Tuesday, August 13, 2019

சிறுபஞ்ச மூலம் - பெண்டிர் சிறப்பு

சிறுபஞ்ச மூலம் - பெண்டிர் சிறப்பு 


ஒரு குடும்பத்தில், பெண்ணின் பங்களிப்பு மிக அதிகம்.  ஒரு குடும்பத்தை நடத்திச் செல்வதே பெண்ணின் பெருமை   என்று தமிழ் பேசுகிறது.

"நாங்கள் ஏன் குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டும். எங்களுக்கு வேற வேலை இல்லையா ? எது எக்கேடு கெட்டு போனால் எங்களுக்கு என்ன. எங்களுக்கு சுதந்திரம் வேண்டும். வீட்டைப்  பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. வேண்டுமானால் ஆண்கள் பார்த்துக் கொள்ளட்டும் "

என்று சில பெண்கள் ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அது சரியா தவறா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  இந்த வாதத்தை திருமணம் முடிவதற்கு முன் அவர்கள் பிள்ளை வீட்டாரிடம் சொல்லிவிட்டால் பின் பிரச்சனை இல்லை. இந்தப் பெண் இப்படித்தான் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். அதில் ஒரு நேர்மை இருக்கும்.

அது ஒரு புறம்  இருக்கட்டும். எத்தனையோ சீரழிவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பெண்ணின் சிறப்பாக சிறுபஞ்ச மூலம் என்ற நூல் சிலவற்றை சொல்லுகிறது.

முதலாவது, வீட்டின் வரவு செலவு கணக்கை பராமரிப்பது பெண்ணின்  பெருமை என்று அது சொல்கிறது. ஆணுக்கு சம்பாதிக்கத் தெரியும். அதை எப்படி சரியான வழியில் செலவு செய்வது என்பது பென்ன்க்குத்தான் தெரியும் என்கிறது.

இரண்டாவது, செலவு மட்டும் செய்தால் போதாது, கொஞ்சம் மிச்சம் பிடித்து அதை சரியான வழியில் முதலீடு செய்து அந்த செல்வத்தை பெருக்குவதும் பெண்ணின் பெருமை என்று பேசுகிறது.

மூன்றாவது, உறவினர்கள் பயந்து ஓடும்படி பேசக் கூடாது என்கிறது.  விருந்தை உபசரிப்பது பெண்ணின் பெருமை.

நான்காவது, தெய்வத்தை தான் மட்டும் வழிபட்டால் போதாது, வீட்டில் உள்ள மற்றவர்களையும் தொழச் செய்ய வேண்டும். எல்லாரையும் எழுப்பி, குளிக்க வைத்து, சாமி முன்னால் நின்று கும்பிடப் பண்ண வேண்டியது பெண்ணின் பெருமை.



பாடல்

வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்
வெருவாமை வீழ்ந்துவிருந் தோம்பித்-திருவாக்குந்
தெய்வதையு மெஞ்ஞான்றுந் தேற்ற வழிபாடு
செய்வதே பெண்டிர் சிறப்பு.


பொருள்

வருவாய்க்குத் = வீட்டின் வருமானத்துக்கு

 தக்க = தக்கபடி

வழக்கறிந்து = வழக்கம் அறிந்து, வழங்குதலை அறிந்து

சுற்றம் = உறவினர்கள்

வெருவாமை = பயப்படாமல் (அப்பா, அவளா, இராட்சசி )

வீழ்ந்து = வணங்கி

விருந் தோம்பித் = விருந்தை உபசரித்து

திருவாக்குந் = நல்ல நூல்களில் சொன்னவற்றையும்

தெய்வதையு = தெய்வத்தையும்

மெஞ்ஞான்றுந் = எப்போதும் (எஞ்ஞான்றும்)

தேற்ற = தெளிவாக

வழிபாடு = வழிபாடு

செய்வதே =செய்வதே

 பெண்டிர் சிறப்பு. = பெண்ணின் சிறப்பு

பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை நிலை நிறுத்துவது பெண் தான் என்று அது பேசுகிறது.

பெண்ணுக்கு பெரிய பொறுப்பை தமிழ் தந்திருக்கிறது. காரணம், அவளின் தகுதி கருதி.

எங்களுக்கு தகுதியும் இல்லை, எங்களுக்கு பொறுப்பும் வேண்டாம் என்று சொல்லித் திரியும் விட்டேறிகளை நாம் தள்ளி வைப்போம்.

சிறு வயதில் ஒரு பெண் பிள்ளை இவற்றை அறியும் போது, அவளுக்குள் ஒரு நிர்வாகத் திறமை வளரும்.

நான் ஒரு வீட்டை நிர்வாகம் பண்ணப் போகிறேன் என்று அவள் நினைக்கத் தலைப் படும்போது, தானே அவள் அதை கற்றுக் கொள்வாள்.

அப்படி இருந்த நாம், இன்று இப்படி ஆகிக் கொண்டிருக்கிறோம்.

சரியா தவறா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_13.html

Monday, August 12, 2019

கம்ப இராமாயணம் - துன்பம் வந்தால் என்ன செய்வது ?

கம்ப இராமாயணம்  - துன்பம் வந்தால் என்ன செய்வது ?


துன்பம் வந்தால் துவண்டு போவது மனித இயல்பு.

துயரம் வந்தால் சோர்ந்து போய் விடுகிறோம். என்ன செய்வது என்று அறியாமல் குழம்புகிறோம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று தன்னிரக்கம் கொள்கிறோம். இதற்கு யார் காரணம் என்று யாரையெல்லாமோ நினைத்து அவர்கள் மேல் குறை சொல்கிறோம்.

அந்தக் காலத்திலேயே எங்க அப்பா அம்மா என்னைய நல்லா படிக்க வச்சிருந்தா, இன்னைக்கு இந்த துன்பம் வருமா ?....

