Monday, January 30, 2017

இராமாயணம் - பரதன் குகன் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ?

இராமாயணம் - பரதன் குகன் - ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ ?


கானகம் சென்ற இராமனை மீண்டும் அழைத்து வந்து அரசை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பரதன் புறப்பட்டு வருகிறான். வந்த பரதனை முதலில் தவறாக எண்ணிய குகன் அவனின் நோக்கம் அறிந்து தன் தவறை அறிந்து மாற்றிக் கொள்கிறான்.

பரதனை நோக்கி குகன் கூறுகிறான் "தாயின் வரத்தினால் , தந்தை தந்த அரசை தீவினை என்று நினைத்து , அந்த அரசை மீண்டும் இராமனிடம் தர வந்திருக்கும் உன்னைப் பார்த்தால், ஆயிரம் இராமர் உனக்கு இணையாவார்களா , தெரியவில்லை "  என்றான்.

பாடல்

தாய் உரை கொண்டு, தாதை
    உதவிய தரணி தன்னைத்
தீ வினை என்ன நீத்துச்
    சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து,
    புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ்
    ஆவரோ? தெரியின் அம்மா

பொருள்

தாய் உரை கொண்டு = தாய் கொண்ட வரத்தினால்

தாதை  உதவிய = தந்தை தந்த

தரணி தன்னைத் = உலகம் தன்னை (அரசை)

தீ வினை என்ன = தீவினை என்று

நீத்துச் = விலக்கி

சிந்தனை முகத்தில் தேக்கிப் = சிந்தனை தோய்ந்த முகத்துடன்

போயினை என்ற போழ்து = கானகம் வந்தாய் என்ற போது

புகழினோய்! = புகழை உடையவனே

தன்மை கண்டால் = உன்னுடைய தன்மை கண்டால்

ஆயிரம் இராமர் = ஆயிரம் இராமர்

நின் = உனக்கு

கேழ் = ஒப்பு, சமம்



கேழ் இல் பரஞ்சோதி, கேழ் இல் பரங் கருணை, கேழ் இல் விழுப்பொருள் என்பார் மணிவாசகர். 

ஆவரோ? = ஆவர்களா

தெரியின் அம்மா = தெரியவில்லை அம்மா

ஆயிரம் இராமர் உனக்கு இணையாவார்களா என்று.

அப்படி என்ன பரதன் செய்து விட்டான்  ?


தனக்கு உரிமை இல்லாத ஒரு அரசை உரியவரிடம் தருவதற்கு வந்திருக்கிறான். அது ஒரு பெரிய பெருமையா ?

இராமன் தனக்கு உரிய அரசை விட்டுக் கொடுத்தான் . அவனை விட பரதன் எப்படி  உயர்ந்தவன் ?

இராமன் தானே விட்டு கொடுக்கவில்லை. தாய் பெற்ற வரத்தால் , தந்தை சொன்னதால் இராமன் பதவியை துறக்க நேர்ந்தது. இராமனுக்கு அது இரண்டுவிதமான கட்டளை...

ஒன்று தந்தையின் கட்டளை.

இன்னொன்று அரச கட்டளை.

மீற முடியாது.

ஆனால், பரதனின் நிலை அப்படி அல்ல.

தாய் கைகேயி பெற்ற வரம். தந்தை மற்றும் அரசன் ஒத்துக் கொண்டு தந்த அரசு. குல குரு, அமைச்சர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

பரதன் அரசை ஏற்றுக் கொண்டால் யாரும் அவனை குறை கூற முடியாது.

யார் என்ன சொன்னாலும், அது தவறு, அறம் அல்ல என்று பரதன் நினைத்தான்.

அவன் மனமும் செயலும் அறத்தின் வழி நின்றது.

அது , அதிகம் படிக்காத குகனுக்குக் கூட தெரிந்தது.

அடுத்தது காட்டும் பளிங்கு போல நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்பது வள்ளுவம்.

பரதன் மனதில் இருந்தது அவன் முகத்தில் தெரிந்தது.

அதை அறிந்த குகன் "ஆயிரம் இராமர் உனக்கு இணையாக மாட்டார்கள்" என்றான்.


Friday, January 27, 2017

இராமாயணம் - பரதன் குகன் - முந்தையோர் முறையில் நின்றும் வழுவினன்

இராமாயணம் - பரதன் குகன் - முந்தையோர் முறையில் நின்றும்
வழுவினன்


கானகம் சென்ற இராமனை மீண்டும் அழைத்து வர பரதன் கங்கை கரையை அடைந்தான். அவனை முதலில் தவறாக நினைத்த குகன் தன்னைத் திருத்திக் கொள்கிறான்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பின், குகன் பரதனிடம் "நீ எதற்காக வந்தாய்" என்று கேட்கிறான்.

அதற்கு பரதன், "உலகம் முழுதும் ஆண்ட தசரதன் ஒரு தவறு செய்து விட்டான். அதை திருத்த இராமனை மீண்டும் அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்" என்றான்.

பாடல்

தழுவின புளிஞர் வேந்தன்
    தாமரைச் செங்கணானை
‘எழுவினும் உயர்ந்த தோளாய்!
    எய்தியது என்னை? ‘என்ன,
‘முழுது உலகு அளித்த தந்தை
    முந்தையோர் முறையில் நின்றும்
வழுவினன், அதனை நீக்க
    மன்னனைக் கொணர்வான் ‘என்றான்.

பொருள்

தழுவின புளிஞர் வேந்தன் = தழுவிய வேடத் தலைவன்

தாமரைச் செங்கணானை = தாமரை போன்ற சிவந்த கண்களை உடைய பரதனை

‘எழுவினும் உயர்ந்த தோளாய்! = பெரிய தூண்/கம்பம் இவற்றை விட உயர்ந்த தோள்களை உடையவனே

எய்தியது என்னை? ‘என்ன = என்ன காரணத்திற்காக வந்திருக்கிறாய் என்று கேட்டான்

‘முழுது உலகு அளித்த தந்தை = முழு உலகத்தையும் ஆண்ட தந்தை ஆகிய தசரதன்

முந்தையோர் முறையில் = முன்னோர் சென்ற முறையில்

நின்றும் = இருந்து

வழுவினன் = தவறினான்

அதனை நீக்க = அதை சரி செய்ய

மன்னனைக் கொணர்வான் ‘என்றான் = மன்னனான இராமனை கூட்டிச் செல்ல வந்திருக்கிறேன் என்றான்

கம்பன் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து போடுகிறான்.

தவறு செய்தது அரசன் அல்ல. தந்தை.

அரசனின் ஆணை மதிக்கப்பட வேண்டும்...சரியோ தவறோ ...அரசாணைக்கு எல்லோரும்  அடி பணிய வேண்டும். இன்று பரதன் பணியவில்லை என்றால் நாளை பரதனின் ஆணையை யார் பணிவார்கள்.

ஆனால், தந்தை தவறு செய்யலாம். தந்தையின் செயல்கள் விமர்சினத்துக் உட்பட்டது .

அடுத்து, அரசனை கொணர்வான் வந்தேன் என்றான். அண்ணனை கொணர்வான் என்று சொல்லவில்லை. பரதன் மனதில் இராமன் தான் அரசன். யார் என்ன சொன்னாலும் அவனுக்கு கவலை இல்லை. இராமன் ஒருவன் தான்  அரசன்.


தந்தை நெறி தவறினான் என்று பகிரங்கமாக சொல்லுகிறான். இராமன் அப்படி பேசவில்லை. "அப்பா சொல்ல வேண்டுமா, நீ சொன்னால் போதாதா " என்று கைகேயின் வார்த்தை கேட்ட மாத்திரத்தில் கிளம்பி விட்டான்.

தந்தை செய்தது சரியா தவறா என்று அவன் வாதம் செய்யவில்லை.

அது இராமன் கண்ட அறம் .

ஆனால், பரதனுக்கு யார் சொன்னார்கள் என்பது பற்றி கவலை இல்லை. முறை என்று உண்டு. அறம் என்று ஒன்று உண்டு. யார் சொன்னாலும் அதை மீறக்  கூடாது என்று நினைக்கிறான்.


எது சரி ?

இராமன் எப்போதும் பெரியவர்கள் சொன்னதை கேட்டுத்தான் நடந்திருக்கிறான்...அறம் அல்ல என்று தெரிந்தாலும்.

பெண்ணைக் கொல்வது அறம் அல்ல என்று தெரிந்தாலும், விஸ்வாமித்ரன் சொன்னான் என்பதற்காக  அவளை கொல்கிறான்.

அப்போது இராமன் சொல்லவும் சொல்கிறான் "அறம் அல்லாதவற்றை நீ சொன்னால், நான் செய்வேன் " என்று வாக்கு மூலம் தருகிறான்.

அடுத்து, கைகேயி சொன்னால் என்பதற்காக மூத்த மகன் அரசாள வேண்டும் என்ற நெறியை கை விட்டு கானகம் போகிறான்.

அடுத்து, சபரி சொன்னால் என்பதற்காக ஆராயாமல் சுக்ரீவனோடு நட்பு பாராட்டுகிறான்.

ஆனால் , பரதன் அப்படி அல்ல. யார் என்ன சொன்னாலும், எது அறம் என்பதில் மிகத்  தெளிவாக இருக்கிறான்.

எது சரி ? இராமனின் வழியா ? பரதனின் வழியா ?

கம்பன் அதற்கும் ஒரு தீர்வு சொல்கிறான்.

அது என்ன தீர்வு ?



Wednesday, January 25, 2017

இராமாயணம் - தெய்வ குணம் - முதிர் தரும் கருணையின் முகம் ஒளிர

இராமாயணம் - தெய்வ குணம் - முதிர் தரும் கருணையின் முகம் ஒளிர 


போன பிளாகில் பிறர் மனம் நோகும்படி பேசுவது ஒரு அரக்க குணம் என்று  பார்த்தோம்.இராவணன் நல்லது சொன்னால் கூட மற்றவர்கள் பயப்படுவார்களாம். நல்லது பகரினும் நடுங்கும் நெஞ்சினர் என்பார்  கம்பர்.

இனிமையாக எப்படி பேசுவது என்று வள்ளுவர் கூறுவதையும் முந்தைய பிளாகில் பார்த்தோம். முகத்தை நோக்கி , மலர்ந்த முகத்துடன், இனிய சொற்களை கூற  வள்ளுவர் கூறுவதையும் பார்த்தோம்.

மாற்றாக, இராமன் எப்படி பேசுகிறான் என்று பார்ப்போம்.

இராமன், தெருவில் வருகிறான். நடந்து வருகிறான். எதிரில் யாரோ வயதான குடிமகன். இராமனுக்கு  அவனை யார் என்றே தெரியாது.

அவன் அருகில் சென்று விசாரிக்கிறான்...கருணையோடு, மலர்ந்த முகத்தோடு ...

"உன் மனைவி நலமா ? உன் பிள்ளைகள் படிக்கிறார்களா ? நல்ல வலிமையுடன் இருக்கிறார்களா ?" என்று கேட்கிறான்.

பாடல்

எதிர் வரும் அவர்களை. எமையுடை இறைவன்.
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா.
‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனயையும்?
மதி தரு குமரரும் வலியர்கொல்?’ எனவே.


பொருள்

எதிர் வரும் = எதிரில் வரும்

அவர்களை. = பொது மக்களை

எமையுடை இறைவன் = எங்களை கொண்ட இறைவனாகிய இராமன்

முதிர் தரு கருணையின் = கனிந்த கருணையான

முகமலர் ஒளிரா = முகமாகிய மலர் ஒளிர

‘எது வினை? = வேலை எல்லாம் எப்படி போகிறது

இடர் இலை? = துன்பம் ஒன்றும் இல்லையே

இனிது நும் மனயையும்? = உன் மனைவி இன்பமாக இருக்கிறாளா ?

மதி தரு குமரரும் = அறிவுள்ள பிள்ளைகளும்

வலியர்கொல்?’ எனவே = வலிமையோடு இருக்கிறார்களா ?

என்று  கேட்டான்.

இதில் பல நுட்பமான விஷயங்களை கவனிக்க வேண்டும்.

முதலாவது, முதிர் தரு கருணையின்....கருணையான முகத்ததோடு. முகத்தில் கருணை  இருக்க வேண்டும். எப்போதும் கடு சிடு என்று இருக்கக் கூடாது.

 இரண்டாவது,"முக மலர் ஒளிர" ...மலர் போல முகம் ஒளிர வேண்டும்.

ஒளிர்தல் என்பது மிக பெரிய  விஷயம்.  இராமன் கானகம்  போகிறான்.அவன் உடலில் இருந்து வெளி வரும் ஒளியில் சூரியனின் ஒளியே மங்கிப் போய் விட்டதாம்.

வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான்

வெய்யோன் ஒளி = சூரியனின் ஒளி 

தன் மேனியின் விரிசோதி = இராமனின் மேனியில் இருந்து வரும் ஒளியில் மறைய 

திருவாசகத்தில் சிவனை ஒளி வடிவமாக பல இடங்களில் கூறுகிறார். 

மூன்றாவது, ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று இராமன் அறிந்து அதைப் பற்றி விசாரிக்கிறான்.

மனைவி இன்பமாக இருக்கிறாளா ? வீட்டில் மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் எல்லாமே  மகிழ்ச்சியாக இருக்கும். அவள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் மற்றவை மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை.

மதி தரும் மைந்தர் - பிள்ளைகள் படித்து அறிவாளிகளாக இருக்க வேண்டும்.  இளமையில் படிக்காத மகன் வீட்டுக்கு அட்டமத்துச் சனி என்பார் ஒளவையார் 

காலையிலே பல்கலைநூல் கல்லாதத் தலைமகன்
ஆலையெரி போன்ற அயலானும்– சால
மனைக்கட் டழிக்கு மனையாளும் இம்மூவர்
தனக்கட் டமத்துச் சனி


படித்தால் மட்டும் போதாது , வலிமை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். மனத்திலும், உடலிலும் வலிமை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அறிவு மட்டும் போதாது. வல்லமையும் வேண்டும்.

முன்ன பின்ன தெரியாத ஒருவரிடம் எவ்வளவு அன்போடு அக்கறையோடு விசாரிக்கிறான்.

நம் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிடம் நாம் எப்போதாவது அப்படி கேட்டது உண்டா ? நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உள்ள காவல்காரரை (secuirty ) நாம் அப்படி விசாரித்தது உண்டா ?

யாரிடமும் அன்போடு, இனிமையாக பேசுவோம். அது ஒரு தெய்வீக குணம்.

எளிதானதுதானே ? 

