Friday, June 21, 2013

திருக்குறள் - மெய் பொருள் காண்பது அறிவு

திருக்குறள் - மெய் பொருள் காண்பது அறிவு


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

எல்லோரும் அறிந்த குறள்தான். எதை யார் சொன்னாலும், அதன் உண்மையான பொருளை காண்பது அறிவு.

இது நாம் பள்ளிக் கூடத்திலேயே படித்திருக்கிறோம்.

நவில் தொறும் நூல் நயம் போலும், படிக்க படிக்க புதுப் புது அர்த்தங்களைத் தருவது திருக்குறள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்வார்கள். அதில் எது உண்மை என்று கண்டு அறிய வேண்டும் என்பது ஒரு பொருள்.

ஒரே ஆளே கூட வேறு வேறு விதமாக பேசலாம். அவனுடைய அறிவும், அனுபவமும் ஏற ஏற அவன் சொல்லுவது மாறும். அன்றைக்கு சொன்னது மாதிரியே என்றைக்கும் சொல்லுவான் என்று நாம் நினைக்கக் கூடாது. அதற்காக, ஒவ்வொரு நாளும் அவனிடம் போய் , நீ இன்று நினைக்கிறாய் என்று கேட்டுக் கொண்டும்  இருக்க முடியாது.

அறிவும், அனுபவமும் மட்டும் அல்ல ஒருவனின் உணர்ச்சியின் நிலை கூட அவன் சொல்லுவதை மாற்றலாம். கோபமாக இருக்கும் போது  ஒன்று சொன்னால்  அதை அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆட்கள் மாறினாலும், ஒரே ஆள் வேறு வேறு விதமாக கூறினாலும், அதன் மெய் பொருளை  அறிவது அறிவின் வேலை.

சரி. இது புரியுது. அடுத்தது, யார் யார் "வாய்" கேட்பினும் அப்படின்னு சொல்றாரே ...அது என்ன வாய் ?

சில சமயம் மனம் ஒன்று நினைக்கும், வாய் ஒன்று சொல்லும்.

பெற்றோரோ, ஆசிரயரோ ஒரு மாணவனை கடிந்து ஏதாவது சொல்லி விடலாம். அந்த வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் அது தப்பாகத்தான்  தெரியும். வாய் வார்த்தையை பார்க்கக் கூடாது. அதன் பின் உள்ள  மெய்யான அர்த்தத்தை உணர வேண்டும்.

அதே போல், தீயவர்கள் வாய் வார்த்தை அழகாக இருக்கும். ஆனால், உள்ளே வஞ்சம் இருக்கும். அந்த வாய் வார்த்தையின் மெய் பொருளை காண்பது அறிவு. இவன் எதற்க்காக இதை சொல்கிறான், இதில் உண்மையான நோக்கம் என்ன என்று அறிவது  அறிவின் வேலை.

இரண்டு வார்த்தைகளை வள்ளுவர் உபயோகப் படுத்துகிறார் ...

கேட்பது, காண்பது.

யார் யார் வாய் கேட்பினும்
மெய் பொருள் காண்பது

யார் யார் என்று இரண்டு முறை கூறினார். ஏன் ?

யார் யார் என்பது பன்மை பற்றி வந்தது.

அதாவது, ஒருவன் நேரடியாக நம்மிடம் ஒன்று சொல்லலாம்.

மாறாக, அவன் அப்படி சொன்னான், இவன் இப்படி சொன்னான் என்று வேறு யாரோ சொன்னதை கேட்டு வந்து நம்மிடம் சொல்லலாம். இப்படி யாரோ சொன்னதை கேட்டு  நம்மிடம் சொல்லும் போது , அது பல பேரை தாண்டி நம்மிடம் வரலாம்


முதலாவது ஒருத்தன் ஒன்றை சொல்லி இருக்கலாம். அதை இரண்டாமவன் கேட்டு, மூன்றாவது ஒருத்தனிடம் சொல்லி, அவன் நான்கவதாக ஒருவனிடம் கூறி....இப்பை பல ஆட்களை தாண்டி நம்மிடம் வரலாம்.

