திருவருட்பா - வாலிருந்தால் வனத்தில் இருப்பேன்
பக்திக்கு தடையாக இருப்பது பல. அதில் முதலாவதாக இருப்பது உணவு.
சாப்பாட்டில் ஆர்வம் அதிகம் இருந்தால், வேறு எதிலும் மனம் ஓடாது.
தமிழிலே நோய் என்றும் பிணி என்றும் இரண்டு சொல் உண்டு.
நோய் என்றால் மருந்து உண்டால் போய் விடும்.
பிணி என்ன செய்தாலும் போகாது.
பிறவிப் பிணி என்பார்கள்.
பசி பிணி.
காலையில் ஆறு மணிக்கு ஆறு இட்லி உள்ளே தள்ளினாலும், பனிரெண்டு மணிக்கு மீண்டும் பசிக்கும்.
பசிக்கு சாப்பிட்டால் பரவாயில்லை. ருசிக்கு சாப்பிட ஆரம்பித்ததால் வந்தது வினை. மேலும் மேலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.
அதிகம் சாப்பிட சாப்பிட புத்தி மந்திக்கிறது. நோய் வந்து சேர்கிறது. பின் அதற்கு வைத்தியம் என்று வாழ் நாள் கழிகிறது.
சாப்பாட்டின் மேல் உள்ள ஆசையை விட முடியவில்லையே என் செய்வேன் என்று வருந்துகிறார் வள்ளலார்.
"பால் சோறு என்றால் வயிறு முட்ட சாப்பிடுவேன். அதற்கு மேல் ஒன்றிரண்டு வாழைப் பழம், பலா சுளைகளையும் உள்ளே தள்ளுவேன். பழத்தின் தோலைக் கூட மற்றவர்களுக்குத் தர மாட்டேன். வால் மட்டும் தான் எனக்கு எல்லை. இருந்தால் குரங்கு போல வனத்தில் இருந்திருப்பேன் " என்கிறார்.
பாடல்
பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.
பொருள்
பாலிலே கலந்த சோறெனில் = எல்லாரும் சோற்றில் பாலை இட்டு பிசைவார்கள். இவர், பாலில் சோற்றை இடுகிறார். அவ்வளவு ஆர்வம், சாப்பாட்டில்.
விரைந்தே = வேகமாக சென்று. வேறு யாரும் நமக்கு முன்னால் சாப்பிட்டு விடுவார்களோ என்று முந்திக் கொண்டு
பத்தியால் = ஆர்வத்தால்
ஒருபெரு வயிற்றுச் சாலிலே = சால் என்றால் அண்டா போன்ற பெரிய பாத்திரம். அண்டா போன்ற பெரிய வயிற்றிலே
அடைக்கத் தடைபடேன் = வயிறு நிறைய சாப்பிடுவேன் என்று சொல்லவில்லை. வயிற்றல் அடைக்க தடை சொல்ல மாட்டேன். எவ்வளவு போட்டாலும், அமுக்கி அமுக்கி அடைத்துக் கொள்வேன். போதும், வேண்டாம் என்று தடை சொல்ல மாட்டேன்.
வாழை தகுபலா மாமுதற் பழத்தின் = தகுதியான வாழை, மா, பலா முதலிய பழங்களை
தோலிலே எனினும் = அவற்றின் தோலாக இருந்தாலும்
கிள்ளிஓர் சிறிதும் = கிள்ளி ஒரு சிறிது கூட
சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன் = பக்கத்தில் இருப்பவருக்கு தரத் துணிய மாட்டேன்
வாலிலேன் = வால் இல்லை
இருக்கில் = இருந்திருந்தால்
வனத்திலே இருக்க வாய்ப்புளேன் = காட்டில் இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்
என்செய்வேன் எந்தாய் = என்செய்வேன், என் தந்தையே
சாப்பாட்டில் ஆர்வம் அதிகம் ஆனால், கொடுக்கும் குணம் குறையும். எல்லாம் எனக்கே வேண்டும் என்று பேராசை வரும்.
நிறைய பேர் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் கருணை இல்லாததால் அல்ல. மனதில் துணிவு இல்லாததால்.
இருப்பதை எல்லாம் கொடுத்து விட்டால், நாளைக்கு நமக்கு என்ன இருக்கும் ? என்ற பயம். எதிர் காலம் குறித்த பயம், மக்களை தர்மம் செய்ய விடாமல் தடுக்கிறது.
ஒருத்தனுக்கு கொடுத்தால், பத்து பேர் வருவான். எல்லாருக்கும் நம்மால் கொடுக்க முடியுமா என்ற பயம்.
எனவே தான் ஒளவை , அறம் செய்ய விரும்பு என்றால். பயம் போக வேண்டும்.
வள்ளலார் கூறுகிறார், பழத்தின் தோலை கூட மற்றவர்களுக்குத் தர துணிய மாட்டேன் என்று.
எல்லோரிடமும் இரக்கம் இருக்கும். அன்பு இருக்கும். கருணை இருக்கும். ஆனால், ஆயிரம் ரூபாய் நன்கொடை தர மனம் வராது. அன்பு இல்லாமல் அல்ல. துணிவு இல்லாதாதால்.
பக்தி, இறை உணர்வு வர வேண்டும் என்றால் சாப்பாட்டின் மேல் உள்ள ஆர்வம் குறைய வேண்டும்.
உணவின் அளவை குறைத்துப் பாருங்கள்.
மனம் உறுதி பெறுவதை உணர்வீர்கள்.
உடல் உற்சாகம் அடைவதை உணர்வீர்கள்.
பசி என்றால் என்ன என்று அறிவீர்கள். மற்றவர்களின் பசியை உணர்வீர்கள். உதவும் எண்ணம் மேலோங்கும்.
கருணை பிறக்கும்.
அது உங்களை உயர் நிலைக்கு கொண்டு செல்லும்.
செல்லட்டும்.
http://interestingtamilpoems.blogspot.in/2018/01/blog-post_53.html