Tuesday, January 24, 2017

இராமாயணம் - அரக்க குணம் - நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர்

இராமாயணம் - அரக்க குணம் - நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர் 


அரக்கர் என்பவர் ஏதோ பெரிய உருவத்துடன், பெரிய பற்களுடன் , கருப்பாய், இருப்பவர்கள் அல்ல.  சில குணங்கள் நம்மை அரக்கர்களாக்கும். சில குணங்கள் நம்மை தெய்வமாக்கும்.

எந்த குணங்கள் அரக்க குணங்கள் ?

வளைந்து கொடுக்கும் தன்மை இல்லாமை, பணியாமல் இருப்பது, விட்டுக் கொடுக்கும் குணம் இல்லாமை ஒரு அரக்க குணம் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

இனிமையாக பேசாமல் இருப்பது இன்னொரு அரக்க குணம். பேச்சில் இனிமை வேண்டும்.

இராவணன் நல்லது சொன்னால் கூட அருகில் இருப்பவர்கள் பயப்படுவார்களாம்.


பாடல்

அன்னவன் அமைச்சரை நோக்கி, 
     ஆண்டு ஒரு 
நல் மொழி பகரினும் 
     நடுங்கும் சிந்தையர், 
'என்னைகொல் பணி?' 
     என இறைஞ்சுகின்றனர். 
கின்னரர், பெரும் 

    பயம் கிடந்த நெஞ்சினர்.


பொருள்

அன்னவன் = இராவணன்

அமைச்சரை நோக்கி = அமைச்சர்களை பார்த்து

ஆண்டு  = அங்கு

ஒரு = ஒரு

நல் மொழி =நல்ல வார்த்தை

பகரினும் = சொன்னாலும்

நடுங்கும் சிந்தையர் = நடுக்கம் கொள்ளும் மனம் கொண்டவர்

'என்னைகொல் பணி?' = சொன்ன வேலை என்ன

என இறைஞ்சுகின்றனர் = என்று கெஞ்சி, கேட்பார்கள் .

கின்னரர் = தேவர்கள்

பெரும் பயம் கிடந்த நெஞ்சினர் = பெரிய பயத்தை உடைய மனம் கொண்டவர்கள்

பேசும் போது இனிமையாக பேச வேண்டும். நல்லது சொல்லும் போது கூட மற்றவர்கள் பயப்படும்படி பேசுவானாம் இராவணன்.

சரி, இராவணன் அப்படி பேசுகிறான். அது கெட்ட குணம்தான்.

எப்படி இனிமையாகப் பேசுவது ?

நமக்கு வாழ்வில் என்ன சிக்கல் , துன்பம், பிரச்சனை வந்தாலும், அதை கேள்வியாக மாற்றி, வள்ளுவரிடம் கேட்டால் அதற்கு அவர் பதில் தருவார்.

எப்படி இனிமையாக பேசுவது ? என்று வள்ளுவரிடம் கேட்டால், அவரிடம் வரும் பதில்

முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா 
மின்சொ லினதே யறம்.

ஒருவனின் முகத்தை பார்த்து, இனிது  நோக்கி, நல்ல மனத்தோடு இனிய சொற்களை சொல்லுவதே அறம் என்கிறார்.

இனிய சொல் என்று ஒரு சொல் கிடையாது.

"உடம்பு எப்படி இருக்கிறது " என்ற மூன்று சொல்லை எப்படியும் சொல்லலாம்.

வள்ளுவர் சொல்கிறார்,

வந்தவனின் முகம் பார்த்து அறிய வேண்டும். அவனுக்கு என்ன சிக்கல் என்று. பசித்து வந்து இருக்கிறானா, பொருள் வேண்டி வந்திருக்கிறானா, வேறு ஏதாவது குடும்பச் சிக்கலா ? உடல் ஆரோக்கியம் சரி இல்லையா என்று முகம் பார்த்து அறிய வேண்டும்.

கனிவோடு அவனை பார்க்க வேண்டும். நம் முகத்தில் ஒரு கோபத்தையும், வெறுப்பையும், வைத்துக் கொண்டு என்ன சொன்னாலும் அது இனிய சொல் ஆகாது.

அவனது மனம் மகிழும்படி சொல்ல வேண்டும்.

ஒரு ஆறுதல், ஒரு தைரியம், ஒரு தன்னம்பிக்கை, ஒரு உற்சாகம் வரும்படி பேச வேண்டும்.

சொல் மட்டும் அல்ல. என்ன சொல்கிறோம் என்பது மட்டும் அல்ல, எப்படி சொல்கிறோம் என்பதும் முக்கியம்.

இராவணன் நல்லது தான் சொன்னான். அவன் சொன்ன விதம் மற்றவர்களை பயம் கொள்ளச் செய்கிறது.

முகம் பார்த்து பேசுங்கள். மற்றவர்கள் மகிழும்படி பேசுங்கள்.

அப்படி பேசாமல் இருப்பது அரக்க குணம்.

இராவணன் அப்படி பேசினான். அவன் ஒரு அரக்கன்.

இராமன் எப்படி பேசினான் ? வள்ளுவர் கூறிய மாதிரி இராமன் பேசினானா ?

அடுத்த பிளாகில் பார்ப்போம்.









Sunday, January 22, 2017

நாலடியார் - எது அழகு ?

நாலடியார் - எது அழகு ?


அழகு இதில் இருக்கிறது ?

Beauty Parlor , சிகை அலங்காரம், பல விதமான நவீன உடைகள், உதட்டுச் சாயம், முகத்திற்கு பூசும் பொடிகள், என்று பலவிதங்களில் நம்மை அழகு படுத்திக் கொள்கிறோம்.

இதெல்லாம் அழகா ? நீடித்து நிற்கும் அழகா ?

முடியை எத்தனை அழகு செய்தாலும், வெளியே சென்றவுடன் ஒரு காற்று அடித்தால் கலைந்து விடும்.

எத்தனை powder கள் போட்டாலும், ஒரு வியர்வை, ஒரு மழை வந்தால் கரைந்து விட்டும்.

வெளியே செய்யும் அழகு எல்லாம் சில நிமிடங்கள்தான். மிஞ்சி மிஞ்சி போனால் சில மணி நேரம்.

உண்மையான அழகு எது தெரியுமா - ஒழுக்கத்தைத் தரும் கல்வி அழகே உண்மையான அழகு என்று சொல்கிறது நாலடியார்.

பாடல்


குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.


பொருள்

குஞ்சி யழகும் = குஞ்சி என்றால் ஆண்களின் தலை முடி. முடியின் அழகும் 

இராமன் முடி சூட்டாமல் வருகிறான். அவனை தூரத்தில் இருந்து பார்த்த கோசலை நினைக்கிறாள், மஞ்சன புனித நீரால் இராமனின் முடி நனைய வில்லை என்று...


‘புனைந்திலன் மௌலி; குஞ்சி
     மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன்; என்கொல்?’ என்னும்
     ஐயத்தாள் நளின பாதம்.
வனைந்த பொன் கழற்கால் வீரன்
     வணங்கலும், குழைந்து வாழ்த்தி,
‘நினைந்தது என்? இடையூறு உண்டோ

     நெடு முடி புனைதற்கு?’ என்றாள்.


கொடுந்தானைக் கோட்டழகும் = தானை என்றால் ஆடை. கோட்டம் என்றால் வளைவு.  வளைந்து நெளிந்து இருக்கும் ஆடையின் வனப்பு.

மஞ்சள் அழகும் = மஞ்சளின் அழகும்

அழகல்ல = அழகு அல்ல

நெஞ்சத்து = மனதில்

நல்லம்யாம் = நல்லவர்கள் நாம்

என்னும் = என்ற

நடுவு நிலைமையால் = ஒழுக்கம் தவறாத நடு நிலைமையால்

கல்வி அழகே அழகு = கல்வியின் அழகே அழகு


முடி - ஆண்களுக்கு. 

மஞ்சள் - பெண்களுக்கு 

ஆடை - இருவருக்கும் 

எனவே ஆண் பெண் என்ற இருவருக்கும் இந்த வெளி வேடங்களில் அழகு இல்லை. 

கல்வியால் தான் அழகு.

கல்வி என்றால் என்ன ? நிறைய புத்தகங்கள் வாசித்து வருவதும், பட்டங்கள் பெறுவதும் அல்ல  கல்வி.

ஒழுக்கத்துடன் , நல்லவர்களாக வாழ எது வழி காட்டுகிறதோ அதுவே கல்வி. 

ஒழுக்கம் இல்லாதவன் எவ்வளவு படித்து இருந்தாலும், உலகம் அவனை போற்றாது.இராவணன் பெரிய கல்விமான் தான். "நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த" நா வன்மை கொண்டவன் தான். அவனிடம் அறிவு இருந்தது. ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லா கல்வியால் பயன் இல்லை.  

நல்லவர்களாக இருக்க வேண்டும். 

நடுவு நிலைமை பிறழாதவர்களாக இருக்க வேண்டும். 

இந்த இரண்டையும் தரும் கல்வியின் அழகே அழகு.

ஊருக்கு நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை நாலடியார்.

"நல்லம் யாம்" . நாம் நல்லவர்கள் என்று நம் மனதுக்குத் தெரிய வேண்டும். 

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க , பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்பார் வள்ளுவர். 



அந்த கல்வியில் அப்படி என்னதான் சிறப்பு இருக்கிறது ?

மேலும் சிந்திப்போம். 




Saturday, January 21, 2017

இராமாயணம் - பரதன் குகன் - தந்தையினும் களி கூரத் தழுவினான்

இராமாயணம் - பரதன் குகன் - தந்தையினும் களி கூரத் தழுவினான் 


பரதனைக் காண குகன் வருகிறான். முதலில் ஏதோ இராமன் மேல் கோபம் கொண்டுதான் பரதன் வந்து விட்டான் என்று நினைத்தான். பின், பரதனின் தவ வேடம் கண்டு, தான் நினைத்தது தவறு என்று அறிந்து, பரதனைக் காண குகன் தனியே வருகிறான்.

வரும் குகனை நானே சென்று பார்ப்பேன் என்று பரதன் எழுந்து செல்கிறான்.

குகனை நோக்கி கை கூப்பிய படி வருகிறான் பரதன். அப்படி வந்த பரதனை குகன் வணங்கினான்.  வணங்கிய குகனின் கால்களில் பரதன் விழுந்தான். விழுந்த பரதனை ஒரு தந்தை மகனை எடுத்து அணைப்பது போல எடுத்து அணைத்துக் கொண்டான்.

பாடல்

வந்து, எதிரே தொழுதானை
    வணங்கினான்; மலர் இருந்த
அந்தணனும் தனை வணங்கும்
    அவனும், அவனடி வீழ்ந்தான்;
தந்தையினும் களி கூரத்
    தழுவினான், தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும்

    வீற்றிருக்கும் சீர்த்தியான்.


பொருள்


வந்து = தனியாக வந்து (வந்தது குகன்)

எதிரே தொழுதானை = எதிரில் தொழுத படி நிற்கும் பரதனை

வணங்கினான் = (குகன்) வணங்கினான்

மலர் இருந்த அந்தணனும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

தனை வணங்கும் = தன்னை வணங்கும்படி இருக்கும்

அவனும் = பரதனும்

அவனடி வீழ்ந்தான் = குகனின் காலில் விழுந்தான்

தந்தையினும் களி கூரத் = ஒரு தகப்பனைவிட மிக மகிழ்ந்து

தழுவினான் = தழுவிக் கொண்டான் குகன்

தகவு உடையோர் = தகுதி உடையவர்கள்

சிந்தையினும் = சிந்தனையிலும்

சென்னியினும் = தலையிலும்


வீற்றிருக்கும் சீர்த்தியான் = எப்போதும் இருக்கும் பெருமை கொண்ட குகன்


பரதன் குகனைத் தொழுதான்

குகன் பரதனை வணங்கினான்

பரதன் குகன் காலில் விழுந்தான்

குகன் பரதனை தழுவிக் கொண்டான்

என்ன நடக்கிறது இங்கே ?

பரதன் ஒரு பேரரசின் மன்னன். குகன் ஒரு ஓடம் ஓட்டுபவன்.  ஒரு சக்கரவர்த்தி  ஓடம் ஓட்டுபவனின் காலில் விழுவதை நம்மால் எண்ணிப் பார்க்க முடியுமா ?

பரதன் விழுந்தான்.

பரதனுக்குத் தெரியாதா ?

தெரியும்.

பல விஷயங்கள் இந்த பாடலில் ஒளிந்து இருக்கிறது.

முதலாவது, இறைவனின் முன்னால் எல்லோரும் சமம். உருவம் இராம பக்தர்கள். இதில் பெரியவன் என்ன சிறியவன் என்ன. யாரை யார் தொழுதால் என்ன ? யார் காலில் யார் விழுந்தால் என்ன ? உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது.

இரண்டாவது, எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தான். குகன் பரதனை தழுவிக் கொண்டான்.  வீட்டுப் பெண்மணிகள், தங்கள் வீட்டில் வேலை பார்க்கும்  பெண்களை தழுவிக் கொள்வதை நம்மால் சிந்திக்க முடியுமா ?  வீட்டு வாசலில் காவல் நிற்கும் அந்த காவலாளியை நம்மால் கட்டி அணைக்க முடியுமா ?  கையாவது கொடுப்போமா ?  வியர்வையில் நனைந்து, மீன் வாடை அடைக்கும் குகனை பரதன் தழுவிக் கொண்டான். அன்பும் பக்தியும் வந்து விட்டால் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பெரியவன், சின்னவன், படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது. எல்லோரும் சமம். இது வைஷ்ணவ சம்பிரதாயத்தின் மிக முக்கியமான ஒன்று.

மூன்றாவது, பக்தர்களுக்குள் வேறுபாடு கிடையாது. இன்று பக்தர்களுக்குள்ளேதான் பெரிய வேறுபாடுகள் இருக்கிறது. அவர் பெரியவர். இவர்  பெரியவர். அவர் இத்தனை முறை அந்த கோவிலுக்குப் போய் இருக்கிறார், அவர் மடாதிபதி, சன்னிதானம், தலைவர், குரு , என்று ஆயிரம் பாகுபாடுகள். இதெல்லாம் போக வேண்டும். ஒரே ஒரு முறை பார்த்த குகனும், கூடவே பிறந்த பரதனும் ஒருவருக்கு ஒருவர் சமமாக பழகினார்கள். பக்தியில்  சீனியாரிட்டி எல்லாம் கிடையாது.


