இராமாயணம் - திருவடி சூட்டு படலம் - அறமும் கருணையும்
அரசை மீண்டும் தரவந்த பரதனை காண்கிறான் இராமன். பரதனின் தவ கோலமும், அவன் அழுத சிவந்த கண்களும் இராமனின் மனதை நெகிழ வைக்கிறது. பரதன் இராமனின் காலில் விழுகிறான். விழுந்த பரதனை தூக்கி தழுவிக் கொள்கிறான்.
"பெருமூச்சு விட்டு, கண்களில் இருந்து நீர் அருவியாக பாய்ந்து மார்பில் விழ, பரதனை கட்டிப் பிடித்துக் கொண்டான் இராமன். அறத்தின் இருப்பிடமான பரதனை , கருணையின் இருப்பிடமான இராமன் தழுவிக் கொண்டான் "
பாடல்
அயா உயிர்த்து, அழு கண் நீர்
அருவி மார்பிடை
உயா உற திரு உளம்
உருகப் புல்லினான்,
நியாயம் அத்தனைக்கும் ஓர்
நிலயம் ஆயினான்,
தயா முதல் அறத்தினைத்
தழீஇயது என்னவே.
பொருள்
அயா = தளர்ந்து
உயிர்த்து= மீண்டும் உயிர் பெற்று
அழு கண் நீர் = அழுகின்ற கண் நீர்
அருவி = அருவி போல
மார்பிடை = மார்பில் விழ
உயா உற = வருத்தம் உற
திரு உளம் உருகப் = மனம் உருக
புல்லினான் = அணைத்துக் கொண்டான்
நியாயம் = நியாயம்
அத்தனைக்கும் = அனைத்திற்கும்
ஓர் = ஒரு
நிலயம் ஆயினான் = இருப்பிடம் ஆயினான்
தயா முதல் = கருணையில் முதல்வனான
அறத்தினைத் = அறத்தினை
தழீஇயது = தழுவியது
என்னவே = போல
அரசை ஏற்றுக் கொள்ளவது அறம் அல்ல என்று உறுதியாக நம்பினான். பரதனுக்கு தெரிந்த அறம் இராமனுக்குத் தெரியாதா ?
அறம் அல்லாத ஒன்றை இராமன் செய்வானா ?
பரதன் சொல்வது சரி என்று படுகிறது. அப்படி என்றால் இராமன் செய்தது சரி அல்ல என்று ஆகும்.
யார் வழியைப் பின் பற்றுவது என்ற குழப்பம் படிப்பவர்களுக்கு ஏற்படும்.
கம்பர் அதை சரி செய்கிறார்.
பரதன் அறத்தின் வழி நின்றான்.
ஆனால், இராமன் கருணையின் வழி நின்றான். கருணையே வடிவாக இருந்தான். கருணையின் பிறப்பிடம் இராமன் என்று கம்பன் காட்டுகிறான்.
பரதனும், இராமனும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு இருந்தது அறமும் கருணையும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டிருந்தது போல இருந்ததாம்.
அறம் உயர்ந்ததுதான். கருணை அதையும் விட உயர்ந்தது.
கருணைக்கு அறம் , அறம் அல்லாதது என்றெல்லாம் தெரியாது. இவற்றை எல்லாம் கடந்தது கருணை.
ஒரு தாய் பிள்ளையை கடிந்து வைக்கிறாள் அல்லது அடிக்கிறாள். திட்டுவதும் அடிப்பதும் அறமா என்றால் இல்லைதான். ஆனால், அவள் செய்வது அளவு கடந்த காதலால். குழந்தையின் மேல் உள்ள கருணையால்.
தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே
என்பார் குலசேகர ஆழ்வார்.
தாய் அடித்தாலும் அவளின் அருளை நினைத்தே அழும் குழந்தை போல அழுதேன் என்கிறார்.
அறம் என்பது என்ன என்று படித்து அறிந்து கொள்ளலாம். அது பற்றி விவாதிக்கலாம். சரியா தவறா ஆராயலாம்.
கருணை என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்டது. விளக்க முடியாதது.
இராமனின் செயல்கள் கருணையில் இருந்தது பிறந்தவை என்று புரிந்து கொண்டால் , அவனின் பல செய்லகளை நாம் நீதி, நேர்மை, ஞாயம் என்ற பூத கண்ணாடி கொண்டு பார்க்காமல் இருப்போம்.
உடலைக் காணலாம்;உயிரைக் காணவியலாது.அறத்தை விளக்கலாம்;அதனினும் உயர்ந்த கருணையை விளக்கவியலாது.
ReplyDeleteஇராமன் முடி துறந்தது அறம் அல்ல என்பது பரதன் வாதம். இராமன் முடி துறந்தது கருணையினால் என்று எப்படிக் கூற முடியும்?
ReplyDeleteகாலில் விழுத்த தம்பியை அன்புடன் கட்டிப்பிடித்தான் என்பது பொருத்தமாக இருக்கிறது.