Friday, July 29, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - செயலின் தொடக்கம்

இராமாயணம் - சுந்தர காண்டம் - செயலின் தொடக்கம் 


ஏதோ ஒரு காரணத்தால் நமக்கு  சில துன்பங்கள் வந்து சேர்ந்து விடுகின்றன.   நாமும் சோர்ந்து போய்  விடுகிறோம். என்ன செய்வது, யாரிடம் போய் உதவி கேட்பது , என்று குழம்பிப் போய் நின்றிருப்போம்.

கடைசியில் ஏதோ ஒரு வழி  தோன்றும். அது சரியா தவறா என்று கூடத் தெரியாது.

எப்போது ஒரு வழி சரி என்று தெரிந்து விட்டதோ, அப்போது அதில் முழு மூச்சுடன் செல்ல வேண்டும்.

அனுமன் இலங்கையை கண்ட பின் , ஆரவாரத்துடன் கிளப்புகிறான்...

எப்படி என்றால் ....

பாடல்


வன் தந்த வரிகொள் நாகம்
    வயங்கு அழல் உமிழும் வாய
பொன் தந்த முழைகள் தோறும்
    புறத்து உராய்ப் புரண்டு பேர்வ,
நின்று, அந்தம் இல்லான், ஊன்ற,
    நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப்
    பிதுங்கின குடர்கள் மான.


பொருள் 

வன் = வன்மையான

தந்த = தந்தம் போன்ற வலிமையான

வரிகொள் நாகம் = பற்களை கொண்ட நாகங்கள்

வயங்கு = விளங்கும்

அழல் உமிழும் வாய = தீயைக் காக்கும் வாயை கொண்டு

பொன் தந்த = பொன் முதலிய திரவியங்களை கொண்ட

முழைகள் தோறும் = குகைகள் எல்லாம்

புறத்து = வெளியே

உராய்ப் புரண்டு = புரண்டு உராய்ந்து

பேர்வ = வெளியே வந்து

நின்று = அனுமன் நின்று

அந்தம் இல்லான் = முடிவு இல்லாதவன்

ஊன்ற = அழுந்தி எழ

நெரிந்து =நசுங்கி

கீழ் = கீழே

அழுந்தும் = அழுந்தும்

நீலக் குன்றம் = நீல நிறமான மலை

தன் வயிறு கீறிப் = தன் வயிற்றை பிளந்து

பிதுங்கின குடர்கள் மான. = பிதுங்கி வெளியே வந்த குடல் போல இருந்தது.

அனுமன் தன் காலை அழுத்தி ஊன்றி மேலே கிளம்பிய போது , அந்த நீல நிற மலையில் உள்ள குகைகளில் இருந்த பாம்புகள் நெருப்பைக்  கக்கிக் கொண்டு வெளியே  வந்தன.அது , ஏதோ அந்த மலையின் வயிறு பிளந்து அதன் குடல் வெளியே வந்தது மாதிரி இருந்தது.

எந்த வேலையையும் , தொடங்கும்போது உங்கள் அனைத்து ஆற்றலையும்  சேர்த்து தொடங்குங்கள்.

A thing well begun is half finished என்று சொல்லுவது போல.


அது வெற்றியின் முதல் படி.


http://interestingtamilpoems.blogspot.in/2016/07/blog-post_29.html



Thursday, July 28, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - தெளிவு

இராமாயணம் - சுந்தர காண்டம் - தெளிவு 


சந்தேகம் மற்றும் தயக்கத்தால் பல வெற்றிகளை, இன்பங்களை இழந்து விடுகிறோம்.


ஆழ்ந்து சிந்தித்து, அலசி ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

அப்படி எடுத்த பின், அதில் முழு மகிழ்ச்சியோடு ஈடு பட வேண்டும்.

வேலையை தொடங்கிய பின், இது சரியா, ஒரு வேளை இது இல்லாமல் மத்தது எதையாவது எடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் எடுத்த வேலை சிறக்காது.

எதில் தான் தயக்கமும் குழப்பமும் இல்லை ?

கல்லூரியில் ஏதாவது ஒரு பாட திட்டத்தை எடுத்த பின், ஒரு வேளை வணிகம் படிக்காமல் பொறியியல் படித்தால் நன்றாக இருக்குமோ என்ற குழப்பம்.


திருமணம் முடிந்த பின்னும், அந்த பெண் இவளை விட நன்றாக இருந்திருப்பாளோ என்ற சந்தேகம்.

வேலையில் சேர்ந்த பின்னால், அந்த நிறுவனம் இதை விட சிறப்பாக இருக்குமோ என்ற சந்தேகம்.

