Showing posts with label Thiru Kural. Show all posts
Showing posts with label Thiru Kural. Show all posts

Saturday, February 22, 2014

திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை

திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை 




தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.

எல்லோரும் அறிந்த குறள் தான். தெய்வத்தை வணங்க மாட்டாள். கொண்ட கணவனை வணங்கி எழுவாள். அவள், பெய் என்றால் மழை பெய்யும். 

வள்ளுவர் இவ்வளவு சாதரணமாக ஒரு குறளை எழுத மாட்டாரே. இதில் ஆழமான அர்த்தம் எதுவும் இருக்குமா ?

தொழுது எழுவாள் - அது எப்படி முடியும் ? எழுந்து தொழுவாள் என்று தானே இருக்க வேண்டும். தூக்கத்தில் இருந்து எழுந்து, பின் தொழ முடியும். தொழுதுகொண்டே எப்படி எழ முடியும்? 

ஒரு செயலை நாம் நம் உடலுக்கு வழக்கப் படுத்தி விட்டால் பின் அது நாம் நினைக்காமலேயே, சொல்லாமலேயே செய்து விடும். 

சுந்தர மூர்த்தி நாயனார் தன் நாவுக்கு நமச்சிவாய என்ற மந்திரத்தை பழக்கப் படுத்தி  வைத்தார்.

"சொல்லு நா நமச்சிவாயவே"

நான் மறந்தால் கூட என் நாக்கு மறக்காதுஎன்றார் 

மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன் 
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உன்னை  நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.



நான் மறந்தாலும் என் நா மறக்காது  என்கிறார்.

அது போல் அவளுக்கு அவன் மேல் அவ்வளவு மதிப்பு, மரியாதை. அந்த மதிப்பும் மரியாதையும்  அவனைக் கண்டபோது மட்டும் அல்ல, காணாத போதும்   அது இருக்கும். தூக்கத்தில் கூட அந்த மரியாதை இருக்கும். எனவே, துயில்  எழும் போதே வணங்கி எழுவாளாம். தொழுது எழுவாள். 

தெய்வத்தை தொழ மாட்டாள் ஆனால் கணவனை தொழுது எழுவாள் என்றால் அவ்வளவு சரியாக இல்லையே. கடவுளை விட மனிதன் உயர்வா ? வள்ளுவர் அப்படி எழுதுவாரா ?

பரிமேல் அழகர் உரை எழுதுகிறார்...

தெய்வந் தொழுதற்கு மனந் தெளிவது துயிலெழுங் காலத்தாகலின் 'தொழுதெழுவா' ளென்றார். 

தெய்வத்தை தொழுவதற்கு மனம் தெளிவாக இருக்க வேண்டும். தூங்கி எழும் காலத்தில் அவ்வளவு தெளிவு இருக்காது. எனவே முதலில் கணவனை தொழுது எழுந்து , பின் நீராடி, பூஜை செய்து கடவுளை பின் தொழுவாள் என்று அர்த்தம். 

பெய் என்று சொன்னவுடன் பெய்யும் மழை எவ்வளவு இனிமையானது ? நமக்கு  வேண்டிய நேரத்தில் வேண்டிய அளவு வேண்டிய இடத்தில் பெய்யும் மழை எவ்வளவு சுகமானது ?

கணவனை தொழுது எழும் பெண் அப்படிப் பட்ட மழைப் போன்றவள். 

வெள்ளமாக வந்து ஊரைக்  கெடுக்காது.

காலத்தில் வரமால் இருந்து பயிரைக் கருக்காது. 

பெய் என்று சொன்னால் பெய்யும் மழை போன்றவள் அந்தப் பெண்.



Thursday, February 20, 2014

திருக்குறள் - நாணும் மறந்தேன்

திருக்குறள் - நாணும் மறந்தேன் 


பெண்ணின் மனதை, அவளின் காதலை, அவளின் நாணத்தை வள்ளுவரை போல இன்னொரு கவிஞரால் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

வள்ளுவர் குறள் ஒரு பக்கம் என்றால் பரிமேல் அழகரின் உரை இன்னொரு பக்கம்  மெருகூட்டுகிறது.

அவளும் எவ்வளவு நாள் தான் மறைத்து மறைத்து வைப்பாள் தன் காதலை. நாளும் நாளும் அது மனதில் பெருக்கிக் கொண்டே வருகிறது. அவள் தான் என்ன செய்வாள் பாவம். தன் தோழியிடம் தன் காதலைச் சொல்லுகிறாள். வெட்கம் தான், நாணம் தான், என்ன செய்ய. சொல்லவும் முடியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. பாழாய்ப்போன இந்த மனம் படுத்தும் பாடு.

நாணத்தையும் மறந்து விட்டேன். அவரை மறக்க முடியாத இந்த மட நெஞ்சினால் என்று வெட்கப் படுகிறாள்.


பாடல்


நாணும் மறந்தேன்-அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு.

பொருள்

நாணும் மறந்தேன் = நாணத்தை மறந்தேன் என்று சொல்லவில்லை. நாணத்தை"யும்" மறந்தேன் என்கிறாள். அப்படியென்றால் நாணத்தோடு கூட அச்சம், மடம் , பயிர்ப்பு என்ற பெண்மைக்கே உரிய குணங்களையும் மறந்தேன் என்று பொருள். 

அவர் மறக்கல்லா = அவரை மறக்க முடியாத 

என் = என்னுடைய

மாணா = மாட்சிமை இல்லாத

மட நெஞ்சின் பட்டு = மட நெஞ்சோடு சேர்ந்து.

இந்த பாடலுக்கு பரிமேல் அழகரின் உரை இதன் சிறப்பை எங்கோ கொண்டு செல்லுகிறது.

பரிமேல் அழகரின் உரை சற்று கடினமானது. கொஞ்சம் எளிமை படுத்தி  தருகிறேன்.

நாணம் என்றால் என்ன ?  வெட்கம்.

வெட்கம் என்றால் ?

முதன் முதலில் ஒரு பெண், தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு ஆணோடு பேசும்போது ,  பழகும் போது உண்டாகும் ஒரு வித கூச்சம் கலந்த பயம் என்று  சொல்லலாம். ஆனால் அது நாள் ஆக நாள் ஆக குறைய வேண்டும் அல்லவா ? அதுதான் இல்லை என்கிறார் பரிமேல் அழகர். ஒவ்வொரு முறை பழகும் போதும்  அந்த உணர்ச்சி இருந்து கொண்டே  இருக்குமாம்.


பரிமேல் அழகரின் உரை

நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல்,

எவ்வளவு நாள் கூடி வாழ்ந்தாலும், ஏதோ அன்றைக்குத் தான் முதன் முதலாக பார்ப்பவர் போல புலன்களை ஒடுக்கி இருத்தல் என்கிறார்.  அடக்கம்.கூச்சம். பயம். என்ற அனைத்தின் கலவை இந்த நாணம்.



மடமை என்றால் ஏதோ முட்டாள் தனம் என்று நினைத்துக்  கொண்டிருக்கிறோம்.பெண்களுக்கு இயல்பாகவே கொஞ்சம் மடத்தனம் இருக்கும் என்று ஒரு நினைப்பு  நமக்கு.

பரிமேல் அழகர் அதற்கு விளக்கம்  தருகிறார்.

மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல்.

புரிகிறதா ? கொஞ்சம் அடர்த்தியான வாக்கியம்.

எளிமைப் படுத்துவோம்.

