Tuesday, June 18, 2013

திருக்குறள் - துன்பத்தின் இலக்கம்

திருக்குறள் - துன்பத்தின் இலக்கம் 


நாம் வாழ்வில் முன்னேறாததற்கு முக்கிய காரணம் உடல் துன்பத்தை பெரிது படுத்துவதுதான்.

சோம்பல். விடா முயற்சியின்மை. தள்ளிப் போடுதல் போன்ற அனைத்து கெட்ட குணங்களுக்கும் ஆணி வேர் எது என்று பார்த்தால், உடல் படும் துன்பத்தை பொறுக்காமல் இருப்பது.

ரொம்ப சோர்வா (tired ) இருக்கு. நாளைக்கு படிக்கிறேன்.

ரொம்ப அசதியா இருக்கு, அப்புறம் செய்யலாம்.

முதுகு வலிக்குது, கண் எரியுது, கழுத்தெல்லாம் ஒரே வலி...எழுதி எழுதி கையே உடைஞ்சிரும் போல இருக்கு, ரொம்ப தலை வலிக்குது.........

என்று உடல் துன்பத்தை பொறுக்காமல் இருப்பது தான் வெற்றிக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கும் தடைக் கல்.

நிறைய பேர் உடல் பயிற்சி செய்வது கிடையாது. காரணம், உடல் வலிக்கும்.

படி ஏறுவது கிடையாது.

தூக்கத்தை பொறுப்பது கிடையாது.

காலையில் எழுந்திரிக்க சோம்பேறித்தனம்.  இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே தூங்குவோமே என்ற உடல் சுகம்.

சான்றோர்கள், பெரியவர்கள் அப்படி இருப்பது இல்லை.

அவர்கள் இந்த உடல் துன்பத்தின் இலக்கு என்று கொள்வார்கள்.  ஒரு வேலை எறிந்தால் எப்படி அது அந்தந இலக்கை சென்று அடையுமோ அது போல் இந்த உடல் துன்பத்தின் இலக்கு.

எப்படி அந்த இலக்கு "ஐயோ, என் மேல் வேல் வந்து விழுகிறதே, அம்பு வந்து பாய்கிறதே " என்று பயப்படாமல், இது என் கடமை என்று அவற்றை தன் மேல் வாங்கிக் கொள்கிறதோ, அது போல் துன்பங்களை ஏற்பது இந்த உடலின் கடமை என்று மேலோர் ஏற்றுக் கொள்வார்கள்.

என்ன அர்த்தம் ?

நீங்களும் மேலோனாக வேண்டும் என்றால், உடல் துன்பத்தை பொருட்படுத்தாதீர்கள்.


இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்.

சீர் பிரித்த பின்

இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை 
கையாறாக் கொள்ளாதா மேல் 


பொருள்

இலக்கம் = குறி (target )

உடம்பு = இந்த உடம்பு

இடும்பைக்கு என்று = துன்பத்திற்கு என்று

கலக்கத்தை = கலங்குவதை

கையாறாக் கொள்ளாதா  மேல் = மனம் கலங்குதல் கொள்ள மாட்டார்கள் மேலோர்

கொஞ்சம் வலி பொறுங்கள்.

கொஞ்சம் அசௌகரியம் பொறுங்கள்.

கொஞ்சம் உடல் சுகத்தை குறையுங்கள்.

வெற்றி உங்களது. 


1 comment:

  1. ரொம்ப சரி! அற்புதமான பாடல். நன்றி.

    ReplyDelete