Saturday, June 29, 2013

திருக்குறள் - செவிச் செல்வம்

திருக்குறள் - செவிச் செல்வம்



செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச் செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

ஏன் விழிச் செல்வத்தைவிட செவிச் செல்வம் உயர்ந்தது ?

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலாவது, கண்ணின் உதவியால் நாம் புத்தகங்களை படித்து அறிந்து கொள்ள முடியுமே ? எத்தனை ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகங்களில் இருந்து நேற்று வெளியான புத்தகம் வரை எல்லாம் ஒரு நொடியில் கிடைக்குமே ? வாங்கிப் படித்து அறிவைப் பெருக்கலாமே ?

பிரச்சனையே அதுதான். புத்தகங்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் எழுதப் பட்டவை. இன்றைய சூழலுக்கு அது சரி வருமா ? உங்களின் தனிப்பட்ட பிரச்சனைக்கு அது வழி சொல்லுமா ? சந்தேகம் தான்.

இரண்டாவது, புத்தகங்களை படித்து புரிந்து கொள்வது என்பது எளிதான காரியம் அல்ல. எத்தனை பேரால் திருக்குறளை படித்து அதன் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும் ?


மூன்றாவது, எழுதப் பட்டது ஒரு கோணத்தில் இருக்கலாம். நீங்கள் புரிந்து கொண்டது இன்னொரு  கோணத்தில் இருக்கலாம். அர்த்தம் , அனர்த்தமாகப் போய் விடும். உதாரணமாக, பதஞ்சலியின் யோக சூத்திரத்தை சொல்லலாம். அதற்க்கு  எழுதப்பட்ட உரைகளை படித்தால் எது பதஞ்சலி சொன்னது என்று புரிந்து கொள்ள முடியாது.


நான்காவது, புத்தகங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண் படலாம். அல்லது முரண் படுவது போல நமக்குத் தெரியலாம். எதை எடுப்பது, எதை விடுவது என்ற குழப்பம் வரும். எப்படி முடிவு எடுப்பது.


ஐந்தாவது, உலகில் உள்ள புத்தங்களை எல்லாம் படித்து அறிந்து கொள்வது என்பது மிக மிக காலம் பிடிக்கும் காரியம். யாரவது அவற்றை எல்லாம் படித்து அறிந்து, நமக்குச் சொன்னால் எவ்வளவு எளிதாக இருக்கும்.

ஆறாவது, படிப்பறிவோடு, அனுபவ அறிவும் சேரும்போது அந்த அறிவு மிக மிக தெளிவாக இருக்கும். ஒரு சிறுவனின் கையில் கீதையை கொடுத்து படித்து அறிந்து கொள்  என்றால் அவன் என்ன அறிவான் ? ஏன், நாமே கூட படித்தால் எவ்வளவு புரியும் ? அதே கீதையை அதை நன்கு படித்து அறிந்த ஒரு பெரியவர்  மூலம் கேட்டால் எப்படி வேகமாக புரிந்து கொள்ள முடியும் ?


ஏழாவது, பெரியவர்களிடம் நாம் சென்று கேட்க்கும் போது அவர்கள் நம் அறிவின் திறம் , நமது பிரச்சனைகள், நமது திறமை என்று நம்மை பற்றி அறிந்து, அதற்க்கு தக்க மாதிரி சொல்லுவார்கள்.

எட்டாவது, எத்தனை ஆயிரம் புத்தகங்கள் இருந்தாலும், நமக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் நாம்  மருத்துவரை போய் பார்க்கிறோம். புத்தகம் வாங்கிப் படித்து  அதில் உள்ளது போல மருந்து உட்கொள்ளுவது இல்லை. ஏன் ?  படிப்பறிவோடு, அனுபவ அறிவும், நம்மை பற்றிய தனிபட்ட தகல்வல்களும் அறிந்து மருத்துவர் மருந்து  சொல்லுவார் என்பதால்.

ஒன்பதாவது, திருப்புகழை நாமே படித்து அறிந்து கொள்வதற்கும், திருமுருக கிர்பானந்த வாரியார்  சொல்லிக் கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. எது சிறந்தது ?


பத்தாவது, வருடா வருடம் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப் படுகிறது. அதன் நகல் நமக்குக் கிடைக்கிறது. இருந்தும் பட்ஜெட் விளக்கக் கூட்டம் என்று  பெரிய வல்லுனர்களை கொண்டு பேச வைகிறார்கள். அதற்கு மிகப் பெரிய  கூட்டம் வருகிறது. ஏன், படித்து அறிந்து கொள்ள முடியாதா ? வல்லுனர்களிடம் இருந்து  கேட்டு அறிவது நம் அறிவை மிக விரைவாக ஆழமாகவும் அகலமாகவும் ஆக்கும்.

பதினொன்றாவது, நாமே படித்து, குழம்பி, பின் தெளிய நாள் பல ஆகும். ஒரு இருபது இருபத்தி ஐந்து வருடம்   ஒரு குறிப்பிட்ட துறையில் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் போய் கேட்டால் நம் குழப்பங்களை மிக எளிதில் தீர்த்து வைத்து விடுவார்.

எப்படி பார்த்தாலும் கற்றலை விட கேட்பது சிறந்தது.

கேட்பது என்றால் உயர்ந்தவர்களிடம் போய் கேட்க்க வேண்டும்.

தமிழ் கேட்க்க வேண்டும் என்றால் கி. வா. ஜா, கி. ஆ. பெ. விஸ்வநாதம் , வாரியார் ஸ்வாமிகள் , போன்ற பெரியவர்களிடம் கேட்க்க வேண்டும். தமிழ் அறிஞர்கள் என்று   சொல்லிக் கொண்டு திரியும் பட்டி மன்ற ஆட்களிடமோ, அரசியல்வாதிகளிடமோ  போய் கேட்க்கக் கூடாது.

நன்றாக யோசித்துப் பாருங்கள், நீங்கள் அதிக பயன் பெற்றது வாசித்ததன் மூலமா ? கேட்டதன் மூலமா என்று ?

நிறைய கேளுங்கள். படித்து அறிந்த அறிஞர்கள் கூறுவதை கேளுங்கள். தேடித் போய் கேளுங்கள்.

செவிச் செல்வத்தைப் பற்றி வள்ளுவர் இன்னும் கூறுவார்.

 

3 comments:

  1. அவ்வளவுதானா விளக்கம்!!. ரொம்ப கொஞ்சமா இருக்கே!!! we expected more from you. (smiling face)

    ReplyDelete
  2. You cannot learn everything by listening to other learned people. At some stage, you will need to seek out knowledge on your own, for which reading books, articles, scientific papers, etc. is the only way. For some of the books that I am reading, there is no way I would be able to find an expert who knows the contents and is willing to spend time with me.

    I think Valluvar wanted to stress the importance of learning through listening, but said some superlative thing in the process. That's all.

    ReplyDelete
    Replies
    1. If you read carefully the Kural, he did not anything about learning. That is my interpretation. He said the listening ability is the superior wealth. That is all. WE cannot go to Valluvar to listen to his lectures. Why listening is superior ? Why did he say listening is important ? I think still deeper meaning to this kural. I am still thinking.....

      Delete