நல்ல மாப்பிள்ளையா பாத்து கட்டிக் கொடுத்திருந்தா, நான் இன்னிக்கு இப்படி கண்ணை கசக்கி கொண்டு இருந்திருப்பேனா ?....

வேலை போய் விட்டதே, இனி என்ன செய்வேன்? எப்படி இந்த குடும்பத்தை கரை சேர்ப்பேன்? என்று தவிப்பவர்கள் உண்டு.

இப்படி எவ்வளவோ விதத்தில் துன்பம் வந்து சேரலாம்.

துவள்வது, சோர்வது, பிறரை குற்றம் கூறுவது என்பது ஒரு வழி.

அந்தத் துன்பத்திலும் இன்பம் காண்பது என்பது இன்னொரு வழி.

இது என்ன கதையா இருக்கே...துன்பம் வரும் போது , அதில் எப்படி இன்பம் காண்பது?

வள்ளுவர்

இடுக்கண் வருங்கால் நகுக அதனை 

அடுத்தூர்வது அஃதொப்பது இல் 

என்றார்.

என்ன அர்த்தம்?

துன்பம் வந்தால் சிரிக்க வேண்டுமாம். ஏன் என்றால், அந்த துன்பத்தைக் கண்டு சிரித்து கொண்டு  சும்மா இருக்கக்  கூடாது.அந்த துன்பத்தை நீக்க வழி காண வேண்டும். முயற்சி செய்து, அந்த துன்பத்தை கடந்து விட்டால், அப்போது வரும்  சுகம் இருக்கிறதே, அதற்கு ஈடு இணை இல்லை என்கிறார்.

உதாரணமாக, வேலை போய்விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

ஐயோ, வேலை போய்விட்டதே என்று சுணங்கி விடாமல், "ஆஹா, வேலை போய் விட்டதா ...இப்ப என்ன செய்கிறேன் பார் " என்று களத்தில் இறங்க வேண்டும். வேறு வேலை தேடி கண்டு பிடிக்கலாம், அல்லது சுய தொழில் தொடங்கலாம். எப்படியோ, முயன்று பொருள் சம்பாதித்து, குடும்பத்தை கரை சேர்த்து விட்டால், அப்போது கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும்  அளவிட முடியாது என்கிறார் .

பெண்ணுக்கு வரன் கிடைக்கவில்லையே என்ற கவலை. ஆடி ஓடி ஒருவழியாக திருமணம் முடித்து வைத்து விட்டால் , பின் பேரக் குழந்தைகளோடு விளையாடும் போது உண்டாகும்  மகிழ்ச்சி இருக்கிறதே ....

இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம்.

முடி சூட்ட இருந்த இராமனை, காட்டுக்குப் போ என்று கைகேயி விரட்டி விட்டாள். இதை விட பெரிய துயரம் இருக்குமா ?

சக்ரவர்த்தியாக இருக்க வேண்டியவன், மர உரி உடுத்து காட்டிலும் மேட்டிலும்  நடந்து போக வேண்டி இருந்தது.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்.

அந்த நிலையில்   இருந்தால் என்ன செய்வோம்.

அப்பா இப்படி பண்ணி விட்டாரே என்று வருத்தப் படுவோம், பரதனிடம் பேசிப் பார்க்கலாமா என்று  நினைப்போம், பேசாமல் சீதையின் மிதிலாபுரிக்கு போய் விடலாமா  என்று யோசிப்போம் ...

இராமனுக்காவது சரி, தசரதன் தந்தை. அவன் சொல் கேட்க வேண்டியது அவன் கடமை.

சீதைக்கு என்ன வந்தது? பேசாமல் அரண்மனையில் இருந்து இருக்கலாம். அல்லது, நான் என் அப்பா வீட்டுக்குப் போகிறேன் என்று போய் இருக்கலாம்.

அவளும், காட்டுக்கு கிளம்பி விட்டால்.

இரண்டு பேரும் வருத்தப் பட்டார்களா ?

இல்லவே இல்லை.

ஏதோ பிகினிக் போவது போல சந்தோஷமாக போகிறார்கள்.

இராமன், அவளுக்கு கானகத்தில் உள்ளவற்றை காட்டிக் கொண்டே வருகிறான். இருவரும் மகிழ்ச்சியாக அந்த இயற்கையை இரசித்துக் கொண்டே  செல்கிறார்கள்.

பாடல்




மன்றலின் மலி கோதாய்!
     மயில் இயல் மட மானே! -
இன் துயில் வதி கோபத்து
     இனம் விரிவன எங்கும்,
கொன்றைகள் சொரி போதின்
     குப்பைகள், குல மாலைப்
பொன் திணி மணி மானப்
     பொலிவன - பல - காணாய்!

பொருள்

மன்றலின் = மனத்தால்

மலி  = நிறைந்த

கோதாய்! = பெண்ணே

மயில் = மயிலின்

இயல்  = இயல்பை கொண்ட

மட மானே! - = மருண்ட மான் போன்றவளே

இன் துயில் = இனிய தூக்கத்தில்

வதி கோபத்து = இந்திர கோப பூச்சிகள்

இனம் = இனம்

விரிவன எங்கும், = எங்கும் விரிந்து

கொன்றைகள் = கொன்றை மலர்கள்

சொரி போதின் = கொத்து கொத்தாக மலர்ந்து

குப்பைகள் = குவியலாக

குல = சிறந்த

மாலைப் = மாலையில்

பொன் = பொன்னாலான

திணி மணி = மணி பதித்த

 மானப் = அது போல

பொலிவன பல = பலவாறாக பொலிவதை

காணாய்!  = பெண்ணே

கொன்றை மலர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்திர கோப பூச்சி சிவந்த நிறத்தில் இருக்கும்.   தங்க ஆரத்தில், வைரம் பதித்தது போல இருக்கிறது ஏங்கறான் இராமன்.