பெண்கள், தங்கள்  காதலனோ,கணவனோ இல்லாத போது  அல்லது வரத் தாமதம் ஆனால் அவர்களையே நினைத்துக்  கொண்டிருப்பார்கள்.என்ன இன்னும் காணமே, இப்ப வர்ற நேரம்  தானே, ஒரு வேளை ஏதாவது பிரச்சனையா , அவருக்கு ஆபத்தா என்று மனம் கிடந்து அடித்துக் கொள்ளும்  அவர்களுக்கு. வரட்டும் , இன்னைக்கு பேசிக்கிறேன் என்று கொப்பிப்பார்கல்.

அந்த கணவனோ, காதலனோ வந்து விட்டால் பின் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் சிறிது நேரத்தில்.


கண்டவழி நினைந்து = பார்க்கும் போது நினைத்து

காணாதவழி மறக்குந் = பார்க்காத போது மறக்கும் 

தவற்றைக் = அந்தத் தவற்றை

காணாவழி நினைந்து  = காணாத போது நினைத்து

கண்டவழி மறத்தல் =   காண்கின்ற போது  மறந்து விடுவார்கள்.

எழுதும் போது கோல் காணாக் கண் போல் என்பார் வள்ளுவர் மற்றொரு இடத்தில்



இதைப் படிக்கும் ஆண்களுக்கு, இன்னும் அர்த்தம் புரியவில்லை என்றால் உங்கள்   ,காதலியிடமோ, மனைவியிடமோ இதை வாசித்துக் காட்டி சரிதானா என்று  கேளுங்கள். அவர்களின் உதட்டோரம் மலரும் ஒரு புன்னகை, இது சரிதான் என்பதற்கு ஒரு அத்தாட்சி முத்திரை.




Tuesday, December 10, 2013

திருக்குறள் - வினையும் மனமும்

திருக்குறள் - வினையும் மனமும் 


அவன் நல்ல பள்ளிக் கூடத்தில் படித்தான், அதனால் நிறைய மார்க்கு வாங்கினான்.

அவனுக்கு நல்ல வாத்தியார்  கிடைத்தார்,எனக்கும் அந்த மாதிரி கிடைத்தால், நானும் தான் நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருப்பேன்.

அவனுக்கு நல்ல பெண்டாட்டி கிடைத்தாள் , எனக்கும் ஒண்ணு வந்து வாய்த்ததே....

அவனுக்கு அவங்க அப்பா நாலு காசு சேர்த்து வச்சிட்டு போனாரு, அவன் அதை வச்சு முன்னுக்கு வந்துட்டான்... எங்க அப்பா எனக்கு என்னத்த வச்சிட்டு போனாரு...

இப்படி தான் வாழ்வில் முன்னேறாததற்கு எதை எல்லாமோ காரணம் சொல்லுவார்கள்.

மனிதனின் வெற்றிக்கு முதல் காரணம் அவனின்  உறுதியான மனமே...

எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்க வேண்டும் என்ற உறுதியான மனமே வெற்றிக்குக் காரணம்.

அப்பா, அம்மா, சொத்து, பள்ளிக் கூடம், வாத்தியார், மனைவி, அதிர்ஷ்டம் என்று  இவைஎல்லாம் அதற்க்குப் பின்னால் தான்.

இவையும் தேவை தான். ஆனால், மன உறுதி இல்லா விட்டால், இவை இருந்தும் பயன் இல்லை. மன உறுதி இருந்து விட்டால் , இவை இல்லாவிட்டாலும் மேலே வந்து விடலாம்.


பாடல்

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.

பொருள்


வினைத்திட்பம்  என்ப = வினையை செய்து முடிக்கும் திண்மை என்பது

ஒருவன் = ஒருவனின்

மனத்திட்பம் = மன உறுதியை பொறுத்து அமைவது

மற்றைய எல்லாம் பிற = மற்ற விஷயங்கள் எல்லாம் , அதற்க்கு அடுத்தது தான்.

பிற என்றால் "secondary " என்று கொள்ளலாம்.

காரியத்தை செய்து முடிக்க முதலில் வேண்டியது - மன உறுதி.

மனதில் உறுதி வேண்டும் என்றான் பாரதி.

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா என்பதும் அவன் வாக்கே.



Saturday, July 27, 2013

திருக்குறள் - உயர்வடைய

திருக்குறள் - உயர்வடைய 


வாழ்வில் உயர வேண்டும் என்று யார் தான் விரும்ப மாட்டார்கள் ? எப்படி வாழ்க்கையில்  உயர்வது.

வள்ளுவர் மிக மிக எளிமையான வழி ஒன்றைச் . சொல்லித் தருகிறார்.


அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

அழுக்காறு உள்ளவன் இடத்தில் ஆக்கம் இல்லாதது போல பொறாமை கொண்டவனிடம் உயர்வு இருக்காது.

அவ்வளவுதானா?

இல்லை இன்னும் கொஞ்சம் இருக்கு.

நாம்: ஐயா, ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு  சொல்றீங்களே...நிச்சயமா சொல்ல முடியுமா ?

வள்ளுவர்: நிச்சயமாக சொல்கிறேன்.

நாம்: எவ்வளவு நிச்சயம் ஐயா ?

வ:  பொறாமை உள்ளவனிடம் ஆக்கம் இருக்காது என்பது எவ்வளவு நிச்சயமோ  அவ்வளவு நிச்சயம் ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது.

நாம்: அப்படி இரண்டு விஷயத்தை ஒரே குறளில் சொல்லிட்டீங்க. மிக்க நன்றி ஐயா.  அப்ப நாங்க வரட்டுமா.


வ: கொஞ்சம் இருங்க தம்பி....இன்னும் முடியல. இதுல இன்னொரு விஷயமும்  இருக்கு.

நாம்: அது என்னது ஐயா ?

வள்ளுவர்: ஒருவனுக்கு ஒழுக்கம் இல்லை என்றால், அது அவன் உயர்வை மட்டும் பாதிக்காது, அவன் குடும்பம், சுற்றம் என்று எல்லோரையும் பாதிக்கும்.

நாம்: அது எப்படி ஐயா ?

வள்ளுவர்: இப்ப ஒரு குடும்பப் பெண் கொஞ்சம் ஒழுக்கம் தவறி நடக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம் ...அது அவளை மட்டுமா பாதிக்கும் ? அவளுடைய பிள்ளைகள்,  அவளுடைய சகோதரான, சகோதரி, பெற்றோர் என்று எல்லோரையும் பாதிக்கும் அல்லவா ?

நாம்: ஆம் ஐயா....ஒரு பெண் ஒழுக்கம் தவறினால் அது அந்த குடும்பத்தையே பாதிக்கும்.

வள்ளுவர்: அதே போல ஒரு ஆண் ஒழுக்கம் தவறினாலும் அது குடும்பத்தையும்  அவன் சுற்றத்தாரையும் பாதிக்கும். ஒரு ஆண் கொலை செய்து விட்டான்,  திருடிவிட்டான் அல்லது வேறு ஏதேனும் ஒழுக்கக் குறைவான செயலை செய்து விட்டால் .... ஊரார் அவன் பிள்ளையை பார்க்கும் போது என்ன சொல்லுவார்கள் ? கொலை காரன் பிள்ளை , திருடன் பிள்ளை என்றுதானே உலகம் பேசும், ஏசும் ? அவன் பிள்ளைகளுக்கு யாராவது பெண் கொடுப்பார்களா ? அவன் வீட்டில் யாராவது பெண் எடுப்பார்களா ?

