Friday, October 28, 2016

இராமாயணம் - பரதன் 3 - பிறப்பு

இராமாயணம் - பரதன் 3 - பிறப்பு


பரதன் பிறந்து தொட்டிலில் குழந்தையாக கிடக்கிறான்.

குழந்தைகளுக்குப் பெயரிட வேண்டும். யார் பெயரிடுவது ?

பெற்றோர் பெயரிடலாம், தாத்தா பாட்டி பெயரிடலாம். சில இடங்களில் மாமன் மடியில் வைத்து பெயரிடுவார்கள்.

இப்போதெல்லாம், அரசியல் தலைவர்களை பெயரிடச் சொல்கிறார்கள்.

தசரதன், குல குருவான வசிட்டரிடம் சொல்லி அவரை பெயரிடச் சொல்கிறான். குருவின் மேல் அவ்வளவு நம்பிக்கை. மதிப்பு.

வசிட்டன் ஒவ்வொரு குழந்தைக்கும் பெயரிடுகிறான். மற்ற பிள்ளைகளின் பெயரிட்ட பாடல்களை விட்டு விடுவோம்.

பரதனுக்கு பெயரிட்ட பாடலை பார்ப்போம்.

தன்னுடைய தவத்தினால் வேதங்களின் உட்பொருளை அறிந்த வசிட்டன், உள்ளங்கை நெல்லிக் கனி போல ஒளி விடும் அவனுக்கு பரதன் என்று பெயர் தந்தான்.

பாடல்

கரம் தலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரதம் மறைப் பொருள் மெய்ந் நெறி கண்ட
வரதன் உதித்திடும் மற்றைய ஒளியைப்
‘பரதன் ‘எனப் பெயர் பன்னினன் அன்றே.

பொருள் 

கரம் = கை , உள்ளங்கை

தலம் = இடத்தில்

உற்று = சேர்ந்து

ஒளிர் = ஒளிரும் , விளங்கும்

நெல்லி = நெல்லிக் கனியைப்

கடுப்ப = போல , ஒத்த

விரதம் = விரதத்தினால், தவத்தினால்

மறைப் = வேதம் போன்ற உயர் நூல்களின்

பொருள் = பொருளையும்

மெய்ந் நெறி = அவை சொல்லும் உண்மையான வழிகளையும்

கண்ட = கண்ட, அறிந்த

வரதன் = வசிட்டன்

உதித்திடும் = தோன்றிடும்

மற்றைய ஒளியைப் = வேறு ஒளியை

‘பரதன் ‘ = பரதன்

எனப் = என்று

பெயர் =பெயர்

பன்னினன் அன்றே = பண்ணினான் , தந்தான்

சற்று ஆராய்வோம்.

உள்ளங்கை நெல்லிக் கனி - அது என்ன உள்ளங் கை நெல்லிக் கனி போல என்ற தொடர் ? மற்ற கனிகள் உள்ளங்கையில் இருந்தால் தெளிவாகத் தெரியாதா ? மாங்கனி இருந்தால் தெரியாதா ? ஏன் நெல்லிக் கனியை மட்டும்
குறிப்பாகச் சொல்ல வேண்டும் ?

காரணம் இருக்கிறது.

நெல்லிக் கனியைப் பார்த்தால் தெரியும், அதில் சில வரிகள் இருக்கும். மேலிருந்து கீழாக செல்லும். அந்த வரிகளின் மேல் கத்தியை வைத்து வெட்டிப் பார்த்தால்  , அந்த வரிகளுக்கு நேர் உள்ளே உள்ள விதையிலும் அதே போல  வரிகள் இருக்கும். அதாவது விதையில் எப்படி இருக்கிறதோ அதே போல வெளியிலும் இருக்கும்.

உள்ளே என்ன இருக்கிறதோ, அப்படியே வெளியிலும் இருக்கும். உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கும்.

உள்ளே ஒன்று, வெளியே ஒன்று என்று வேறுபாடு கிடையாது.

பரதனுக்கு மனமும் செயலும் ஒன்றாக இருந்தது. அல்லது இருக்கும் என்று முதலிலேயே கம்பர் காட்டுகிறார்.

யோசித்துப் பார்ப்போம். நாம் நினைப்பது எல்லாம் வெளியே சொல்ல முடியுமா ? நமக்கு மிக மிக நெருங்கியவர்களிடம் கூட நம் மனதில் உள்ளதை வெளியில் சொல்ல முடியாது.

மனதில் ஒன்றை நினைப்போம், வெளியில் ஒன்றைச் சொல்வோம், செய்வோம்.  கணவன், மனைவி, பிள்ளைகளிடமே இப்படி என்றால் மற்றவர்களிடம் எப்படி இருப்போம் என்று சொல்லவே வேண்டாம்.

