Showing posts with label சிலப்பதிகாரம். Show all posts
Showing posts with label சிலப்பதிகாரம். Show all posts

Monday, November 26, 2012

சிலப்பதிகாரம் - கண்ணகி முறையீடு


சிலப்பதிகாரம் - கண்ணகி முறையீடு


கண்ணகி, காப்பியம் முழுவதும் அமைதியாகத்தான் இருந்தாள். தன் கணவன் கொலையுண்டான் என்று அறிந்தவுடன் புயலாக புறப்படுகிறாள். 

ஒரு புது பெண்ணை பார்க்கிறோம். கோபம். ருத்திரம். ஞாயம் வேண்டி போராடும் குணம். வெடிப்புற பேசும் ஆற்றல். இத்தனை நாள் இவை எல்லாம் எங்கிருந்ததோ என்று வியக்க வைக்கும் மாறுதல்கள். 

கையில் சிலம்போடு பாண்டியன் அரண்மனை வாசல் அடைகிறாள். அவள் கோவம் வாயில் காப்போனிடம் இருந்து வெடிக்கிறது. 

" வாயில் காப்போனே, இந்த மாதிரி முறை தப்பிய மன்னனிடம் வேலை செய்யும் வாயில் காப்போனே, போய் சொல் உன் மன்னனிடம், பரல் கொண்ட சிலம்பை கையில் ஏந்திய படி, கணவனை இழந்த பெண் வாசலில் நிற்கிறாள் என்று போய் சொல் " 

என்று குமுறுகிறாள். 

பாடல் 

Thursday, November 22, 2012

சிலப்பதிகாரம் - கோவலனின் மன்னிப்பு


சிலப்பதிகாரம் - கோவலனின் மன்னிப்பு 


கண்ணகியை விட்டு விட்டு மாதவி பின் போனான் கோவலன். பொருள் எல்லாம் இழந்தான். பின் கண்ணகியிடம் வந்தான். புது வாழ்க்கை தொடங்க வேண்டி இருவரும் மதுரை நோக்கிச் செல்கிறார்கள்.

போகும் வழியில் அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் ?

கண்ணகி என்ன நினைப்பாள் ? கோவலன் என்ன நினைப்பான் ?

கோவலன் கண்ணகியிடம் மன்னிப்பு கேட்டானா ? கண்ணகி அதற்க்கு என்ன மறுமொழி கூறினாள்? 

கோவலன் தவறு என்று உணர்ந்தான். "உனக்கு சிறுமை செய்தேன்" என்று ஒரே ஒரு வாக்கியம் சொல்கிறான். "மன்னித்துக் கொள்" என்று சொல்லவில்லை. வருந்துகிறேன் என்று சொல்லவில்லை. 

"நான் வா என்று சொன்னவுடன் வந்து விட்டாய், நீ தான் எவ்வளவு நல்லவள்" என்ற தொனியில் சொல்கிறான். 

வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ
இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என்செய் தனையென

பொருள் 

வறு மொழியாளரோடு = வறுமையான  மொழி பேசுபவர்கள், அர்த்தம் இல்லாமல் பேசுபவர்கள் 

வம்ப பரத்தரோடும் = வம்பு அளக்கும் பரத்தை தன்மை உள்ளவர்களிடமும்

குறுமொழி கோட்டி = சிறு சொற்கள் பேசி

நெடு நகைபுக்கு = பெரிய நகைப்புக்கு ஆட்பட்டு 

பொச்சாபுண்டு = மறதியும் கொண்டு 

பொருள் உரையாளர் = பொருள் பொதிந்த சொற்களை பேசும்  

நச்சுக் கொன்றேர்க்கு =நல்ல நெறிகளை கொன்றோர்க்கு

நன்னெறி உண்டோ ? = நல்ல கதி உண்டா (கிடையாது)

இரு முது குரவர் = வயதான பெற்றோர் (குரவர் = தலைவன், இங்கு பெற்றோர்)

ஏவலும் பிழைத்தேன் = அவர்கள் சொன்ன கட்டளைகளையும் தவறி 
நடந்தேன் (பெற்றோர் சொற்படி கேட்கவில்லை) 