சேலையை வாங்கிய பின்னால், ஒரு வேளை அந்தக் கடையில் முதலில் பார்த்த சேலை இதை விட நன்றாக இருந்ததோ என்ற சந்தேகம்.

கார் வாங்கினாலும், வீடு வாங்கினாலும், எது செய்தாலும் ஓயாத குழப்பம். தயக்கம்.

இப்படி தொடங்கிய எதிலும் ஒரு உற்சாகத்துடன் செல்லாமல் இது சரியா தவறா என்று யோசித்துக் கொண்டே , சந்தேகப் பட்டுக் கொண்டே இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

எண்ணித் துணிக கர்மம், துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பார் வள்ளுவர்.


எடுத்த எந்த முடிவிலும்  முழு உற்சாகத்துடன், சந்தோஷத்துடன் செயல் பட்டால்  வெற்றி நிச்சயம்.

சுந்தர காண்டத்தில், இலங்கைக்கு போக வேண்டும் என்று அனுமன் நினைத்து விட்டான். விஸ்வரூபம் எடுத்து நாலா புறமும் தேடுகிறான். தேவர் உலகைப் பார்த்து, இதுவா இலங்கை என்று சந்தேகம் கொண்டான். பின் தெளிந்தான்.

இலங்கை இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டான்.

அவ்வளவுதான்.

அவனுடைய உற்சாகத்தைப் பாருங்கள்.

பாடல்


பாடல்

‘கண்டனென் இலங்கைமூதூர்!
    கடிபொழில், கனக நாஞ்சில்,
மண்டல மதிலும், கொற்ற
    வாயிலும், மணியில் செய்த
வெண் தளக் களப மாட
    வீதியும், பிறவும்! ‘என்னா,
அண்டமும் திசைகள் எட்டும்
    அதிரத் தோள் கொட்டி ஆர்த்தான்.

பொருள்


‘கண்டனென் = கண்டான்

இலங்கைமூதூர்! = இலங்கை என்ற பழைய ஊரை

கடிபொழில் = காவல் நிறைந்த சோலைகளை உடைய

கனக நாஞ்சில், = பொன்னால் செய்யப்பட்ட குருவி தலை போன்ற கைப்பிடி

மண்டல மதிலும் = வட்டமான சுவர்

கொற்ற வாயிலும் = அரச வாயிலும்

மணியில் செய்த = மணிகளால் செய்யப்பட்ட

வெண் தளக் = வெண்மையான

களப = சுண்ணாம்பு பூசப்பட்ட

 மாட வீதியும் = பெரிய வீதிகளையும்

பிறவும்! ‘என்னா = மற்றவற்றையும்

அண்டமும் = உலகம் எங்கும்

 திசைகள் எட்டும் = திசைகள் எட்டும்

அதிரத் = அதிரும்படி

தோள் கொட்டி ஆர்த்தான்.= தோள் கொட்டி ஆர்த்தான்

ஒன்றும் ஆகி விடவில்லை. இலங்கையைப் பார்த்தான். அவ்வளவுதான். அதுக்கு உலகம் பூரா கேட்கும் படி மகிழ்ச்சி ஆராவாரம்.

ஒரு வேலையை தொடங்கும் போது மிகுந்த உற்சாகம் வேண்டும்.

ஒரு ஆகாய விமானத்திற்கு எப்போது அதிக பட்ச சக்தி வேண்டும் என்றால் அது   தரையில் ஓடி விண்ணில் தாவும் அந்த நேரத்தில் தான்.

அதே போல நமக்கு எப்போது அதிக பட்ச சக்தியும், உற்சாகமும் வேண்டும் என்றால் ஒரு வேலையை தொடங்கும்போது.

மகிழ்ச்சியாக, உற்சாகமாக தொடங்கிவிட்டால் அதுவே பாதி வெற்றி பெற்ற மாதிரிதான்.

எனவே,

எதை ஆரம்பித்தாலும்,  சந்தோஷமாக, உற்சாகமாக, மிகுந்த உத்வேகத்துடன்  ஆரம்பியுங்கள். சோர்ந்து, தளர்ந்து, சந்தேகத்துடன் ஆரம்பிக்காதீர்கள்.

அந்த உற்சாகம், உந்துதல் மட்டுமே கூட அந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க உதவும். உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.


இன்னும் அடுத்து வரும் சில பாடல்களில் அனுமனின் உற்சாகத்தை,  மகிழ்ச்சியை நாம் காணலாம்.

எப்போதெல்லாம் சோர்வு வருகிறதோ, தளர்ச்சி வருகிறதோ...சுந்தர காண்டம் படியுங்கள்.