நடுவில், சீதையின் அழகை புகழ்கிறான்.

பெண்ணின் அழகை புகழ்ந்தால் அவளுக்கு அது ரொம்பப் பிடிக்கும்.

தன் அழகை , கணவன் இரசிக்க வேண்டும் என்று பெண் விரும்புவாள்.

மனம் நிறைந்தவளே , மயில் போன்றவளே , அங்க பாரு கொன்ற மலர்களும், இந்திர கோப பூச்சிகளும் எப்படி இருக்குனு என்று ஏதோ foreign vacation போன மாதிரி  சந்தோஷமாக போகிறார்கள்.

என்ன துன்பம் வந்தாலும்,

கணவனும் மனைவியும் பிரியக் கூடாது. ஒன்றாக இருக்க வேண்டும்.

அவர்கள் அன்பாக இருக்க வேண்டும்.

கணவன் இரசிக்கும் படி மனைவி இருக்க வேண்டும்.

கணவன், அவளை பாராட்டிச் சொல்ல வேண்டும்.

அப்படி இருந்து விட்டால், எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், அதை இன்பமாக மாற்றி விடலாம்


சிக்கல் என்ன என்றால், அந்த இனிமையான கணவன் மனைவி உறவையே துன்பமயமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

பின் எங்கே இயற்கையை இரசிப்பது, அன்பை பகிர்வது, மனைவியை புகழ்வது எல்லாம்?

நாங்கள் என்ன போகப் பொருள்களா? நீங்கள் இரசிக்க நாங்கள் என்ன கடையில் வைத்திருக்கும் பொம்மைகளா  ? என்று பெண்ணிய வாதிகள் கிளம்பி விட்டார்கள். தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

துன்பம் வந்தால், சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று இராமன் வாயிலாக  கம்பன் சொல்லித் தருகிறான்.

படித்துக் கொள்வோமே.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_12.html

Sunday, August 11, 2019

சிலப்பதிகாரம் - அரும்பெறற் கணவன்

சிலப்பதிகாரம் - அரும்பெறற் கணவன் 


பெண்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்பது சாதாரண ஆண் மகன்களின் அங்காலாய்ப்பாக இருக்கலாம்.

இளங்கோ அடிகள் போன்ற பெரும் புலவர்களுக்கும் அந்த குழப்பம் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

அப்படியும் இருக்கலாம், அல்லது பெண்ணின் இயல்பே அப்படி இருக்கலாம்.

கோவலன் அப்படி ஒன்றும் பெரிய சத்ய சீலன் கிடையாது.

மாசறு பொன்னே, வலம்புரி முத்தே என்று கண்ணகியை கொஞ்சிவிட்டு, மாதவி பின்னால் போனான். பின் மாதவியை விட்டு விட்டு, சொத்தையெல்லாம் தொலைத்து விட்டு, கண்ணகியிடம் வந்தான்.

சிலம்பு இருக்கிறது, அதை வேண்டுமானால் கொண்டு போ என்று கண்ணகி சொல்கிறாள். கோவலன் நாணப்பட்டு, "இல்லை, இந்த சிலம்பை மூலதனமாக வைத்து வணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டுவேன்...என்னோடு நீ மதுரைக்கு வா " என்றது கூப்பிட்டான். உடனே கிளம்பி விட்டாள்.

போகிற வழியில், ஒரு வேடர் கூட்டத்தை சந்திக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஒரு பெண், அருள் வந்து, கண்ணகியைப் பற்றி மிக உயர்வாக கூறுகிறாள்.

இங்கே கதையை நிறுத்துவோம்.

தன்னைப் பற்றி புகழ்ந்து பேசியதைக் கேட்ட கண்ணகி என்ன செய்திருக்க வேண்டும் ?

சரி என்று ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

அல்லது

அப்படியெல்லாம் இல்லை என்று அடக்கத்தோடு மறுத்து இருக்கலாம்.

கண்ணகி இரண்டையும் செய்யவில்லை.

கோவலன் பின்னால் சென்று மறைந்து நின்று கொண்டு, புன்முறுவல் பூத்தவண்ணம் சொல்ல்கிறாள் "அந்த நிறைந்த அறிவுடைய பெண், மயக்கத்தில் என்னைப் பற்றி ஏதேதோ சொல்கிறாள் " என்கிறாள்.

அந்த இடத்தில், இளங்கோ அடிகள் ஒரு சொல்லை போடுகிறார்.

"அரும் பெறற் கணவன்" என்று கோவலனை கூறுகிறார்.

கோவலன் என்ன அவ்வளவு அருமையான கணவனா ?

கணவன் எப்படி இருந்தாலும், அவனை உயர்ந்தவனாகவே காணும் பண்பு பெண்ணுக்கு இருந்தது என்று சொல்ல வருகிறாரா ? அல்லது அப்படித்தான் இருக்க வேண்டும்  என்று சொல்ல வருகிறாரா?

பாடல்


பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று
அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப


பொருள்

பேதுறவு = பேதைமை உற்று

மொழிந்தனள் = கூறினாள்

மூதறி வாட்டியென்று = மூத்த அறிவுடைய பெண் என்று

அரும்பெறற்  = அருமையாகப் பெற்ற

கணவன் = கணவன் (கோவலன்)

பெரும்புறத் தொடுங்கி = பெரிய முதுகின் பின்னால் ஒடுங்கி

விருந்தின் = புதுமையாக , புதிதாக

மூரல் = புன்னகை

அரும்பினள் நிற்ப = அரும்பு விட நின்றாள்


விருந்து என்றால் புதுமை என்று பெயர். வீட்டுக்கு புதிதாக வந்தவர்களை விருந்தினர் என்று   சொல்வோம். அவர், ரொம்ப நாள் தங்கி விட்டால், அவர் விருந்தினர் அல்லர்.