நான்காவது, இராமன் குகனை தம்பி என்றான். குகனோ பரதனை மகனாக நினைக்கிறான். ஒரு தந்தை தன் மகனை அணைத்துக் கொண்டாள் எவ்வளவு மகிழ்வானோ , அதை விட மகிழ்ந்தான் குகன். அவ்வளவு அன்பு, வாஞ்சை. பக்தி என்று வந்து விட்டால், அன்புக்கு அளவே இல்லை.

பக்தி செலுத்துவோருக்கு ஒரு பாடம் இந்த பாடல்.



Thursday, January 19, 2017

குறுந்தொகை - அருளும் அன்பும் துறந்து

 குறுந்தொகை - அருளும் அன்பும் துறந்து 


பெண்கள் எதையும் நேரடியாகத் சொல்வது இல்லை. கொஞ்சம் சுத்தி வளைத்துத்தான் சொல்லுவது வழக்கம்.

பொருள் தேடி வெளியூர் போகப் போகிறான் தலைவன். மனைவியைப் பிரிந்து , அவள் தரும் அன்பை பிரிந்து பொருள் தேடுவதுதான் உயர்ந்தது என்று செல்லும் அவர்தான் அறிவுள்ளவர் என்றால் அவர் அறிவுள்ளவராகவே இருந்து விட்டு போகட்டும். நான் முட்டாளாகவே இருந்திவிட்டுப் போகிறேன்.

மனைவி மற்றும் உறவுகளை விட்டு விட்டு அயல் நாட்டுக்குப் போகாதே. அது முட்டாள்தனம் என்று நேராகச் சொல்லி விடலாம். சொல்லவில்லை.

அப்படிச் செய்ற நீதான் புத்திசாலி. நான் முட்டாளாவே இருந்துவிட்டுப் போகிறேன் என்கிறாள் இந்த குறுந்தொகை கால மனைவி.

பெண்கள் அன்றிலிருந்து இன்றுவரை இப்படித்தான் போல....

பாடல்

அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக
மடவ மாக மடந்தை நாமே. 


சீர் பிரித்த பின்

அருளும் அன்பும் நீங்கி துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோராயின்
உரவோர் உரவோராக
மடவமாக மடந்தை நாமே.

பொருள்


அருளும் = அருளும்

அன்பும் = அன்பும்

நீங்கி = விட்டுப் பிரிந்து

துணை = மனைவியைத்

துறந்து = விட்டு விலகி

பொருள்வயிற் = பொருள் தேடி

பிரிவோர் = பிரிந்து செல்வோர்

உரவோராயின் = வலிமை உள்ளவர் என்றால்  (உரம் = வலிமை). இங்கே புத்திசாலி, அல்லது அறிவாளி

உரவோர் = புத்திசாலி

உரவோராக = புத்திசாலியாகவே இருந்துவிட்டு போகட்டும்

மடவமாக = மடத்தனம் கொண்ட

மடந்தை நாமே = பெண்கள் நாமே

இதில் உள்ள நுணுக்கமான செய்திகளை பார்க்க வேண்டும்.

அன்பு என்பது நம்மிடம் உறவு உள்ளவர்களிடம் தோன்றும் இரக்கம்.

அருள் என்பது நம்மிடம் உறவு இல்லாதவரிடத்தும் தோன்றும் இரக்கம்.


அருளும் அன்பும் நீங்கி ....

என்கிறாள். மனைவி என்ற அன்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு பெண் துன்பப படுகிறாளே  என்ற அருளாவது இருக்க வேண்டாமா என்பது அவள் கேள்வி.


"துணை துறந்து  பொருள்வயிற் பிரிவோர்....."

பணம் சேர்ப்பது ஒன்றுதான் வாழ்வின் குறிக்கோளா ? பணம் வேண்டும்தான். அதற்காக எதையெல்லாம் நாம் தியாகம் செய்கிறோம் என்று  சிந்திக்க வேண்டும் ?

ஆரோக்கியம் ? அன்பு ? உறவு ? அறிவு தேடல் ? என்று எத்தனையோ நல்ல விஷயங்களை  இழந்து விடுகிறோம்.

அயல் நாடு தான் போக வேண்டும் என்று இல்லை.

வீட்டையும், உறவுகளையும் , உடல் ஆரோக்கியத்தையும் பற்றி கவலைப் படமால் பணம் பணம்   என்று ஓடி ஓடி சம்பாதிப்பது அறிவான செயல்தானா ?

பொருள் அவசியம் தேவைதான். அதற்காக கொடுக்கும் விலை என்ன என்று யோசிக்கச் சொல்கிறாள். பணம் எல்லாம் சம்பாதித்து விட்டு வந்து பார்த்தால் வயது போயிருக்கும். பிள்ளைகள் படிப்பு வேலை என்று போயிருப்பார்கள். ஆரோக்கியம் போயிருக்கும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?

அவள் முடிக்கும் போது , "நான் முட்டாளாவே இருந்துவிட்டுப் போகிறேன்" என்று சொல்லவில்லை.

"மடவமாக மடந்தை நாமே"

நாமே என்று சொல்கிறாள். யார் இந்த "நாம்" ? எல்லா பெண்களும் அப்படித்தான்  நினைப்பார்கள்.

அருளும், அன்பும், துணையும் அவர்களுக்கு பணத்தை விட முக்கியம்.

அப்படி நினைக்கும் எங்களை உலகம் முட்டாகள் என்று சொல்கிறது. அப்படியே இருந்து விட்டு  போகட்டும். நீங்கள் எல்லாம் புத்திசாலியாகவே இருங்கள் என்கிறாள்.

யார் புத்திசாலி ? யார் முட்டாள் ?

விவாதம் தொடர்கிறது. இன்று வரை விடை கிடைக்கவில்லை.

கொஞ்சம் நிறுத்தி , யோசிப்போம். 


Wednesday, January 18, 2017

நளவெண்பா - ஈர மதியே, இள நிலவே

நளவெண்பா - ஈர மதியே, இள நிலவே 


தமயந்தி தனித்து இருக்கிறாள் நளனை நினைத்தபடி. இரவு அவளுக்கு துன்பம் தருகிறது. இரவு முடிகிற பாடாக இல்லை. நீண்டு கொண்டே இருக்கிறது.

எல்லோரும் தூங்கி விட்டார்கள். நிலவு மட்டும்தான் இருக்கிறது.

அதனிடம் பேசுகிறாள்.

"ஏய் குளிர்ந்த நிலவே. இளைய நிலவே ! என் குழலின் மேல் விடமால் ஏன் உன் குளிர்ந்த ஒளியை விடாமல் செலுத்துகிறாய் ? இந்த மன்மதன் என் மேல் போர் தொடுக்க உனக்கு இந்த விடியாத இரவை ஆயுதமாக கொடுத்து அன்பினானா " என்று கேட்கிறாள்.

பாடல்


ஈர மதியே ! இளநிலவே ! இங்ஙனே
சோர்குழலின் மீதே சொரிவதெவன் - மாரன்
பொரவளித்தான் கண்ணி உனக்குப் புலரா
இரவளித்தான் அல்லனோ இன்று.


பொருள்

ஈர மதியே ! = குளிர்ந்த நிலவே

இளநிலவே ! = இளமையான நிலவே

இங்ஙனே = இப்படி

சோர்குழலின் = அவிழ்த்து விடப்பட்ட குழலின்

மீதே = மீது

சொரிவதெவன் = பொழிவது ஏன் ?

மாரன் = மன்மதன்

பொரவளித்தான் = போர் அளித்தான். போருக்கு அனுப்பினான்

கண்ணி உனக்குப் = கன்னியாகிய உனக்கு

புலரா = விடியாத

இரவளித்தான்  = இரவை அளித்தான்

அல்லனோ = அல்லவா

இன்று = இன்று

நிலவே நீ  குளிர்ந்த கதிரை பாய்ச்ச வேண்டியவள். என் மேல் மட்டும் ஏன் தீயை  அள்ளி தெளிக்கிறாய் , அப்படிச் செய்யாதே. எனக்கும் குளிர்ச்சியைத் தா  என்று சொல்ல "குளிர்ந்த நிலவே" என்கிறாள்.

நீயும் என்னைப் போல இளமையானவள் தானே. காதலின் பிரிவு என்ன என்று உனக்கும்  தெரியும்தானே. பின் ஏன் என்னை துன்பப் படுத்துகிறாய். போய் விடு என்று சொல்லுவதைப் போல , இளைய நிலவே என்று சொல்லுகிறாள்.


போருக்கு என்னென்னெவோ ஆயுதங்கள் உண்டு. கத்தி, வில், அம்பு என்று. இங்கே மன்மதன் , நிலவை போருக்கு அனுப்புகிறான், இரவு என்ற ஆயுதத்தை  கொடுத்து.

என்ன ஒரு கற்பனை !!

Tuesday, January 17, 2017

கந்தர் அநுபூதி - வள்ளி பதம் பணியும்

கந்தர் அநுபூதி - வள்ளி பதம் பணியும் 


பணிவு இல்லாதது. ஆணவம் கொள்வது. தான் தான் உயர்ந்தவன் என்று எப்போதும் எண்ணிக் கொள்வது இறைவனின் குணம் என்று நேற்றுப் பார்த்தோம். அது ஒரு அரக்க குணம்.

அப்படியானால் பணிவது தெய்வ குணமா  என்ற கேள்வி எழும் அல்லவா ?

அதற்கு அருணகிரிநாதர் விடை தருகிறார்.

வள்ளியின் பாதங்களை பிடிக்கிறான் முருகன். அது மட்டும் அல்ல, "நீ என்ன சொல்கிறாயோ அதைச் செய்கிறேன்" என்று கூறுகிறான். அவள் மீது கொண்ட மோகத்தால் அதுவும் தணியாத மோகத்தால் என்கிறார் அருணகிரிநாதர்.

பாடல்



 திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.

பொருள்


திணியான = கடினமான
மனோ = மனம்
சிலை மீது = கல் மீது
உனதாள் = உனது தாள் = உனது பாதங்கள்
அணியார் = அழகான
அரவிந்தம்  = தாமரை
அரும்பு  மதோ = மொட்டு மலருமா ?
பணியா?  = எனக்கு இட்ட பணி  எது
என = என
வள்ளி பதம் பணியும் = வள்ளியின் பாதங்களை பணியும்
தணியா = தணியாத, எப்போதும் உள்ள
அதிமோக = அதிக மோகத்தை கொண்ட
 தயா பரனே.= கருணை கொண்டவனே

என் மனம் கடினமானது. கல் போன்றது. அதில் உன் திருவடித் தாமரை மலருமா ?

மலராது.

ஆனால், நீ நினைத்தால் முடியும் . ஏன் என்றால் நீ உன் அடியவர்களிடத்தில்  அன்பும்,  கருணையும் கொண்டவன். நீ நினைத்தால் உன் திருவடிகள் என் மனதில் பதியும் என்கிறார்.

வள்ளியின் பாதங்களை முருகன் பணிகிறான் . பணிந்து, நீ எனக்கு இட்ட வேலை என்ன  என்று கேட்கிறான்.

தனக்காக எவ்வளவு துன்பங்களை தாங்கி கொண்டவள் அவள் என்று நினைக்கிறான்.

காடு மேடெல்லாம் அலைந்து அவள் கால் வலிக்காதா ? கல்லும் முள்ளும் குத்தி  அவள் கால் நோகாதா என்று நினைத்தது அவள் பாதங்களை பிடிக்கிறான்.

நீ கஷ்டப் பட்டது எல்லாம் போதும். ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் சொல் என்று  அவளை வேண்டி நிற்கிறான்.

ஒவ்வொரு வீட்டிலும் இது நடந்தால் குடும்பம் எப்படி இருக்கும் ?

மனைவியின் தியாகங்களை, துன்பங்களை கணவன் அறிந்து அவள் மேல் கருணை கொண்டு, அவள் பாதங்களை பிடித்து , அவள் மேல் காதல் கொண்டால்  தாம்பத்தியம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.

மனைவியின் காலை நான் பிடிப்பதா என்று கேட்கும் இன்றைய தலைமுறைக்கும், முந்தைய தலைமுறைக்கும் இனி வரும் தலை முறைகளுக்கும்  அருணகிரிநாதர் பாடம் சொல்கிறார்.

வள்ளியின் பாதங்களை முருகன் பணிந்தான். அவள் இட்ட கட்டளையை கேட்டான். அவள் மேல் தீராத மோகம் கொண்டான்.

ஒரு புறம்  இராவணன்....படுக்கை அறையிலும் வணங்கா முடி.

இன்னோரும் புறம் முருகன்...வள்ளியின் பாதம் பணியும் , அவளின் ஆணையை கேட்கும் முருகன்.

இலக்கியம் படிப்பதில் உள்ள இன்பம் இதுதான்.

பணிந்து பாருங்கள்.  சொர்கம் தெரியும்.



இராமாயணம் - பரதன் குகன் - உலையாத அன்புடையான்

இராமாயணம் - பரதன் குகன் - உலையாத அன்புடையான் 


இராமனை கண்டு அவனை மீண்டும் அழைத்து வந்து மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க என்னை பரதன் அவனைத் தேடி வருகிறான். முதலில் அவனை தவறாக நினைத்த குகன், பின் அவன் தோற்றத்தைக் கண்டு தன் தவற்றை உணர்ந்து கொள்கிறான்.

"பரதனுக்கு ஏதோ ஒரு துன்பம் இருக்கிறது. அவனுக்கு இராமன் மேல் கொண்ட அன்பு குறையவில்லை. அவனைப் போலவே இவனும் தவ வேடம் கொண்டு இருக்கிறான். படை வீரர்களே , நீங்கள் இங்கு வழியை பத்திரமாக பார்த்துக் கொண்டு இருங்கள். நான் மட்டும் போய் அவனைப் போய் பார்த்து விட்டு வருகிறேன் " என்று குகன் தனியே கிளம்பினான்.

பாடல்

உண்டு இடுக்கண் ஒன்று; உடையான்,
    உலையாத அன்புடையான்
கொண்ட தவவேடமே
    கொண்டிருந்தான்; குறிப்பு எல்லாம்
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன்;
    காமின்கள் நெறி; “ என்னாத்
தண் துறை ஓர் நாவாயில்
    ஒரு தனியே தான் வந்தான்.

