Thursday, June 13, 2013

திருக்குறள் - மறத்திற்கும் அன்பே துணை

திருக்குறள் - மறத்திற்கும் அன்பே துணை 




அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

அறத்திற்கே அன்பு சார்பு என்பர் அறியார் 
மறத்திற்கும் அதுவே துணை 

அற வழியில் நிற்பதற்கு மட்டுமே அன்பு துணை செய்யும் என்று சொல்லுபவர்கள் அறிய மாட்டர்கள் அறம் அல்லாத மற வழியில் செல்வதற்கும் அதுவே துணை என்பதனை.

மிக ஆழமான அர்த்தங்களை கொண்ட குறள் .

அறம் அல்லாத மற  வழிக்கு எப்படி அன்பு சார்பாக இருக்க முடியும் ?

அறம் அல்லாத வழியில் செல்பவர்கள் தீயவர்கள். முரடர்கள். அவர்களை மாற்றி அற வழியில் கொண்டு வருவதற்கும் அன்பே அடிப்படையாக உதவுகிறது.

மற வழியில் செல்பவர்களை திருத்தி அவர்களை அன்பால் நல்வழிப் படுத்த முடியும் என்பது பரிமேல் அழகர் உரை.

மேலும் சில உரைகள் உண்டு.  அவற்றை பரிமேல் அழகரும் , தேவநேய பாவாணரும்  மறுத்து உரைக்கிறார்கள்.

ஒரு சிலர் மற வழியில் செல்கிறார்கள் என்றால் அதற்கும் அன்பே காரணமாக இருக்கும் .

ஒருவன் திருடுகிறான் என்றால், தன் மனைவி குழந்தைகள் மேல் வைத்த அன்பினால், அவர்களை காப்பாற்ற தன்னிடம் பொருள் இல்லையே என்று  வருந்தி  திருடி இருக்கலாம். அறமல்லாத அந்த வழிக்கு செல்வதர்க்குக் கூட  அன்பே  காரணமாய் இருக்கிறது. இது இன்னொரு உரை.


வீர தீர செயல்களுக்கும், அன்பே காரணமாய் இருக்கிறது. நாட்டை காக்க, நீதியை நிலை நாட்ட  சில சமயம் மறச் செயல்களும் வேண்டி இருக்கிறது. அந்த  வீர செயல்களுக்கும் அன்பே காரணமாய் இருக்கிறது.


அன்பு, அறம் , அறம் அல்லாதது என்று பார்ப்பது இல்லை. அன்பு இவற்றை எல்லாம் கடந்தது.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலர்
அன்பே சிவமானது அறிகிலர் என்பார் திருமூலர்.

அன்புதான் சிவம்.

பரிமேல் அழகர் சொன்னது ஒரு பாதுகாப்பான உரை. யாரும் அதை மறுக்க முடியாது.

இருப்பினினும், வள்ளுவர் அதையும் தாண்டி ஏதோ சொல்ல வருகிறார் என்றுதான் எனக்குப் படுகிறது.  எனக்கு  என்னவோ அறம் கூட அன்புக்கு அடுத்தபடிதான் என்று வள்ளுவர் சொல்கிறாரோ என்று தோன்றுகிறது.

ஒரு அப்பாவியை சில பேர் கொலை செய்ய விரட்டி வருகிறார்கள். உங்களுக்குத் தெரியும் அவன் எங்கே மறைந்து இருக்கிறான் என்று. பொய் சொல்லாமல்  அவனை காட்டிக் கொடுத்தால் நீங்கள் அற வழியில் நிற்பவர்கள் ஆவீர்கள்.

ஆனால், அவன் மேல் இரக்கப்பட்டு , கருணையோடு, அன்போடு அவனை காட்டிக் கொடுக்காமல் அவன் இருக்கும் இடம் தெரியாது என்று அற வழி பிரண்டு  பொய் சொல்லி அவன் உயிரை காப்பாற்றினால், அந்த மறத்திற்கும் அன்பே காரணம்.

அறம் முக்கியமா ? அன்பு முக்கியமா ?

நீங்களும் சிந்தித்துப் பாருங்கள். வேறு ஏதாவது புதிய அர்த்தம் தோன்றினால், பகிர்ந்து கொள்ளுங்கள்.


1 comment:

  1. பரிமேலழகர் சொன்னதே சரி என்று எண்ணுகிறேன். "சார்பு, துணை" என்று எழுதி இருக்கிறார், ஒன்றை விட ஒன்று உயர்ந்தது என்றல்ல.

    ReplyDelete