ஆண் எப்படி இருந்தாலும், அவனை சார்ந்தே பெண் வாழ்ந்து வந்தாள் என்று காட்டுகிறார் இளங்கோ.

அது சரியா அல்லது தவறா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும்.

குடும்பத்தில் தவறு செய்பவர்களை என்ன செய்யலாம் ? குடும்பத்தை விட்டு விலக்கி விடலாமா?

சரி தவறு என்று பார்த்துக் கொண்டிருக்க குடும்பம் என்பது என்ன ஒரு நீதி மன்றமா ?

இல்லை, குடும்பத்தில் ஒருவர் தவறு செய்து கொண்டே இருப்பார், அவரை மன்னித்துக் கொண்டே தான்  இருக்க வேண்டுமா ?

என் சிறிய வாசிப்புக்குத் தெரிந்தவரை, தமிழ் இலக்கியம் மன்னிக்கத்தான்  வேண்டும் என்கிறது.

சகித்துப் போகத்தான் வேண்டும் என்கிறது.

கைகேயி போல் ஒரு மனைவி வாய்த்து விட்டால்,, சகித்துத் தான் போக வேண்டும் என்கிறது  இராமாயணம்.

மனைவியை வைத்து சூதாடி தோற்றாலும், அவனை "தர்மன்" என்றே அவன் மனைவியும் தம்பிகளும்  ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

தயரதன் நினைத்து இருந்தால், கைகேயியை தூக்கி சிறையில் வைத்து இருக்கலாம்.

இராமன் நினைத்து இருந்தால், கைகேயி கேட்ட வரம் என்னைக் கட்டுப் படுத்தாது என்று சொல்லி  கானகம் போகாமல் இருந்திருக்கலாம்.

மனைவி, தாய் எவ்வளவு கொடுமை செய்தாலும், கணவனும் மகனும் சகித்தார்கள் அங்கே.

கோவலன் எவ்வளவு தவறு செய்தாலும், சகித்தாள் கண்ணகி.

பெண் விடுதலை விரும்பிகளுக்கு இரத்தம் கொதிக்கலாம். இப்படி சொல்லி சொல்லியே  பெண்ணை அடிமை படுத்தி விட்டீர்கள் என்று.

அதற்காகத்தான் இராமாயண உதாரணத்தை சொன்னேன். பெண் தவறு செய்தால், ஆண்கள் சகித்தார்கள்.

குடும்பம் என்று இருந்தால், தவறு நிகழத்தான் செய்யும். குற்றம் குறை இருக்கத்தான் செய்யும்.

சகிக்க வேண்டும். கணவன், பரத்தை வீட்டுக்குப் போக கால் சிலம்பை கழட்டிக் கொடுக்கும் வரை  கண்ணகி சகித்தாள்.

பாடம் படிப்பதும், விவாதம் பண்ணுவதும் அவரவர் விருப்பம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_11.html

Thursday, August 8, 2019

திருவருட்பா - கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன்

திருவருட்பா - கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன் 


ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவன் நாளும் ஒரே இடத்தில் இருந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் இறந்து விட்டான். ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் ஒன்று கூடி, அந்த பிச்சைக்காரனை, அவன் இருந்து பிச்சை எடுத்த இடத்திலேயே புதைப்பது என்று முடிவு செய்து, அங்கே ஒரு குழி வெட்டினார்கள்.

இரண்டு அடி தோண்டி இருப்பார்கள், "நங்" என்று சத்தம் கேட்டது. தோண்டி எடுத்துக் பார்த்தால், ஒரு பொற்குடம் நிறைய தங்கக் காசுகள்.

பெரிய பொக்கிஷத்தை மேல் அமர்ந்து கொண்டு வாழ் நாள் எல்லாம் பிச்சை எடுத்திருக்கிறான் அவன்.

அவன் மட்டுமா ?

நாமும் தான் என்கிறார் வள்ளலார்.

"இறைவா, தேவர்கள் எல்லாம் ஏங்க , அவர்களை விட்டு விட்டு நீ வந்து என் மனதில் இருந்து கொண்டாய். மனம் எல்லாம் கள்ளம் நிறைந்த நான் அதை அறியாமல் துன்பத்தில் கிடந்து உழல்கின்றேன்"

என்கிறார்.



வெள்ளிக் குடத்தில் தங்கக் காசுகளை விட, உள்ளத்தில் உள்ள இறைவன் உயர்வு அல்லவா. அது தெரியாமல், பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

Lion King படத்தில் வரும் சிம்பா போல, தான் ஒரு காட்டுக்கு அரசன் என்று தெரியாமல், பன்றியுடன் சுத்திக் கொண்டிருக்கும் சிங்கம் போல, இறைவன் உள்ளே இருப்பதைத் தெரியாமல், பன்றிகளோடு சுத்திக் கொண்டிருக்கிறோம்.

காரணம் என்ன?

தான் யார் என்று அறிய நினைக்காமல், ஊரில் உள்ளவர்கள் சொல்வதை  கேட்டுக் கொண்டு அதன் படி   செய்வது.

அந்தப் படத்தில் ரஃபிக் என்று ஒரு குரங்கு வந்து சொல்லும்..."சிம்பா நீ யார் தெரியுமா " என்று. அப்படி வரும் ஆச்சாரியர்களை துணை கொண்டு, அவர்கள் சொல்வதைக் கேட்டு, நாம் யார் என்று அறிய வேண்டும்.

"தன் பெருமை தான் அறியா சங்கரனார்" போல, நம் பெருமை அறியாமல் உழல்கிறோம்.