நாம்: சரிதான் ஐயா ஒருவன் ஒழுக்கம் தவறினால் அது அவன் குடும்பத்தையே  பாதிக்கும் என்பது சரிதான். ஆனால் அந்த அர்த்தம் இந்த குறளில் எங்கே  வருகிறது ?


வள்ளுவர்: நீ அழுக்காறு என்ற அதிகாரத்தில் உள்ள எல்லா குறளையும் படி. கொடுப்பது  அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி கெடும் என்று சொல்லி இருக்கிறேன். அதாவது அழுக்காறு யாரிடம் இருக்கிறதோ, அவன் சுற்றத்தார்  உண்ண உணவும், உடுக்க துணியும் இல்லாமல் கஷ்டப் படுவார்கள்   என்று சொல்லி இருக்கிறேன்.

அப்படி பொறாமை கொண்டவனின் சுற்றமும் கஷ்டப்  படுவது போல,ஒழுக்கம் இல்லாதவனின்  சுற்றமும் உயர்வு இன்றி கஷ்டப்படும்.

 நன்றி ஐயா. 

Monday, July 22, 2013

திருக்குறள் - நினைவு நல்லது வேண்டும்

திருக்குறள் - நினைவு நல்லது வேண்டும் 


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி 
னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

மறந்தும் கூட மற்றவர்களுக்கு தீமை நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால், நினைத்தவனை அறக் கடவுள் தண்டிப்பார்.

விரிவுரை

மறந்தும் பிறன் கேடு  செய்யற்க என்று சொல்லவில்லை.   சூழுதல் என்றால் நினைத்தால். மறந்தும் பிறருக்கு கேடு நினைக்கக் கூடாது.

மாறாக நினைத்தால், நினைத்தவனுக்கு கேட்டினை அறம் நினைக்கும்.

சற்று உன்னிப்பாக பார்த்தால் பிறருக்கு கேடு நினைத்தாலே போதும் , உடனே தண்டனைதான். கேடு செய்ய வேண்டும் என்று இல்லை.

நினைப்பது கூட வேண்டும் என்றே நினைக்கவேண்டும் என்று இல்லை. மறந்து போய் நினைத்தால் கூட போதும், உடனே தண்டனை தான்.

சில சமயம், சில பேர் மேல் கோபம் வரும். கோபத்தில் என்ன செய்கிறோம் என்ன சொல்கிறோம் என்று தெரியாது. "அவன் நாசமாக போக வேண்டும், அவன் துன்பப் படவேண்டும் " என்று நாம் நினைக்கவும் கூட செய்யலாம். பின்னால் கோபம்   போன பின் நாம் அப்படி நினைத்ததை மறந்து கூட போவோம். ஆனால், அறம் மறக்காது. அப்படி மற்றவர்களுக்கு துன்பம் நினைத்தால்  அறம் நமக்கு துன்பம் நினைக்கும்.

சில சமயம் மற்றவர்கள் நமக்கு கெடுதல் செய்து இருப்பார்கள். வேண்டும் என்றே நமக்கு வரவேண்டிய  நல்லதை தடுத்து இருப்பார்கள். நமக்கு நட்டம் ஏற்படுத்தி இருப்பார்கள். நமக்கு துன்பம் செய்தவர்கள் , துன்பப் படவேண்டும் என்று நாம் நினைப்பது  இயற்கை.

கூடாது என்கிறார் வள்ளுவர்

மற்றவர்களுக்கு நாம் துன்பம் ஒரு போதும் நினைக்கக் கூடாது - அவர்கள் நமக்கு துன்பமே செய்து இருந்த போதும்.

பழிக்குப் பழி என்ற எண்ணம் அறவே கூடாது.

தெரிந்தோ தெரியாமலோ பிறருக்கு துன்பம் நினைக்கக் கூடாது.

நினைவுகளுக்கு பெரிய ஆற்றல் உண்டு.

சட்டம் உங்களை தண்டிக்காமல் போகலாம். மற்றவர்களுக்குத் துன்பம் நினைப்பது  சட்டப் படி குற்றம் இல்லை. மற்றவர்களுக்கு துன்பம் செய்தால்தான் குற்றம்.

ஆனால், வள்ளுவரின் நீதி மன்றத்தில் நினைத்தாலே குற்றம்.

 மற்றவர்களுக்கு துன்பம் நினைக்கும் போது , நீங்கள் உங்களுக்கே துன்பம் விளைவித்துக்  கொள்கிறீர்கள்.

யோசிப்போம்.


Thursday, July 18, 2013

திருக்குறள் - நம் கடமை

திருக்குறள் - நம் கடமை 


இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன ? இதன் நோக்கம் என்ன ? எதற்காக பிறந்தோம் ? எதற்காக வாழ்கிறோம் ? நாம் என்ன செய்கிறோம் ? நாம் செய்வது சரிதானா ? இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்ன கிடைக்கும் ? எதில் முடியும் ?

இப்படி வாழ்வின் சில விடை காண முடியாத கேள்விகள் நம்முள் எழுவது இயற்கை.

இதற்கு எப்படி விடை காண்பது ? வாழ்வின் குறிக்கோள், வாழ்வில் செய்ய வேண்டிய கடமை என்ன ?

வள்ளுவர் வழி சொல்கிறார். கோடி காட்டுகிறார்.  பாதையை காட்டுகிறார். அதில் பயணிக்க வேண்டியது நம் பொறுப்பு.



தவஞ்செய்வார் தம்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு.


வாழ்வின் நோக்கம் தவம் செய்வது. அதைத் தவிர மற்றது எல்லாம் ஆசை வயப்பட்டு துன்பம்  செய்வதாகும்.

கொஞ்சம் விரித்துப் பொருள் காண்போம்.

தவஞ்செய்வார் தம்கருமஞ் செய்வார் = தவம் செய்பவர்கள் தங்கள் கடமையை செய்பவர்கள்.

மற் றல்லார் = மற்றவர்கள் , அதாவது தவம்  செய்யாதவர்கள்

அவஞ்செய்வார் = துன்பம் செய்வார்

ஆசையுள் பட்டு = ஆசையுள் பட்டு

மீண்டும் மீண்டும் பிறந்து பின் இறந்து இந்த சுழலில் சிக்கித் துன்புறும் உயிரை அந்த துன்பத்தில் இருந்து மீட்டு வீடு பேறு அடையச் செய்வதே இந்த வாழ்க்கையின் நோக்கம்.

வீடு வாங்குவது, நகை நட்டுகள் வாங்குவது, ஊர் சுற்றுவது, உண்பது, உடுப்பது இவற்றிற்காக நாம் இந்த பிறவியை எடுக்க வில்லை.

மனித வாழ்வின் நோக்கம், குறிக்கோள், பயன் பிறவிப் பிணியில் இருந்து விடுபடுவது . அதற்க்கு ஒரே வழி தவம் செய்வது.

அதை விடுத்து செய்யும் மற்றது எல்லாம் பிணி மூப்பு சாக்காடு என்ற முத்துன்பத்தில்  இருந்து விடுபடாமல் அதிலேயே மீண்டும் மீண்டும் சிக்க வைப்பது.

தவம் உடலுக்கு துன்பம் தரக்கூடியது. உயிருக்கு நன்மை தரக் கூடியது.

