Sunday, June 2, 2013

திருக்குறள் - கனியும் காயும்

திருக்குறள் - கனியும் காயும் 


இனிய வுளவாக வின்னுத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

நாம் பேசுவதற்கு முன்னால் நம்மிடம் இரண்டு வாய்ப்பு இருக்கிறது.

இனிய சொல் பேசலாம். அல்லது இனிமை இல்லாத சொல் பேசலாம்.

எதை பேசுவது என்பது நம் முடிவில் இருக்கிறது.

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனி இருப்ப காய் கவர்ந்தற்று 

நல்ல இனிய சொற்கள் இருக்கும்போது அதை விட்டு விட்டு இனிமை இல்லாத சொற்களை பேசுவது கனி இருக்கும் போது அதை விடுத்து காயை உண்ணுவது போல என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவர் இவ்வளவு குறைவாக சொல்பவர் அல்லவே. இதில் இன்னும் ஏதோ இருக்க வேண்டும்.

ஆழ்ந்து சிந்தித்துப் பாப்போம்.

கவர்தல் என்ற சொல்லுக்கு - கவர்ச்சி உடையது என்று ஒரு பொருள். அந்த இடம் என்னை  ரொம்ப கவர்ந்து விட்டது என்று கூறக் கேட்டு இருக்கிறோம். அந்த பெண் ரொம்ப கவர்ச்சியாக உடை அணிந்து இருக்கிறாள் என்று கூறுவது போல. சிலருக்கு இன்னாத சொற்களின் மேல் ஒரு கவர்ச்சி. தீய சொற்கள், கேட்ட சொற்கள், பயன் தராத சொற்கள், இனிமை இல்லாத சொற்கள் பால் கவர்ச்சி. இனிய சொற்கள் பால் நாட்டம் கொள்ள வேண்டும்.

இரண்டாவது

கவர்தல் என்றால் கவர்ந்து கொள்ளுதல், பறித்தல் என்று பொருள் உண்டு. கவர்ந்து சென்று விட்டான் என்று சொல்லுகிறோம் அல்லவா ? நல்ல இனிய சொற்கள் இருக்கும் போது இன்னாத சொற்களை திருடிக் கொண்டு வருவது எவ்வளவு மடமையான செயல்

திருடுவதே குற்றம். அதிலும் தேவை இல்லாத ஒன்றை திருடுவது எவ்வவளவு மடமை...அந்த அளவு மடமை இனிய உளவாக இன்னாத கூறல்.

இனிய சொல் என்றால் புரிகிறது. அது என்ன இன்னாத சொல் ? இன்னாத என்றால் துன்பம் தரும் சொல், தீமை தரும் சொற்கள்.

வேறு வழியில்லாமல் ஒரு கெட்ட காரியத்தை செய்து விட்டால் அது மன்னிக்கப் படலாம். நல்ல காரிய செய்ய ஒரு வழி இருந்தும் அதை விடுத்து கெட்ட காரியம் செய்தால் அது தண்டனைக்கு உரியதுதானே ?

இனிய சொற்கள் இருக்கின்றன. "இனிய உளவாக". வேண்டும் என்றால் இனிய சொற்களை  சொல்லலாம். இனிய சொற்கள் இல்லை என்றால் அது வேறு விஷயம். இனிய உளவாக இன்னாத கூறல் ?

இனிய சொல், இன்னாத சொல்
கனி, காய்.
கூறுதல், கவர்தல்.

காய் கடினமானது. கனி மென்மையானது.

காயை உண்பது என்றால் கத்தியால் வெட்டி , சிறு சிறு துண்டுகள் ஆக்கித்தான் உண்ண முடியும். கனியை எளிதாக அப்படியே உண்ணமுடியும்.

காயை அதிகம் உண்ண முடியாது. கனிகளை வேண்டும் வரை உண்ணலாம்.

உண்ட பின்னும் காய் செரிமானம் ஆக நேரம் பிடிக்கும். கனி உடலுக்கு இதம் தரும்.

காய் புளிக்கும், துவர்க்கும், கசக்கும்....பொதுவாகவே எல்லா கனிகளும் இனிப்பாக சுவை நிறைந்ததாய் இருக்கும்.

காயை விட கனி பார்க்கவும் அழகாக இருக்கும்.

இறைவனுக்கு கனிகளை படைக்கிறோம்.

உடல் நிலை சரி இல்லாதவர்களை காண போகும்போது  கனிகள் வாங்கிச் செல்கிறோம். உடலுக்கும் மனதுக்கும் இதம் தருவது  கனி என்பதால். நோயை குணமாக்கி உடலுக்கு ஆரோக்கியம் தரும் - கனி.

யோசித்து யோசித்து எழுதி இருக்கிறார் வள்ளுவர்.

6 comments:

  1. யோசித்து யோசித்து எழுதி இருக்கிறாய் நீயும்!

    ReplyDelete
    Replies
    1. All credit goes to Parimel Azhagar. My extra writings all from his one line.

      Delete
  2. மிக அருமையான உரை. பள்ளிக்கூடங்களில் இவ்விதம் சொல்லிக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. We should pay very high salary to school teachers and get the best brains to come for teaching.

      Delete
  3. இது வரை கோனார் உரை தவிர்த்து இந்த பாடலுக்கு வேறு எந்த உறையும் நான் படித்ததில்லை. ஆனால் இந்த ஒரு குரளில் அதுவும் இவ்வளவு எளிமையான குரளில் இவ்வ்வ்..வளவு அர்த்தங்களா?
    OMG!!! Amazing. God bless you.

    ReplyDelete
  4. பரிமேல் அழகர் உரை படித்து இருக்கேன். இப்படி புரிந்தது இல்லை.

    ReplyDelete