நன்னெறி - நல்லதே ஆயினும் அறிந்து செய்யுங்கள்
நல்லது செய்யலாம். உண்மை பேசலாம். தான தருமங்கள் செய்யல்லாம். இவற்றை எல்லாம் ஏன் செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்று அறிந்து செய்ய வேண்டும். அறியாமல் செய்யும் அறங்கள் அவ்வளவு வலிமையானது அல்ல என்று கூறுகிறது நன்னெறி.
ஏன் அப்படி ? செயல் செய்தால் போதாதா ? அது பற்றி ஏன் தெரிந்திருக்க வேண்டும் ?
தானம் செய்வது நல்லதுதான். யாருக்கு தானம் செய்ய வேண்டும், எந்த காரியத்திற்கு தானம் செய்ய வேண்டும் என்று அறிந்து செய்ய வேண்டும். அந்த அறிவை தருவது நம அற நூல்கள்.
தவறான ஆட்களுக்கு உதவி செய்தால் அது நமக்கே தீங்காய் முடியும்.
ஒரு கதவு எவ்வளவுதான் உறுதியாக இருந்தாலும், ஒரு சின்ன தாழ்பாழ் இல்லையென்றால் அந்த கதவால் என்ன பயன் ?
அது போல, எவ்வளவுதான் நல்ல குணங்கள் இருந்தாலும் அறிவு முக்கியம். அறிவில்லாத நல்ல குணம், தாழ்பாழ் இல்லாத கதவு போல்.
பாடல்
பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே – நன்னுதால்
காழொன்று உயர்திண் கதவு வலியுடைத்தோ
தாழென்று இலதாயின் தான்.
பொருள்
பன்னும் பனுவல் = சிறந்த அறிவைத்தரும் நூல்கள்
பயன்தேர் அறிவிலார் = அவற்றின் பயனை தேர்ந்து அறியாதவர்
மன்னும் அறங்கள் = செய்யும் அறங்கள்
வலியிலவே = வலிமை இல்லாதவை
நன்னுதால் = அழகிய நெற்றியை உடைய பெண்ணே
காழொன்று = வைரம் பதித்த
உயர்திண் கதவு = உயர்ந்த திண்மையான கதவு
வலியுடைத்தோ = வலிமையானதோ ?
தாழென்று இலதாயின் தான் = ஒரு தாழ்பாழ் இல்லாவிட்டால்
No comments:
Post a Comment