தவம் அல்லாத மற்றது உடலுக்கு சில காலம் இன்பம் தரலாம் பின் அதே இன்பம் துன்பமாக மாறி விடும். அது மட்டும் அல்ல, அது உடலைத் தாண்டி உயிர்க்கும்  துன்பம் தரும்.

எப்படி ?

தவம் அல்லாத மற்றவைகளை செய்யும் போது, பாவ புண்ணியம் நிகழ்கிறது. அவற்றை அனுபவிக்க இந்த உயிர் மீண்டும் பிறப்பு எடுக்க வேண்டி வரும்.

என்ன செய்கிறோம்...எதற்கு செய்கிறோம் என்று யோசித்துச் செய்யுங்கள்.

நன்றாக யோசித்த வள்ளுவர் சொல்கிறார் - தவம் செய்யுங்கள் என்று.

அப்புறம்  உங்க இஷ்டம்....





Sunday, July 14, 2013

திருக்குறள் - அழுக்காறு

திருக்குறள் - அழுக்காறு 




அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

அழுக்காறு என்றால் பொறாமை. அழுக்கு ஆறு போல வருவதால் அழுக்காறு என்று பெயர் வைத்து இருப்பார்களோ ?

பொறாமை யார் கொள்கிறார்களோ அது அவர்களுக்குத் தான் நிறைய தீமை செய்கிறது.

வள்ளுவர் சொல்கிறார், நாம் யார் மேல் பொறாமை கொள்கிறோமோ, அவர்களை வென்றால் கூட பொறாமை நமக்குத் தீமை செய்து கொண்டே இருக்கும் என்கிறார்.

மேலும், அழுக்காறு உள்ளவர்களுக்கு வேறு பகைவர்களே வேண்டாம். அந்த அழுக்காரே அவர்களுக்கு பகைவர்கள் செய்யும் துன்பத்தைச்  செய்யும்.


அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.



சீர் பிரித்தபின்

அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு ஈன்பது

பொருள்


அழுக்காறு = பொறாமை

உடையார்க்கு = உடையவர்களுக்கு

அது சாலும் = அதுவே போதும் (வேறு எதுவும் வேண்டாம் )

ஒன்னார் = பகைவர்கள்

வழுக்கியும் = தோற்றபின்னும்

கேடு ஈன்பது  = கேடு தருவது.

ஒரு பகைவர் போன பின்னும், பொறாமை அடுத்தவன் மேல் பாயும். எனவே அது எப்போதும் துன்பம் தந்து கொண்டே இருக்கும்.



Friday, July 12, 2013

திருக்குறள் - நட்பின் கடமை

திருக்குறள் - நட்பின் கடமை 


நட்பு என்றால் என்ன ?

நண்பர்கள் என்றால் நாம் பொதுவாக என்ன நினைப்போம் ?

அவர்கள் வீட்டில் ஏதாவது நல்லது கெட்டது நடந்தால் அழைப்பார்கள். அதே போல் நாமும் அழைப்போம். பணம் காசு வேண்டும் என்றால் ஒருத்தருக்கு ஒருவர் உதவி செய்வது. முடிந்தால் அப்பப்ப மெயில் அனுப்புவது, அல்லது போன் பண்ணுவது.

இதுதானே நண்பர்களுக்கு அடையாளம் ?

வள்ளுவர் நட்பை ஒரு மிகப் பெரிய உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்.

வள்ளுவருக்கு எல்லாமே அறம் தான். வாழ்கையை அற வழியில் செலுத்த நட்பு மிக மிக அவசியம்.


அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

வள்ளுவர் கூறுகிறார்

நண்பன் அறம் அல்லாத வழியில் செல்லும் போது அவனை (ளை ) தடுத்து நிறுத்தி, அவனை நல்ல வழியில் செலுத்தி அப்படி நல் வழியில் செல்லும் போதும் துன்பம் வந்தால் அவனோடு சேர்ந்து அந்த துன்பத்தை அனுபவிப்பது நட்பு.

அற வழியில் செல்லும் போது துன்பம் வருமா என்றால் பரிமேல் அழகர் சொல்லுகிறார் தெய்வத்தால் வரும் கேடு என்கிறார். முன் வினைப் பயனால் வரும் கேடு.

 
அழிவின் அவைநீக்கி = அழிவு வரும் போது அவற்றை நீக்கி. அழிவு பல விதங்களில் வரலாம். அறம் அல்லாத வழியில் செல்வதால் அழிவு வரும் என்கிறார் பரிமேல் அழகர். நீங்கள் அதை விரித்து பொருள் கொள்ளலாம். அழிவில் இருந்து நண்பர்களை காக்க வேண்டும்.

ஆறுய்த்து = ஆறு + உய்த்து = ஆறு என்றால் வழி. வழி என்றால் நல்ல வழி என்பது பெரியவர்களின்எண்ணம் . நெறி அல்லா நெறி தன்னை, நெறியாக கொள்வேனை என்பார் மாணிக்க வாசாகர். நெறி அல்லாத நெறி என்பது தீய நெறி. நெறி என்றால் நல்ல நெறிதான். நல்ல வழியில் நண்பர்களை செலுத்தி.

அழிவின்கண்  = இதையும் மீறி அழிவு வந்தால்

அல்லல் உழப்பதாம் நட்பு = அந்த துன்பத்தை, நண்பரோடு சேர்ந்து அனுபவிப்பது நட்பு

நமக்கு எத்தனை நண்பர்கள் அப்படி இருக்கிறார்கள் ?

நாம் எத்தனை பேருக்கு அப்படி நண்பர்களாய் இருக்கிறோம் ?

நம் பிள்ளகைளுக்கு அப்படி நண்பர்களாய் இருக்க கற்றுத் தருவோம்.













Wednesday, July 3, 2013

திருக்குறள் - நட்பு

திருக்குறள் - நட்பு


திருக்குறள் படிப்பது அதற்கு புதுப் புது அர்த்தங்கள் சொல்லுவதற்காக அல்ல.


திருக்குறள் நமக்கு வாழ்க்கையில் பயன் பட வேண்டும், வழி காட்ட வேண்டும், நம்மை உயர்ந்தவர்களாக ஆக்க வேண்டும்.

ஹா..இதில் என்ன நுணுக்கமான, புதுமையான அர்த்தம் எதுவும் இல்லையே என்று  எந்த குறளையும் தள்ளி விடக் கூடக் கூடாது.

எல்லா குறளிலும் வார்த்தை விளையாட்டுகள் இருக்காது. குறள் படிப்பதின் நோக்கம் அதில் உள்ள இலக்கணம், வார்த்தை செறிவு, எதுகை மோனை போன்ற யாப்புச் சிறப்பு இவற்றை அறிந்து வியக்க அல்ல.

குறள், அறம் சொல்ல வந்த நூல். அதற்காக, அதைப் படிக்க வேண்டும். படித்தபின் அதன் படி நடக்க வேண்டும்.


நட்பு

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.



பொருள் 

செயற்கரிய = செய்வதற்கு அரிய 

யாவுள = எது உள்ளது 

நட்பின் = நட்பை விட 

அதுபோல் = அந்த நட்பை போல 

வினைக்கரிய = வினை செய்வதற்கு அரிய 

 யாவுள காப்பு.= எது காவலாய் இருக்கும் 


வாழ்வில் மிகப் பெரிய செயல் எது என்றால் சிறந்த நட்பை பெறுவது. அப்படி ஒரு நடப்பை பெற்றால், உலகில் சாதிக்க முடியாத செயல் ஒன்று எதுவும் இல்லை. நல்ல நட்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்.


