திருக்குறள் - புலால் மறுத்தல் - வேள்வி
https://interestingtamilpoems.blogspot.com/2024/04/blog-post_16.html
மக்கள் எப்படி எல்லாம் உயிர்க் கொலை செய்கிறார்கள் !
உண்பதற்காக உயிர்களை கொன்று அவற்றின் உடம்பை உண்பது ஒரு வகை.
அது அல்லாமல், அந்தக் காலத்தில் யாகம், வேள்வி போன்றவற்றை செய்யும் போது, அதில் உயிர்களை பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. சில விலங்குகளை உயிரோடு வேள்வித் தீயில் இட்டு தெய்வ வழிபாடு செய்யும் முறைமை இருந்திருக்கிறது.
வேள்வியில் இடப்படும் பொருள்களுக்கு "அவிர் பாகம்" என்று பெயர். ஹவில் என்ற வட மொழிச் சொல்லை தழுவியது என்பார்கள்.
அப்படி அந்த வேள்வித் தீயில் போடப்படும் பொருள்கள், எந்தத் தெய்வத்தை நோக்கி போடப்பட்டதோ, அந்தத் தெய்வங்கள் மகிழ்ந்து, அப்படி அவர் பாகம் அளித்தவர்களுக்கு நல்ல வரங்கள் வழங்கும் என்பது நம்பிக்கை.
வள்ளுவர் சொல்கிறார்,
"அப்படி ஆயிரம் வேள்வி செய்து வரும் நற் பலன்களை விட, ஒரே உயிரை கொன்று தின்னாமை என்ற விரதத்தால் வரும் "
என்று.
உயிர்க் கொலைகளை செய்து வரும் நன்மைகளை விட, உயிர்களை கொல்லாமல் இருக்கும் விரதத்தின் மகிமை பெரியது என்கிறார்.
பாடல்
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
பொருள்
அவி = அவிர் பாகங்களை
சொரிந்து = வேள்வியில் இட்டு
ஆயிரம் = ஆயிரம் வேள்விகள்
வேட்டலின் = செய்வதைவிட
ஒன்றன் = எந்த ஒரு விலங்கினதும்
உயிர் செகுத்து =உயிரைப் பறித்து
உண்ணாமை நன்று = உண்ணாமல் இருப்பது நல்லது
இப்போது கூட, மாமிசத்தை இடுவதற்கு பதில் வெள்ளைப் பூசணிக்காயின் உள் குங்குமத்தை போட்டு, அதை கரைத்து, பூசணியை உடைத்து, அது ஏதோ உயிர் பலி கொடுத்த மாதிரி ஒரு தோற்றத்தை உண்டு பண்ணுகிறார்கள்.
வேள்விகளில் உயிர் பலி நடந்திருக்கிறது.
தெய்வத்திற்காக என்றாலும், பலி கொடுக்காமல் இருப்பது நல்லது என்கிறார் வள்ளுவப் பேராசான்.