Friday, November 30, 2012

இராமாயணம் - கூனி பெற்ற பரிசு


இராமாயணம் - கூனி பெற்ற பரிசு 


நம்ம வீட்டில் எல்லாம் தரைக்கு மொசைக் போடுவோம், மார்பிள் போடுவோம், கிரானைட் போடுவோம். தசரதனின் அரண்மனையில் அப்படி ஏதாவது உயர்ந்த கற்களை கொண்டு தளம் போட்டுத்தானே இருப்பார்கள் ?

கூனிக்கு கைகேயி முத்து மணிமாலை பரிசாக கொடுத்தாள். அதை வாங்கிய கூனி அதை தரையில் ஓங்கி எறிந்தாள். ஆனால் கம்பன் அப்படி சொல்லவில்லை. அடையும் கவி நயத்தோடு சொல்கிறான்...எப்படி தெரியுமா ?

அப் பொன்மாலையால் குழித்தனள் நிலத்தை என்றான்.

அதாவது நிலத்தை குழி ஆக்கினாளாம்...அவள் எறிந்த வேகத்தில் மாளிகையின் தரை பிளந்து குழி ஆனது என்கிறான் கம்பன்.....எவ்வளவு கோவம்...எவ்வளவு கற்பனை...
 
பாடல் 


தெழித்தனள்; உரப்பினள்; சிறு கண் தீ உக
விழித்தனள்; வைதனள்; வெய்து உயிர்த்தனள்;
அழித்தனள்; அழுதனள்; அம் பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை - அக் கொடிய கூனியே.

பொருள் 

தெழித்தனள் = தெழிதல் என்றால் சப்தம் உண்டாக்குவது. எந்த மாதிரி சப்தம் என்றால், தயிர் கடையும் போது சர் சர் என்று ஒரு சத்தம் வருமே, கொஞ்சம் நுரையோடு, மதத்தின் இடையில் சென்று வரும் தயிரின் ஓசை ...அதற்க்கு தெழித்தல் என்று பெயர்

உரப்பினள்; =  உரத்துதல் என்றால் யானை போல் சத்தம் எழுப்புதல்
 
சிறு கண் தீ உக = அவளுடைய சிறிய கண் தீ பொறி பறக்க

விழித்தனள்; = விழித்துப் பார்த்தாள்

வைதனள்; = திட்டினாள்

வெய்து உயிர்த்தனள்; = சூடான பெருமூச்சு விட்டாள்

அழித்தனள்; = தன் கோலத்தை அழித்தாள்

அழுதனள்; = அழுதாள் 

அம் பொன் மாலையால் = அந்த பொன் மாலையால்

குழித்தனள் நிலத்தை = நிலத்தை குழி ஆக்கினாள் (அதாவது தரை உடையும்படி வீசி எறிந்தாள்)

அக் கொடிய கூனியே.= அந்த கொடிய கூனியே 

கூனியின் கூன் வயதால் வந்தது அல்ல. அவளுக்கு பிறவியிலேயே வந்தது கூன். ஒருவரின் உடல் ஊனத்தை கேலி செய்வது பண்பாடு ஆகாது. கம்பனுக்குத் தெரியாதா அது ? 

கூனியை அவன் எப்படி அறிமுகப் படுத்துகிறான் தெரியுமா ?


2 comments:

  1. ஐயோ என்ன வர வர ரொம்ப suspense வைக்க ஆரம்பித்து விட்டாய்.

    ReplyDelete
  2. இராமன் கூனியை பழித்ததால்தானே அவளுக்குக் கோபம் வந்தது? அதைக் கம்பர் எப்படிக் கையாளுகிறார்?

    ReplyDelete