நட்பு என்ன பெரிய காரியமா ? நமக்கு எல்லாம் எத்தனை நண்பர்கள் ? இதில் என்ன பெரிய கஷ்டம் என்று கேட்டால்....

பொதுவாக நமக்கு வாய்ந்த நட்புகள் நம்முடைய முயற்சியால் அமைந்ததாக இருக்காது. சந்தித்தோம், பழகினோம்...அவ்வளவுதான்.

பரிமேல் அழகர் உரை எழுதுகிறார்...

நட்பு கொள்ள வேண்டியவர்களை தேர்ந்து எடுப்பது , தேர்ந்து எடுத்தபின் அவர்களோடு நடப்பாக இருப்பது, நட்பாக இருக்கும் போது அந்த நடப்பில் சிக்கல் வந்தால் அவற்றை சரி செய்வது....இது  எல்லாம் மிக மிக கடினமான விஷயம் என்கிறார்.

நாம் எங்கே தேர்ந்து எடுக்கிறோம். அதுவாக  நிகழ்கிறது.

நிகழ்ந்த பின்னும், அந்த நடப்பை போற்றி பாதுகாக்க பெரு முயற்சி செய்கிறோமா ? 

நட்பு என்பது   மிகப் பெரிய விஷயம். 

அதைப் பற்றி வள்ளுவர் மேலும் சொல்கிறார்.

அதை பார்பதற்கு முன், உங்கள் நபர்களின் பட்டியலைப் போடுங்கள். கையில் அதை தயாராய் வைத்துக்  கொள்ளுங்கள். பின்னால் வரும் குறட்பாக்களை  சிந்திக்கும்போது , அந்தப் பட்டியலை அடிக்கொருதரம் பார்த்துக் கொள்ளுங்கள்....




Friday, June 28, 2013

திருக்குறள் - செவிச் செல்வம்

திருக்குறள் - செவிச் செல்வம்


செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச் செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

செல்வங்களில் எல்லாம் பெரிய அல்லது உயர்ந்த செல்வம் செவியாகிய செல்வம். அந்த செவிச் செல்வம் மற்ற எல்லா செல்வங்களையும் விட உயர்ந்தது.

நான் ரொம்ப நாள் யோசித்து இருக்கிறேன்...ஏன் செல்வத்துள் செல்வம் விழிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று விழியைச் சொல்லவில்லை.

செவியை விட கண் தானே உயர்வு. காது கேட்காவிட்டால் வரும் துன்பம் கண் தெரியாததால் வரும் துன்பத்தை விட குறைவு தானே.

மேலும், காதால் கேட்பது என்றால் சொல்லும் ஆள் ஒருவர் வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆளைத் தேடித் போக வேண்டும். அவருக்கு நேரம் இருக்க வேண்டும். அதைவிட நமக்கு எது வேண்டுமோ அது சம்பந்தப் பட்ட புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ளலாமே ? ஒரு நல்ல புத்தகக் கடைக்குப் போனால், ஒரு நூலகத்திற்கு போனால் எவ்வளவு புத்தகங்கள் கிடைக்கும். வாங்கி வசித்து அறிந்து கொள்ளலாமே ...அதற்க்கு கண் எவ்வளவு முக்கியம்...அப்படி இருக்க ஏன் வள்ளுவர் செவியை பெரிதாகச் சொன்னார் என்று மண்டையை உடைத்து கொண்டிருக்கிறேன்

அப்புறம் நான்  நினைத்தேன், வள்ளுவர் காலத்தில் எல்லாம் ஓலைச் சுவடிதான். ரொம்ப எழுத முடியாது. ஒரு  ரொம்ப சுருக்கமாக எழுத வேண்டும். அர்த்தம் புரிய வேண்டும் என்றால்  யாரிடமாவது கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே அப்படி சொல்லி இருப்பார் என்று விட்டு விட்டேன்.

மேலும், இப்போது கம்ப்யூட்டர் கூகிள் எல்லாம் இருக்கிறது. எது வேண்டுமானாலும்  ஒரு நொடியில் நமக்கு கிடைக்கும். பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.

எனவே கண்தான் உயர்ந்தது. செவி அப்படி ஒன்றும் பெரிய செல்வம் இல்லை என்று நினைத்து,....ஏதோ வள்ளுவர் அந்த காலத்திற்கு எழுதியது இந்த காலத்திற்கு சரி வராது என்று இந்த குறளை காலாவதியான குறள் என்று ஒதுக்கி விட்டேன்.

பல உரைகளை படித்துப் பார்த்தேன். புதிதாக ஒன்றும் புலப்படவில்லை.

சரி, ஒரு குறள் காலத்திற்கு ஒவ்வாத குறள் என்று முடிவு செய்தேன்.

வயது வயது ஆக இந்த  குறளின்  உண்மையான அர்த்தம் பிடிபடத் தொடங்கியது.

வள்ளுவர் எவ்வளவு பெரிய ஆள் என்று பிரமிப்பு ஏற்பட்டது. எவ்வளவு மடத்தனமாக நான் வள்ளுவரை குறைவாக எடை போட்டு விட்டேன் என்று தோன்றியது.

வள்ளுவர் சொன்னதுதான் சரி. நான் நினைத்தது தவறு.

ஏன் என்பதை அடுத்த ப்ளாகில் எழுதுகிறேன். ஒரே ப்ளாகில் ரொம்ப எழுதினால்  உங்களுக்கும் சலிப்பு ஏற்படும்.

நாளை அடுத்த ப்ளாக் வரும்வரை நீங்களும் யோசித்துக்  கொண்டு இருங்கள்.

ஏன் கண்ணை விட காது சிறந்தது ?




Thursday, June 27, 2013

திருக்குறள் - களவு

திருக்குறள் - களவு



களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.

பொருள் : களவின் மூலம் உண்டாகிய செல்வம் நிறைய அளவு கடந்து ஆவது போல தோன்றி, பின்னால் அழியும்.

இது பள்ளிகளில் நாம் படித்தது.

அதாவது தீய வழியில் சேர்த்த செல்வம் நிலைத்து நிற்காது என்பதாக பொருள் சொல்லப் பட்டது.

வள்ளுவராவது அவ்வளவு லேசா எழுதுவதாவது.

கொஞ்சம் குறளை மாற்றிப் போடுவோம்

களவினால் ஆகிய ஆகம் ஆவது போல் அளவிறந்து கெடும்

அதாவது, களவினால் ஆகிய ஆக்கம் முதலில் ஆவது போல தோன்றினாலும் பின் அளவு இன்றி கெடும்.

தீய வழியில் வந்த செல்வம் முதலில் பெரிதாக வளர்வது போலத் தோன்றினாலும், அது போகும் போது அந்த செல்வம் மட்டும் அல்ல போவது அதற்கு முன் சேர்த்து வைத்த செல்வத்தையும், நல்ல பெயரையும், புகழையும் சேர்த்து கொண்டு போய் விடும்

அது மட்டும் அல்ல, மீண்டும் செல்வம் வரும் வழியையும் அது அடைத்து  விடும்.

மேலும், பாவத்தையும் பழியையும் களவு செய்தவன் மேல் சுமத்தி விட்டு போகும்.

இந்த பிறவியில் வறுமையும், பழியும் சேர்க்கும்

மறு பிறவிக்கான வீடு பேறு அடைய முடியாமல் பாவத்தை சேர்த்து வைக்கும்.

அதனால், களவினால் ஆகிய ஆக்கம் அளவற்ற கெடுதலை செய்யும்.