சிறு முதுக் குறைவிக்கு = சிறு வயதான உனக்கும்

சிறுமையும் செய்தேன் = சிறுமை செய்தேன்

வழுவெனும் பாரேன் = தவறு என்றும் நினைக்கவில்லை 

மாநகர் மருங்கி ஈண்டு = நமது பெரிய நகரத்தை விட்டு நீங்கி

எழுக என எழுந்தாய் = என்னோடு வா என்று சொன்னவுடன் வந்து விட்டாய்

என் செய்தனை என  = எனக்காக நீ எவ்வளவு பெரிய காரியம் செய்தாய் 

கண்ணகி கோபக்காரிதான். மன்னனையே, சட்டையை பிடித்து உலுக்கி நீதி கேட்டவள் தான், தன் கோபத்தால் மதுரை மாநகரையே எரித்தவள் தான், துக்கமும், கோபமும் தாங்காமல் தன் மார்பில் ஒன்றை திருகி எறிந்தவள் தான்...

இருந்தாலும் கோவலனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. 

ஒரு வேளை கோவலன் மேல் இருந்த கோபத்தையெல்லாம் பாண்டியனிடமும், மதுரையிடமும் காட்டினாளோ  ? சேர்த்து வைத்திருந்த கோபம் எல்லாம் பொங்கி வந்து விட்டதோ ?


Wednesday, November 21, 2012

சிலப்பதிகாரம் - நம்மை மறந்தாரை


சிலப்பதிகாரம் - நம்மை மறந்தாரை 


அவர்கள் இளம் காதலர்கள். 

அவன் வேலை நிமித்தமாய் வெளியூர் போய் விட்டான். வேலை மும்முரத்தில் அவளை கூப்பிட்டு பேச மறந்து விட்டான். அவளுக்கு ஒரே தவிப்பு...பத்திராமாய் போய் சேர்ந்தானா, சாபிட்டானா, தூங்கினானா, அந்த ஊர் தட்ப வெப்பம் எப்படி இருக்கிறதோ என்று ஆயிரம் கவலை அவளுக்கு....ஒரு வேளை என்னை மறந்தே விட்டானோ ? இனிமேல் என்னை பற்றி நினைக்கவே மாட்டானோ ?

போனா போகட்டுமே...எனக்கு என்ன...அவன் என்னை மறந்தாலும் என்னால் அவனை மறக்க முடியாது...என்று அருகில் உள்ள பறவைகளிடம் சொல்லி கவல்கிறாள்.....

சிலப்பதிகாரத்தில் வரும் அந்த காதலும் கவலையும் சேர்ந்த வரிகள்...

பாடல்

Wednesday, August 8, 2012

சிலப்பதிகாரம் - காத்திருத்தலின் சுகம்


சிலப்பதிகாரம் - காத்திருத்தலின் சுகம்


அவனுக்காக அவள் காத்து இருக்கிறாள். இன்று அவன் வரும் நேரம்.

தலைக் குளித்து, விரித்த கூந்தலுக்கு அகில் புகை போடுகிறாள்.

அப்படி விரிந்த கூந்தல் புகையோடு கூடிய பின்னணியில் அவள் முகம் கரிய மேகங்களுக்கு பின்னே உள்ள நிலவு போல் தெரிகிறது.

அலை பாயும் கூந்தல், புகை சூழ்ந்த நேரம்...புன்னகை கொண்ட அவள் முகம்...குளிர் நிலவு போல் இருக்கிறது...

அந்த குளிர் முகத்தில் வில் போல இரண்டு புருவங்கள்...

அந்த புருவங்களுக்கு கீழே...அவன் பிரிவால் உறங்காமல் சிவந்த இரு விழிகள்...

அந்த விழிகள் மீன் கொடி கொண்ட மன்மதனின் வில்லை துறந்த அம்பு போல் என்னிடம் தூது வந்து என் பிரிவின் வேதனையை அதிகப் படுத்தியது.

அதே கண்கள் என்று அந்த வேதனைக்கு மருந்தாவும் உள்ளது .



