Monday, January 4, 2016

இராமாயணம் - தன்னைத் தான் தொழும்

இராமாயணம் - தன்னைத் தான் தொழும் 



நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா ? ஏதோ நாம் ஒன்றும் பெரிய ஆள் இல்லை, ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்கிறோம் என்று இருக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. எப்போதாவது நீங்கள் உங்களையே பெரிய மனிதன் என்று உணர்ந்து இருக்கிறீர்களா ?

ஒரு பெரிய மனிதரைக் கண்டால் பொதுவாக மக்கள் என்ன செய்வார்கள் ? அவரை விழுந்து வணங்குவார்கள். அவரிடம் ஆசீர்வாதம் கேட்பார்கள்.

ஒருவரை மற்றவர்கள் வணங்குகிறார்கள் என்றால் அவர் பெரிய மனிதர் தானே ?

இராமன் வரப் போகிறான் என்று அனுமன் கூறக் கேட்டான் பரதன். அதைக் கேட்டவுடன் பரதன் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.

அவனுடைய மகிழ்ச்சியை கம்பன் படம் பிடிக்கிறான்

பாடல்

'வேதியர்தமைத் தொழும்; வேந்தரைத் தொழும்; 
தாதியர்தமைத் தொழும்; தன்னைத் தான் தொழும்; 
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்; நிற்குமால்;- 
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! 

பொருள்

'வேதியர்தமைத் தொழும்; = அவையில் இருந்த வேதியர்களைத் தொழுதான்

வேந்தரைத் தொழும்; = அங்குள்ள வேந்தர்களைத் தொழுதான்

தாதியர்தமைத் தொழும்; = வேலை செய்யும் பணிப் பெண்களைத் தொழுதான்

தன்னைத் தான் தொழும்; = தன்னையே தொழுது கொண்டான்

ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்;  = ஒரு உணர்வும் இல்லாமல் இருந்தான்

நிற்குமால்;- = நின்றான்

காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! = காதல் என்பது கள் போலத்தான்

இராமனை காணப் போவதால் , தான் எவ்வளவு பெரிய மனிதன் என்று உணர்ந்த பரதன்  தன்னைத் தானே தொழுது கொண்டான்.

பரதன் என்ற தனி மனிதனாக தான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று அவனுக்குத் தெரியும். இராமனை காணப் போகிறேன் என்பதால் தான் பெரிய ஆள் என்று நினைந்து தன்னைத்தானே வணங்கிக் கொண்டான். 

இன்னும் இராமனை காணவில்லை. பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே அவனுக்குள் அந்த நினைவை தோற்றுவிக்கிறது. 

இராமனை பார்க்கப் போவதால், தான் வணங்கத்தக்கவன் என்று நினைந்து பரதன் தன்னைத் தானே   வணங்கிக் கொண்டான். 

தான் மட்டும் அல்ல, இராமனை யாரெல்லாம் காணப் போகிறார்களோ அவர்கள் எல்லோரும் வணங்கத் தக்கவர்களே என்று எண்ணி, அங்கிருந்த வேதியர்களையும், அரசர்களையும், பணிப் பெண்களையும் வணங்கினான்.

யாருக்குத் தெரியும்?...நாளையே நீங்களும் இராமனை காண நேரிடலாம் ? நாளும் இறைவனை காண வேண்டும் என்று தானே பிரார்த்தனை பண்ணுகிறீர்கள் ? அந்த பிரார்த்தனை கை கூடி வந்தால், நீங்களும் இறைவனை  காணும் பேறு பெறுவீர்கள். 

காண்பீர்களோ, இல்லையோ...காணும் சாத்தியம் இருப்பதால் நீங்களும் பெரியவர்கள் தான். 

கண்ணாடி முன் நின்று ஒரு முறை உங்களை நீங்களே வணங்கிக் கொள்ளுங்கள்.

அது மட்டும் அல்ல உங்களை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் வணங்கத் தக்கவர்கள்தான் .  

இது பக்தியின் உச்சம் !

அதைக் கம்பன் பக்தி என்று கூட சொல்லவில்லை. காதல் என்கிறான். கள் வெறி கொண்டது போல இருக்கும் காதல் என்கிறான். 

ஒரு கரைதல். ஒரு களிப்பு. ஒரு உன்மந்தம்....













1 comment:

  1. மிகச் சுவையான பாடல்!

    ReplyDelete