இன்னொரு பொருள் என்ன வென்றால்.....

நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க நாள் பல ஆகும். கொஞ்சம் கொஞ்சமாகத் தான்  செல்வம் சேரும்.

ஆனால், களவின் மூலம் சேரும் செல்வம் மிக வேகமாக வளரும்.  குறுகிய காலத்தில் மிகுந்த செல்வம் சேரும், களவின் மூலம்.

 களவினால் ஆகிய ஆகம் ஆவது போல் அளவிறந்து கெடும்

வள்ளுவர் சொல்கிறார், அது எந்த வேகத்தில் வந்ததோ (ஆவது போல்) அதை விட வேகமாக கெடும். 

எப்படி ஆகியதோ அதே போல் கெடும். சொல்லப் போனால், "ஆவது போல் கெடும்"  என்று  சொல்லி இருந்தால் எப்படி ஆனதோ அதே போல் கெடும் என்று அர்த்தம் கொள்ளலாம் .

வள்ளுவர் ஒரு படி மேலே போய் "ஆவது போல் அளவிறந்து கெடும் " என்கிறார் 

இதை எல்லாம் சின்ன வயதில், பிள்ளைகளுக்கு சொல்லிக்  கொடுத்தால் அவர்கள் மனதில்  பசு மரத்து ஆணி போல் பதியும். அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வார்கள். நல்ல சமுதாயம் வரும். 

சரியாக சொல்லிக் கொடுக்காமல் , பாட நூல்களை அரசியல்வாதிகள் கையில் கொடுத்து , பல தலைமுறைகளை இந்த மாதிரி உயர்ந்த கருத்துகள் சென்று அடைய விடாமல்   தடுத்து விட்டோம்.

இப்படி ஒரு பொக்கிஷத்தை எப்படி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது ? 

 

Wednesday, June 26, 2013

திருக்குறள் - பொறுத்தல் வேண்டும்

திருக்குறள் - பொறுத்தல் வேண்டும் 



அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்னை தோண்டுபவர்களையும் தாங்கும் நிலத்தை போல ஒருவரை இகழ்பவர்களையும் பொறுத்துக் கொள்ளுதல் தலை சிறந்தது.

அம்புடுதான்.

இதைசொல்ல வள்ளுவர் வேண்டுமா ? யார் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம். வள்ளுவர் ஆழமில்லாமல் எதையும் சொல்ல மாட்டாரே....இந்த குறளில் அப்படி ஒன்றும் ஆழம் இருப்பது மாதிரி தெரியவில்லையே. ரொம்ப சாதரமான குறள் மாதிரிதானே இருக்கு ?

கொஞ்சம் ஆராய்வோம்.

அகழ்வாரை தாங்கும் நிலம்....நிலம் தன்னை புண் படுத்தி கடப்பாரை, மண் வெட்டி போன்ற கூறிய ஆயுதங்களால் தோண்டுபவர்களை பதிலுக்கு தண்டிப்பது இல்லை.

அது மட்டும் அல்ல...அப்படி தோண்டுபவர்களுக்கு நல்லதும் செய்கிறது நிலம். கொஞ்சம் தோண்டி  விதை நட்டால் செடியும் மரமும் தழைத்து அதில் இருந்து நிழலும் காயும் கனியும்   கிடைக்கச் செய்கிறது.

மேலும் தோண்டினால் சுவையான நிலத்தடி நீர் தந்து தாகம் தீர்கிறது. உயிர் காக்கிறது.

இன்னும் தோண்டினால் தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தருகிறது.

வள்ளுவர் காலத்தில் பெட்ரோல் டீசல் இது எல்லாம் கிடையாது. இப்போது அதுவும் கிடைக்கிறது.

தனக்கு கெடுதல் செய்பவர்களை பொறுப்பது மட்டும் அல்ல, நிலம் அவர்களுக்கு நல்லதும் செய்கிறது.

அது போல, உங்களுக்கு தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.

சரி, வள்ளுவர் "இகழ்வார்" என்று தானே சொல்லி இருக்கிறார். இகழ்தல் என்றால்   தரக் குறைவாக பேசுதல், திட்டுதல், வைதல்...எனவே நம்மை பற்று இகழ்வாக பேசுபவர்களை  மட்டும் பொறுத்தால் போதும்...நமக்கு உடல் ரீதியாகவோ, உள்ள ரீதியாகவோ தீமை செய்பவர்களை பொறுக்கும் படி வள்ளுவர் சொல்லவில்லையே  என்று வாதிக்கலாம்.

அதற்குத் தான் "அகழ்வாராய் தாங்கும் நிலம்" என்ற உதாரணம். நம்மை திட்டுபவர்கள் மட்டும் அல்ல, மற்ற செயல்களால் துன்பம் தந்தவர்களையும் பொறுக்க  வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

மேலும் சொல்லுகிறார்....





Tuesday, June 18, 2013

திருக்குறள் - துன்பத்தின் இலக்கம்

திருக்குறள் - துன்பத்தின் இலக்கம் 


நாம் வாழ்வில் முன்னேறாததற்கு முக்கிய காரணம் உடல் துன்பத்தை பெரிது படுத்துவதுதான்.

சோம்பல். விடா முயற்சியின்மை. தள்ளிப் போடுதல் போன்ற அனைத்து கெட்ட குணங்களுக்கும் ஆணி வேர் எது என்று பார்த்தால், உடல் படும் துன்பத்தை பொறுக்காமல் இருப்பது.

ரொம்ப சோர்வா (tired ) இருக்கு. நாளைக்கு படிக்கிறேன்.

ரொம்ப அசதியா இருக்கு, அப்புறம் செய்யலாம்.

முதுகு வலிக்குது, கண் எரியுது, கழுத்தெல்லாம் ஒரே வலி...எழுதி எழுதி கையே உடைஞ்சிரும் போல இருக்கு, ரொம்ப தலை வலிக்குது.........

என்று உடல் துன்பத்தை பொறுக்காமல் இருப்பது தான் வெற்றிக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கும் தடைக் கல்.

நிறைய பேர் உடல் பயிற்சி செய்வது கிடையாது. காரணம், உடல் வலிக்கும்.

படி ஏறுவது கிடையாது.

தூக்கத்தை பொறுப்பது கிடையாது.

காலையில் எழுந்திரிக்க சோம்பேறித்தனம்.  இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே தூங்குவோமே என்ற உடல் சுகம்.

சான்றோர்கள், பெரியவர்கள் அப்படி இருப்பது இல்லை.

அவர்கள் இந்த உடல் துன்பத்தின் இலக்கு என்று கொள்வார்கள்.  ஒரு வேலை எறிந்தால் எப்படி அது அந்தந இலக்கை சென்று அடையுமோ அது போல் இந்த உடல் துன்பத்தின் இலக்கு.

எப்படி அந்த இலக்கு "ஐயோ, என் மேல் வேல் வந்து விழுகிறதே, அம்பு வந்து பாய்கிறதே " என்று பயப்படாமல், இது என் கடமை என்று அவற்றை தன் மேல் வாங்கிக் கொள்கிறதோ, அது போல் துன்பங்களை ஏற்பது இந்த உடலின் கடமை என்று மேலோர் ஏற்றுக் கொள்வார்கள்.

என்ன அர்த்தம் ?

நீங்களும் மேலோனாக வேண்டும் என்றால், உடல் துன்பத்தை பொருட்படுத்தாதீர்கள்.


இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்.