உள்ளும் புறமும் பிரிந்து கிடக்கிறோம்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார்  இராமலிங்க அடிகளார் .


ஒருமை யுடனினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறும் நினதுபுகழ் பேசவேண்டும்
பொய்ம்மை பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசை மறக்கவேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத் துள்வளர்
தல மோங்கும் கந்த வேளே

தண்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

என்பது திருவருட்பா.

எப்போது உள்ளும் புறமும் ஒன்றாக இருக்கும் ?

மனம் தூய்மையாக இருந்தால் , அது அப்படியே வெளிப்படுவதில் சிக்கல் ஒன்றும் இருக்காது. மனத் தூய்மை இல்லாவிட்டால் தான், அது வெளிப் படுவதை மறைக்க  வேண்டி இருக்கும்.

வள்ளுவரிடம் ஒரு மாணவன் கேட்டான், ஐயா உங்கள் 1330 குறளையும் படித்து அதன் உள் அர்த்தங்களை புரிந்து அதன் படி நடப்பது என்பது இயலாத காரியம்.

குறள் மட்டும் அல்ல, உலகில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் உள்ள அறங்களை  தொகுத்து சுருக்கமாகச் சொல்ல முடியுமா என்று கேட்டான்.

வள்ளுவரும், "சொல்லுகிறேன் , நாலே வார்த்தைகளில் சொல்கிறேன் குறித்துக் கொள் " என்றார்.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்"

அவ்வளவுதான்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

என்பது வள்ளுவம்.

மனதில் எந்த விதமான குற்றமும் இல்லாமல் இருப்பது அனைத்து அறங்களும் சேர்ந்த ஒன்று என்றார்.

மனம் தூய்மையாக இருந்து விட்டால் , தவறு எப்படி நிகழும் ?

மனம் செயல் படுவதால் , மனிதன் என்று முன்னொரு பிளாகில் பார்த்தோம்.

மனம் சரியாகச் செயல் பட்டால் , சிறந்த மனிதனாக முடியும்.

அப்படி மனம் உயர்ந்ததால், தான் உயர்ந்தவன் பரதன்.

எப்படி என்று காப்பியத்துக்குள் சென்று பார்ப்போம்.


"உதித்திடும் மற்றைய ஒளியை" - உதித்தல் என்றால் முன்பே இருந்த ஒன்று மீண்டும் வெளிப்படுவது. சூரியன் உதித்தான் என்று சொல்ல வேண்டும். சூரியன் தோன்றினான் என்று   சொல்லக் கூடாது. சூரியன் எப்பவும் உள்ளது. இரவில் மறைந்து  இருந்தது. பகலில் உதித்தது.

ஒரு திரு முருகன் வந்து அங்கு உதித்தனன் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார். முருகன் எப்போதும் உள்ளவன். நெற்றிக் கண்ணில் உதித்தான். எனவே தான் முருக ஜெயந்தி ஒன்று கிடையாது.



அருவமும் உருவமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
    பிரம்மாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி
    கருணைகூர் முகங்களாறும் கரமது பன்னிரண்டுங் கொண்டே
    ஒருதிரு முருகன் வந்து அங்கு உதித்தனன்

என்பது கந்த புராணம். ( சைவ சித்தாந்தத்தின் சாரம் அனைத்தும் அடங்கியது இந்தப் பாடல் என்பது பெரியவர்களின் கருத்து).

இராம , இலக்குவன , பரத  மற்றும் சத்ருக்கனன் என்போர் அவதாரம். எப்போதும் உள்ளவர்கள். இங்கு வந்து உதித்தனர் என்ற அவதார இரகசியத்தை ஒரு வார்த்தையில் சொல்லிப் போகிறான் கம்பன்.


"மற்றைய ஒளியை"....இராமனை மெய் பொருள் என்ற கம்பர், பரதனை "மற்றைய ஒளி" என்றார். மெய் பொருளில் இருந்து பிறக்கும் ஞான ஒளி பரதன்.  அஞ்ஞானத்தை இருள் என்று ஞானத்தை ஒளி என்றும் சொல்லுவது மரபு. பரதனை "மற்றைய ஒளி" என்றார்.

அவன் வாழ்க்கையைப் பற்றி மேலும் சிந்திப்போம்.







2 comments:

  1. படிக்க படிக்க தெவிட்டாமல் எழுதுகிறீர்கள்.மிக்க நன்றி

    ReplyDelete
  2. உள்ளங்கை நெல்லிக்கனி என்று பல முறை கேட்டிருக்கிறேன், ஆனால் அதன் பொருள் இன்றுதான் அறிந்து கொண்டேன்.

    அருமையான விளக்கம். மிக்க நன்றி.

    ReplyDelete