Sunday, March 18, 2018

திருக்குறள் - மாறல்ல துய்க்க

திருக்குறள் - மாறல்ல துய்க்க 


மிகினும், குறையினும் நோய் செய்யும் என்றார்.

அற்றது அளவறிந்து உண்ணச் சொன்னார்.

ஆனால், எதை சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லையே.

இங்கே சொல்கிறார்.

பாடல்

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல 
துய்க்க துவரப் பசித்து.

பொருள்

அற்றது = முன்பு உண்டது செரித்து உடலை விட்டு நீங்கியதை

அறிந்து = அறிந்து, தெரிந்து கொண்டு

கடைப்பிடித்து  = கடை பிடித்து

மாறல்ல = மாற்றம் அல்லாத

துய்க்க = உண்க

துவரப்  =  மிக

பசித்து = பசித்த பின்னால்

எப்போது உணவு உண்ண வேண்டும் என்றால் - "துவர பசித்தப்பின்"

துவர என்றால்  மிக மிக என்று அர்த்தம்.

ரொம்ப பசித்தபின் தான் உணவு உண்ண வேண்டும். கடிகாரத்தைப் பார்த்து  உணவு உண்ணக் கூடாது.   நேரம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். பசிக்கிறதா ?  ரொம்ப பசிக்கிறதா ? அப்போதுதான் உண்ண வேண்டும்.

நன்றாக கவனித்துப் பாருங்கள்.

சில நாள் ஏதோ வேலை முனைப்பில் இருந்திருப்பீர்கள். நேரம் போனதே தெரியாது.  நிமிர்ந்து பார்த்தால் மணி மூன்றாகி ஆகி இருக்கும். பசி வந்ததும் தெரியாது. போனதும் தெரியாது. என்ன ஆயிற்று ? பசி இல்லை. நாம் தினமும் ஒரு மணிக்கு சாப்பிடுவது பசித்து அல்ல. அது ஒரு conditioned reflex.

பாவ்லோவ் என்று ஒரு விஞ்ஞானி இருந்தார். அவர் தினமும் தன்னுடைய நாய்க்கு  உணவு வைப்பார். உணவின் வாசம் வந்ததும், நாய் வாலை ஆட்டும், அதன் வாயில் நீர் ஊறும்.

சிறிது நாள் கழித்து, உணவு வருதற்கு சில நொடிகள் முன், ஒரு மணி அடிப்பார். மணி அடித்தவுடன், சில நொடிகளில் உணவு வரும். நாய்க்கு எச்சில் ஒழுகும். வாலை ஆட்டும்.

இன்னும் சிறிது நாள் கழித்து, மணி மட்டும் அடிக்கும், ஆனால் உணவு வராது. இருந்தும், நாய்க்கு எச்சில் ஒழுக ஆரம்பிக்கும், வால் ஆடும்.

அதாவது, மணி அடித்தால், உணவு வரும். உணவு வந்தால் அதை சாப்பிடலாம் என்ற எதிர்பார்ப்பில் உமிழ் நீர் தானாகவே சுரக்க ஆரம்பித்து விடுகிறது.

அது போல நாமும் ஆகி விட்டோம். மணி அடித்தால் சோறு என்று பழக்கப் படுத்தி விட்டோம்.

அப்படி சாப்பிடக் கூடாது. நன்றாக பசித்தபின் தான் சாப்பிட வேண்டும்.

இரண்டாவது, "மாறல்ல துய்க்க" என்றால் என்ன ?

மாறுபாடு இல்லாமல் உண்ண வேண்டும்.

எதோடு மாறுபாடு கூடாது ?

சுவையாலும், அளவாலும், வீரியத்தால், கால நிலையாலும், உணவுகள் ஒன்றுக்கொன்று மாறுபாடு இல்லாமலும், உடல் வாகுக்கு மாறுபாடு இல்லாமலும்  இருக்க வேண்டும்.


சற்று விரிவாக பார்ப்போம்.


சுவையால் மாறுபடக் கூடாது.  சிலருக்கு காரம் அதிகம் வேண்டி இருக்கும். சிலருக்கு  கொஞ்சம் காரம் இருந்தாலே விக்கல் வரும், கண்ணில் நீர் வரும். யார் எந்த சுவையில் பழக்கப் பட்டு இருக்கிறார்களோ, அந்த சுவை மாறுபாடு கூடாது.

அளவு. எப்போதும் ஒரே அளவாக சாப்பிட வேண்டும். ஒரு நாள் தானே என்று பத்து தோசை தின்னக் கூடாது. சாப்பாட்டில் நிதானம் வேண்டும்.