பாடல்

விண்ணறாது வாழ் வேந்த னாதியர் 
        வேண்டி யேங்கவும் விட்டென் னெஞ்சகக் 
    கண்ணறாது நீ கலந்து நிற்பதைக் 
        கள்ள நாயினேன் கண்டு கொண்டிலேன் 
    எண்ணறாத் துயர்க் கடலுண் மூழ்கியே 
        இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன் 
    தண்ணறாப் பொழில் குலவும் போரிவாழ் 
        சாமியே திருத்தணிகை நாதனே 

பொருள்


விண்ணறாது = விண்ணில் இருக்காமல்

வாழ் = அங்கே வாழ்கின்ற

வேந்த னாதியர்  = இந்திரன் மற்றும் தேவர்கள்

வேண்டி யேங்கவும் = வேண்டி ஏங்கவும்

விட்டென்= (அவர்களை) விட்டு என்

னெஞ்சகக்  = நெஞ்சு அகத்தில்

கண்ணறாது = கண் இமைக்கும் நேரம் கூட இடைவெளி இல்லாமல்

நீ கலந்து நிற்பதைக்  = நீ என்னுள் கலந்து நிற்பதை

கள்ள நாயினேன் = கள்ளத்தனம் நிறைந்த நாய் போன்ற  நான்

கண்டு கொண்டிலேன் = கண்டு கொள்ளவில்லை

எண்ணறாத் = எண்ணில் அடங்காத

துயர்க் கடலுண் மூழ்கியே  = துயரக் கடலுழ் மூழ்கி

இயங்கி = இயங்கி, செயல் பட்டு

மாழ்குவேன் = மாளுவேன்

யாது செய்குவேன்  = என்ன செய்வேன் ?

தண்ணறாப்  = தணல்  ஆற

பொழில் குலவும் = சோலைகள் சூழும்

போரிவாழ்  = திருப்போரில் வாழும்

சாமியே  = சாமியே (முருகப் பெருமானே)

திருத்தணிகை நாதனே  = திருத்தணிகையின் தலைவனே

நமக்குள் உள்ள ஆற்றலை நாம் அறிந்து  கொள்ள முடியாமல் இருக்கக் காரணம், கள்ளத்தனம்.

பொய், சூது, வாது, ஆணவம், போன்ற கள்ளத்தனங்கள் நம்மை , நம்முடைய உண்மையான   நிலையை அறிய விடாமல் தடுக்கின்றன.


இதையேதான் மணிவாசகரும் சொல்கிறார்

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க" என்று சிவபுராணத்தில்.


'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே'

உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம் , வாய் கோபுர வாசல் என்பார் திருமூலர்

"நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்" என்பார் சிவ வாக்கியார்


நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி  வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ


சிந்திப்போம்.



https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_8.html 

Wednesday, August 7, 2019

நன்னூல் - எப்படி பேச மற்றும் எழுத வேண்டும்

நன்னூல்  - எப்படி பேச மற்றும் எழுத வேண்டும் 



எப்படி பேச வேண்டும் தெரியுமா?

அட, இது தெரியாமலா இத்தனை வருடம் பேசிக் கொண்டிருக்கிறோம். நல்லா தெரியுமே, விட்டா நாள் கணக்கா பேசுவேனே என்று பலர் நினைக்கலாம்.

பேசுவது, எழுதுவது, உணர்ச்சிகளை, செய்திகளை வெளிப்படுத்துவது என்பது ஒரு கலை.

நமக்கு வரும் பல சிக்கல்களுக்கு காரணம் நமக்கு எப்படி பேசுவது என்று தெரியாமல் இருப்பதுதான்.

நன்னூல்  நமக்கு பாடம் சொல்லித் தருகிறது.

நாம், நம் மனதில் உள்ளவற்றை வெளிப் படுத்தும் போது, அதில் உள்ள குறைகள் என்ன என்று பட்டியல் போட்டு அவற்றை விலக்க வேண்டும் என்று கூறுகிறது.

நன்னூல் கூறியது என்னவோ எழுத்தில் வரும் குற்றம் பற்றித்தான் என்றாலும், அதை நாம் நீட்டித்து பேச்சில் வரும் குற்றத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை அறிந்த பின், அடுத்த முறை நீங்கள் டிவி பார்க்கும் போது கவனியுங்கள், அதில் எவ்வளவு குற்றம் இருக்கிறது என்று தெரியும்.

பத்துவிதமான குற்றங்களை நன்னூல் பட்டியல் போடுகிறது.

பத்துதானா என்று கேட்டால், இல்லை. அதற்கு மேலேயும் இருக்கும். பெரிய குற்றங்களை  அது எடுத்துச் சொல்கிறது. இவற்றை நீக்கினாலே பெருமளவு குற்றங்கள் குறைந்து விடும். மற்றவற்றை நாமே சரி செய்து கொள்ளலாம்.

இன்று நம்மில் பலர் அலுவலக விஷயமாக பல presentation (ppt) செய்ய வேண்டி வரும், பல விதமான ரிப்போர்ட் கள் அனுப்ப வேண்டி இருக்கலாம், பல விதமான கடிதங்கள் எழுத வேண்டி இருக்கலாம், இப்படி எழுத்து என்று எங்கு வந்துவிட்டாலும், நன்னூல் சொல்லும் குற்றங்களை களைந்து எழுதப் பழகிவிட்டால் அது நன்றாக இருக்கும்.


அது என்ன பத்து குற்றங்கள்?