அனுமனின் உற்சாகம் உங்களையும் பற்றிக் கொள்ளும்.

பற்றட்டும் !

http://interestingtamilpoems.blogspot.in/2016/07/blog-post_28.html



Monday, July 18, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - சந்தேகம்

இராமாயணம் - சுந்தர காண்டம் - சந்தேகம் 



துன்பம் வந்தால் சுந்தர காண்டம் படியுங்கள் என்று சொல்கிறார்கள். அழகான காண்டம் (சுந்தரம்) என்றால் அதில் ரசிக்க ஏதாவது இருக்க வேண்டும். அழகிய பூஞ்சோலைகள், அருவிகள், பச்சை பசேல் என்ற வயல் வெளி, அங்கு வரும் பறவைகள், மகிழ்ச்சியான ஆடி பாடும் மக்கள் என்று ஏதாவது இருக்க வேண்டும்.

சுந்தர காண்டத்தின் தொடக்கம் சீதையைப் பிரிந்த இராமன். ஒரே புலம்பல் இரண்டு பேரும் . அனுமன் கடல் தாண்டி போகிறான். உப்புக் கடலில் இரசிக்க என்ன இருக்கிறது. பாத்தா குறைக்கு போகின்ற வழியில் இடைஞ்சல்கள் வேறு. இலங்கைக்குப் போன பின்னால், சீதை தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறாள். அனுமன் இலங்கைக்கு தீ வைக்கிறான். கணையாழியோடு திரும்பி வந்து சேர்கிறான்.

இதில் என்ன சுந்தரம் இருக்கிறது ?

அது மட்டும் அல்ல, நாமே ஒரு துன்பம் என்று போனால், கதையில் அதை விட பெரிய துன்பமாக இருக்கிறது. மனதுக்கு ஆறுதலாக ஒன்றும் இல்லை.


பின் ஏன் துன்பம் வந்த நேரத்தில் சுந்தர காண்டம் படி என்று சொன்னார்கள் ?

காரணம் இருக்கிறது.

எந்த ஒரு துன்பத்தையும், சிக்கலையும் எப்படி சரி செய்து , அதில் இருந்து மீள்வது  என்று காட்டுகிறது சுந்தரகாண்டம்.

துன்பத்தில் இருந்து மீண்டால் மகிழ்ச்சி தானே ?

அந்த மகிழ்ச்சிக்கு வழி காட்டுவது சுந்தர காண்டம்.

எப்படி என்று பார்ப்போம்.

அனுமன் சீதையைத் தேடி புறப்படுகிறான். மகேந்திர மலையின் மேல் ஏறி , தனது விஸ்வரூபத்தை எடுத்து நாலா புறமும் பார்க்கிறான்.இலங்கை எங்கே என்று தெரியாது. முன்ன பின்ன போனது கிடையாது. வரைபடம் கிடையாது. போக வேண்டிய இடம் தெரியும். எப்படி போவது என்று தெரியாது. இலங்கை எப்படி இருக்கும் என்றும் தெரியாது.

நம் வாழ்விலும் அப்படி எத்தனையோ குழப்பங்கள் வருவது உண்டு இல்லையா. என்ன வேண்டும் என்று தெரியும். ஆனால் அதை எப்படி அடைவது என்று தெரியாது.

பாடல்

ஆண் தகை ஆண்டு அவ் வானோர்
    துறக்கம் நாடு அருகில் கண்டான்;
ஈண்டது தான்கொல் வேலை
    இலங்கை என்று ஐயம் எய்தா,
வேண் தரு விண்ணாடு என்னும்
    மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான்;
‘காண் தகு கொள்கை உம்பர்
    இல் ‘எனக் கருத்துள் கொண்டான்.


பொருள்

ஆண் தகை = ஆண்களில் உயர்ந்த அனுமன்

ஆண்டு = அப்போது (விஸ்வரூபம் எடுத்த அப்போது)

அவ் வானோர் = வானவர்கள், தேவர்கள்

துறக்கம் நாடு  = தேவர்களின் நாட்டை

அருகில் கண்டான்; = அருகில் கண்டான்

ஈண்டது தான்கொல் = இப்போது அது தான்

வேலை = கடல்

இலங்கை என்று = (சூழ்ந்த) இலங்கை என்று

ஐயம் எய்தா = சந்தேகம் கொண்டான்

வேண் தரு = வேண்டியதைத் தரும்

விண்ணாடு என்னும் = விண்ணவர்களின் நாடு

மெய்ம்மை கண்டு = என்ற உண்மையை அறிந்து

உள்ளம் மீட்டான்; = உள்ளம் மீண்டான்

‘காண் தகு கொள்கை = காணாத தகுந்த கொள்கை (சீதையை காண வேண்டும் என்ற கொள்கை )

உம்பர்  இல் ‘ = இங்கே இல்லை

எனக் கருத்துள் கொண்டான். = என மனதில் கொண்டான்

இதில் இரண்டு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்று, நமது குறிக்கோள் என்ன என்பதை ஒரு போதும் மறக்கக் கூடாது.