பொருள்


உண்டு இடுக்கண் ஒன்று; உடையான் = துன்பம் ஒன்று உடையான்

உலையாத அன்புடையான் = மாறாத அன்பு உடையான்

கொண்ட தவவேடமே = இராமன் கொண்ட தவ வேடமே

கொண்டிருந்தான் = இவனும் கொண்டிருக்கிறான்

குறிப்பு எல்லாம் = இந்த குறிப்பை எல்லாம்

கண்டு = பார்த்து

உணர்ந்து  = உணர்ந்து

பெயர்கின்றேன் = செல்கிறேன் (அவனைக் காண)

காமின்கள் நெறி; = வழியைப் காவல் காத்துக் கொண்டு இருங்கள்

“ என்னாத் = என்று தன் படைகளிடம் கூறி விட்டு

தண் துறை = குளிர்ந்த துறையில்

ஓர் நாவாயில் = ஒரு படகில்

ஒரு தனியே தான் வந்தான் = தனியே தான் மட்டும் வந்தான்


வாழ்க்கையை அறிவின் மூலமே அறிந்து செலுத்தி விட முயல்கிறோம். எல்லாவற்றிற்கும் ஒரு  அறிவியல் பூர்வமான, தர்க ரீதியான வாதம் செய்கிறோம்.  வாழ்வில் சில விஷயங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டு, அறிவியலுக்கு அப்பாற்பட்டு, தர்கத்திற்கு அப்பாற்பட்டு உள்ளது. 

அன்பு, துன்பம், காதல், பக்தி, பாசம், போன்றவை அறிவுக்கு அப்பாற்பட்டது.

இன்னும் சொல்லப் போனால், இவற்றை அறிவு கொண்டு ஆராய முற்பட்டால் தவறாகவே முடியும். 

முதலில் பரதனை தவறாக எடை போடுகிறான். படையோடு வந்திருக்கிறான், இராமனோடு சண்டை போடவே வந்திருக்கிறான் என்று அவன் அறிவு  சொல்கிறது. சண்டைக்குத் தயாராகி விட்டான். 

பின் , அவனைக் கண்டதும் அவன் எண்ணம் மாறுகிறது. தான் பரதனை பற்றி  நினைத்தது தவறு என்று எண்ணுகிறான். 


"கண்டு உணர்ந்து பெயர்கின்றேன்" 

என்கிறான். 

கண்டு அறிந்து பெயர்கிறேன் என்று சொல்லவில்லை. கண்டு உணர்ந்து செல்கிறேன் என்கிறான். 

அன்பை உணர முடியும். அறிய முடியாது.

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து என்பார் மணிவாசகர் 


சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து

என்பது திருவாசகம்.

பரதனின் உலையாத அன்பை குகன் உணர்ந்தான்.

அவன் உணர்ந்து கொண்டான். அவனுக்குப் பக்கத்தில் உள்ள வீரர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர்களை போருக்கு தயாராக்கி விட்டான் குகன். ஒரு வேளை அவர்கள் பரதனுக்கு ஏதாவது தீங்கு செய்து விட்டால் என்று அஞ்சி, அவர்களை "நீங்கள் வழியை பார்த்துக் கொண்டு இங்கே இருங்கள் " என்று சொல்லிவிட்டு தான் மட்டும் போகிறான். 


குகன் கண்ட பரதனை மற்ற வீரர்களும் கண்டார்கள். குகனுக்கு மட்டும் பரதனின் நிலையை உணர முடிந்தது. மற்றவர்களால் முடியவில்லை. 

உலகத்தில் உள்ள பொருள்களும் சம்பவங்களும் ஒன்று தான் என்றாலும், பார்ப்பவரின்  பக்குவத்தில் இருக்கிறது எல்லாம். 

கல்லென்று நினைப்பவனுக்கு கல். அதைத் தாண்டி ஏதோ இருக்கிறது என்று உணர்பவனுக்கு  , ஏதோ இருக்கிறது. 

என்ன இருக்கிறது , காண்பி, விளக்கு என்றால் முடிவது இல்லை. 

உணரலாம். அறிய முடியாது. 

Sunday, January 15, 2017

இராமாயணம் - அரக்க குணம் - புலவியினும் வணங்காத மகுடம்

இராமாயணம் - அரக்க குணம் - புலவியினும் வணங்காத மகுடம்


இராவணனிடம் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தன. இருந்தாலும், அவனை அரக்கன் என்று தான் உலகம் கூறுகிறது. அவன் தம்பி வீடணனை விபீஷண ஆழ்வார் என்று உலகம் கொண்டாடுகிறது. குலம் ஒன்றுதான். ஒருவன் அரக்கன், இன்னொருவன்   சிறந்த பக்திமான். இவை பிறப்பினால் வருவது இல்லை.

பின் எதனால் வருகிறது ? ஏதோ சில குணங்களால் வருகிறது. அவை என்னென்ன குணங்கள் ? அந்த குணங்கள் இருப்பவர்கள் அரக்கர்கள் தான் அவர்கள் பிறப்பால் எந்த குலமானாலும்.

அப்படி என்றால் அந்த குணங்களை கட்டாயம் தெரிந்து கொண்டு அவற்றை தவிர்த்து வாழ வேண்டும் அல்லவா ?

அவற்றை தவிர்த்து வாழ்ந்தால் தான் நாம் அரக்கர்களாக மாட்டோம்.

முதல் அரக்க குணம்...அன்பை காதலை வெளிப்படுத்தத் தெரியாமல் இருப்பது. இராவணனுக்குள் அன்பு இருக்கிறது. மகன் இறந்த போது கல்லும் கறையும்படி அழுகிறான். இருந்தும் அதை அவன் வெளிப் படுத்துவதில்லை. எப்போதும் ஒரு முரட்டுத்தனம். ஒரு  நெகிழ்வு கிடையாது, நேசிப்பவர்களுக்காக விட்டு கொடுப்பது கிடையாது. அது கூட ஒரு தோல்வி என்று நினைப்பது.

பாடல்

புலியின் அதள் உடையானும், பொன் ஆடை
    புனைந்தானும், பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு
    யாவர் இனி நாட்டல் ஆவார்?
மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந் தோள்,
    சேய் அரிக்கண், வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத
    மகுடம் நிரை வயங்க, மன்னோ.


பொருள்

புலியின் அதள் உடையானும் = புலியின் தோலை அணிந்த சிவனும்

பொன் ஆடை புனைந்தானும் = பொன் ஆடை அணிந்த திருமாலும்

பூவினானும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

நலியும் வலத்தார் அல்லர் = இராவணனை நலிய வைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் அல்ல

தேவரின் = தேவர்களில்

இங்கு = இங்கு

யாவர் இனி நாட்டல் ஆவார்? = யார் அவனை வெற்றி கொள்ள முடியும்

மெலியும் இடை = நாளும் மெலிகின்ற இடை

தடிக்கும் முலை = நாளும் பூரிப்படையும் மார்பகங்கள்

வேய் இளந் தோள் = மூங்கில் போன்ற இளமையான தோள்கள்

சேய் அரிக்கண்,= சிவந்த வரிகளைக் கொண்ட கண்கள்

வென்றி மாதர் = எவரையும் வெல்லும் பெண்கள்

வலிய நெடும் புலவியினும் = வலிமையான நீண்ட புணர்ச்சியிலும்

வணங்காத மகுடம் = வணங்காத மகுடம்

நிரை = வரிசை

வயங்க = ஒளிவீசும்

மன்னோ = அசைச் சொற்கள்

படுக்கையிலும், பெண்களிடம் வணங்காத முடி கொண்டவன்.

தான் தான் பெரிய ஆள். சக்ரவர்த்தி. வீரன் என்று மனைவியோடு தனித்து இருக்கும் போதும்  வணங்காத முடி.

படுக்கை அறையிலேயே விட்டு கொடுக்காதவன் மற்ற இடத்தில் பணிந்து விடுவானா ?

தான் தான் பெரிய ஆள், எல்லோரும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற எண்ணம்.

சரி, பணியாதது, விட்டுக் கொடுக்காதது அரக்க குணம் என்றால், விட்டு கொடுப்பது, மனைவியிடம் தனிமையில் பணிவது தெய்வ குணமா ?

ஆம் என்கிறார் அருணகிரிநாதர்.

ஒரு முறை அல்ல பல முறை...

அவை என்ன என்று அடுத்த பிளாக்கில் பார்ப்போமா ?



இராமாயணம் - பரதன் குகன் - பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?

இராமாயணம் - பரதன் குகன் - பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?


இராமனை மீண்டும் அழைத்து வந்து ஆட்சியை ஒப்படைக்க நினைத்து பரதன் வருகிறான். அவன் ஏதோ இராமன் மேல் படை எடுத்து வருவதாக எண்ணி பரதன் மேல் போர் தொடுக்க துணிகிறான் குகன். பரதன் அருகில் வந்த பின், அவனுடைய தோற்றத்தைக் கண்டு தான் நினைத்தது தவறென்று நினைக்கிறான் குகன்.

"பரதனைப் பார்த்தால் இராமனைப் போல இருக்கிறான். பக்கத்தில் இருக்கும் சத்ருகன் , இலக்குவனைப் போல இருக்கிறான். பாரதனோ ஒரு முனிவன் போல தவ வேடம் கொண்டு நிற்கிறான். துன்பத்தில் தோய்ந்த முகம். இராமன் இருக்கும் திசை பார்த்து தொழுகிறேன். இராமானுக்குப் பின்னால் பிறந்தவர்கள் தவறு செய்வார்களா ?"

என்று எண்ணுகிறான்.

பாடல்

நம்பியும் என் நாயகனை
    ஒக்கின்றான்; அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான்;
    தவம் வேடம் தலைநின்றான்;
துன்பம் ஒரு முடிவு இல்லை;
    திசை நோக்கித் தொழுகின்றான்;
எம்பெருமான் பின்பிறந்தார்
    இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான்.

பொருள்

நம்பியும் = ஆடவர்களில் சிறந்தவனான பரதனும்

என் நாயகனை = என் நாயகனான இராமனை

ஒக்கின்றான்; = போல இருக்கிறான்

அயல் நின்றான் = அருகில் நிற்கும் சத்ருக்கனன்

தம்பியையும் ஒக்கின்றான் = இலக்குவனைப் போல இருக்கின்றான்

தவம் வேடம் தலைநின்றான் = தவ வேடம் புனைந்து நிற்கின்றான்

துன்பம் ஒரு முடிவு இல்லை = அளவற்ற துன்பத்தில் இருக்கிறான்

திசை நோக்கித் தொழுகின்றான்= இராமன் இருக்கும் திசையைப் பார்த்து வணங்குகிறான்

எம்பெருமான் = என்னுடைய பெருமானாகிய இராமனின்

பின்பிறந்தார் = பின்னால் பிறந்தவர்கள்

இழைப்பரோ பிழைப்பு?‘‘ என்றான் = தவறு இழைப்பார்களா ? (மாட்டார்கள்)


குகன் பரதனை பற்றி தவறாக நினைத்து இருந்தான். என்னதான் இராமன்  என்னை  தம்பி என்று சொன்னாலும், நான் தவறு செய்து விட்டேனே. பரதனை தவறாக  நினைத்து விட்டேனே. இராமனுக்குப் பின் பிறந்தவர்கள் எப்படி தவறு செய்வார்கள். நான் இராமானுக்குப் பின் பிறக்கவில்லை. அதனால் தான்  இந்த தவற்றை செய்து விட்டேன் என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறான்.

இராமானுக்குப் பின்னால் பிறந்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்றால் என்ன  அர்த்தம் ?

ஒன்று, இராமனின் நல்ல குணங்களை பார்த்து அவர்களும் அதைப் பின் பற்றுவார்கள் என்று ஒரு பொருள்.. இராமாயணம் என்றாலே அது தானே. இராமன் + அயனம். அயனம் என்றால் பாதை. உத்தராயணம், தட்சிணாயனம் என்று  சூரியனின் பாதையை சொல்லுவதைப் போல.  இராமன் பின் பிறந்தவர்கள் இராமன் வழி நடப்பார்கள். தவறு செய்ய மாட்டார்கள்.

இரண்டாவது, தவறு செய்தால் இராமானுக்குப் பிடிக்காது. அவன் மனம் வருந்தும் என்று  நினைத்து தவறு செய்ய மாட்டார்கள். கானகம் செல்லும் படி தசரதன் ஆணை இட்டதும், இராமன் கிளம்பி விட்டான். இலக்குவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கோபம் கொள்கிறான். கொந்தளிக்கிறான். இராமன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். கேட்கவில்லை.

இறுதியாக, பெரியவர்கள் சொல்வதை கேட்பது என் கொள்கை. உனக்கும் அப்படி இருக்க வேண்டும் என்று இல்லை என்று வருந்திச் சொன்னவுடன், தன் சினத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இராமன் பின்னாலேயே கிளம்பி விடுகிறான்  இலக்குவன்.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு பாடம் இங்கே நடக்கிறது.

தவறு செய்யும் வாய்ப்பு பிள்ளைகளுக்கு வரும். பொய் சொல்ல, பிறர் பொருளை  எடுத்துக் கொள்ள, கோபம் கொள்ள, இன்ன பிற தீய செயல்களில் ஈடுபட  சந்தர்ப்பம் வரும்.

பிள்ளைகள் இரண்டு விதமாய் தங்களை தடுத்துக் கொள்ள முடியும்.

ஒன்று, பெற்றோருக்குத் தெரிந்தால் அவ்வளவுதான், அடி பின்னி விடுவார்கள் எனவே   செய்யக் கூடாது என்பது ஒரு வழி.

இரண்டாவது, நான் இதைத் செய்தால் என் பெற்றோர்கள் வருந்துவார்கள். அவர்களை நான் வருத்தம்  கொள்ளச் செய்யக் கூடாது என்று நினைத்து செய்யாமல் இருப்பது இரண்டாவது வழி.

இரண்டாவது வழி எப்போதும் துணை நிற்கும். எத்தனை நாள் பிள்ளையை அடிக்க முடியும் ?

ஆனால்,பிள்ளைகள் அப்படி நினைக்க வேண்டும் என்றால் பிள்ளைகள் மேல் அன்பைக் கொட்டி வளர்க்க வேண்டும். எப்போதும் கண்டிப்பு என்றால், பிள்ளைகள் சலித்துப் போவார்கள்.

இராமனின் பின்னால் பிறந்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் ஏன் என்றால் அந்தத் தவறு இராமனுக்கு வருத்தம் தரும் என்ற காரணத்தால்.

இராமனின் ஆளுமை, அவன் தோற்றம், அவன் நடத்தை எல்லாம் அவனைச் சேர்ந்தவர்களை  அவன் மேல் அன்பு கொள்ளச் செய்கிறது. எனவே, அவர்கள் தவறு செய்யய மாட்டார்கள்.

இந்த 'பின் பிறந்தார்' என்பதை சற்று விரித்து பொருள் கொண்டால் , இராமனை பின் பற்றப் பிறந்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள்.

இராமனை வணங்குபவர்கள், அவன் காட்டிய வழியைப் பின் பற்றுபவர்கள் தவறு செய்ய  மாட்டார்கள் என்பது முடிவு.