யார் யார் வாய் கேட்பினும் என்பதற்கு அதுதான் அர்த்தம்.

யோசித்துப் பாருங்கள். எத்தனையோ மத சம்பந்தப் பட்ட கோட்பாடுகள் யார் யாரோ சொல்லி , எப்படி எப்படியோ மாறி நம்மிடம் வருகிறது.

ஆதி சங்கரர் சொன்னதை அவர் சிஷ்யர்கள் கேட்டு, அவர்கள் அவர்களின் சிஷயர்களுக்குச் சொல்லி. ...இப்படி பல தலாய் முறைகளை கடந்து வாய் வழியாக  நமக்கு வந்து சேர்ந்து இருக்கிறது. நாம் கேட்பதுதான் முதலில் சொல்லப் பட்டது என்று சொல்ல முடியாது.

எனவே, மெய் பொருள் "காண்பது" அறிவு. காண்பது என்றால், நீங்களே காண வேண்டும். உங்கள் அனுபவத்தில் நீங்கள் காண வேண்டும்.

வியாசர் சொன்னார், கிருஷணர் சொன்னார், இயேசு சொன்னார் , புத்தர் சொன்னார்  என்று சொல்லாதீர்கள். நீங்கள் கண்டதுண்டா ?

புவி ஈர்ப்பு விசை பற்றி நியூட்டன் சொல்லுவதை கேட்டால் மட்டும் போதாது. நீங்களே அதை சோதனை செய்து "பாருங்கள்" அல்லது "காணுங்கள்".

சில சமயம் உங்கள் காதுகளும், கண்களும் கூட உங்களை ஏமாற்றலாம். தோற்றம் பொய்யாக இருக்கலாம். பொய் பொருளை இல்லை, மெய் பொருளை காண்பது அறிவு.

திருக்குறளில் எதையும் சாதாரணம் என்று ஒதுக்கி விடாதீர்கள். ஒவ்வொரு குறளுக்கு  பின்னாலும் ஏராளமான அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன.

நாம் முன்பு செய்த புண்ணியம்....நமக்குத் தமிழ் தெரிவது.

நாம் செய்த தவம், திருவள்ளுவர்

  

8 comments:

  1. புதைந்த அர்த்தங்களுக்கு நல்ல விளக்கம். நன்றி.

    ReplyDelete
  2. Eyes are called as Mei Porul
    Visit http://tamil.vallalyaar.com/

    ReplyDelete
  3. அருமை. இந்த பொய் பொருள் எது?

    ReplyDelete
  4. அருமை. இந்த பொய் பொருள் எது?

    ReplyDelete
  5. இன்னும் சொல்லனும்

    ReplyDelete
  6. அழகான விளக்கம் எல்லோரும் புரியும்படி இருக்கு..

    தகவலுக்காக:

    43. ஒருவன் தான் கேட்ட செய்திகள் அனைத்தையும் (தீர விசாரிக்காமல்) பிறருக்குச் சொல்வது ஒன்றே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹஃப்ஸுப்னு ஆஸிம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
    ஆதாரம் நூல்:ஸஹீஹ் முஸ்லிம் (தோற்றுவாய் 6, தொகுப்பு எண்:4482)

    தெளிவுரை:- கேட்டவற்றையெல்லாம் தீர விசாரிக்காமல் பிறரிடம் சொல்வது பொய்யின் ஒருவகையாகும். இதன் காரணமாக மக்களுக்கு அவன் மீதுள்ள நம்பிக்கை நீங்கிவிடுகிறது.

    ReplyDelete
  7. Super.meiporul kaanbathu arivu pattiya oru kavithai thara mudiuma

    ReplyDelete