பாடல்

குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
வழூஉச்சொ்ற் புணர்த்தல் மயங்க வைத்தல்
வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
சென்றுதேய்ந் திறுதல் நின்றுபயன் இன்மை
என்றிவை ஈரைங் குற்றம் நூற்கே


பொருள்


குன்றக் கூறல் = குறைத்துக் கூறுவது. எதையும் முழுவதுமாக சொல்லுவது இல்லை. அரைகுறையாக சொல்லுவது. இது முதல் குற்றம். சொல்லுவதற்கோ அல்லது எழுதுவதற்கோ முன் சிந்திக்க வேண்டும். என்ன சொல்லப் போகிறோம், என்று சிந்தித்தது. கேட்பவர்களுக்கு முழுமையாக புரிய வேண்டும்.

மிகைபடக் கூறல் = வள வள என்று தேவைக்கு அதிகமாக கூறுவது. பத்து நிமிடத்தில் சொல்ல வேண்டியதை அரை மணி நேரம் இழுப்பது. நேரம் மட்டும் அல்ல, விளைவுகளை மிகைப் படுத்திக் கூறுவது. அந்த ஷேர் இல் போட்டால்  30  percent வருமானம் கிடைக்கும் என்று மிகைப் பட கூறுவது. நாலு நாள்  ஆகும் என்றால், "ஒரே நாளில் செய்து விடுவேன்" என்று மிகையாகக் கூறுவது.



கூறியது கூறல் = சொன்னதையே திருப்பி திருப்பி கூறுவது. ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒரு புதிய செய்தி இருக்க வேண்டும்.


மாறுகொளக் கூறல் = முன்னுக்கு பின் முரணாக கூறுவது.  "அந்தப் பொண்ணை உன் மகனுக்குப் பார்க்கலாம். நல்ல பொண்ணு தான். ஆனா, அக்கம் பக்கத்தில ஒரு மாதிரி பேசிக்கிறாங்க". இப்படி சொன்னால் என்ன அர்த்தம். பொண்ணு நல்ல பொண்ணா இல்லையானு குழப்பம் வரும் இல்லையா.



வழூஉச்சொ்ற் புணர்த்தல் = தவறான சொற்களை சேர்த்துச் சொல்லுவது. சிறந்த சொற்களை தேர்ந்து எடுத்து பேச/எழுத வேண்டும். சில சமயம் சொற்கள் நல்லவையாக இருக்கும் ஆனால், உபயோகப் படுத்திய விதம் தவறாக இருக்கும்.  எந்த சூழ்நிலையில் , எந்த சொல்லை சொல்ல வேண்டும் என்று யோசித்து சொல்ல வேண்டும்.



மயங்க வைத்தல் = கேட்பவர்களை குழம்ப வைப்பது. தெளிவு பிறக்கும் படி பேச வேண்டும். "நல்லாத்தான் சொன்னாரு, ஆனா என்ன சொன்னாருனே விளங்கல" அப்படினு மத்தவங்க சொல்லக் கூடாது.

வெற்றெனத் தொடுத்தல் = சொல்ல வந்த செய்திக்குப் பொருந்தாத வெற்று , ஆடம்பர சொற்களை பயன் படுத்துதல். சில அரசியல்வாதிகள் பேசுவதை கேட்டிருக்கலாம். ஆடம்பரமாக இருக்கும் அவர்கள் பேசுவது. ஆனா, சொல்ல வேண்டிய விஷயம்  இருக்காது அந்தப் பேச்சில்.

மற்றொன்று விரித்தல் = சொல்லவந்ததை விட்டு விட்டு மற்றொன்றைப் பற்றி சொல்லுவது. சொல்ல வந்ததை விட்டு விலகக் கூடாது.


சென்றுதேய்ந் திறுதல் = சிலர் ஆரம்பத்தில் நல்லா ஆரம்பிப்பார்கள். ஆனா, போக போக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையா எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிப்பார்கள். சொல்ல வந்ததில் முழு கவனம் இருக்க வேண்டும். கேட்பவர்கள் கொட்டாவி விடக் கூடாது. சுவாரசியம் குன்றாமல் சொல்ல வேண்டும்.

 நின்றுபயன் இன்மை = பயன் இல்லாத சொற்களை பேசக்  கூடாது. கேட்பவரின், வாசிப்பவரின் நேரம் பொன் போன்றது. அதை வீணடிக்கக் கூடாது.

என்றிவை ஈரைங் குற்றம் நூற்கே = என்ற இவை பத்து (இரண்டு ஐந்து) குற்றம் நூலுக்கே

அலுவலகத்தில் நீங்கள் எழுதும் ஒவ்வொரு ஈமெயில், ரிப்போர்ட், பவர்பாயிண்ட் presentation எல்லாம் இந்த குற்றம் இல்லாம ல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு checklist மாதிரி போட்டு வைத்துக் கொள்ளுங்கள். எழுதி முடித்தபின், இந்த குற்றங்கள் இருக்கிறதா என்று சரி பாருங்கள்.  இருந்தால் அவற்றை களையுங்கள் .

முக்கியமாக, பிள்ளைகளுக்கு சொல்லித் தாருங்கள்.

எந்தப் பள்ளியில் நன்னூல் சொல்லித் தரப் போகிறார்கள் ? உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தான்   சொல்லித் தர வேண்டும்.

அவர்களுக்கு நன்னூலில் ஆர்வம் உண்டாக்குங்கள்.

நன்னூலில் இப்படி பல நல்ல கருத்துள்ள பாடல்கள் இருக்கின்றன.

மூல நூலை தேடிப்  படியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித் தாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_7.html

Tuesday, August 6, 2019

சகலகலாவல்லி மாலை - பாடும் பணியில் பணித்தருள்வாய்

சகலகலாவல்லி மாலை - பாடும் பணியில் பணித்தருள்வாய் 


கொஞ்சம் ஆசை உள்ளவர்கள், இறைவனிடம், காசு பணம் கேட்பார்கள், வீடு வாசல், நகை, நட்டு, பிள்ளைக்கு வேலை, பெண்ணுக்கு வரன், உடல் நலம் என்று கேட்பார்கள்.