அப்படியே தவறு செய்தாலும், உணர்ந்து வருந்தி திருத்திக் கொள்வார்கள். குகனைப் போல.

பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு ?


Saturday, January 14, 2017

இராமாயணம் - பரதன் குகன் - நகை இழந்த முகத்தனை

இராமாயணம் - பரதன் குகன் - நகை இழந்த முகத்தனை 


வெளியே எங்காவது போக வேண்டும் என்றால் நாம் எப்படி கிளம்புவோம் ?

தலை சீவி, கொஞ்சம் பவுடர் போட்டு, நல்ல உடை அணிந்து செல்வோம். பெரிதாக அலங்காரம் பண்ணாவிட்டாலும் பார்க்கும் படியாகவாவது செல்லுவோம் அல்லவா ?

பரதன், ஒரு பெரிய நாட்டின் அரசன். அவன் கிளம்பி இராமனைப் பார்க்கப் போகிறான். மந்திரிகள் புடை சூழ, படை பின்னால் வர, மற்ற பெரியவர்கள், குல குரு , எல்லோரும் வருகிறார்கள். ஒரு அரசனுக்கு உரிய அலங்காரம் வேண்டும் அல்லவா. ஒரு பட்டு உடை, கிரீடம், இடுப்பில் வாள் , குளித்து முழுகி சுத்தமாக வந்திருப்பான் அல்லவா ?

இராமனைத் தேடி வரும் பரதனை , கங்கையின் மறு கரையில் உள்ள குகன் காண்கிறான்.

துணுக்குறுகிறான்.

மர பட்டையால் ஆன உடை அணிந்து இருக்கிறான். உடம்பு எல்லாம் ஒரே தூசி. உடம்பில் ஒரு ஒளி இல்லை.  முகத்தில் சிரிப்பு ஒரு துளியும் இல்லை. அவன் நிலையைப் பார்த்தால் கல் கூட கனிந்து விடும். அவனைப் பார்த்த குகன் மனம் நெகிழ்கிறான். அவன் கையில் உள்ள வில் அவனை அறியாமலேயே நழுவி விழுகிறது.

பாடல்

வற்கலையின் உடையானை
    மாசு அடைந்த மெய்யானை
நல் கலை இல் மதி என்ன
    நகை இழந்த முகத்தானைக்
கல் கனியக் கனிகின்ற
    துயரானைக் கண் உற்றான்,
வில் கையின் நின்று இடைவீழ,
    விம்முற்று நின்று ஒழிந்தான்.


பொருள்

வற்கலையின் உடையானை = வற்கலை என்றால் மரவுரி.

மாசு அடைந்த மெய்யானை = உடல் எல்லாம் ஒரே அழுக்கு. தூசி.

நல் கலை இல் மதி என்ன = கலை என்றால் நிலவின் பிறை. பிறை இல்லாத சந்திரன் எப்படி ஒளி மழுங்கி இருக்குமோ அப்படி இருந்தான்.

நகை இழந்த முகத்தானைக் = சிரிப்பை தொலைத்த முகம்

கல் கனியக் = கல்லும் கனியும்

கனிகின்ற துயரானைக் = துன்பத்தினால் மனம் கனியை போல நெகிழ்ந்து நிற்க

கண் உற்றான் = குகன் கண்டான்

வில் கையின் நின்று இடைவீழ = வில் கையில் இருந்து கீழே விழுந்தது

விம்முற்று = விம்மலுற்று

நின்று ஒழிந்தான் = நின்றான்

இராமன் மர உரி அணைந்து சென்றான் என்று அறிந்த பரதன், தானும் மர உரி அணிந்து வருகிறான்.

ஒரு வேளை நல்ல பட்டு உடை அணிந்து வந்தால் , அதைப் பார்க்கும் இராமன், ஒருவேளை தனக்கு இந்த ஆடம்பரங்களில் ஆசை இருக்கும் என்று நினைத்து விடலாம் , அப்படி நினைத்து அரசை தன்னிடமே கொடுத்து விடலாம் என்று  நினைத்து பரதனும் மர உரி அணிந்து வந்தான்.

இதில் ஒரு பாடம் நமக்கு இருக்கிறது.

பெரியவர்களை பார்க்கப் போகும் போது , எளிமையாக போக வேண்டும்.

நம்மிடம் உள்ள விலை உயர்ந்த ஆடை, நகை நட்டுகளை போட்டுக் கொண்டு அவர்கள் முன் போய் நிற்கக் கூடாது. பெரியவர்களை சுற்றி உள்ளவர்கள் எளிமையாக இருப்பார்கள். நாம் மட்டும் படோபடமாக சென்றால் , தனித்துப் போவோம். நம் செல்வத்தை, செல்வாக்கை காட்டும் இடம் அது அல்ல.

இன்னும் சொல்லப் போனால், அலுவலகத்தில் ஒரு மேலதிகாரியை பார்க்கப் போனால், அவரை விட உயர்ந்த ஆடை, கைக்கடிகாரம் இவற்றை அணிந்து சென்றால் அவருக்கு என்ன தோன்றும் ? என்னை விட இவன் உயர்ந்தவன் என்று  என்னிடமே காட்டுகிறானா என்று நினைக்கலாம். அல்லது, ஏற்கனவே நிறைய வசதி இருக்கும் போல ...இவனுக்கு கொடுக்க வேண்டிய பதவி உயர்வை, சம்பள உயர்வை வேறு யாருக்காவது கொடுக்கலாம் என்று நினைக்கலாம்.

கம்பர் அப்படிச் சொல்லவில்லை. நாம் சிந்திக்கலாமே.


"கல் கனியக் கனிகின்ற துயரானைக்"

பிறக்கும் போது மென்மையாக உள்ள மனம் நாளடைவில் கெட்டிப் பட்டுப் போகிறது. கல்லாய் போன மனதில் அன்பு, அருள், ஈரம், பக்தி என்று ஒன்றும்  இருக்காது. 

மனதில் இறைவன் திருவடி பாடியவேண்டும் என்றால் , மனம் மென்மையாக இருக்க வேண்டும். கல்லில் எப்படி எதுவும் படியும். 

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக என்பார் அருணகிரிநாதர் 


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.

மனம் உருக வேண்டும். 

இராமன் நிலை நினைத்து பரதனின் மனம் உருகுகிறது. கல்லும் கனியும் படி அவன் மனம் உருகுகிறது. 

வில் கையின் நின்று இடைவீழ,

அதைக் கண்ட குகனின் கையில் இருந்த வில் நழுவி விழுந்தது. மனம் வேறு ஒன்றைப் பற்றும் போது கை தானாகவே தன் பிடிப்பை நெகிழ விடும்.

சிவ பெருமானை காண்கிறார் மாணிக்க வாசகர். கை கூப்பி வணங்க வேண்டும். வணங்கவும் செய்கிறார். இருந்தும், அது ஒரு உண்மையான பக்தி அல்ல என்று அவர் நினைக்கிறார். கை கூப்பி வணங்க வேண்டும் என்றால் ஒரு முயற்சி வேண்டும். மனம் இறைவன் பால் இலயித்து விட்டால், கை நெகிழ்ந்து விடும். அதை உயர்த்தி இறைவனை வணங்க முடியாது. என்னால் அப்படி முடியவில்லையே என்று உருகுகிறார் மணிவாசகர். 


மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை
யார்கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி
வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும்
கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே. 


ஆனால் குகன் ஒரு படி மேலே போகிறான். அவன் கை நெகிழ்ந்து வில் கையை விட்டு  விழுந்து விடுகிறது. 


மணிவாசகரால் கையை நெகிழ விட முடியவில்லை. குகன் கை நெகிழ்ந்தது. 


அப்படி நெகிழ்ந்த குகன் , பரதனை தவறாக நினைத்து விட்டேனே என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறான். 

எப்படி தெரியுமா ?







Friday, January 13, 2017

இராமாயணம் - பரதன் குகன் - எழுகின்ற காதலொடும்

இராமாயணம் - பரதன் குகன் - எழுகின்ற காதலொடும்


இராமன் மேல் படை எடுத்து வந்து விட்டான் என்று நினைத்து பரதன் மேல் போர் தொடுக்க தயாராக நிற்கிறான் குகன். இராமன் மேல் அன்பு கொண்டவன் குகன் என்று மந்திரியாகிய சுமந்திரன் சொல்லக் கேட்டு, குகன் மேல் அன்பு கொண்டு அவனைக் காண எழுகிறான் பரதன்.

அவன் எழுந்தவுடன் அவனுடன் சத்ருக்கணும் கிளம்புகிறான். அருகில் வரும் அவர்களைக் கண்டு துணுக்குறுகிறான் குகன்.

பாடல்

என்று எழுந்த தம்பியொடும்,
     எழுகின்ற காதலொடும்,
குன்று எழுந்து சென்றது எனக்
     குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான், திரு மேனி
     நிலை உணர்ந்தான்,
துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்;
     துண்ணென்றான்.

பொருள்

என்று எழுந்த தம்பியொடும் = கூடவே எழுந்த தம்பியோடும் (சத்ருக்கனன்)

எழுகின்ற காதலொடும் = மனதில் எழுகின்ற காதலோடும்

குன்று எழுந்து சென்றது எனக் = பெரிய குன்று எழுந்து சென்றது போல

குளிர் = குழறிந்த

கங்கைக் கரை = கங்கையாற்றின் கரையை

குறுகி = அடைந்து, நெருங்கி

நின்றவனை நோக்கினான் = நின்ற பரதனை நோக்கினான்

திரு மேனி நிலை உணர்ந்தான் = பரதனின் உடல் இருக்கும் நிலையை உணர்ந்தான்

துன்று = நெருங்கிய

கரு = கருமையான

நறுங் = நறுமணம் வீசும்

குஞ்சி = தலை முடியை உடைய

எயினர் = வேடர்

கோன் = அரசன்

துண்ணென்றான் = துணுக்குறான்



என்று எழுந்த தம்பியொடும் - "நீயும் என்னுடன் வா" என்று சத்ருகனனிடம் பரதன்  சொல்லவில்லை. பரதன் எழுந்தவுடன், அவன் கூடவே சத்ருக்கனனும் எழுந்தான். குறிப்பறிந்து செய்தான். 

பிறர் உள்ளத்தில் இருப்பதை அறிபவனை தெய்வத்தோடு ஒப்பிட்டு கூறுகிறார் வள்ளுவர். 

ஐயப் படாஅ தகத்த துணர்வாரைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

ஏன் என்றால், சொல்லாமலேயே, மனதில் உள்ளதை அறியும் ஆற்றல் தெய்வம் ஒன்றுக்குத்தான் உண்டு. அரசன், மேலதிகாரி, ஆசிரியர், துணைவன், துணைவி, பிள்ளைகள் , பெற்றோர் யாராயிருந்தாலும் அவர்களின் மனதில் உள்ளதை அறிந்து  செயல்படுபவன் உயர்ந்தவன். 

சொல்லாமலேயே செய்ய வேண்டும். 

சிலர் , சொன்ன பின் செய்வார்கள். 

வேறு சிலர் சொன்ன பின்னும் செய்ய மாட்டார்கள். 

உயர்வில் இருந்து தாழ்வுக்கு தர வரிசை அப்படியே. 

பரதனின் உள்ளக் குறிப்பை சத்ருக்கன் அறிந்தான். 

பயிற்சி செய்து பாருங்கள். உங்கள் அருகில் உள்ளவர்களிடம், உங்கள் மேல் அன்பு கொண்டவர்களிடம், நீங்கள் அன்பு செய்பவர்களிடம் அவர்கள் கேட்காமலேயே , சொல்லாமலேயே அவர்களின் மனதை அறிந்து ஏதாவது   செய்து பாருங்கள் . வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று தெரியும். 

"உனக்கு பிடிக்கும் என்று இதை வாங்கி வந்தேன்"

"உங்களுக்கு பிடிக்கும் என்று இதைச் செய்தேன் "

என்று செய்து பாருங்கள். 

"துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்"

இதில் துன் என்ற சொல் மிக சுவாரசியமானது.

துன் என்றால் நெருக்குதல்.

துன்னியார் = நண்பர்
துன்னார் = பகைவர்
துன்னர் = தையல்காரர். இரண்டு துண்டு துணிகளை ஒன்றாக சேர்ப்பதால்
துன்னு = உடம்போடு ஒட்டிய தசை

அருகில் வந்த பரதனைக் கண்டு குகன் துணுக்குற்றான்

ஏன் ?

Thursday, January 12, 2017

கைந்நிலை - வடுவிடை மெல்கின கண்

கைந்நிலை - வடுவிடை மெல்கின கண்


கணவன் வெளியூருக்குப் போகிறான் என்றால், மனைவிக்கு ஒரு இனம் தெரியாத கவலையும் பயமும் வந்து விடும்.

நேரா நேரத்துக்கு சாப்பிடணுமே , மறக்காம மருந்து சாப்பிடணுமே ,நல்ல சாப்பாடு கிடைக்குமா, அங்கு குளிருமா ? ரொம்ப சூடா இருக்குமா ? பத்திரமா போயிட்டு பத்திரமா வரணுமே என்று ஆயிரம் சஞ்சலம் மனதுக்குள்.

இந்தக் கவலை இன்று நேற்று வந்தது அல்ல. சங்க காலம் தொட்டே பெண்ணுக்கு இந்தக் கவலை தான்.

பொருள் தேடி தலைவன் வெளியூர் செல்ல  வேண்டும். பிரிவு அவளை வருத்துகிறது.

பிரிவு  மட்டும் அல்ல, அவன் படப் போகும் துன்பங்களும் அவளை நெகிழ வைக்கிறது. என்னால் தானே அவன் இவ்வளவு துன்பப் படுகிறான் என்று நினைத்து அவள் உருகுகிறாள்.

அவள் அதிகம் வெளிய போனவள் அல்ல.  உலகம் எப்படி இருக்கும் என்று  தெரியாது.எல்லாம் கேள்விப் பட்டதுதான்.

அவன் போகப் போகும் பாலைவனத்தைப் பற்றி அவள் மிரள்கிறாள்.

அந்தப் பாலைவனம் அவள் கண் முன்னே விரிகிறது.

அது ஒரு சுட்டெரிக்கும் மணல் வெளி. மருத்துத்துக் கூட ஒரு மரம் கிடையாது.

அங்கங்கே பெரிய பாறைகள்  இருக்கிறது. பாறைகளுக்குப் பின்னால் கள்ளர்கள்,  வழிப்பறி செய்பவர்கள் ஒளிந்து இருப்பார்கள்.