அகில் உண விரித்த அம் மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகரும் சிலைக்கீழ்
மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து
சிதர் அரி பரந்த செழும்கடைத் தூதும்
மருந்தும் ஆயது இம்மாலை…

அகில் உண விரித்த = அகில் புகை சூழ விரிந்த


அம் மென் கூந்தல் = அந்த மென்மையான கூந்தல்

முகில்நுழை = மேகத்தின் உள்ளே நுழையும்

மதியத்து = நிலவு போல

முரி = தோற்கச் செய்யும்

கரும் = கரிய

சிலைக்கீழ் = வில்லின் கீழ் (வில் போன்ற புருவம்)

மகரக் கொடியோன் = மீன் கொடி கொண்ட மன்மதன்

மலர்க்கணை = மலர் அம்புகள்

துரந்து = துரத்த

சிதர்  = சிதற, அலைபாயும் கண்கள்

அரி பரந்த = செவ்வரி ஓடிய (சிவந்த கண்கள், தூங்காத கண்களோ ?)

செழும்கடைத் தூதும் = என்னிடம் தூது வந்து என்னை துயர் படுத்தின

மருந்தும் ஆயது இம்மாலை…= அதே கண்கள் இப்போது, இந்த மாலை நேரத்தில் அந்த நோய்க்கு மருந்தாக உள்ளன

Monday, May 7, 2012

சிலப்பதிகாரம் - இராமன் ஏன் கானகம் போனான்?


சிலப்பதிகாரம் - இராமன் ஏன் கானகம் போனான்?


அசதி ஆடல் என்று தமிழ் பக்தி இலக்கியத்தில் ஒரு பகுதி.

இறைவன் மேல் அதீத அன்பின் காரணமாக அவனை கிண்டல் செய்வது, கேலி செய்வது, நண்பன் போல் நினைத்து பாடுவது என்று உண்டு.

சுந்தரர் அப்படி பாடியவர்.

காளமேகம் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்.

இரட்டை புலவர்கள் பாடி இருக்கிறார்கள் ('கூறு சங்கு கொட்டோசை அல்லாமால் சோறு கண்ட மூளி யார் சொல்' என்று சிவன் கோவிலில் கொட்டு சப்தம் தான் இருக்கிறது, சோறு இல்லை என்று கேலி செய்து பாடி இருக்கிறார்கள்).

இராமன் கானகம் போனது மிக மிக துக்ககரமான ஒரு நிகழ்ச்சி. 

உலகமே அழுதது என்பான் கம்பன். 

தாயின் வயிற்றில் இருந்த கரு அழுதது என்பான்.

அந்த நிகழ்ச்சியை ஒரு கேலிப் பாட்டாக பாடுகிறார் இளங்கோ அடிகள். 

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், சிலப்பதிகாரம் கம்ப இராமாயணத்திற்கு முன்னால் எழுதப்பட்ட காப்பியம்.

"இராமா, நீ ஏன் காட்டிலும் மேட்டிலும் கல்லும் முள்ளும் குத்த கானகம் போனாய் தெரியுமா ?

அன்று, மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்டு, அவனை ஏமாற்றி, ஓரடியால் பூவுலகும், மற்றோரடியால் மேலுலகும் அளந்து பின் மூன்றாவது அடி அவன் தலை மேலேயே வைத்து, உன்னை நம்பி நீயே அளந்து எடுத்துக்கொள் என்றவனை நீ ஏமாற்றினாய்..அந்த பாவம் இன்று நீ, இந்த மண் எல்லாம் கால் நோவ நடக்கிறாய்" என்று இளங்கோ அடிகள் பாடுகிறார். 

(ஏன் கல்லும் முள்ளும் குத்திற்று? 

ரதன் பாதுகையை வாங்கி கொண்டு சென்று விட்டான். 

காலணி இல்லை.)


அந்தப் பாடல் 

Thursday, May 3, 2012

சிலப்பதிகாரம் - திரும்பி வந்த கோவலன்


சிலப்பதிகாரம் - திரும்பி வந்த கோவலன்


சிலப்பதிகாரத்தில் முக்கியமான இடம், கோவலன் எல்லாம் தொலைத்து மீண்டும் கண்ணகியை காண வரும் நேரம்.