பேராசை கொண்டவர்கள், பெரிதாக கேட்பார்கள், சுவர்க்கம், இறைவன் திருவடி, வைகுண்டம், கைலாயம், மறு பிறப்பு இன்மை என்று பெரிதாக கேட்பார்கள்.

எல்லாம் ஆசைதானே. எதையாவது வேண்டும் என்று கேட்பது. கேட்கும் பொருள் தான் மாறுகிறதே தவிர, கேட்பது என்பது அப்படியே இருக்கிறது.

இதில் சுவர்க்கம் கேட்பவர்கள், பணம் மற்றும் புகழ் போன்றவற்றை கேட்பவர்களை பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள். என்ன, கடவுள் கிட்ட போய் இந்த மாதிரி அற்ப பொருள்களை கேட்கிறாயே என்று.

அஞ்சு பத்துனு கேட்காதே, ஆயிரம் இரண்டாயிரம்னு கேளு என்று ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனுக்கு சொல்லித் தருகிறான்.  பெரிய பிச்சைகாரன், சின்ன பிச்சைக்காரன்.

இதுதானே நடக்கிறது.

ஞானிகள் தங்களுக்கு என்று எதையும் கேட்பது இல்லை.

குமர குருபரர், தனக்கு என்று வேண்டும் என்று ஒன்றும் கேட்கவில்லை. அப்படி ஒரு வேண்டுதல்.

எனக்கு நல்ல வேலை செய்ய அருள் செய் என்று வேண்டுகிறார். சம்பளம் தா, பதவி உயர்வு தா, என்றெல்லாம்  கேட்கவில்லை.

நல்ல வேலை செய்ய அருள் செய் என்று வேண்டுகிறார்.

எனக்கு பாட்டு எழுத வரும். எனவே, நிறைய நல்ல பாட்டுக்கள் எழுத அருள் செய் என்று வேண்டுகிறார். பாட்டின் மூலம் எனக்கு நிறைய பொன் கிடைக்க வேண்டும், ஆஸ்கார் விருது வேண்டும் என்றெல்லாம் கேட்கவில்லை.

மக்களுக்கு நல்ல பாட்டை தர அருள் புரிவாய் ...


பாடல்

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் 
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் 
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் 
காடுஞ் சுமக்குங் கரும்பே சகலகலாவல்லியே. 

பொருள் 

நாடும் = அனைவரும் விரும்பும்

பொருட்சுவை  = பொருள் சுவை

சொற்சுவை = சொல் சுவை

தோய்தர = தோய்த்துத் தர

நாற்கவியும் = நான்கு விதமான கவிதைகளும்

பாடும் = பாடுகின்ற

பணியிற் = வேலையில்

பணித்தருள் வாய் = என்னை பணித்து அருள் செய்வாய்

பங்க யாசனத்திற் = தாமரை மலராகிய ஆசனத்தில்

கூடும் = சேர்ந்து இருக்கும்

பசும்பொற் கொடியே = பசுமையான பொற் கொடி போன்றவளே

கனதனக் குன்று = தங்க மலை போன்ற மார்பும்

மைம்பாற் = ஐம்பால், ஐந்து விதமாக வகிடு எடுத்து செய்யும்

காடுஞ் = காடு போல் அடர்ந்த கூந்தலை

சுமக்குங் = சுமக்கும்

கரும்பே = கரும்பு போல தித்திப்பவளே

சகலகலாவல்லியே.  = அனைத்து கலைகளிலும் வல்லவளே

அறிஞர்கள் பிறருக்கு தங்கள் திறமையை கொடுக்கவே வரம் கேட்பார்கள்.

"ஆடும் மயில் வேல் அணி சேவல் என 
பாடும் பணியே பணியாய் அருள்வாய் 
தேடும் கய மா முகனை செருவில் 
சாடும் தனி யானைச் சகோதரனே "

என்பார் அருணகிரிநாதர்.

பாடும் பணியே பணியாய் அருள்வாய் என்பது அவர் வேண்டுதல்.

அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் 
இன்ப நிலை தானே எய்திடும் பராபரமே 

என்பார் தாயுமானவ சுவாமிகள்

அடுத்த முறை வேண்டும் போது , அது வேண்டும், இது வேண்டும் என்று வேண்டாமல் , எதை சிறப்பாக மற்றவர்களுக்கு செய்யலாம் என்று சிந்தித்து அதைக் கேட்டால் என்ன ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_6.html

Sunday, August 4, 2019

கம்ப இராமாயணம் - புலவியினும் வணங்காத

கம்ப இராமாயணம் - புலவியினும் வணங்காத 


கணவன் மனைவி உறவு என்பது சிக்கலானது. எதிர்பார்புகளும், ஏமாற்றங்களும், சலிப்புகளும், உரசல்களும் நிறைந்தது.

யார் சரி, யார் தவறு என்ற வாக்குவாதம் நிறைந்தது.

பெரும்பாலோனோர், வாக்குவாதம் என்று வரும்போது தாங்கள் அதில் வெற்றி பெற வேண்டும் என்று முனைந்து வாதாடுவார்கள். முடிவில் வெற்றியும் பெற்று விடுவார்கள். ஆனால், அதில் அவர்கள் இழப்பது தங்கள் துணையின் அன்பை, பாசத்தை, நேசத்தை. தோற்றவர் அதில் எளிதில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். தோல்வி வலி தரக் கூடியது. அந்த வலிக்கு அவர்கள் தேடும் மருந்து, தங்களை தோற்கடித்தவர்களை துன்பத்தில் ஆழ்த்த நினைப்பதுதான்.

