Thursday, November 15, 2012

தேவாரம் - யாதும் சுவடு படாமல்


தேவாரம் - யாதும் சுவடு படாமல்


கோவிலுக்கு செல்லும் போது அமைதியாக, பக்தி நிறைந்த மனதுடன் செல்ல வேண்டும்.

சில பெண்கள் கோவிலுக்குப் போவதே தங்களிடம் உள்ள பட்டு சேலையை காண்பிக்க, புதிதாக வாங்கிய நகைகளை மற்றவர்களுக்கு காண்பிக்கத்தான். 

கோவிலுக்கு வரும் சில பெண்களைப் பார்த்தால் தெரியும்...ஏதோ கல்யாண வீட்டுக்கு வந்ததவர்கள் மாதிரி இருப்பார்கள். 

சத்தம் போட்டு பேசிக் கொண்டு வருவது, இறைவன் திருநாமம் அல்லாமால் மற்ற விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு வருவது...அது எல்லாம் சரி அல்ல. 

நாவுக்கரசர் கோவிலுக்குப் போகிறார். எப்படி ?

பக்தர்கள் முன்னால் போகிறார்கள். அவர், அவர்களின் பின்னால் போகிறார். அதுவும் யாது ஒரு சுவடும் படாமல்...சத்தம் இல்லாமல், தான் வந்ததே தெரியாமல் போகிறார்...அவ்வளவு பணிவு, அடக்கம்....

அப்படி போனதால் அவருக்கு இறை தரிசனம் கிடைத்தது...கண்டறியாதன கண்டேன் என்றார். இந்த உலகமே இறைவனும் இறைவியும் சேர்ந்த திருக் கோலமாய் தெரிந்தது அவருக்கு. 

 



மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.


மாதர்பிறை = அழகிய பிறை போன்ற

கண்ணியானை = தலையில் அணியும் ஒரு அணிகலன் (அர்த்தநாரீஸ்வரர்)

மலையான் மகளொடும் = பார்வதியோடு

பாடி = பாடி

போதொடு= மலர்களோடு

நீர்சுமந்தேத்தி, = அபிஷேக நீரினை சுமந்து செல்லும் பக்தர்கள்

புகுவார் = செல்வார்கள்

அவர்பின் புகுவேன் = அவர்கள் பின்னே நானும் செல்வேன்

யாதும் சுவடு = எந்த வித சுவடும்

படாமல் = இல்லாமல்

ஐயாறு அடைகின்றபோது = திருவையாறு அடைகின்ற போது 

காதல் மடப்பிடியோடு = காதல் கொண்ட பெண் யானையுடன்

களிறு வருவன கண்டேன். = ஆண் யானை வருவதை கண்டேன்

கண்டேன் அவர் திருப்பாதம் = கண்டேன், அவரின் பாதம்

கண்டறியாதன கண்டேன். = இதுவரை கண்டு அறியாத ஒன்றை கண்டேன்

அடுத்த முறை கோவிலுக்குப் போகும் போது "யாதும் சுவடு படமால்" சென்று வாருங்கள்....

2 comments:

  1. மிக அருமையான பாடல். அப்படிப்பட்ட நவுக்கரசருக்கே இப்படி ஒரு பணிவு என்றால், நாம் எல்லாம் எம்மாறு?

    ஆனால், "காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்" என்பதன் பொருள் புரியவில்லை. ஒன்றையுமே கவனிக்காமல் இறைவன் ஒன்றே சித்தம் என்று இருப்பவர்க்கு, எப்படி யானை தெரிந்தது? அதற்கு வேறு ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ?

    பாடலுக்கு உன் உரையும் அருமை. பெண்கள் பட்டுப் புடவை பற்றிப் பேசினால், ஆண்கள் ...?!

    ReplyDelete
    Replies
    1. அதன் பொருள், இந்த உலகில் எல்லாம் அவருக்கு இறைவனும் இறைவியுமாகத் தெரிந்தது. ஆணும் பெண்ணும், சக்தியும் சிவனும், அவனும் அவளுமாகவே தெரிந்தது அவருக்கு. எல்லாம் இறை மயமாகத் தெரிந்தது. இதுவரை பார்க்காத ஒன்று. அவனை தவிர வேறு ஒன்றும் இல்லை இங்கே. எல்லாம் அவனின் வேறு வேறு வடிவங்கள் என்று கண்டார்.

      பெண்கள் சேலை பற்றி பேசுகிறார்கள். ஆண்கள் என்ன செய்வார்கள்? எனக்குத் தெரியாது...

      Delete