இரண்டாவது, குறிக்கோளை அடையும் வழியில் பல சலனங்கள், சபலங்கள் வரும். அவற்றைக் கண்டு , அதில் மயங்கி நின்று விடக் கூடாது.  அல்லது குறிக்கோளை விட்டு வேறு வழியில் போகக் கூடாது.

அனுமனுக்கு தேவர்களின் உலகம் கண்ணில் பட்டது. அப்படியே ஒரு சுற்று சுற்றிவிட்டு   வரலாமே என்று நினைத்திருக்கலாம். அழகான பெண்கள்,  கற்பக மரம், இனிமையான இசை, நல்ல கட்டிடங்கள், மனதை மயக்கும் நறுமணம் என்று எல்லாமே இருந்திருக்கும்.

அதில் எல்லாம் மனதைச் செலுத்தாமல், தனது குறிக்கோள் என்ன என்பதில்  கவனமாக இருந்தான்.

துன்பத்தை வெல்ல முதல் படி, குறிக்கோளில் தெளிவாக இருக்க வேண்டும்.

எடையை குறைக்க வேண்டும் என்பது குறிக்கோள். உணவை கட்டுப் படுத்த வேண்டும் என்று தெரியும். நல்ல ice cream ஐ பார்த்தால் உடனே  குறிக்கோள் மறந்து போய் விடுகிறது.

படிக்க வேண்டும் , நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்பது குறிக்கோள்.தொலைக்காட்சியில் cricket வந்தால்,  பெரிய நடிகரின் படம் திரைப்படத்தில் வந்தால் குறிக்கோள் மறந்து போய் விடுகிறது.

சலனத்திற்கு ஆட்படாமல், குறிக்கோளில் குறியாக இருக்க வேண்டும்.

துன்பம் ஓடிப் போய்விடும்.

போகட்டும்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/07/blog-post.html




Monday, July 11, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - முன்னுரை - பாகம் 2

இராமாயணம் - சுந்தர காண்டம் - முன்னுரை - பாகம் 2

துன்பம் வந்து விட்டால் ஏதோ  நமக்கு மட்டும் வந்து விட்டது போல துவண்டு போகிறோம். நமக்கு துன்பமே வரக்கூடாது, எப்படியோ வந்து விட்டது என்று அங்கலாய்கிறோம்.

அது உண்மையா ?

சாம்ராஜ்யத்துக்கு முடி சூட்ட இருந்த இராமனை காட்டுக்கு 14 வருஷம் போ என்று விரட்டி விட்டாள் கைகேயி. அதை விட பெரிய துன்பம் நமக்கு வந்து விடுமா ?

நாடு, நகரம், சொந்தம் , பந்தம், சொத்து , சுகம், பெருமை, புகழ் அனைத்தும் ஓர் இரவில் இழந்து, உடுக்க நல்ல துணி கூட இல்லாமல் கானகம் போன இராமனின் துன்பத்தை விட உங்கள் நட்டம் , உங்கள் அவமானம், உங்கள் இழப்பு பெரிய இழப்பா ?

சரி, அதுவாவது போகட்டும். 

இராமன் வலிமையான ஆடவன். அவனால் துன்பத்தை தாங்கிக் கொள்ள முடியும். 

சீதை, செல்லமாக வளர்ந்த பெண்.

காடு என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்ந்த பெண். அவளை காட்டுக்குப் போ என்று யாரும் சொல்லாவிட்டாலும் அவளும் கிளம்பி விட்டாள் . 

அதை விட நம் துயரம் பெரிய துயரமா ?

பெண்ணை கட்டி கொடுத்து விட்டு, "ஐயோ அவள் அங்கே என்ன கஷ்டப் படுகிறாளோ " என்று மனம் சோரும் பெண்களுக்கு சீதையின்  வாழ்க்கை   ஒரு ஆறுதலைத் தரும். 

சரி கானகம் போனார்கள்...போன இடத்திலாவது நிம்மதியாக இருக்க முடிந்ததா ?

இராவணன் , சீதையை தூக்கிக் கொண்டு போய் விட்டான்.

யார் தூக்கிப் போனார்கள் என்று கூடத் தெரியாது. 

