Friday, June 14, 2013

பிரகலாதன் - முந்தாய் நின்ற முதல் பொருளே

பிரகலாதன் - முந்தாய் நின்ற முதல் பொருளே


பிரகலாதனை கொல்ல இரணியன் பல விதங்களில் முயல்கிறான். தீயில் இட்டான். பின் கொடிய விடம் உள்ள பாம்புகளை விட்டு கடிக்கச் செய்தான். ஒன்றும் நடக்கவில்லை

அடுத்தது, யானையை விட்டு மிதிக்கச் சொன்னனான்.

இரணியனின் வீரர்கள் இந்திரனின் யானையை கொண்டு வந்தார்கள். பிரகலாதனை கயிற்றால் கட்டி அந்த யானையின் முன் போட்டு யானையைக் கொண்டு மிதிக்க முயன்றார்கள்.

பிரகலாதன் அந்த சமயத்திலும் நம்பிக்கை இழக்கவில்லை. அந்த யானையை வணங்கி கூறுவான்

"எந்தாய், முன்பு ஒரு நாள், கஜேந்திரன் என்ற உன் முன்னோனை ஒரு முதலை விழுங்க இருந்த போது, அந்த யானை ஆதி மூலமே என்று அழைத்த போது வந்து அதன் உயிர் காத்தானே, அவன் என் மனத்தில் இருக்கிறான்"

என்று கூறினான்.

பாடல்

' "எந்தாய் ! - பண்டு ஓர் இடங்கர் விழுங்க, -
முந்தாய் நின்ற முதல் பொருளே ! என்று, 
உன் தாய் தந்தை இனத்தவன் ஓத,
வந்தான் என்தன் மனத்தினன்" என்றான்.

பொருள் 



' "எந்தாய் ! = என் தந்தை போன்றவனே.

பண்டு = முன்பு

ஓர் இடங்கர் விழுங்க = ஒரு முதலை விழுங்க

முந்தாய் நின்ற முதல் பொருளே ! என்று = எல்லாவற்றிற்கும் முதலாய் நின்ற முதல் பொருளே  (ஆதி மூலமே என்பதை கம்பன் எவ்வளவு அழகாகச் சொல்கிறான் )


உன் தாய் தந்தை இனத்தவன் ஓத = உன் முன்னவன் ஓத

வந்தான் = வந்தான். வந்தவன் அந்த திருமால்

என்தன் மனத்தினன்" என்றான் = வந்தவன் யார் தெரியுமா, என் மனத்தில் இருப்பவன்

உன் முன்னோனை காப்பாற்றியவன் என் மனத்தில் இருக்கிறான். நீ என்னை மிதித்தால் என் மனதிற்குள் இருக்கும் அவனையும் சேர்த்து மிதிக்கும்படி ஆகும் என்று கூறினான்.

இந்த பாடல் தரும் இறை தத்துவம் அடுத்த பாடலை பார்த்தால் தான் முழுமையாக புரியும்.

அடுத்த பாடலை நாளை பார்ப்போமா ?


No comments:

Post a Comment