சீர் பிரித்த பின்

இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை 
கையாறாக் கொள்ளாதா மேல் 


பொருள்

இலக்கம் = குறி (target )

உடம்பு = இந்த உடம்பு

இடும்பைக்கு என்று = துன்பத்திற்கு என்று

கலக்கத்தை = கலங்குவதை

கையாறாக் கொள்ளாதா  மேல் = மனம் கலங்குதல் கொள்ள மாட்டார்கள் மேலோர்

கொஞ்சம் வலி பொறுங்கள்.

கொஞ்சம் அசௌகரியம் பொறுங்கள்.

கொஞ்சம் உடல் சுகத்தை குறையுங்கள்.

வெற்றி உங்களது. 


Monday, June 17, 2013

திருக்குறள் - சோதனைகளை வெற்றி கொள்ள

திருக்குறள் - சோதனைகளை வெற்றி கொள்ள 


வாழ்வில் நிறைய சோதனைகள் வரும். தோல்விகள் வரும். அந்த சோதனைகளும் தோல்விகளும் தரும் துன்பத்தை எப்படி கடந்து வெற்றி கொள்வது ?

எருது வண்டி இழுப்பதை பார்த்து இருக்கிறீர்களா ? மேடு, பள்ளம், மணல், சகதி , என்று அது செல்லும் வழியில் பல தடங்கல்கள் வரலாம். அந்த எருது அதை எல்லாம் பார்த்து சோர்ந்து நின்று விடாது. அது பாட்டுக்கு வண்டியை இழுத்துக் கொண்டே சென்று அது போய் சேர வேண்டிய இடத்தை சென்று அடையும்.

எடுத்த செயலை முடிக்க விடாமுயற்சி வேண்டும்.

சில பேர் வேலை செய்வதைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டே இருப்பார்கள். வேலை செய்வது கிடையாது. அப்படியே வேலையை தொடங்கினாலும், ஒரு சோம்பல், ஒரு சுணக்கம் வந்து பாதியில் விட்டு விடுவார்கள்.

எருது போல் எத்தனை தடை வந்தாலும் விடா முயற்சியோடு எடுத்த காரியத்தை செய்பவனுக்கு வந்த துன்பம் துன்பப்பட்டு ஓடி விடும்.

பாடல்

மடுத்த வாயெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.

சீர் பிரித்த பின்

மடுத்த வாயெல்லாம் பகடு அன்னான் உற்ற 
இடுக்கண் இடர் பாடு உடைத்து 


பொருள்


Wednesday, June 12, 2013

திருக்குறள் - செல்வம் சேமித்து வைக்கும் இடம்

திருக்குறள் - செல்வம் சேமித்து வைக்கும் இடம் 


பணத்தை எங்கே போட்டு வைக்கலாம் ? வங்கியில், கம்பெனி முதலீட்டில் (shares ), தங்க நகைகளில், நிலத்தில், வீட்டில் என்று பல இடங்களில் பணத்தை முதலீடு செய்யலாம்.

வள்ளுவர் சொல்கிறார் , பணத்தை எங்கே முதலீடு செய்ய வேண்டும் என்று.

ஏழைகளின் வயிற்றில் பணத்தை முதலீடு செய்ய வேண்டுமாம்.

முதலில் பாடலைப் பார்ப்போம்,

பாடல்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

பொருள்


Tuesday, June 11, 2013

திருக்குறள் - இரக்கப்படுவது தவறு

திருக்குறள் -  இரக்கப்படுவது தவறு


என்னது ? இரக்கப் படுவது தவறா ?

இது என்ன புதுக் கதை என்று நீங்கள் வியக்கலாம்.

வள்ளுவர் அப்படிதான் சொல்லுகிறார்.

இரக்கப் படுவது தவறுதான், எது வரை என்றால் நம்மிடம் உதவி என்று கேட்டு வந்தவன் முகம் மகிழ்ச்சியாகும் வரை.

உங்களிடம் ஒருவன் பசி என்று வருகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனுக்கு ஒரு நாலு இட்டிலி கொடுத்தால் பசி தீரும் என்று கொள்வோம்.

ஐயோ, பாவம்...ரொம்ப பசியா இருக்கியா ..இந்தா 10 பைசா என்று அவனிடம் இரக்கப் பட்டு தருவது தவறு என்கிறார்.

அவன் முகம் இன்முகமாக வேண்டும் ... அதுவரை இரக்கப் படுங்கள். அப்படி இல்லை என்றால், உங்கள் இரக்கம் துன்பம் தருவது என்கிறார்.

இன்னா என்றால் இன்பம் அல்லாதது. அதாவது துன்பம் தருவது.

உங்களிடம் பசி என்று வந்தவனுக்கு பத்து பைசா கொடுத்துவிட்டு அவன் முகத்தை பாருங்கள். முதலில் பசி மட்டும் இருந்தது. இப்போதும் ஏமாற்றமும்இருக்கும். அது மட்டும் அல்ல, உங்கள் மேல் வெறுப்பும் , இந்த உலகின் மேல் சலிப்பும், படைத்தவன் மேல் ஒரு கோபமும் உண்டாகும்.

அவன் பசிக்கு உணவளித்துப் பாருங்கள். உங்களை வாழ்த்துவான். மனம் நிறையும்.

ஒண்ணும் இல்லாததற்கு பத்து பைசா நல்லது தானே என்று வாதம் புரியலாம். நல்லதுதான். வள்ளுவர் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அந்த இரக்கம் நன்மை பயக்காது என்கிறார்.

யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்றால், அவர்கள் மனம் மகிழும்படி உதவி செய்யுங்கள்.

வலியும் , ஏமாற்றமும், பயமும் கொண்ட அவர்கள் முகம் இன்முகமாக மாற வேண்டும். அதுவரை, உங்கள் இரக்கம் இன்னாததுதான்

ஒருவன் கேட்பது எல்லாம், நம்மால் கொடுக்க முடியுமா என்று கேட்டால், பிச்சை கேட்பவன் அப்படி கேட்க மாட்டான். இரப்பவன், எவ்வளவு குறைத்து கேட்க்க முடியுமோ அவ்வளவு குறைத்து கேட்ப்பான்.

உலகளந்த பெருமாளே, யாசகம் கேட்க்க வந்தபோது கூனி குறுகி வாமன உருவமாய்த் தான் வந்தான்.

கேட்பவன், கூச்சப் பட்டு மிக மிக குறைத்துத்தான் கேட்பான்.

எவ்வளவு நுண்ணிய பொருள் நிறைந்தது திருக்குறள்.

தானம் செய் என்று அறம் சொல்ல வந்த வள்ளுவர் எப்படி சொல்லுகிறார் பார்த்தீர்களா ?

அடுத்த முறை யாருக்காவது உதவி செய்யும்போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


பாடல்  

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.


பொருள்


Monday, June 3, 2013

திருக்குறள் - புல்லறிவாண்மை

திருக்குறள் - புல்லறிவாண்மை 


அது என்ன புல்லறிவாண்மை ?

புல்லிய அறிவை ஆள்தல்.

கொஞ்சம் போல படித்துவிட்டு மேதாவி போல காட்டிக் கொள்வது. அறிவின்மை என்பது வேறு. ஏதோ மேல் போக்காக படித்து விட்டு கற்றறிந்த பண்டிதர் போல பேசுவது புல்லறிவாண்மை.

இப்படி பட்ட ஆட்களை வள்ளுவர் ரொம்பதான் கிண்டல் அடிக்கிறார்.

