Tuesday, June 25, 2013

திருக்குறள் - யார் பெரியவர்

திருக்குறள் - யார் பெரியவர்


" பெரியவங்க சொன்னா கேட்கணும் " என்று வீட்டில் உள்ள வயதானவர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

பெரியவர் என்றால் யார்.

வயதால், படிப்பால், அறிவால் , செல்வத்தால், உடல் உயரத்தால், உடல் எடையால், செல்வாக்கால் ....எதில் பெரியவர் ?

வள்ளுவர் சொல்கிறார். பெரியவர் என்றால் இது எல்லாம் இல்லை.

செய்வதற்கு அரிய செயல்களை செய்பவர் பெரியவர்.

கல்யாணம் பண்ணிக் கொள்வது, பிள்ளைகளை பெறுவது, வேலைக்குப் போய் சம்பாதிப்பது, சமைப்பது, துணி மணி மடித்து வைப்பது போன்றவை "செயற்கு அரிய செயலில் " வராது.

உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்....இதுவரை செயற்கரிய செயல் ஏதாவது செய்திருக்கிறீர்களா ? என்று.

செய்வதற்கு அரிய செயல் என்றால் என்ன ?

மற்றவர்களால் செய்ய முடியாத செயல். அரிதானது என்றால் எளிதில் கிடைக்காதது. எப்போதாவது நிகழ்வது. அந்த மாதிரி செயல் செய்பவர்கள் பெரியவர்கள்.

இது சாதாரண மக்களுக்கு மட்டும் அல்ல, மத குரு மார்கள், அரசியல் தலைவர்கள், என்று யார் யார் எல்லாம் தங்களை பெரியவர்கள் என்று கூறிக் கொள்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் இது பொருந்தும்.

எனவே, பெரியவர் என்பது செயலைப் பொருத்தது.

சரி, பெரியவர்கள் செய்வதற்கு அரிய செயல்களை செய்வார்கள்.

அப்படியானால் சிறியவர்கள் ?

சிறியவர்கள் சின்ன செயல்களை செய்வார்கள் என்று சொல்லவில்லை.

சிரியர் செய்வதற்கு அறிய செயல்களை செய்ய மாட்டார்கள். அப்படி என்றால் சின்ன செயல்களை செய்வார்களா என்றால், அதையும் கூட செய்யாத சோம்பேறிகளாக இருக்கலாம்.


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் 
செயற்கரிய செய்கலா தார்.

ஒரு அரிய செயலை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து முடித்து விட முடியாது. அதை செய்து முடிக்க நாள் பிடிக்கும்.

அந்த கால கட்டத்தில் உங்கள் செயலும், எண்ணமும் ஒரு பெரிய செயலை செய்வதில் மூழ்கி  இருக்கும் போது  உங்களை அறியாமலேயே உங்கள் மனம் நல் வழிப் படும், பெரியவர்களின் தொடர்பு ஏற்படும், சில்லறை விஷயங்களில் ஈடுபட   நேரம் இருக்காது.

அந்த செயலை நோக்கி நீங்கள் நகரும்போது தானகவே உங்கள் ஆளுமை (personality ) மாறும். பெரியவர் ஆவீர்கள்

பெரியவர்களாக அது ஒன்றுதான் வழி.

நீங்கள் இதுவரை அரிய செயல் எதையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை...இன்றிலிருந்து ஆரம்பியுங்கள்....வாழ்நாளில் ஏதாவது ஒரு பெரிய  செயல வேண்டும் என்று.

எப்பதான் பெரியவராகப் போகிறீர்கள் ?

பிறக்கும் போது சின்னவராக இருந்தோம். இறக்கும் போதும் அப்படியேவா இருப்பது  ?

பெரியவனாக, பெரியவளாக வளர வேண்டாமா ?

வளருங்கள்.

செயர்கரியதை செய்து முடிக்கும் வரை , நான் பெரியவன் / ள் என்ற எண்ணத்தை தவிருங்கள்.

முடிவு செய்து விட்டீர்களா ? என்ன செய்யப் போகிறீர்கள் ?

1 comment:

  1. பெரிய செயல் செய்பவர் பெரியவர், மற்றவர் சிறியவர் என்றால், மற்றவர் தன்னடக்கத்தோடு இருக்க வேண்டும் என்று வலியுருத்தியதாகும். இதை நமது அரசியல்வாதிகளுக்கு, அதிலும் தனக்குத் தானே பட்டங்கள் சூட்டிக்கொள்ளும் தமிழக அரசியல்வாதிகளுக்குச் சொல்ல வேண்டும்.

    ReplyDelete