Monday, November 5, 2012

அபிராமி அந்தாதி - அபிராமியின் பழைய இருப்பிடம்


அபிராமி அந்தாதி - அபிராமியின் பழைய இருப்பிடம்



நீங்கள் ஒரு திருமணம் ஆகாத வாலிபர். ஒரு நாள் உங்கள் வீட்டுக்கு உங்கள் வருங்கால மனைவி வருகிறாள். வீடு குப்பை மாதிரி கிடக்கிறது. பிரம்மச்சாரியின் வீடு பின் எப்படி இருக்கும். அவள் இறைந்து கிடந்த புத்தகங்களை எல்லாம் அழகாக அடுக்கி வைக்கிறாள், தினசரி தாள்களை மடித்து வைக்கிறாள், கண்ட படி கிடந் துணிகளை மடித்து அலமாரியில் வைக்கிறாள், இரைந்து கிடக்கும் CD போன்றவற்றை ஒழுங்கு படுத்தி வைக்கிறாள். எல்லாவற்றையும் சரி செய்து விட்டு, கோணல் மாணலாக கிடந்த நாற்காலி மேஜை எல்லாம் சரியாக வைத்து விட்டு, தனக்கு ஒரு நாற்காலியையை இழுத்துப் போட்டு கொண்டு ஜம்மென்று நடுவில் உட்கர்ந்து கொண்டு "இப்ப எப்படி இருக்கு " என்று கேட்கிறாள் ...என்னவோ ரொம்ப நாளாய் இந்த வீட்டை அவள் தான் பராமரித்தது போல...
 
அதில் உங்களுக்கு வருத்தம் ஒன்றும் இல்லையே ?

அனைத்து பொருள்களும் அதனதன் இடத்தில் பொருத்தமாக போய் உட்கார்ந்து கொண்டு விட்டன. 

பட்டரின் மனத்திலும் அபிராமி வந்து இருந்து கொண்டாளாம், ஏதோ பழகிய இடம் போல. 

பாடல் 

 
வருந்தாவகை, என் மனத்தாமரையினில் வந்து புகுந்து, 
இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப் 
பொருந்தாது ஒரு பொருள் இல்லை--விண் மேவும் புலவருக்கு 
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

பொருள் 

வருந்தாவகை,= வருத்தம் இல்லாத வகையில்

என் மனத்தாமரையினில் = என் மனமாகிய தாமரையில்

வந்து = அவள் வந்து

புகுந்து,= புகுந்து 

இருந்தாள், = குடி இருந்தாள்

பழைய இருப்பிடமாக,= இது தான் அவளின் பழைய இருப்பிடம் போல

இனி எனக்குப் = இனி எனக்கு 

பொருந்தாது ஒரு பொருள் இல்லை = பொருந்தாதது என்பது ஆழமான வார்த்தை. பொருத்தம் இல்லாததால் சிக்கல் வருகிறது. உறவுகளில் பொருத்தம் இல்லாததால் சண்டை சச்சரவு வருகிறது. மனக் கசப்பு வருகிறது. மனம் ஓரிடத்தில் பொருந்தா விட்டால், மனம் அலை பாய்கிறது. அந்த இடத்தை விட்டு அகல முயல்கிறது. சினிமா பார்க்க போகிறோம். படத்துடன் மனம் பொருந்தாவிட்டால், எழுந்து வந்து விடுவோம் இல்லையா. அது போல், ஒருமுறை அபிராமி மனதில் வந்து விட்டால், பொருந்தாது என்று ஒன்றே இல்லை. எல்லாம் பொருந்தும். ஏனென்றால் அவளே எல்லாமாய் இருக்கிறாள்.  உள்ளும் புறமும் அவளே என்றானபின் பொருந்தாமல் எங்கே போகும்?

விண் மேவும் = விண்ணுலகில் உள்ள

புலவருக்கு = அறிஞ்ஞர்களுக்கு (தேவர்களுக்கு) 

விருந்தாக = விருந்து எனும்படி

வேலை = கடலில் இருந்து தோன்றிய 

மருந்தானதை = மருந்தான அந்த அமுதத்தை. திருமால் தான் அமுதத்தை வழங்கினார். பட்டருக்கு எல்லாம் அவளாகவே தெரிகிறது.

நல்கும் = கொடுக்கும்

மெல்லியலே = மென்மையையை இயல்பாகக் கொண்டவளே.

1 comment:

  1. பாட்டு இருக்கட்டும், அதற்கு உன் முகவுரை அருமை! நீ சினிமாவில் கதை, வசனம் எழுதப் போகலாம்.

    ReplyDelete