இந்த மாதிரி ஆட்கள் தங்களுக்குத் தாங்களே செய்து கொள்ளும் தீமை இருக்கிறதே, அதை அவர்களின்   எதிரிகள் கூட செய்ய முடியாது என்கிறார் .

அதாவது ஒரு எதிரி எவ்வளவு ஒருவனுக்கு தீமை செய்வானோ அதை விட அதிகமான தீமைகளை இந்த அரை வேக்காடுகள் தங்களுக்கு தாங்களே செய்து கொள்வார்கள் என்கிறார்.

பாடல்

அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

பொருள்


Thursday, May 30, 2013

திருக்குறள் - இல்லாமையிலும் பெரிய இல்லாமை

திருக்குறள் - இல்லாமையிலும் பெரிய இல்லாமை 


எல்லோரிடமும் எல்லாமுமா இருக்கிறது ?

வீடு, நகை, சொந்த உல்லாச படகு, ஒரு கப்பல், சொந்த விமானம், நமக்கென்று ஒரு தீவு, இராஜா மாதிரி அதிகாரம், அழியாத புகழ் இப்படி பட்டியல் போட்டுக் கொண்டே போனால் அந்த பட்டியல் முடியாது.

அப்ப எவ்வளவு இருந்தால் போதும் ?

எவ்வளவுதான் இருந்தாலும், இல்லாததின் அளவு மிகப் பெரியதாய் இருக்கிறதே ? என்ன செய்யலாம் ?

சில விஷயங்கள் இல்லாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது.

வள்ளுவர் கூறுகிறார், அறிவு இல்லாததுதான் இந்த இல்லாததிலேயே பெரிய இல்லாதது. மத்தது எல்லாம் இல்லாவிட்டாலும், இந்த உலகம் அதை பெரிதாய் நினைக்காது.

பாடல்

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.

பொருள்


Wednesday, May 29, 2013

திருக்குறள் - இனிய சொல்லின் மகத்துவம்

திருக்குறள் - இனிய சொல்லின் மகத்துவம் 



நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

இனிமையான சொல் என்ன செய்யும் தெரியுமா ?

நாம் ஒருவருக்கு ஒரு  சொல்லை சொல்கிறோம் என்றால் அது அவர்களுக்கு நல்ல பயனைத் தரவேண்டும். பயன் தருகிறது என்று பண்பில்லாத சொற்களை பேசக் கூடாது...."எருமை, நீ படிகாட்டா நாசமாத்தான் போவ ..." என்பது பயன் தரும் பேச்சாக இருக்கலாம் ஆனால் பண்பில்லாத பேச்சு.

பண்புடனும் இருக்க வேண்டும். பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

அப்படி பேசினால், நமக்கு என்ன கிடைக்கும் ?

அப்படி பேசுபவர்களுக்கு நல்லதும், அப்படி உங்கள் பேச்சை கேட்டவர்களின் நன்றியும் உங்களுக்கு கிடைக்கும்.

எனவே, இனிய சொல் தருபவருக்கும் பெறுபவருக்கும் நல்லது செய்யும்.

இன்னும் கொஞ்சம் விரித்து பொருள் பார்க்காலாம்.

இனிய சொற்களை கூறுவோருக்கு இரண்டு பலன் என்று பார்த்தோம்

நயன் ஈன்று நன்றி பயக்கும்.

நயன் என்றால் இலாபத்துக்கு உரியவன் (benefactor ) என்று பொருள். அவனுக்கு நன்மை கிடைக்கும். நன்மை என்றால் இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் கிடக்கும் நன்மை என்று சொல்லுவார் பரிமேல் அழகர்.

நன்றி பயக்கும் = நன்றி என்றால் என்ன என்று தெரியும். அது என்ன பயத்தல் ? பயத்தல் என்றால் விளைதல், உருவாதல். விதை விதைத்தால் கனி கிடைக்கும் அல்லவா அதற்கு பயத்தல் என்று பொருள்.   ( பயந்து நமைப் புரந்தாள் மதியின் பிழை அன்று என்பது கம்ப இராமாயணம். நம்மை பெற்று, காப்பாற்றி வளர்த்தாள் (கைகேயி) அவள் பிழை அன்று.  )

இனிய சொல்லை சொன்னவர்களுக்கு நன்மையையும் (இம்மைக்கும் மறுமைக்கும்), சொல் கேட்டவர்களின் நன்றியும் கிடைக்கும்.

 எந்த மாதிரி சொல் தெரியுமா இதைத் தரும் ?

கேட்பவர்களுக்கு பயன் தரவேண்டும் - பொருள் பயன் என்பது பொதுவாகச் சொல்லப் பட்டாலும், வேறு எந்த விதத்திலாவது பயன் தர வேண்டும். (பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல் என்பார் வள்ளுவர் )

பயன் தரும் சொல்லும் பண்போடு பிரியாமல் இருக்க வேண்டும். இந்த பண்பும் பயனும் பிரியாமல் இருக்க வேண்டும்.

அது என்ன பிரியாமல் ?

"நல்ல படிடா....இல்லைனா நாசமாத்தான் போவ " இதில் முதல் பகுதி பயன் தருவது. பண்பு உள்ளது. இரண்டாவது பகுதி பண்பு இல்லாதது, முதலாவதோடு  சேர்ந்து படிக்கும் போது பயன் தரலாம். அது சரி இல்லை என்கிறார் வள்ளுவர்.

ஒவ்வவொரு சொல்லும் பயனும், பண்பும் உள்ளதாய் இருக்க வேண்டும்.

பண்பில்லாத சொற்களை சொல்லி அதன் மூலம் பயன் வந்தால் கூட, பயன் பெற்றவர்கள் அதை  பெரிதாக நினைக்க மாட்டார்கள். "என்னை எப்ப பாரு கரிச்சு கொட்டி கொண்டே இருந்தான் " என்று பண்பில்லாத சொற்கள் தான் ஞாபகம் இருக்கும். பயன் உள்ள சொற்கள் மறந்து போகும்.

எனவே எப்போது சொன்னாலும்,பயனையும் பண்பையும் சேர்த்து சொல்லுங்கள்

பாடல்


நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பொருள்


Tuesday, May 7, 2013

திருக்குறள் - உலக இயற்கை


திருக்குறள் - உலக இயற்கை



பணம் சம்பாதிக்க அறிவு வேண்டுமா ?

இந்த உலகத்தில் படிக்காதவன் பெரிய பணக்காரனாக இருக்கிறான். படித்தவன் வறுமையில் வாடுகிறான். இது ஏன் இப்படி நிகழ்கிறது ?

பணம் சம்பாதிப்பதும், சம்பாதித்த பணத்தை பத்திரமாக பாதுகாப்பதும், அதை சரியான வழியில் முதலீடு செய்வதும் அறிவினாலன்றி செய்ய முடியாத காரியம். அப்படி இருக்க, எப்படி படிப்பு அறிவு இல்லாதவர்கள் பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் ? நிறைய படித்தவர்கள் அப்படி ஒன்றும் பணம் சேர்த்து விடுவதில்லை.....

இதற்கு காரணம் ஊழ் வினை என்கிறார் வள்ளுவர்.

பணம் சேர்பதற்கு உண்டான ஊழ், படிப்பதற்கு ஆவதில்லை. அதே போல் படிப்பதற்கு உண்டான ஊழ் பணம் சம்பாதிக்க ஆவதில்லை.

பாடல்


இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

பொருள்