யாராவது அந்த வழியே போனால், உடனே ஒரு விசில் அடிப்பார்கள். அந்த விசில் சத்தத்தை கேட்டு  அங்கே அலைந்து கொண்டிருக்கும் சில காட்டு விலங்குகள் வெருண்டு  ஓடும். விசில் சத்தம் கேட்டு மற்ற கள்வர்களும் வந்து விடுவார்கள். எல்லோரும்  ஒன்று சேர்ந்து வழிப்போக்கர்களை மிரட்டி அவர்களிடம் உள்ள பொருளை பறித்துக்  கொள்வார்கள்.

அப்படிப் பட்ட கொடிய பாலைவனத்தின் வழியே அவன் போக வேண்டியது இருக்கும் என்று கேட்ட உடனையே  கண்களில் நீர் ததும்பி  விட்டது.

பாடல்

கடுகி யதரலைக்குங் கல்சூழ் பதுக்கை
விடுவி லெயினர்தம் வீளையோர்த் தோடும்
நெடுவிடை யத்தஞ் செலவுரைப்பக் கேட்டே
வடுவிடை மெல்கின கண்.

பொருள்

கடுகி = விரைந்து

அதரலைக்குங் = அதர் என்றால் வழி.  வழியில் வருவோரை

கல்சூழ் = கற்கள் சூழ்ந்த

பதுக்கை = பதுங்கும் இடங்களைக் கொண்ட

விடுவி லெயினர்தம் =  விடு + வில் + எயினர் + தம் = வில்லில் இருந்து அமபை விடுகின்ற எயினர்களுடைய

 வீளையோர்த் தோடும் = வீளை  + ஓரத்து + ஓடும் = விசில் சப்தத்தை கேட்டு ஓடும்

நெடுவிடை = நெடு + விடை. விடை என்றால் காளை  மாடு. அஞ்சி நீண்ட தூரம் ஓடும் காளை மாடுகளைக் கொண்ட

அந்தம் = கடைசிவரை

செலவுரைப்பக் கேட்டே = செல்லப் போகிறாய் என்பதைக் கேட்ட உடனேயே

வடுவிடை = வடு மாங்காய் போன்ற கண்களை உடைய அவளின்

மெல்கின கண் = மெண்மையாக, மெளனமாக நீரை வெடித்தன . மெல்கின கண் என்றால் , கண்கள் மென்மையாகின என்று பொருள். எப்படி மென்மையாகும் ?

நாலு வரிக்குள் ஒரு உணர்ச்சிப் போராட்டம். 

Wednesday, January 11, 2017

இராமாயணம் - பரதன் குகன் - துரிசு இலாத் திரு மனத்தான்

இராமாயணம் - பரதன் குகன் - துரிசு இலாத் திரு மனத்தான்


இராமனை வழி அனுப்பிவிட்டு வந்த , கங்கை ஆற்றின் கரையில் நிற்கிறான். மறு கரையில் இராமனை நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த  பரதன் நிற்கிறான்.  படையோடு வந்த பரதனை , அவன் இராமன் மேல் படை எடுத்து வந்து விட்டானோ என்று தவறாக எண்ணிய குகன் பரதனை எதிர்த்து போர் புரிய துணிந்து விட்டான்.

பரதனின் அமைச்சன் சுமந்திரன் , குகனைப் பற்றி பரதனிடம் சொல்கிறான். இராமன் மேல் கரை காணா காதல் கொண்டவன் என்று குகனை அறிமுகம் செய்கிறான்.

"இந்த குகன் இராமன் மேல் அன்புகொண்டவனா, இராமனை தழுவிக் கொண்டவனா...அப்படி என்றால் அவனை நானே சென்று பார்ப்பது தான் முறையாக இருக்கும் " என்று நினைத்து எழுந்து குகனைப் பார்க்கச் செல்கிறான்.

பாடல்

தன் முன்னே, அவன் தன்மை,
     தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற
     துரிசு இலாத் திரு மனத்தான்,
‘மன் முன்னே தழீஇக்
     கொண்ட மனக்கு இனிய துணைவனேல்,
என் முன்னே அவற் காண்பென்,
     யானே சென்று’ என எழுந்தான்.

பொருள்


தன் முன்னே = தனக்கு எதிரில்

அவன் = குகன்

தன்மை = தன்மைகளை

தந்தை துணை = தந்தையின் துணைவனான சுமந்திரன் (அவன் தசரதனின் மந்திரி)

முந்து உரைத்த = முன்பு உரைத்த

சொல் முன்னே = சொல் முழுவதுமாக சொல்லி முடிப்பதற்கு முன்னே

உவக்கின்ற = மகிழ்கின்ற

துரிசு இலாத் = குற்றமற்ற

திரு மனத்தான் = உயர்ந்த மனத்தைக் கொண்ட பரதன்

‘மன் = மன்னவனான இராமன்

முன்னே = முன்பே

தழீஇக் = தழுவிக்

கொண்ட= கொண்ட

மனக்கு = மனதுக்கு

இனிய துணைவனேல் = இனிய துணைவன் என்றால்

என் முன்னே = அவனுக்கு முன்னால்

அவற் காண்பென் = அவனைக் காண்பேன் என்று
,
யானே சென்று’ = நானே சென்று

என எழுந்தான் = என்று எழுந்தான்

பரதனின் இனிய மனதுக்கு , கம்பனின் வார்த்தைகள் வந்து விழுகிறது.

.
"சொல் முன்னே உவக்கின்ற" சொல்லி முடிக்கவில்லை அதற்குள் பரதனின்  ஆவல்  பொங்குகிறது. "இராமனுக்கு நண்பனா, உடனே போய் பார்க்க வேண்டும்" என்று கிளம்பி விட்டான். 

" துரிசு இலாத் திரு மனத்தான்"  குற்றமற்ற உயர்ந்த மனத்தைக் கொண்டவன். குகன் பரதனோடு போர் செய்ய தயாராக நிற்கிறான். அதெல்லாம் பரதனுக்கு தெரியவில்லை.  குகனின் கோபம் தெரியவில்லை. அவன் படைகள் போருக்கு தயாராக இருப்பது தெரியவில்லை. 

இராமனின் நண்பன் என்று சொன்னவுடன் ஒரே மகழ்ச்சி பரதனுக்கு. 

"என் முன்னே அவற் காண்பென்"  

எனக்கு முன்னே அவனை போய் நான் காண்பேன் என்று சொன்னால் அர்த்தம் இடிக்கும். அவனுக்கு முன்னால் நான் போவேன் என்று சொன்னால் சரியாக இருக்கும். எனக்கு முன்னே நான் போவேன் என்பது எப்படி சரியாக இருக்கும் ?

உள் அர்த்தம் என்ன என்றால், "என் முன்னே" என்றால் எனக்கு முன்னவன், என்னுடைய  அண்ணன் என்று பொருள். 

இராமன் குகனிடம் என்ன சொன்னான் ?


அன்னவன் உரை கேளா,
    அமலனும் உரை நேர்வான்,
என் உயிர் அனையாய் நீ;
    இளவல் உன் இளையான்; இந்
நல் நுதலவள் நின் கேள்;
    நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன்
    தொழில் உரிமையின் உள்ளேன் 

இலக்குவன் உனக்குத் தம்பி என்றான். "இளவல் உன் இளையான்". இலக்குவனுக்கு அண்ணன் என்றால் பரதனுக்கும் அண்ணன் தானே. 

சரி, இராமன் குகனிடம் சொன்னது பரதனுக்கு எப்படித் தெரியும் ? 

என்னவென்று சொல்லுவது ? 

பால் நினைந்து ஊட்டும் தாய் என்று மணிவாசகர் சொன்னது போல, குழந்தை அழவில்லை, பால் வேண்டும் என்று கேட்க வில்லை, இருந்தும் தாய்க்குத் தெரியும்  குழந்தைக்கு என்ன வேண்டும் என்று. 

எப்படி ?

இராமன்   மனதில் இருந்ததை பரதன் அறிந்தான். 

அறிந்தது மட்டும் அல்ல...அதை செயல் படுத்தவும் செய்கிறான். 

குகன் அண்ணன் என்றால், அவனை தான் சென்று பார்ப்பதுதான் முறை என்று குகனைக் காண பரதன் எழுந்தான். 

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். 

பரதன் பெரிய சக்ரவர்த்தி. குகன் , ஒரு ஓடம் விடும் ஆள். நினைத்துப் பார்க்க முடியுமா ? ஒரு சக்கரவர்த்தி, ஓடக்காரனை காண தானே எழுந்து போவது ?

பரதனுக்கு அதெல்லாம் தெரியவில்லை. இராமனின் அன்புக்குப் பாத்திரமானவன், அவ்வளவுதான். அது போதும் அவனுக்கு. 

இது இப்படி இருக்க, அந்தக் கரையில் குகனின் நிலை என்ன தெரியுமா ?


 

தேவாரம் - ஊஞ்சல்

தேவாரம் - ஊஞ்சல் 


ஊஞ்சல் !

ஊஞ்சல் ஆடி இருக்கிறீர்களா ? சிறு பிள்ளையாக இருக்கும் போது ஆடி இருப்பீர்கள். சில வீடுகளில் திருமணத்தின் போது ஊஞ்சல் ஆடும் வைபவம் இருக்கும். பெரிய வீடுகளில் இன்றும் கூட ஊஞ்சல் வைத்து கட்டுவார்கள்.

ஊஞ்சல் ஆடும்போது என்ன நிகழ்கிறது ? ஊஞ்சல் மேலே போகும். பின் கீழே வரும். பின் எதிர் திசையில் மேலே போகும். பின் மறுபடியும் கீழே வரும். இப்படி மாறி மாறி மேலே போவதும், கீழே வருவதும் நிகழும். ஆடி ஆடி ஒரு நாள் ஊஞ்சல் கயிறு அறுந்து போகும். ஊஞ்சல் பலகை தரையில் கிடக்கும்.

ஊஞ்சல் ஒரு வாழ்க்கை தத்துவத்தை விளக்குகிறது.

வாழ்க்கையில் நாம் சில சமயம் மேலே போவோம், கீழே வருவோம், மீண்டும் மேலே போவோம், கீழே வருவோம்....மேடு பள்ளங்கள் , உயர்வு தாழ்வுகள் வாழ்வின் மாறாத விதி.

மனிதன் ஒரு ஆசையில் இருந்து இன்னொரு ஆசைக்கு ஊஞ்சல் போல அலைகிறான்.

கார் வேண்டும் என்று ஆசைப் படுகிறான். கார் வாங்கிவிட்டால் , அந்த சந்தோஷம் நீண்ட நாள் நிலைப்பது இல்லை. மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து விடுகிறான். அடுத்த ஆசை தலை தூக்குகிறது. வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கிறான். அதை நோக்கி வாழ்க்கை நகர்கிறது. வீடு வந்தால்  , சிறிது நாளில் அந்த சந்தோஷம் போய் விடுகிறது. அடுத்த ஆசை எழுகிறது.

மேலே போகும் போது மகிழ்ச்சி. கீழே வரும்போது துன்பம். இன்பம், துன்பம், இன்பம், துன்பம்....இதுதான் ஊஞ்சல்.

இப்படி ஒரு ஆசையில் இருந்து இன்னொரு ஆசைக்கு மனிதன் ஊஞ்சல் போல ஆடிக் கொண்டிருக்கிறான். மனம் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கிறது, அமைதி இல்லாமல்.

பாடல்

உறுகயி றூசல் போல வொன்றுவிட் டொன்று பற்றி
மறுகயி றூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம்
பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்
தறுகயி றூச லானே னதிகைவீ ரட்ட னீரே

சீர் பிரித்த பின் 

உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி 
மறு கயிறு ஊசல் போல வந்து வந்து உலவு நெஞ்சம்
பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய் பாதத்

அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகை வீரட்டனீரே

பொருள் 

உறு = உறுதியான 

கயிறு ஊசல் போல = கயிற்றால் கட்டிய ஊசல் போல 

ஒன்று விட்டு ஒன்று பற்றி = ஒரு ஆசையை விட்டு , வேறொரு ஆசையை பற்றியதைப் போல 

மறு கயிறு = ஒரு பக்கம் போன ஊஞ்சல் மீண்டும் மறு பக்கம் சென்று வரும். அது மறு கயிறு 

ஊசல் போல = ஊஞ்சல் போல 

வந்து வந்து உலவு நெஞ்சம் = வந்து வந்து உலவும் நெஞ்சம் 

பெறு கயிறு ஊசல் போலப் = போவதும் வருவதையும் பெற்ற கயிறு போல 

 பிறை புல்கு சடையாய் = பிறையை தலையில் அணிந்த சிவனே 

பாதத் = பாதத்தில் 


அறு கயிறு = அறுந்து விழும் 

ஊசல் ஆனேன் = ஊஞ்சல் ஆனேன் 

அதிகை வீரட்டனீரே = திரு அதிகை என்ற தலத்தில் எழுந்து அருளும் வீரட்டனாரே 

ஊஞ்சலின் கயிறு அறுந்தால் , தரையில் விழும். 

மனம் என்ற ஊஞ்சல் அறுந்தால் இறைவன் திருவடியே அது சென்று தங்கும் இடம். 

அது சரி, ஊஞ்சல் மனம் என்றால், கயிறு எது ?

ஆசை, பாசம் என்பன கயிறுகள். கட்டப் பட்ட மரம் தான் வாழ்க்கை. 

ஆசையாலும், பாசத்தாலும் மனிதன் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறான். 

எவ்வளவு அலைந்தாலும், ஊஞ்சல் எங்கும் போவது இல்லை. அங்கேயேதான்  இருக்கும். ஆசையும் பாசமும் மனிதனை முன்னேற விடமால் கட்டிப் போடும். 

ஆடி ஆடி களைத்துப் போய் , கயிறு பிடி விடும் போது தாங்குகின்ற தரையாக இறைவன் திருவடி இருக்கிறது. 

மங்கையர் மையல் என்ற ஊஞ்சலில் இருந்து என்று விடுபடுவேன் என்று ஏங்குகிறார் அருணகிரிநாதர். இந்த பெண் நன்றாக இருக்கிறாள். அட, அவள் இவளை விட அழகாக இருக்கிறாளே. இவர்கள் இரண்டு பேரையும் விட மூன்றாமவள் சிறப்பாக இருக்கிறாளே என்று மனிதன் அலை பாய்கிறான்.  

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, "ஊசல்" படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்

நிட்டூர நிராகுல, நிர்பயனே


 கூர்ந்து கவனியுங்கள். ஊஞ்சல் கூட பாடம் சொல்லித் தரும். 