அவன் அவளிடம் எப்படி சொல்கிறான் அதை அவள் எப்படி எடுத்துக் கொள்கிறாள்....

கோடைக் கால மரம் இலையெல்லாம் இழந்து தனித்து நிற்பது போல, தன்னிடம் உள்ள பொருட்களை எல்லாம் தொலைத்து விட்டு திரும்பி வருகிறான் கோவலன்.

வந்தவன் கண்ணகியை வீடெங்கும் தேடுகிறான்.

எங்கும் காணவில்லை. படுக்கை அறைக்குப் போகிறான்.

அங்கே கண்ணகி சோர்ந்து படுத்து இருக்கிறாள்.

கோ: உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..சொல்லவே வெட்கமா இருக்கு

க: ம்ம்ம்

கோ: கண்ட பெண்கள் பின்னால் சுத்தி, இருந்த செல்வத்தை எல்லாம் அழித்து விட்டேன். கைல காலணா இல்லை....

கண்ணகி அப்பவும் கோவப் படாமல், என் சிலம்பு இருக்கிறது...அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றாள்

நீடிய காவலன் போலும்கடைத்தலையான் வந்து-நம்
கோவலன்!’ என்றாள் ஓர் குற்றிளையாள். கோவலனும்
பாடு அமை சேக்கையுள் புக்குதன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம் கண்டு, ‘யாவும்
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி,
குலம் தரு வான் பொருள்-குன்றம் தொலைந்த;
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு’ என்ன-

நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி,
சிலம்பு உளகொண்ம்’ என-
------------------------------------------------------------------------------

நீடிய காவலன் போலும் = (உள்ளிருந்த படியே கண்ணகி உணர்கிறாள், வந்திருப்பது கோவலன் என்று.) வந்திருப்பது நம் அரசன் போலும்.

கடைத்தலையான் வந்து =நம் வாசல் வந்து

நம் கோவலன்! என்றாள் = நம்முடைய கோவலன் என்றாள்

ஓர் குற்றிளையாள். = ஒரு சிறிய வேலைகள் செய்யும் இளையவள்

கோவலனும் = கோவலனும்

பாடு அமை = பெருமை உள்ள

சேக்கையுள் புக்கு = படுக்கை அறைக்குள் சென்று

தன் பைந்தொடி = தன் காதலி

வாடிய மேனி வருத்தம் கண்டு = வருந்தி வாடிய மேனியின் வருத்தம் கண்டு

யாவும் = அனைத்தும்

சலம் புணர் கொள்கைச் = தீய கொள்கைகளை உடைய

சலதியொடு ஆடி = பெண்களோடு ஆடி

குலம் தரு வான் பொருள் = நம் மூதாதையர்கள் சேர்த்து வைத்த வானளாவிய பொருட்களை

குன்றம் தொலைந்த = குன்று போல் குவிந்த செல்வத்தை தொலைத்து

இலம்பாடு = ஒன்றும் இல்லாமல் வந்து இருக்கிறேன்

நாணுத் தரும் எனக்கு’ என்ன = எனக்கு சொல்லவே வெட்கமா இருக்கு

நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி = நலம் பயக்கும், சிரித்த முகத்தை காட்டி

சிலம்பு உளகொண்ம்’ என = என் சிலம்பு உள்ளது, கொள்க என்றாள்

உன்னிப்பாக ரசிக்க வேண்டிய சில இடங்கள்.

தமிழில் மலைக்கு வேறு வேறு பெயர்கள் உண்டு.

மலை என்றால் மிகப் பெரியது. இமய மலை

வரை என்றாலும் மலைதான் ஆனால் தொடர்ந்து விரிந்த மலைக்கு வரை என்று பெயர். "வரையினை எடுத்த தோளும்"

அதை விட சின்னது குன்று.

அதை விட சின்னது சிலம்பு

கோவலன் குன்று போன்ற குலம் தரு செல்வத்தை தொலைத்தான்.

கண்ணகி சிலம்பை கொடுத்தாள்.

தமிழ் விளையாடுகிறது