Thursday, July 28, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - தெளிவு

இராமாயணம் - சுந்தர காண்டம் - தெளிவு 


சந்தேகம் மற்றும் தயக்கத்தால் பல வெற்றிகளை, இன்பங்களை இழந்து விடுகிறோம்.


ஆழ்ந்து சிந்தித்து, அலசி ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

அப்படி எடுத்த பின், அதில் முழு மகிழ்ச்சியோடு ஈடு பட வேண்டும்.

வேலையை தொடங்கிய பின், இது சரியா, ஒரு வேளை இது இல்லாமல் மத்தது எதையாவது எடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் எடுத்த வேலை சிறக்காது.

எதில் தான் தயக்கமும் குழப்பமும் இல்லை ?

கல்லூரியில் ஏதாவது ஒரு பாட திட்டத்தை எடுத்த பின், ஒரு வேளை வணிகம் படிக்காமல் பொறியியல் படித்தால் நன்றாக இருக்குமோ என்ற குழப்பம்.


திருமணம் முடிந்த பின்னும், அந்த பெண் இவளை விட நன்றாக இருந்திருப்பாளோ என்ற சந்தேகம்.

வேலையில் சேர்ந்த பின்னால், அந்த நிறுவனம் இதை விட சிறப்பாக இருக்குமோ என்ற சந்தேகம்.

சேலையை வாங்கிய பின்னால், ஒரு வேளை அந்தக் கடையில் முதலில் பார்த்த சேலை இதை விட நன்றாக இருந்ததோ என்ற சந்தேகம்.

கார் வாங்கினாலும், வீடு வாங்கினாலும், எது செய்தாலும் ஓயாத குழப்பம். தயக்கம்.

இப்படி தொடங்கிய எதிலும் ஒரு உற்சாகத்துடன் செல்லாமல் இது சரியா தவறா என்று யோசித்துக் கொண்டே , சந்தேகப் பட்டுக் கொண்டே இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

எண்ணித் துணிக கர்மம், துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பார் வள்ளுவர்.


எடுத்த எந்த முடிவிலும்  முழு உற்சாகத்துடன், சந்தோஷத்துடன் செயல் பட்டால்  வெற்றி நிச்சயம்.

சுந்தர காண்டத்தில், இலங்கைக்கு போக வேண்டும் என்று அனுமன் நினைத்து விட்டான். விஸ்வரூபம் எடுத்து நாலா புறமும் தேடுகிறான். தேவர் உலகைப் பார்த்து, இதுவா இலங்கை என்று சந்தேகம் கொண்டான். பின் தெளிந்தான்.

இலங்கை இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டான்.

அவ்வளவுதான்.

அவனுடைய உற்சாகத்தைப் பாருங்கள்.

பாடல்


பாடல்

‘கண்டனென் இலங்கைமூதூர்!
    கடிபொழில், கனக நாஞ்சில்,
மண்டல மதிலும், கொற்ற
    வாயிலும், மணியில் செய்த
வெண் தளக் களப மாட
    வீதியும், பிறவும்! ‘என்னா,
அண்டமும் திசைகள் எட்டும்
    அதிரத் தோள் கொட்டி ஆர்த்தான்.

பொருள்


‘கண்டனென் = கண்டான்

இலங்கைமூதூர்! = இலங்கை என்ற பழைய ஊரை

கடிபொழில் = காவல் நிறைந்த சோலைகளை உடைய

கனக நாஞ்சில், = பொன்னால் செய்யப்பட்ட குருவி தலை போன்ற கைப்பிடி

மண்டல மதிலும் = வட்டமான சுவர்

கொற்ற வாயிலும் = அரச வாயிலும்

மணியில் செய்த = மணிகளால் செய்யப்பட்ட

வெண் தளக் = வெண்மையான

களப = சுண்ணாம்பு பூசப்பட்ட

 மாட வீதியும் = பெரிய வீதிகளையும்

பிறவும்! ‘என்னா = மற்றவற்றையும்

அண்டமும் = உலகம் எங்கும்

 திசைகள் எட்டும் = திசைகள் எட்டும்

அதிரத் = அதிரும்படி

தோள் கொட்டி ஆர்த்தான்.= தோள் கொட்டி ஆர்த்தான்

ஒன்றும் ஆகி விடவில்லை. இலங்கையைப் பார்த்தான். அவ்வளவுதான். அதுக்கு உலகம் பூரா கேட்கும் படி மகிழ்ச்சி ஆராவாரம்.

ஒரு வேலையை தொடங்கும் போது மிகுந்த உற்சாகம் வேண்டும்.

ஒரு ஆகாய விமானத்திற்கு எப்போது அதிக பட்ச சக்தி வேண்டும் என்றால் அது   தரையில் ஓடி விண்ணில் தாவும் அந்த நேரத்தில் தான்.

அதே போல நமக்கு எப்போது அதிக பட்ச சக்தியும், உற்சாகமும் வேண்டும் என்றால் ஒரு வேலையை தொடங்கும்போது.

மகிழ்ச்சியாக, உற்சாகமாக தொடங்கிவிட்டால் அதுவே பாதி வெற்றி பெற்ற மாதிரிதான்.

எனவே,

எதை ஆரம்பித்தாலும்,  சந்தோஷமாக, உற்சாகமாக, மிகுந்த உத்வேகத்துடன்  ஆரம்பியுங்கள். சோர்ந்து, தளர்ந்து, சந்தேகத்துடன் ஆரம்பிக்காதீர்கள்.

அந்த உற்சாகம், உந்துதல் மட்டுமே கூட அந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க உதவும். உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.


இன்னும் அடுத்து வரும் சில பாடல்களில் அனுமனின் உற்சாகத்தை,  மகிழ்ச்சியை நாம் காணலாம்.

எப்போதெல்லாம் சோர்வு வருகிறதோ, தளர்ச்சி வருகிறதோ...சுந்தர காண்டம் படியுங்கள்.

அனுமனின் உற்சாகம் உங்களையும் பற்றிக் கொள்ளும்.

பற்றட்டும் !

http://interestingtamilpoems.blogspot.in/2016/07/blog-post_28.html



1 comment:

  1. என்ன ஒரு உற்சாகம்! நல்ல பாடல்!

    ஆகாய விமானம் பற்றிய உன் உவமை அற்புதம்.

    நன்றி.

    ReplyDelete