கட்டிய மனைவியை காணவில்லை. 

இராஜ்யத்தை சக்கரவர்த்திக்கு கட்டிய மனைவியை பாதுக்காகத் தெரியவில்லை என்ற பழிச் சொல் வேறு.

அரக்கனின் சிறையில் ஜானகி.

மனைவியின் போன இடம் தெரியாத இராமன்.

நினைத்துப் பார்த்து இருப்பார்களா வாழ்க்கை இப்படி தலை கீழாக மாறும் என்று ?  

நம் துன்பங்கள் அதை விட மோசமானதா ?


இராமன் யார் ? அவன் ஒரு அவதாரம். சக்ரவர்த்தி திருமகன். அவனுக்கே இந்த கதி என்றால், நாம் எம்மாத்திரம் ?

துன்பம் வரும். அது இயற்கை. துன்பம் வந்த போது ஐயோ எனக்கு இப்படி வந்து  விட்டதே என்று துவண்டு போய் விடக்  கூடாது.

போராடி வெல்ல வேண்டும் என்று சொல்ல வந்தது சுந்தர காண்டம். 

எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் அதை வெல்ல முடியும் என்று தைரியம் சொல்வது சுந்தர காண்டம்.

துன்பத்தில் துவண்டு விடலாம், தோள் தந்து நம்மை தூக்கி நிறுத்துவது  சுந்தர காண்டம். 

சுந்தர காண்டத்தை படிக்க படிக்க மனதில் ஒரு உற்சாகமும், உத்வேகமும் வரும்.

முடியும். என்னால் முடியும். என்னால் இந்த துன்பத்தை வெற்றி காண முடியும் என்று தன்னம்பிக்கை தருவது சுந்தர காண்டம்.

மனம் சோர்வடையும் போதெல்லாம் சுந்தர காண்டம் படியுங்கள்.

அது ஆயிரம் "Self Help " புத்தகங்களுக்கு சமம். 

மேலும் சிந்திப்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/07/2.html


Friday, July 8, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - முன்னுரை

இராமாயணம் - சுந்தர காண்டம் - முன்னுரை 



வாழ்க்கையில் துன்பம் அனுபவிக்காதவர் யார் ?

துன்பம் வரும் போது ...எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன்...எல்லாருக்கும் நல்லது தான் செய்கிறேன். யாருக்கும் ஒரு கெடுதலும் நினைப்பது இல்லை. முடிந்தவரை எல்லோருக்கும் உதவி செய்கிறேன். கடவுள் பக்தி உண்டு. பாவ புண்ணியத்திற்கு பயப்படுகிறேன். பூஜை புனஸ்காரங்களை ஒழுக்காகச் செய்கிறேன்....

இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று அலுத்துக் கொள்ளாதவர் யார் ?

ஏன் என் பிள்ளை இப்படி படிக்காமல் இருக்கிறான், ஏன் என் பெண்ணின் மாமியார் இப்படி இருக்கிறார், ஏன் என் கணவனோ மனைவியோ இப்படி இருக்கிறார்கள், எனக்கென்று ஏன் இப்படி ஒரு மானேஜர் அலுவலத்தில், ஏன் எனக்கு தொழிலில் நட்டம் வருகிறது என்று நொந்து கொள்ளாத யாராவது இருக்கிறார்களா ?

சரி, அப்படியே ஒரு துன்பம் வந்து விட்டாலும், நாம் மலை போல நம்பி இருந்தவர்கள்  நம்மை கை விட்டு விடுவதும் நிகழ்வது  சாதாரணமாக  எல்லோர் வாழ்விலும் நிகழ்வது தானே.

அவனுக்கு அல்லது அவளுக்கு எவ்வளவு எல்லாம் செய்தேன்...எனக்கு ஒரு  தேவை , அவசரம் என்று வந்த போது உதவி செய்ய யாரும் இல்லையே , இந்த உலகமே நன்றி கெட்ட உலகம் என்று வருந்தாதார் யார் ?

துன்பம் நமக்கு மட்டுமா வருகிறது ?

நம்பியவர்கள் கை விட்டு விடுவது நமக்கு மட்டுமா நிகழ்கிறது ?


சரி, அதற்கும் இந்த சுந்தர காண்டத்திற்கும் என்ன தொடர்பு ?

கம்ப இராமாயணம் எங்கே , அல்லாடும் தள்ளாடும் என் வாழ்க்கை எங்கே...இரண்டுக்கும் என்ன சம்பந்தம் ?

சம்பந்தம் இருக்கிறது...அது என்ன என்று வரும் நாட்களில் சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/07/blog-post_8.html