"நான் சொன்னது தப்பு என்று சொன்னாய் அல்லவா, என் கூட பேசாதே" என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்கலாம்.

"...நான் இந்த வீட்டின் தலைவன், நான் செய்வதில் குறை சொன்னாய் அல்லவா, இரு, நான் யார் என்று காட்டுகிறேன்...இந்த வருடம் வெளி நாடு கூட்டிப் போவதாய் இருந்தேன், அதை cancel செய்து விடுகிறேன்...வலி என்றால் உனக்கும் அப்போதுதான் தெரியும்.."

இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் ஒரு மௌன போரில் ஈடுப் படுவார்கள்.

சரி, அதற்காக மற்றவர் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டுக் கொண்டு அடிமை  மாதிரி இருக்க வேண்டுமா ? அதுக்கு வேற ஆளைப் பார்க்க வேண்டும் என்று   கோபம் கொள்ளலாம்.

இறுதியில் வாதத்தில் வென்று, உறவில் தோற்பதாகவே முடிகிறது வாழ்க்கை.

அப்ப என்னதான் வழி.

இப்படி செய் என்று சொன்னால், சொன்னவரோடு வம்புக்கு போவோம்.

எனவே, கம்பன் சொல்லாமல் ஒரு அறிவுரை சொல்கிறான்.

"இப்படி செய், அப்படி செய்யாதே என்று சொல்லாமல், அரக்கர்கள் இப்படி செய்வார்கள்" என்கிறான்.

சில சுவர்களில் எழுதி வைத்திருப்பார்கள் "முட்டாள்கள் இங்கே சிறு நீர் கழிப்பார்கள்" என்று.

கணவன், மனைவிக்கு இடையில் சச்சரவு வந்தால் யார் விட்டு கொடுக்க வேண்டும் ?

இராவணன், விட்டு கொடுக்க மாட்டான் என்கிறான் கம்பன்.

படுக்கை அறையிலும் தலை வணங்காதவன் அவன் என்கிறான் கம்பன்.

பாடல்

புலியின் அதள் உடையானும், பொன்னாடை
     புனைந்தானும், பூவினானும் 
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு 
     யாவர், இனி நாட்டல் ஆவார்? 
மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந் 
     தோள், சேயரிக் கண், வென்றி மாதர் 
வலிய நெடும் புலவியினும் வணங்காத 
     மகுட நிரை வயங்க மன்னோ.

பொருள்

புலியின் = புலியின்

அதள் = தோல்

உடையானும் = உடையவனுமான சிவனும்

பொன்னாடை = பொன் ஆடை

புனைந்தானும் = அணிந்தவனும், திருமாலும்

பூவினானும்  = தாமரை பூவில் இருக்கும் பிரமனும்

நலியும் = நலிவடையச் செய்யும்

வலத்தார் = வல்லமை பொருந்தியவர்

அல்லர் = அல்லர்

தேவரின்  = (அப்படி என்றால் மற்ற) தேவர்களில்

இங்கு = இங்கு

யாவர், = யார்

இனி நாட்டல் ஆவார்?  = இனி அதை நாட்ட (செய்ய) முடியும் ?

மெலியும் இடை = நாளும் மெலிந்து கொண்டே இருக்கும் இடை

தடிக்கும் முலை = அளவில் பெருத்த முலை

வேய் = மூங்கில்

இளந் = இளமையான

தோள், = தோள்கள்

சேயரிக் = சிவந்த வரி ஓடிய

கண் = கண்கள்

வென்றி மாதர்  = வெற்றி பெரும் பெண்கள்

வலிய = வலிமையான

நெடும் = நீண்ட

புலவியினும் = கலவியிலும்

வணங்காத  = வணங்காத

மகுட நிரை  = மகுடங்கள் நிறைந்த

வயங்க = ஒளிவீசும்

மன்னோ. = அசைச் சொற்கள்

படுக்கை அறையில், பெண்களிடம் கூட தலை வணங்காதவன் இராவணன் என்றால்  என்ன அர்த்தம்?

அவன் அரக்கன். தலை வணங்க மாட்டான். நீ அரக்கனா என்று நம்மை கேட்காமல் கேட்கிறான் கம்பன்.

நாம் அரக்கர்கள் இல்லை என்பதால், தனிமையில் பெண்ணிடம் வணங்கு என்று சொல்லாமல் சொல்கிறான்.

"பாகு கனி மொழி, மாது குற மகள் பாதம் வருடிய மணவாளா" என்பார் அருணகிரிநாதர்.

பெண், பெண்ணாக இருக்கும் வரை, ஆண் அவளிடம் வணங்குவதை பெருமையாக  கருதுவான்.

என்று பெண்கள், நாங்கள் பெண்கள் மாதிரி இல்லை, நாங்களும் ஆண்கள் மாதிரித்தான் என்று  ஆரம்பித்தார்களோ, ஆண்களும், இந்த வணங்குவதை விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

மல்லிகைப் பூ மென்மையாக இருக்கும் வரை, அதை தலையில் வைத்து கொண்டாடுவார்கள்.

நான் ஏன் மென்மையாக இருக்க வேண்டும், நானும் பாறை போல கடினமாக இருப்பேன்  என்று மல்லிகை நினைக்கத் தலைப்பட்டால், யாரும் அதை குறை கூற முடியாது...ஆனால், பாறை போன்ற ஒரு பூவை, யார் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். வீடு கட்டவும், ரோடு போடவும் வேண்டுமானால் அதை  பயன் படுத்திக் கொள்ளலாம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஆண் பெண் உறவு சிக்கலானதுதான். அதில் ஒரு பகுதியை தொட்டு காட்டி விட்டுப் போகிறான் கம்பன்.

படிப்பதும், படிக்காமல் இருப்பதும் நம் விருப்பம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post.html