திருக்குறள் - வெகுளாமை நன்று
https://interestingtamilpoems.blogspot.com/2025/10/blog-post.html
சூடான ஒரு பொருள் மீது நம் கை பட்டு விட்டால் எவ்வளவு வலிக்கிறது. தெரியாமல் பட்டு விட்டாலே அந்த வலி. சட்டென்று கையை இழுத்துக் கொள்வோம். அந்த ஒரு சில நொடியே பெரிய வலியைத் தரும். உடனடியான வலி மட்டும் அல்ல, தழும்பு ஏற்பட்டு, நீண்ட நாட்களுக்கு அதை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.
அப்படி இருக்க,
யாராவது நமக்கு சூடு போட்டால் அல்லது நெருப்பால் சுட்டால் நமக்கு எப்படி இருக்கும். அப்படி செய்தவர்கள் மேல் எவ்வளவு கோபம் வரும். அவர்களை அடித்து நொறுக்கலாம் போல இருக்கும் அல்லவா?
அப்படி ஒரு முறை இருமுறை அல்ல, பலமுறை நம்மை நெருப்பால் சுட்டால் அவர்கள் மேல் எவ்வளவு வெறுப்பும், கோபமும் வரும்?
வள்ளுவர் சொல்கிறார்,
அப்படி ஒருவர் நமக்கு பல முறை தீங்கு செய்தாலும், அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல் இருப்பது நல்லது என்று.
பாடல்
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று
பொருள்
இணர் = இணையாக வரக் கூடிய, அல்லது கொத்து கொத்தாக வரக் கூடிய, ஒரு பூங்கொத்தை போல வரக் கூடிய
எரி = தீ, சூடு
தோய்வன்ன = மேலே வைத்து சுடுவதைப் போல
இன்னா செயினும் = நமக்கு ஒருவர் தீமை செய்தாலும்
புணரின் = கூடுமானால்
வெகுளாமை நன்று = அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல் இருப்பது நல்லது
ஒருதரம் சூடு பட்டாலே துன்பம் பொறுக்க முடியாது. கொத்து கொத்தாக, மறுபடியும், மறுபடியும் சூடு வைப்பது போல துன்பம் செய்தாலும், அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல் இருக்க முடியுமானால் நல்லது.
இதெல்லாம் நடக்கிற காரியமா? சொல்வது எளிது என்று நாம் சொல்லலாம்.
வள்ளுவருக்குத் தெரியாதா இது கடினமான காரியம் என்று.
எனவே தான் "புணரின்" என்ற ஒரு வாத்தையைப் போடுகிறார்.
புணர்தல் - கூடுதல், சேர்தல்.
புணரின் - கூடுமானால்
அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல் இருக்க முடியுமானால், அது நல்லது என்கிறார்.
நமக்கு ஒரு முறை துன்பம் செய்தவர்களைக் கூட ' சரி போனால் போகிறது, தெரியாமல் செய்து விட்டார்கள்' என்று மன்னித்து விட்டு விடலாம். கோபம் கொள்ளாமல் கூட இருந்து விடலாம்.
மறுபடியும், மறுபடியும் துன்பம் செய்து கொண்டே இருந்தால், அப்போது கூட கோபம் கொள்ளாமல் இருப்பது நல்லது.
இராமரும், தர்மரும் தங்களுக்கு பலவித துன்பங்களைச் செய்தவர்கள் மேல் கோபம் கொள்ளவில்லை.
கோபம் எவ்வளவு தீமையானது என்று நாம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.
ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய குறள்.