வீரியம் - வீரியம் என்றால் சக்தி. ஒவ்வொரு உணவுக்கும் ஒரு வித சக்தி இருக்கும். கொழுப்பு,  புரதம், கால்சியம் என்று ஒரு சக்தி இருக்கும். அந்த வீரியம் மாறக் கூடாது. அளவோடு இருக்க வேண்டும்.

கால நிலை. தமிழர்கள் காலத்தை பெரும் பொழுது, சிறு பொழுது என்று பிரித்தார்கள்.

ஒரு ஆண்டின் பகுதியை பெரும் பொழுது என்பார்கள்.

ஒரு நாளின் பகுதியை சிறு பொழுது என்பார்கள்.

பெரும்பொழுது
காா்காலம்ஆவணி, புரட்டாசி
கூதிா்காலம்ஐப்பசி, காா்த்திகை
முன்பனிகாலம்மாா்கழி, தை
பின்பனிகாலம்மாசி, பங்குனி
இளவேனில்சித்திரை, வைகாசி
முதுவேனில்ஆனி, ஆடி
சிறுபொழுது
காலைகாலை 6.00 மணிமுதல் 10.00 மணிவரை
நண்பகல்10.00 மணிமுதல் 2.00 மணிவரை
எற்பாடு2.00 மணிமுதல் 6.00 மணிவரை
மாலை6.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை
யாமம்இரவு 10.00 மணிமுதல் 2.00 மணிவரை
வைகறைஇரவு 2.00 மணிமுதல் காலை 6.00 மணிவரை
ஒரு ஆண்டில் , ஒவ்வொரு மாதத்திலும் என்னென்ன சாப்பிடலாம் என்று பட்டியல் இருக்கிறது. 

அதே போல ஒரு நாளில், சிறு பொழுதில் என்னென்ன சாப்பிடலாம் என்று பட்டியல் இருக்கிறது. 

அதற்கு மாறுபாடு இல்லாமல் சாப்பிட வேண்டும். 

உணவுகள் ஒன்றுக்கொன்று மாறுபாடு கொண்டவை. தேனும் நெய்யும் ஒத்து வராது. ஒன்றை ஒன்று முறிக்கும். இவற்றை அறிந்து உண்ண வேண்டும். 

உடல் வாகு - சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் எடை கூடாது. சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டாலும் சட்டென்று எடை கூடி விடும். 

காரணம் என்ன - உடல் வாகை மூன்றாகப் பிரிகிறார்கள். 

நெருப்பு (பித்தம்), வாதம் (காற்று ), சிலேத்துமம் (நீர் ). 

பித்த உடம்பு உணவை வேகமாக எரிக்கும். 

உடம்பின் வாகை அறிந்து அதற்கு மாறுபாடு இல்லாமால் உண்ண வேண்டும். 

"கடை பிடித்து" : இது எளிதில் வராது. உணவைப் பார்த்ததும் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் ஓடி விடும். இதை வலு கட்டாயமாக கடை பிடிக்க வேண்டும்.  எளிதில், தானாக அமையாது.  சாலை விதிகளை கடைபிடிப்பது , சட்ட ஒழுங்கை  கடை பிடிப்பது மாதிரி உணவு ஒழுங்கையும் கடைபிடிக்க வேண்டும். 

நாக்கு இந்த கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும். அதை பிடித்து இழுத்து நிறுத்த வேண்டும் . 



கண்டதையும், கண்ட நேரத்திலும் உண்டு ஏதோ உணவு ஒரு பெரிய விஷயம் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

ஆரோக்கிய வாழ்வின், நீண்ட ஆயுளின் இரகசியம் உணவில் இருக்கிறது. 

இன்று முதல் உண்ணும் போது யோசித்து உண்ணுங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/03/blog-post_18.html


2 comments:

  1. வள்ளுவரின் கருத்தை சந்தேகத்துக்கு இடமில்லாமல் விளக்கமாக சொல்லி விட்டடீர்கள். தற்கால அவசர உலகத்தில், எல்லோரும் வேலைக்கோ படிக்கவோ வெளியில் செல்ல வேண்டிய நிர்ப்பந்ததில், மொத்தமாக சமைக்கும் குடும்பத்தில் ஓரளவு தான் கடைபிடிக்க முடியும்

    ReplyDelete
  2. கட்டுப்பாடு இல்லாமல் உண்ணக்கூடாது என்பதற்கு இத்தனை குறள்களா ?!

    வள்ளுவர் சொல்வதை எல்லாம் ஒரு அறிவியல் நிபுணர் சொலவ்து போல நினைக்காது, கடைப்பிடிக்க வேண்டிய பகுதியை மட்டும் கடைப்பிடித்தால் போதும்.

    ReplyDelete