கம்ப இராமாயணம் - கண்ணின் விழுங்காலால்
இராமன் வில்லை முறித்துவிட்டான். திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. திருமணத்திற்கு முதல் நாள் இரவு. இருவரும் தனித் தனியே இருக்கிறார்கள். மனதில் காதல் கனிகிறது. கம்பனின் கவிதைகள், காதலின் உச்ச கட்டம்.
கம்பனுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது
காதலைச் சொல்ல வேண்டும். சொல்லப் படும் தலைவனும் தலைவியும் இறைவனும் இறைவியும் ஆகும். விரசத்தின் விளிம்பை கூட தொட்டு விடக் கூடாது. மிக மிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய இடம்.
இராமன் நினைக்கிறான்...
அவளுக்கு என் மேல் அருள் இல்லை என்றாலும், என் மனதில் எழுந்த ஆசையால் வந்த இந்த கலக்கத்தை தரும் நோய் போக என்னை அவள் அப்படியே அவளுடைய கண்களால் விழுங்கி விட்டால் கூட பரவாயில்லை. இந்த உலகில் நிற்கும் பொருளும், அசையும் பொருளும் எல்லாம் அவளாகவே தெரிகிறதே.....
பாடல்
‘அருள் இலாள் எனினும். மனத்து ஆசையால்.
வெருளும் நோய் விடக் கண்ணின் விழுங்காலால்.
தெருள் இலா உலகில். சென்று. நின்று. வாழ்
பொருள் எலாம். அவள் பொன் உரு ஆயவே!
பொருள்
அருள் இலாள் எனினும் = இப்படி என்னை வாட்டும் அருள் இல்லாத மனத்தவள் என்றாலும்
மனத்து ஆசையால் = என் மனத்தில் எழுந்த ஆசையால்
வெருளும் நோய் விடக் = வெருளுதல் என்றால் அஞ்சுதல், மருளுதல். மருளும் என்று கொள்வது சரியாக இருக்கும்
கண்ணின் விழுங்காலால் = அவளுடைய கண்களால் என்னை அப்படியே விழுங்கி விட்டாலும் பரவாயில்லை
தெருள் இலா உலகில் = தெளிவு இல்லாத இந்த உலகில்
சென்று. நின்று. வாழ் பொருள் எலாம் = செல்லுதல் என்றால் நகர்தல். நின்று என்றால் நகராமல் ஒரே இடத்தில் நிற்றல். அசையும் மற்றும் அசையாத பொருள்கள் எல்லாம்
அவள் பொன் உரு ஆயவே! = அவளுடைய பொன் போன்ற உருவமாகவே தெரிகிறதே
இன்னும் ஒரு நாள்தானே, அதற்குள் இவ்வளவு பொறுமை இன்மையா?!? அந்த உணர்ச்சியை எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறார்!
ReplyDelete