Thursday, November 22, 2012

சிலப்பதிகாரம் - கோவலனின் மன்னிப்பு


சிலப்பதிகாரம் - கோவலனின் மன்னிப்பு 


கண்ணகியை விட்டு விட்டு மாதவி பின் போனான் கோவலன். பொருள் எல்லாம் இழந்தான். பின் கண்ணகியிடம் வந்தான். புது வாழ்க்கை தொடங்க வேண்டி இருவரும் மதுரை நோக்கிச் செல்கிறார்கள்.

போகும் வழியில் அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் ?

கண்ணகி என்ன நினைப்பாள் ? கோவலன் என்ன நினைப்பான் ?

கோவலன் கண்ணகியிடம் மன்னிப்பு கேட்டானா ? கண்ணகி அதற்க்கு என்ன மறுமொழி கூறினாள்? 

கோவலன் தவறு என்று உணர்ந்தான். "உனக்கு சிறுமை செய்தேன்" என்று ஒரே ஒரு வாக்கியம் சொல்கிறான். "மன்னித்துக் கொள்" என்று சொல்லவில்லை. வருந்துகிறேன் என்று சொல்லவில்லை. 

"நான் வா என்று சொன்னவுடன் வந்து விட்டாய், நீ தான் எவ்வளவு நல்லவள்" என்ற தொனியில் சொல்கிறான். 

வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப
பொச்சாப் புண்டு பொருளுரை யாளர
நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ
இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்
வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு
எழுகென எழுந்தாய் என்செய் தனையென

பொருள் 

வறு மொழியாளரோடு = வறுமையான  மொழி பேசுபவர்கள், அர்த்தம் இல்லாமல் பேசுபவர்கள் 

வம்ப பரத்தரோடும் = வம்பு அளக்கும் பரத்தை தன்மை உள்ளவர்களிடமும்

குறுமொழி கோட்டி = சிறு சொற்கள் பேசி

நெடு நகைபுக்கு = பெரிய நகைப்புக்கு ஆட்பட்டு 

பொச்சாபுண்டு = மறதியும் கொண்டு 

பொருள் உரையாளர் = பொருள் பொதிந்த சொற்களை பேசும்  

நச்சுக் கொன்றேர்க்கு =நல்ல நெறிகளை கொன்றோர்க்கு

நன்னெறி உண்டோ ? = நல்ல கதி உண்டா (கிடையாது)

இரு முது குரவர் = வயதான பெற்றோர் (குரவர் = தலைவன், இங்கு பெற்றோர்)

ஏவலும் பிழைத்தேன் = அவர்கள் சொன்ன கட்டளைகளையும் தவறி 
நடந்தேன் (பெற்றோர் சொற்படி கேட்கவில்லை) 

சிறு முதுக் குறைவிக்கு = சிறு வயதான உனக்கும்

சிறுமையும் செய்தேன் = சிறுமை செய்தேன்

வழுவெனும் பாரேன் = தவறு என்றும் நினைக்கவில்லை 

மாநகர் மருங்கி ஈண்டு = நமது பெரிய நகரத்தை விட்டு நீங்கி

எழுக என எழுந்தாய் = என்னோடு வா என்று சொன்னவுடன் வந்து விட்டாய்

என் செய்தனை என  = எனக்காக நீ எவ்வளவு பெரிய காரியம் செய்தாய் 

கண்ணகி கோபக்காரிதான். மன்னனையே, சட்டையை பிடித்து உலுக்கி நீதி கேட்டவள் தான், தன் கோபத்தால் மதுரை மாநகரையே எரித்தவள் தான், துக்கமும், கோபமும் தாங்காமல் தன் மார்பில் ஒன்றை திருகி எறிந்தவள் தான்...

இருந்தாலும் கோவலனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. 

ஒரு வேளை கோவலன் மேல் இருந்த கோபத்தையெல்லாம் பாண்டியனிடமும், மதுரையிடமும் காட்டினாளோ  ? சேர்த்து வைத்திருந்த கோபம் எல்லாம் பொங்கி வந்து விட்டதோ ?


2 comments:

  1. "மன்னித்துக்கொள்" என்று ஒரு சொல் சொல்லவில்லையே தவிர, கோவலன் தனது தவறுகளை உணர்ந்து விட்டான் என்றே இந்தப் பாடலில் இருந்து தோன்றுகிறது.

    ReplyDelete
  2. கடைசி வரி அருமை. அதுவரைக்கும் கண்ணகியின் கோவம் யாருக்கும் தெரியாது. ஏன் அவளுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இல்லை மறைத்து வாழ்ந்தாளோ. எப்படியோ உரை அபாரம்......... வாழ்த்துக்கள்

    ReplyDelete