இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - உன் உயிர்க்கும் கூற்றாய்
நல்லது நடந்தால் அதற்கு சொந்தம் கொண்டாட எல்லாரும் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். அல்லது நடந்தால் தான் எப்படி அதற்கு காரணம் அல்ல என்று எல்லோரும் ஒதுங்கிக் கொள்வார்கள்.
அது உலக இயற்கை.
தன்னிடம் அரசை திருப்பித் தர வந்த பரதனிடம் , தயரதன் எவ்வாறு இருக்கிறான் என்று இராமன் கேட்டான். தயரதன் இறந்த செய்தியை பரதன் கூற கேட்ட இராமன் மயங்கி விழுகிறான்.
பின் மயக்கம் தெளிந்து எழுந்து , துக்கத்தில் புலம்புகிறான்.
"அரசை எனக்கு தந்துவிட்டு நீ ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று சொன்னது இது தானா ? உனது உயிருக்கு நானே எமனாகி விட்டேனே " என்று புலம்புகிறான்.
பாடல்
‘மன் உயிர்க்கு நல்கு உரிமை
மண் பாரம் நான் சுமக்கப்
பொன் உயிர்க்கும் தாரோய்!
பொறை உயிர்த்த ஆறு இதுவோ?
உன் உயிர்க்கும் கூற்றாய்
உலகு ஆள உற்றேனோ?
மின் உயிர்க்கும் தீவாய் வெயில்
உயிர்க்கும் வெள் வேலோய்! ‘
பொருள்
‘மன் உயிர்க்கு = நிலைத்து வாழும் உயிர்களுக்கு
நல்கு உரிமை = நல்லது செய்யும் உரிமையை
மண் பாரம் = அரச பொறுப்பை
நான் சுமக்கப் = நான் ஏற்றுக் கொள்ள
பொன் = பொன் போன்ற நிறமுடைய மலர்களை
உயிர்க்கும் = உதிர்க்கும்
தாரோய்! = மாலை அணிந்தவனே (தார் = மாலை )
பொறை = பொறுமை. இங்கே இளைப்பாறுதல்
உயிர்த்த ஆறு இதுவோ? = அடையும் வழி இதுவோ ?
உன் உயிர்க்கும் = உன்னுடைய உயிர்க்கும்
கூற்றாய் = எமனாய் (உடலையும், உயிரையும் கூறு படுத்துவதால் கூற்றுவன்)
உலகு ஆள உற்றேனோ? = உலகை ஆள பிறந்தேனோ
மின் உயிர்க்கும் =மின்னல் போல் ஒளி வீசும்
தீவாய் = அனல் கக்கும்
வெயில் = வெயில் போல பிரகாசமாக உள்ள
உயிர்க்கும் வெள் வேலோய்! = வெண்மையான வேலை கொண்டவனே
தயரதன் இறந்ததற்கு இராமன் எந்த விதத்திலும் காரணம் அல்ல. கானகம் போ என்று சொன்னவுடன் மறு பேச்சு சொல்லாமல் கிளம்பி விட்டான். இருந்தும், தயரதன் இறந்ததற்கு தான் காரணம் என்று இராமன் நினைக்கிறான்.
கைகேயி காரணம், பரதன் காரணம், கூனி காரணம் என்று சொல்லவில்லை. அறிவின் உச்சம் உலகில் உள்ள அனைத்து தவறுகளுக்கும் தானும் ஏதோ ஒரு விதத்தில் காரணம் என்று அறிவது.
மதத்தின் அடிப்படையில் ஏதோ ஒரு தீவிரவாதி எங்கோ ஒரு கொடிய செயலை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். மதப் பற்று உள்ள எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அந்த கொடுமைக்கு காரணம் என்று அறிய வேண்டும். "நான் செய்ய வில்லை" என்பது சரியான காரணம் அல்ல. அந்த கொடுமைக்கு மதம் தான் காரணம் என்றால் , மத கோட்பாடுகளை பின் பற்றும், அது சரி என்று நினைக்கும் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அதற்கு காரணம்.
இரண்டு நாடுகள் எங்கோ சண்டை போடுகின்றன என்று வைத்துக் கொள்வோம். தேசப் பற்று கொண்ட எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அதற்கு காரணம். பொறுப்பு. நான் என் நாட்டின் மேல் கொண்ட அபிமானத்துக்கும் ஏதோ வேறு இரண்டு நாடுகள் சண்டை போட்டுக் கொள்வதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். தேசத்தின் மேல் கொண்ட பற்று , மற்ற தேசத்தின் மேல் வெறுப்பாக, பகையாக மாறுகிறது.
அது முதலாவது செய்தி.
இரண்டாவது, துக்கம் வந்தால் அதை வெளிக் கொட்ட வேண்டும். மனதுக்குள் வைத்து புளுங்க கூடாது. அழுது, புலம்பி அதை வெளிப்படுத்த வேண்டும்.
இராமன் புலம்பிய செய்தி இராமாயணம் என்ற பெரிய காப்பியத்தில் ஒரு முக்கியம் இல்லாத செய்தி. கம்பர் அதை சொல்லாமல் விட்டு விட்டுப் போயிருக்கலாம். யாருக்குத் தெரிய போகிறது ? இருந்தும் வேலை மெனக்கெட்டு இராமனின் புலம்பலை எழுதுகிறார் கம்பர்.
ஏன் ?
மகிழ்ச்சியைப் போல துக்கத்தையும் வெளிப் படுத்த வேண்டும். மனம் ஒரு நல்ல நிலையில் இருக்க உணர்ச்சிகளின் வெளிப்பாடு முக்கியம். அமுக்கி வைத்துக் கொண்டிருந்தால் அது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
உணர்ச்சிகளை , பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்வு சிறக்கும்.