவனின் மேல்

தாம் கொண்ட ஆர்வம் = தான் கொண்ட ஆர்வம்

பேதியா = குறையாத , மாறாத

ஆணை கேட்ட = "எந்தப் பெண்ணையும் தீண்டக் கூடாது" என்ற அந்த ஆணையக் கேட்ட

பெரியவர் = பெரியவர்

 பெயர்ந்து நீங்கி  = பெயர்ந்து என்றாலும், நீங்கி என்றாலும் ஒரே பொருள் தான். பின் ஏன் சேக்கிழார் இரண்டு வார்த்தைகளைப் போடுகிறார். மனதினால் பெயர்ந்து, உடலால் நீங்கி. மனமும், உடலும் நீங்கியது

ஏதிலார் போல நோக்கி = ஏதிலார் என்றால் முன்னப் பின்ன அறிமுகம் இல்லாதவர்கள்.

ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 

என்பது வள்ளுவம்.

மற்றவர்களுடைய குற்றங்களை காண்பது போல நம்முடைய குற்றத்தையும் கண்டால், உயிர்களுக்கு ஒரு தீங்கும் வராது.

சொந்த மனைவியை யாரோ ஒரு பெண்ணைப் போல பார்த்தாராம்.

எம்மை என்றதனால் = எம்மை என்று சொன்னதால்

மற்றை = வேறு எந்த

மாதரார் தமையும் = பெண்ணையும்

என் தன் மனத்தினும்  தீண்டேன் என்றார் = என்னுடைய மனத்தாலும் தீண்டேன் என்றார்.


இது நடக்கிற காரியமா ?

சொந்த வீடு. சின்ன குடிசை வீடு. பக்கத்தில் இரதி போல மனைவி படுத்திருக்கிறாள். உடல் தீண்டாவிட்டாலும், மனம் சும்மா இருக்குமா ?

சரி மனைவிதான், உடன் படவில்லை, மற்ற பெண்களையாவது மனம் நினைக்காமல் இருக்குமா ?

காமம் சும்மா இருக்குமா ?

காமத்தை கட்டுப் படுத்த முடியுமா ?

திருநீலகண்ட நாயனாரால் முடிந்தது.

எப்படி ?

எவ்வளவோ படித்தவர்களால் முடியாத அந்த செயலை அவர் எப்படி செய்தார்.

காமம் மோசமானது. அனைத்து குற்றங்களுக்கும் அதுவே காரணம் என்று அறிந்த  மேதாவிகள் கூட அதன் பிடியில் இருந்து தப்பியது இல்லை.

காமம் , சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டிருக்கிறது.

மகுடங்களை , தலை மாற்றி இருக்கிறது.

சக்ரவர்திகளை , காலில் விழ வைத்திருக்கிறது.

அப்பேற்பட்ட காமத்தை படிப்பறிவில்லா, அதிகாரம், புகழ் , செல்வாக்கு , புஜ பலம் இல்லாத  ஒரு ஏழை குயவனால் எப்படி வெல்ல முடிந்தது ?


பக்தி ஒன்றே அவரிடம் இருந்தது. அந்த பக்தி அவருக்கு உதவி செய்தது. 


"ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்  பேதியா "

நீலகண்டத்தின் மேல் கொண்ட ஆர்வம் , அவருக்கு காமத்தை வெல்ல துணை செய்தது. 

பக்தி காமத்தை மட்டுமல்ல, வேறு எந்த தீய குணத்தில் இருந்தும் காக்கும். 

சொல்லப் போனால் , சேக்கிழார் , அதை பக்தி என்று கூட சொல்லவில்லை. இறைவன் மேல் உள்ள   ஆர்வம் என்கிறார். 

காமத்தை விடு என்று சேக்கிழார் சொல்லி இருந்தால் யார் கேட்டிருப்பார்கள் ?

பக்தி காமத்தை வெல்ல வழி வகுக்கும் என்று சொல்லி இருந்தால் கூட யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். 

நேரடியாகச் சொல்லாமல்,

திருநீலகண்டர் என்ற ஏழை குயவானார், இறைவன் மேல் கொண்ட பக்தியால், காமத்தை வென்றார்  என்று சொல்லிச் செல்கிறார். 


அது மட்டும் அல்ல....



No comments:

Post a Comment