Tuesday, June 18, 2013

பிரகலாதன் - நரசிம்மம் இரணியனை கொல்லுதல்

பிரகலாதன் - நரசிம்மம் இரணியனை கொல்லுதல்

பிரகலாதனை எப்படியெல்லாமோ கொல்லுவதற்கு இரணியன் முயற்சி செய்தான். ஒன்றும் பலிக்கவில்லை.

கடைசியில் தூண் பிளந்து நரசிங்கம் வந்தது.

அப்போதும் பிரகலாதன் தன் தந்தையான இரணியனிடம் , இறைவனை தொழும்படி கூறினான்.

இரணியன் கேட்கவில்லை. நரசிங்கத்திடம் போருக்குப் போனான்.

எப்படி ?

பயங்கர சிரிப்பு. கையில் பெரிய வாள் . கையும், காலும் வாயும் கோபத்தால் அனல் கக்குகிறது. புகை எழுகிறது.

எதிரில் நரசிங்கம்.

கணக்கில் அடங்காத தோள்கள். அத்தனை கைகள்.

அந்த கைகளால், அவனை இழுத்து மடியில் போட்டு, காலாலும், கைகளாலும் அவனை அப்படியே சூழ்ந்தது.

பாடலைப் படித்துப் பாருங்கள் ... நரசிங்கத்தின் கை விரல்கள் உங்கள் உடல்மேல் ஊறுவதை உணர்வீர்கள்....


பாடல்

'நகைசெயா, வாயும் கையும் வாளொடு நடந்த தாளும்
புகைசெயா, நெடுந் தீப் பொங்க உருத்து, எதிர் பொருந்தப் புக்கான்;
தொகை செயற்கு அரிய தோளால் தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான் -
மிகை செய்வார் வினைகட்கு எல்லாம் மேற்செயும் வினையம் வல்லான்.


பொருள் 



நகைசெயா வாயும் = சிரிக்கும் வாயும்

கையும் = கையும்

வாளொடு  நடந்த தாளும் = வாளோடு நடந்த காலும்

புகைசெயா = புகை கக்க

நெடுந் தீப் பொங்க = அனல் கக்க

உருத்து = கோபம் கொண்டு

எதிர் பொருந்தப் புக்கான் = எதிர்த்து சண்டையிட புறப்பட்டான்

தொகை செயற்கு அரிய தோளால் = கணக்கிடமுடியாத தோள்களால்

தாள்களால் = கால்களால்

சுற்றிச் சூழ்ந்தான் = சுற்றி வளைத்தான்

மிகை செய்வார் வினைகட்கு எல்லாம் = தீய வினைகள் செய்யும் தீயவர்களின் வினைகளுக்கு

மேற்செயும் வினையம் வல்லான் = அதற்கும் மேலே சென்று வினை செய்ய வல்லான்



No comments:

Post a Comment