Tuesday, January 10, 2017

இராமாயணம் - பரதன் குகன் - கரை காணாக் காதலான்

இராமாயணம் - பரதன் குகன் - கரை காணாக் காதலான்


இராமனை சித்திரகூடம் அனுப்பிவிட்டு கங்கையின் மறு கரையில் குகன் நிற்கிறான். இராமனை அழைத்துச் சென்று நாட்டை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தக் கரையில் பரதன் நிற்கிறான்.

எதிர் கரையில் நிற்கும் குகனைப் பற்றி பரதனிடம் சுமந்திரன் கூறுகிறான்.

பாடல்

“கல் காணும் திண்மையான்,
    கரை காணாக் காதலான்,
அல் காணில் கண்டு அனைய
    அழகு அமைந்த மேனியான்,
மல் காணும் திரு நெடுந்தோள்
    மழை காணும் மணி நிறத்தாய்!
நின் காணும் உள்ளத்தான்,
    நெறி எதிர் நின்றனன் ‘‘ என்றான்.

பொருள்

‘கல் காணும் திண்மையான் = கல் போன்ற வலுவான உடல் உடையவன்

கரை காணாக் காதலான் = இராமன் மேல் கரை இல்லாத அளவு அன்பு கொண்டவன்

அல் = இருட்டு, கருப்பு

காணில் = கண்டால்

கண்டு அனைய = சேர்ந்து இருந்த

அழகு அமைந்த = அழகு கொண்ட

மேனியான் = மேனியை உடையவன்

மல் = மல்யுத்தம்

காணும் = செய்யும்

திரு நெடுந்தோள் = சிறந்த பெரிய தோள்களை உடையவன்

மழை காணும் = மழை கொண்ட மேகம் போன்ற

மணி நிறத்தாய்! = நீல மணி போல ஒளி விடும் நிறம் கொண்டவனே

நின் காணும் உள்ளத்தான் = உன்னைக் காணும் உள்ளத்தோடு இருக்கிறான் (குகன்)
,
நெறி = வழியில்

எதிர் நின்றனன் ‘‘ என்றான் = எதிரில் நிற்கின்றான் என்றான்

இராமனும், குகனும், பரதனும் கரிய நிறம். அதுவும் ஒரு அழகுதான் என்று ரசிக்கிறான்  கம்பன்.

குகனுக்கு உடல் முரடு. கற் பாறை போன்ற  உருவம்.

கரிய நிறம்.

ஆனால், உள்ளம் எல்லாம் காதல். கரை காணா காதலான் என்கிறான் கம்பன்.
அளவிடமுடியாத காதல்.

"நின் காணும் உள்ளத்தான்,
    நெறி எதிர் நின்றனன் "

இதற்கு இரண்டு விதத்தில் பொருள் கொள்ளலாம்.

ஒன்று, உன்னை காணும் நோக்கோத்தோடு எதிரில் நிற்கிறான் என்பது ஒரு பொருள்.

இன்னொன்று, உன்னை ஒரு கை பார்க்க, படையோடு உன்னை எதிர்த்து நிற்கிறான் என்பது இன்னொரு பொருள்.

எது எப்படியோ, பரதனுக்கு இது எல்லாம் காதில் விழவே இல்லை....அவனுக்கு கேட்டதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான்....

அது .....

திருக்குறள் - எப்படி பேச வேண்டும் ?

திருக்குறள் - எப்படி பேச வேண்டும் ?


யாரிடம் எப்படி பேச வேண்டும் தெரியாமல்தான் நிறைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம்.

கணவன்/ மனைவியிடம்  எப்படி பேச வேண்டும், பிள்ளைகளிடம் எப்படி பேச வேண்டும், நண்பர்களிடம், உறவினர்களிடம், மேலதிகாரிகளிடம், கீழே வேலை பார்ப்பவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும்.

அவை அறிதல் என்று ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் வள்ளுவர். அவை என்றால் ஏதோ பெரிய கூட்டம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு ஆள் இருந்தால் கூட அவரிடம் எப்படி பேச வேண்டும் என்பதற்கு அதில் குறிப்பு இருக்கிறது.

"அறிவுள்ளவர்கள் முன் அறிவோடு பேச வேண்டும். அறிவில்லாதவர்கள் முன் ஒன்றும் தெரியாதவர் போல இருக்க வேண்டும்"

பாடல்

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்


பொருள்

ஒளியார்முன்  =அறிவு ஒளி பொருந்தியவர் முன்

ஒள்ளிய ராதல் = அறிவோடு இருக்க வேண்டும்

வெளியார்முன் = ஒன்றும் அறியாதவர் முன்

வான்சுதை = வானம் போல சுண்ணாம்பு

வண்ணம் கொளல் = வண்ணம் கொள்ள வேண்டும்

என்ன ஒண்ணும் புரியலையே .... அறிவாளிங்க முன்னாடி அறிவோட பேசணும், மத்தவங்க முன்னாடி சுண்ணாம்பு மாதிரி இருக்கணும்னா என்ன அர்த்தம் ?

முதலாவது, நாம் யாரிடம் பேசுகிறோம் என்று அறிந்து பேச வேண்டும். அவர்களின் தரம்  என்ன, அறிவின் ஆழம் என்ன, அவர்களுக்கு என்ன வேண்டும், எப்படி சொன்னால் புரியும் என்று அறிந்து பேச வேண்டும். நமக்கு எல்லாம் தெரியும் என்பதற்காக எல்லோரிடமும் ஒரே மாதிரி பேசிக் கொண்டிருக்கக் கூடாது.

இரண்டாவது, அறிவுள்ளவர்கள் நாம் சொல்வதை வெகு எளிதாக புரிந்து கொள்வார்கள். மற்றவர்கள் அப்படி அல்ல. அவர்களின் நிலைக்கு நாம் இறங்கி வந்து பேச வேண்டும். "நான் சொல்வதை என் பிள்ளைகள் கேட்பதே இல்லை " என்று  பெரும்பாலான பெற்றோர்கள் குறை பட்டுக் கொள்வார்கள். காரணம், அவர்கள்  அந்த பிள்ளைகளின் நிலைக்கு இறங்கி வந்து பேச வேண்டும். அவர்கள் புரிந்து கொள்ளும்படி பேச வேண்டும்.

மூன்றாவது, சற்று அறிவு குறைந்தவர்களிடம் பேசும்போது அவர்கள் அறிந்து கொள்ளும்படி பேசாவிட்டால், நாம் சொல்வதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு வேறு விதமாக விதமாக நடக்கத் தொடங்கி விடுவார்கள். எனவே, அவர்களுக்கு புரியும்படி எளிமையாக பேச வேண்டும்.

நான்காவது, வான்சுதை வண்ணம் கொள்ளல் என்றால் என்ன ? சுதை என்றால் சுண்ணாம்பு. சுண்ணாம்பு போல இருக்க வேண்டும் என்பது நேரடி அர்த்தம். அது என்ன சுண்னாம்பு ? சுண்ணாம்பு போல வெண்மையாக இருப்பது மேகம். அந்த மேகத்திடம் நீர் இருக்கிறது. அந்த நீர் கீழிறங்கி வந்தால்தான் அதனால் ஒரு பயன் உண்டு. அது போல, நாம் எவ்வளவு கற்று இருந்தாலும், கல்வி அறிவு இல்லாதவர்களும்  அறிந்து கொள்ளும்படி கீழிறங்கி வந்து சொன்னால்தான் அதனால் ஒரு பயன் உண்டு.

ஐந்தாவது, மேகத்தில் உள்ள நீர் இருக்கிறதே, அது எந்த நிலத்தை சேர்கிறதோ அந்த நிறம் பெறும் . அது போல, யாரிடம் பேசுகிறோமோ அவர்களது தரம் அறிந்து , அவர்களோடு கலந்து பேச வேண்டும்.

மனைவியிடம் பேசும்போது ஒரு கணவனாக, பிள்ளைகளிடம் பேசும் போது ஒரு தகப்பனாக, அதிகாரியிடம் பேசும் போது ஒரு ஊழியனாக, ஊழியர்களிடம் பேசும் போது ஒரு அதிகாரியாக பேச வேண்டும்.

அதிகாரியிடம் போய் , "நான் சொல்வதை நீ கேள் " என்றால் அவர் கோபம் கொண்டு நம்மை வேலையை விட்டு தூக்கி விடுவார்.

ஊழியரிடம் "நீ சொல்வது போல நான் கேட்கிறேன் என்று சொன்னால்" வேலை ஆகாது.

ஒரு மருத்துவர், ஒரு நோயாளியின் நோயையை பற்றி இன்னொரு மருத்துவரிடம் பேசும் போது ஒரு மாதிரி பேசுவார், அதே நோயையை அந்த நோயாளியிடம் பேசும் போது வேறு மாதிரி பேசுவார், அந்த நோயாளியின் உறவினர்களிடம் பேசும்போது இன்னொரு மாதிரி பேசுவார்.

மாற்றி பேசினால் சிக்கல் தான்.

குறள் சொல்வது இருவரை பற்றி மட்டும்தான். அறிவுள்ளவர், இல்லாதவர்.

ஆனால், நாம் அதை நீட்டிக் கொள்ளலாம். யாரிடம் பேசுகிறோமோ, அவரைகளை நன்கு  அறிந்து பேச வேண்டும்.

சிந்தித்துப் பேசுங்கள். வாழ்க்கை சிறப்பாக அமையும்.

என்ன ? சரிதானே ?

Sunday, January 8, 2017

தேவாரம் - அஞ்சி ஆகிலும்

தேவாரம் - அஞ்சி ஆகிலும் 


மனிதன் இறைவனை தொழ ஆரம்பித்தது பயத்தினால்தான். இடி இடித்தால் பயம், மின்னல் வெட்டினால் பயம். வெள்ளம், நில நடுக்கம், கிரகணம் , கொள்ளை நோய் என்று பலவற்றை கண்டு மனிதன் பயந்தான். தனக்கு மேற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது. தன்னால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது என்று அறிந்து கொண்டான். அந்த சக்தியின் கோபத்தில் இருந்து தப்பிக்க, அதன் தயவைப் பெற, அதை வழி படத் துவங்கினான்.


மனிதனின் பயம் இடம் மாறியது. இடி மின்னலில் இருந்து , பாவம், புண்ணியம், சொர்கம் , நரகம் என்று நினைக்கத் தொடங்கினான். தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்று நினைத்தான். எண்ணெய் கொப்பரை பயம் பற்றிக் கொண்டது.

நாள் ஆக ஆக , அறிவு வளர்ந்தது. அறிவியல் பலவற்றை கண்டு சொல்லியது.


மழையும், இடியும், மின்னலும், நோயும் , கிரகணமும் எப்படி வருகிறது என்று கண்டு சொல்லியது. மனிதனின் பயம் குறையத் தொடங்கியது. நோய் என்றால்    தெய்வ  குத்தம் என்று கோவிலுக்குப் போவதில்லை, மருத்துவமனைக்குப் போகிறான்.

பயம் கொஞ்சம் குறைந்தது. இருந்தும் ஆண்டவனை தொழுவது குறையவில்லை. எதற்கு தொழ வேண்டும் ? எதெல்லாம் ஆண்டவன் செயல் என்று சொல்லிக் கொண்டிருந்தானோ, அது எல்லாம் ஆண்டவன் செயல் அல்ல என்று புரிந்த பின் ஏன் ஆண்டவனைத் தொழ வேண்டும் ?

நாளடைவில் , ஆண்டவன் மேல் அன்பு வரத் தொடங்கியது. பயம் , அன்பாய் மலர்ந்தது.

பெற்றோர் மேல் பிள்ளைகளுக்கு முதலில் பயம் இருக்கும். வளர்ந்து பெரிய ஆளானபின் அந்த பயமே அன்பாக மாறுவது போல.....

"அச்சத்தின் காரணமாகவேனும், அன்பினாலாவது இறைவனை நினை " என்கிறார் நாவுக்கரசர்.

பாடல்

அஞ்சி யாகிலு மன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ
இஞ்சி மாமதி லெய்திமை யோர்தொழக்

குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

சீர் பிரித்தபின்

அஞ்சி ஆகிலும் அன்பு பட்டாகிலும் 
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ
இஞ்சி மாமதில் இமையோர் தொழ 

குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே

பொருள்

அஞ்சி ஆகிலும் = அச்சத்தின் காரணமாகவேனும்

அன்பு பட்டாகிலும்  = அன்பினாலாவது

நெஞ்சம் வாழி = நெஞ்சே நீ வாழ்க

நினை  = நினைப்பாயாக

நின்றியூரை நீ = திரு நின்ற ஊர் என்ற தலத்தில் உள்ள

இஞ்சி மாமதில்= காவலை உடைய பெரிய மதில்களைக் கொண்ட

இமையோர் தொழ = கண் இமைக்காத தேவர்களும் தொழ


குஞ்சி = தலை முடியில்

வான்பிறை = வானில் உள்ள பிறையை

சூடிய கூத்தனே = சூடிய கூத்தனே

வாழ்க்கை என்ற மிகப் பெரிய இன்பத்தைக் கொடுத்த இறைவனிடம் அன்பு செலுத்தச் சொல்கிறார்  நாவுக்கரசர். ஆரோக்கியமான உடல், அளவான செல்வம், அன்பான குடும்பம், அமைதியான நாடு...இப்படி எத்தனை எத்தனையோ நன்மைகளைத் தந்த ஆண்டவனை அன்போடு நினைக்கச் சொல்கிறார் அப்பர்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/01/blog-post_12.html




இராமாயணம் - பரதன் குகன் - உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன்

இராமாயணம் - பரதன் குகன் - உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன்


இராமனைக் கொல்லவே பரதன் வந்திருக்கிறான் என்று குகன் நினைத்து விட்டான். நினைத்தது மட்டுமல்ல, பரதன் மேல் சண்டை போட தன் படைகளை தயார் விட்டான். குகனும், அவன் படைகளும் போருக்கு தயாராக நிற்கின்றனர். பரதனுக்கு இது எதுவும் தெரியவில்லை. இராமன் சென்ற திசை பார்த்து நிற்கிறான். பரதனின் அமைச்சன், நிலைமையை எடுத்துச் சொல்கிறான்.

பாடல்

‘கங்கை இரு கரை உடையான்;
     கணக்கு இறந்த நாவாயான்;
உங்கள் குலத் தனி நாதற்கு
     உயிர்த் துணைவன்; உயர் தோளான்;
வெங்கரியின் ஏறு அனையான்;
     வில் பிடித்த வேலையினான்;
கொங்கு அலரும் நறுந் தண் தார்க்
     குகன் என்னும் குறி உடையான்.


பொருள்


‘கங்கை = கங்கை ஆற்றின்

இரு கரை = இரண்டு கரைகளையும்

உடையான் = ஆட்சி செய்பவன்

கணக்கு இறந்த = கணக்கில் அடங்காத

நாவாயான் = படகுகளை உடையவன்

உங்கள் = உங்கள்

குலத் = குலத்தில் தோன்றிய

தனி நாதற்கு = தனிச் சிறப்பு வாய்ந்த நாயகனான இராமனுக்கு

உயிர்த் துணைவன்; = உயிர் போன்ற துணைவன்

உயர் தோளான் = பரந்த தோள்களை உடையவன்

வெங்கரியின் ஏறு அனையான் = மதம் கொண்ட ஆண் யானை போன்றவன்

வில் பிடித்த வேலையினான் = விற்களைப் பிடித்திருக்கும் சேனையை கடல் போலக் கொண்டவன்

கொங்கு அலரும் = மொட்டு மலரும்

நறுந் தண் = மணம் வீசும் குளிர்ச்சியான

தார்க் = மாலை அணிந்தவன்

குகன் என்னும் குறி உடையான் = குகன் என்ற பெயரைக் கொண்டவன்

எப்படி பேச வேண்டும் என்று கம்பன் பாடம் நடத்துகிறான்.

சில பேர் பேச ஆரம்பித்தால் எப்படா முக்கிய விஷயத்தை சொல்லப் போகிறான் என்று  பொறுமை அத்துப்  போகும்.தேவை இல்லாத விஷயங்களை எல்லாம்   முதலில் சொல்லி விட்டு கடைசியில் சொல்ல வந்ததை  சொல்லுவார்கள்.

அது தவறு.

முதலில் சொல்ல வந்ததை,  எது முக்கியமானதோ, எது கேட்பவர்ககு தேவையோ  அதை முதலில் சொல்ல வேண்டும்.

பரதனுக்கு என்ன வேண்டும் இப்போது ?

கங்கை கரையை கடக்க வேண்டும், அதற்கு படகு வேண்டும். இராமன் இருக்கும் இடம் தெரிய  வேண்டும். ....

சுமந்தரன் சொல்லுகிறான்...

' கங்கை கரையை உடையவன்'

'கணக்கில் அடங்காத படகுகளை கொண்டவன் '

பரதனுக்கு  புரிந்திருக்கும், கங்கையை கடக்க குகனின் துணை வேண்டும் என்று.

அது மட்டும் அல்ல, இந்த குகன் உங்கள் இராமனின் நண்பன் என்றும் அறிமுகப் படுத்துகிறான். எனவே அவனுக்கு இராமன் இருக்கும் இடம் தெரியும்  என்பதும் பாரதனுக்குப் புரிந்திருக்கும்.

அது மட்டும் அல்ல, குகன் பெரிய பலசாலி என்று சொல்கிறான்.

சுமந்திரன் பாடு சங்கடமான ஒன்று.

குகன் நினைக்கிறான் பரதன் இராமனை கொல்ல வந்திருக்கிறான் என்று. எப்படியாவது  பரதனை அழிக்க வேண்டும் என்று படையை தயார் செய்து விட்டான்.

பரதனுக்கு குகன் மேல் பகை இல்லை. குகன் தன் மேல் கோபம் கொள்ள காரணம்  எதுவும் இல்லை என்ற நினைப்பு அவனுக்கு இருக்கும்.

என்ன செய்வது. மேலே போனால், குகன் பரதன் மேல் அம்பு எய்வது உறுதி.
மேலே போகவும் வேண்டும். குகனைப் பற்றி பரதனிடம் சொல்லவும் வேண்டும்.

எப்படிச் சொன்னான் என்று பார்ப்போம்




Saturday, January 7, 2017

இராமாயணம் - பரதன், குகன் - என் ஆர் உயிர் நாயகன் ஆளாமே

இராமாயணம் - பரதன், குகன் - என் ஆர் உயிர் நாயகன் ஆளாமே 


பக்தி என்பது உணர்வின் உச்சம்.

அது நம்பிக்கையில் பிறப்பது. அங்கே தர்க்கமும் அறிவும் விடை பெற்று போய் விடுகின்றன.

இராமனைக் கண்டு, அவனிடம் அரசை தர வேண்டும் என்று பரதன் தன்னுடைய மந்திரிகள் மற்றும் படையோடு வருகிறான். வந்த பரதன் கங்கையின் கரையில் காத்திருக்கிறான். ஆற்றைக் கடக்க வேண்டும்.

நமெக்கெல்லாம் கடலைக் கடக்க வேண்டும், அவனுக்கு ஆற்றைக் கடந்தால் போதும் , ஆண்டவனை அடைய.

மறு கரையில் குகன் இருக்கிறான்.

படையோடு வந்த பரதனைக் கண்ட குகன், அவனை தவறாக எடை போடுகிறான். இராமன் மேல் படை எடுத்தது வந்துவிட்டான் பரதன் என்று நினைக்கிறான் குகன். பரதன் மேல் சண்டை போட்டு அவனை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும்  என்று கோபத்தோடு நினைக்கிறான்.

"என் ஆருயிர் நாயகன் இராமனிடம் இருந்து வஞ்சனையாக அரசைப் பறித்துக் கொண்ட பரதன் இப்போது அவன் மேல் படை எடுத்து வந்திருக்கிறான். இவனைப் போக விட்டு விட்டால் இந்த உலகம் என்னை "நாய்" என்று இகழும் " என்கிறான்.

பாடல்

‘அஞ்சன வண்ணன், என் ஆர்
     உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய
     மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ
     உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய்க்குகன்”
     என்று, எனை ஓதாரோ?


பொருள்

அஞ்சன வண்ணன் = கரிய நிறம் கொண்ட

என் = என்னுடைய

ஆர் உயிர் நாயகன் = அருமையான உயிர் போன்ற நாயகன் (இராமன்)

ஆளாமே = ஆளாமல்

வஞ்சனையால் = சூழ்ச்சியால்

அரசு எய்திய = அரசை பெற்றுக் கொண்ட

மன்னரும் வந்தாரே! = மன்னனாகிய பரதனும் வந்தாரே

செஞ் சரம் என்பன = சிவந்த அம்புகள்

தீ உமிழ்கின்றன = தீயை கக்குகின்றன

செல்லாவோ? = சொல்ல மாட்டார்களோ ?

உஞ்சு இவர் போய்விடின் = தப்பி இவர்கள் போய் விட்டால்

“நாய்க்குகன்” = நாய் குகன்

என்று, எனை ஓதாரோ? = என்று என்னைச் சொல்ல மாட்டார்களா ?

குகனுக்கு இராமன் மேல் , இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் இராமன் என்ற உருவத்தின் மேல் அவ்வளவு காதல்.

இராமனுக்கு ஆயிரம் சிறப்புகள் இருக்கலாம். குகனுக்குத் தெரிந்தது எல்லாம், 'கரிய நிறம் ' மட்டும்தான். அவன் உருவ அழகில் உருகியவன் குகன்.

எல்லோராலும் தவறாக புரிந்து கொள்ளப் படுவதே பரதனின் நிலையாக இருக்கிறது.

ஈன்ற தாய் புரிந்து கொள்ளவில்லை. வரத்தின் மூலம் அரசைப் பெற்றுக் தந்தால்  பரதன் ஏற்றுக் கொள்வான் என்று கைகேயி தவறாக எண்ணின்னாள் .

அவன் எனக்கு மகனே இல்லை என்று தசரதன் கூறினான்.

இலக்குவன் அவனை புரிந்து கொள்ளவில்லை.

கோசலை கூட ஒரு கணம் பரதனை தவறாக நினைத்தாள்.

இப்போது குகன் அவனை தவறாக நினைக்கிறான்.

அறத்தின் வழியில் செல்பவர்களை உலகம் எளிதாக புரிந்து கொள்வதில்லை என்பதற்கு பரதன் ஒரு  உதாரணம்.

உலகம் புரிந்து கொள்ளவில்லையே என்பதற்காக பரதன் ஒரு இடத்திலும் தன்  நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

பரதனை முழுமையாக புரிந்து கொண்டவன் ஒருவன் மட்டுமே - அது இராமன்.

யாருக்குப் புரிய வேண்டுமோ அவருக்குப் புரிந்தது.

அற வழியில் செல்பவர்களை உலகம் புரிந்து கொள்ளாவிட்டாலும் ஆண்டவன் புரிந்து கொள்வான்.

Friday, January 6, 2017

திருக்குறள் - உயர்ந்த செல்வம் எது ?

திருக்குறள் - உயர்ந்த செல்வம் எது ?


செல்வம் எது என்று என்னிடம் கேட்டால் - பணம், காசு, வீடு, மனை, பங்கு பத்திரங்கள், கார், நிலம் , நகை என்று அடுக்கிக் கொண்டே போவேன்.

இன்னும் சில பேர், இதெல்லாம் பெரிய செல்வம் இல்லை. கல்விச் செல்வம்தான் பெரிய செல்வம் என்று சொல்லுவார்கள்.

இன்னும் சில பேர், ஆரோக்கியம்தான் சிறந்த செல்வம் என்பார்கள். என்ன இருந்து என்ன பயன், நல்ல உடல் ஆரோக்கியம் இல்லை என்றல் எதையும் அனுபவிக்க முடியாது. எனவே உடல் ஆரோக்கியம்தான் உள்ளதிற்குள் சிறந்த செல்வம் என்பார்கள்.

இன்னும் சிலரோ, இதெல்லாம் பெரிய செல்வம் இல்லை, முக்தி அல்லது வீடு பேறு பெறுவதுதான் சிறந்த செல்வம் என்பார்கள்.

வள்ளுவரைக் கேட்டால் இது எதுவுமே பெரிய செல்வம் இல்லை...எல்லாவற்றையும் விட பெரிய செல்வம் "வேண்டாமை" என்ற எண்ணம் தான் என்கிறார்.

பாடல்

வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை 
யாண்டு மஃதொப்ப தில்.


சீர் பிரித்த பின்

வேண்டாமை அன்ன விழுச்  செல்வம் ஈண்டு இல்லை
யாண்டும் அது ஒப்பது இல்

பொருள்

வேண்டாமை = வேண்டாம் என்று சொல்லும் மனம் அல்லது எண்ணம்

அன்ன = போன்ற

விழுச்  செல்வம் = சிறந்த செல்வம்

ஈண்டு இல்லை  = இங்கு இல்லை

யாண்டும் = மற்றவற்றில்

அது ஒப்பது இல் = அதற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை

வள்ளுவர் ஏன் வேண்டாமை என்பதை சிறந்த செல்வம் என்கிறார் என்று சிந்திப்போம்.

வள்ளுவர் சொன்னார் என்பதற்க்காக அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை.

வேண்டும் வேண்டும் என்று நினைப்பதால் தான் நாம் மேலும் மேலும் உயர்கிறோம், சம்பாதிக்கிறோம்..வேண்டாம் என்று வைத்தது விட்டால் பின் உழைப்பு ஏது, செல்வம் ஏது ?

பின் ஏன், வேண்டாமை என்பதை சிறந்த செல்வம் என்கிறார் ?

நமக்கு எவ்வளவு தான் செல்வம் இருந்தாலும், நமக்கு மேலே ஆயிரம் பேர் இருப்பார்கள். அவர்களை விட நம் செல்வம் ஒன்றும் பெரியது இல்லை என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

இருக்கும் வீட்டை விட பெரிய வீடு, பெரிய கார், பெரிய சேமிப்பு, பெரிய பட்டங்கள் என்று மேலும் மேலும் வேண்டும் வேண்டும் என்றே அலைந்து கொண்டு இருப்போம். எவ்வளவு சேர்த்தாலும் , பற்றாக் குறைதான். சேர்த்ததை அனுபவிக்க  முடியாது. சேர்த்த செல்வத்தை வேறு யாராவது கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம்.

எவ்வளவு சேர்த்தாலும், நிறைவு , திருப்தி என்பதே கிடையாது. மனம் அமைதி அடையாது.

வேண்டாம் என்று வைத்து விட்டால், ஓட்டம் நிற்கும். அலைச்சல் நிற்கும். நம்மை விட அவன் அதிகம் வைத்து இருக்கிறான். அவனைப் போல நமக்கும் வேண்டும் என்ற பொறாமை, போட்டி, எல்லாம் நிற்கும்.

கேட்க நல்லா இருக்கு. அப்படி யாராவது இருந்திருக்கிறார்களா ? அப்படி இருக்க முடியுமா ?

முதலில் மாணிக்க வாசகர்....


உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்; 
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!

வேண்டேன் , வேண்டேன் என்று  உருகுகிறார்.

அடுத்தது, தொண்டரடிப் பொடி ஆழ்வார்

பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !

இந்திர லோகமே கிடைத்தாலும் வேண்டேன் என்று இருக்கிறார்.

அடுத்தது திருமூலர்

ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள்

ஆசை விட விட ஆனந்தம் ஆமே.

கடவுளே கிடைத்தாலும் , அதற்கு ஆசைப் படாதீர்கள் என்கிறார்.

நம்ம ஆட்கள் எப்போதும் மேலும் மேலும் வேண்டும் என்று ஆசைப் படுவார்கள்.

சொர்கத்துக்கு போனாலும், அதற்கும் மேல் ஏதாவது உண்டா என்று ஆசைப் படுவார்கள்

பரமபதம் போனாலும், அதற்கு மேல் நித்ய சூரிகளாக இருக்க ஆசைப் படுவார்கள்.

சொர்கத்துக்கு அப்பால் உள்ள இடத்துக்கு வாலி போனான் என்பார் கம்பர்

தன் அடி தாழ்தலோடும்
    தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி,
    ‘நீ இது பொறுத்தி ‘என்றான்;
என்னலும், உலகம் ஏழும்
    ஏத்தின; இறந்து, வாலி,
அந் நிலை துறந்து, வானுக்கு
    அப்புறத்து உலகன் ஆனான்.

வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான் என்பது கம்பர் வாக்கு.

அங்கேயும் போய் , அதை விட சிறந்தது ஏதாவது இருக்கிறதா என்று தேடாதீர்கள்....அங்கும் "வேண்டாமையைப்" போல சிறந்த செல்வம் எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர்

யாண்டு மஃதொப்ப தில்...எப்போதும் அதைப் போல சிறந்த செல்வம் இல்லை என்கிறார்.

வேண்டாமை என்பது ஒரு செல்வம் என்று நினைத்தாவது பார்த்து இருக்கிறோமா ?

நினைத்துப் பார்ப்போம்.