Monday, January 11, 2021

திருக்குறள் - எண்ணித் துணிக கர்மம்

திருக்குறள் - எண்ணித் துணிக கர்மம் 


எல்லோருக்கும் தெரிந்த குறள் தான். 


பாடல் 

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_11.html


click the above link to continue reading

எண்ணித் = நினைத்து , ஆராய்ந்து 

துணிக = துணிந்து செய்க 

கருமம்  = காரியங்களை 

துணிந்தபின் = செய்யத் தொடங்கிய பின் 

எண்ணுவம் = ஆராய்ந்து கொள்ளலாம் 

என்பது இழுக்கு. = என்பது குறை 


சரி, அதுக்கு என்ன இப்ப? அதுதான் தெரியுதே. 


எண்ணித் துணிக - ஆராய்ந்து செய்யணும். சரி, எதை ஆராயணும்?  அதுக்குத்தான் பரிமேல் அழகர் வேணும். 

இரண்டு விடயங்களை ஆராய்ந்து பின் ஒரு செயலை தொடங்க வேண்டும். அவை என்ன இரண்டு?


முதலாவது,  எதைச் செய்வது என்று யோசித்து முடிவு எடுக்க வேண்டும். நிறைய பேருக்கு என்ன  செய்ய வேண்டும் என்றே தெரிவதில்லை. திருமணம் செய்வதாக இருக்கட்டும் , மேல்படிப்பு, தொழில் தொடங்குவது, என்று எதை எடுத்தாலும்  ஆராய்ந்து செய்ய வேண்டும்.  வீடு வாங்குவது,  கார் வாங்குவது ...எதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். செய்வதற்கு முன்னால் ஆராய்ந்து   செய்ய வேண்டும்.


இரண்டாவது, எப்படி செய்வது என்று சிந்திக்க வேண்டும்.  திருமணம் முடித்தால், அதில் என்னென்ன பொறுப்புகள் வரும், அவற்றை எப்படி சமாளிப்பது, அதில் வரும் சிக்கல்கள் என்ன என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். முதல்ல கல்யாணம் பண்ணிக்குவோம், அப்புறம் யோசிப்போம் என்பது இழுக்கு.   


எதைச் செய்வது, எப்படி செய்வது என்று இரண்டையும் யோசிக்க வேண்டும். எல்லா காரியத்துக்கும்.  


அப்படிச் செய்யாவிட்டால் என்ன ஆகும்?  


இழுக்கு.


அப்படினா?  குறை, குற்றம். 

என்ன ஆயிரும் ?


முதலாவது, தொடங்கிய காரியம் வெற்றிகரமாக முடியாது. தோல்வியில் முடியும். எல்லோரும் நகைப்பார்கள். 


இரண்டாவது, பாதியில் விடவும் முடியாது. கட்டத் தொடங்கிய வீட்டை பாதியில் விட முடியுமா? குடும்ப பாரம் அதிகம் என்று விட்டு விட்டு ஓட முடியுமா? எனவே அது ஒரு சிக்கல்.


மூன்றாவது, அளவுக்கு அதிகமாக செலவு பண்ணி, இருக்குற சொத்தும், புகழும் போய் விடும். 


எனவே, துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு. 


எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று சிந்தித்து முடிவு எடுங்கள். 






Sunday, January 10, 2021

கம்ப இராமாயணம் - இந்திய கலாச்சாரம்

 கம்ப இராமாயணம் - இந்திய கலாச்சாரம் 


இந்திய கலாச்சாரம், இந்திய கலாச்சாரம் என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால் என்ன? என்னதான் உங்கள் கலாச்சாரம்? எதை வைத்துக் கொண்டு உங்கள் கலாச்சாரம் மற்றவற்றைவிட உயர்ந்தது என்று கூறுகிறீர்கள் என்று இளைய தலை முறையினர் கேட்கும் போது, பெரியவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பதை நான் பார்த்து இருக்கிறேன். 

நம் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களை, நாம் போற்றும் கதா நாயகர்கள் மற்றும் நாயகிகள் மேல் ஏற்றிக் கொண்டாடுகிறோம். 

தனித் தனியாக பட்டியல் போட முடியாது. நல்ல கலாச்சார, பண்பாடுகளை உயர்ந்த பாத்திரங்களின் மேல் ஏற்றிச் சொல்லி விடுகிறோம். 

ஒரு வேளை அந்தக் கலாச்சாரம் மாறி இருந்தால், அந்த கதைகள், அந்தக் கதா பாத்திரங்கள் இன்னேரம் செல்லரித்துப் போய் இருக்கும். 


இன்றும் காலம் கடந்து நாம் அவற்றை கொண்டாடுகிறோம் என்றால், அந்தக் கதா பாத்திரங்கள் செய்ததுதான் நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அடிப்படை. 


இன்று ஒரு பெரிய நாட்டில் தேர்தல் நடந்து, தோல்வி அடைந்த அதிபர் பதவியை விட மனம் இல்லாமல்  ஏதேதோ நடக்கிறது அந்த நாட்டில்.  பதவி என்பது பெரிய விடயம்தான். அதை விடுவது என்பது எளிய காரியம் இல்லை. 


எத்தனையோ கோடி மக்கள் எதிர்த்து ஒட்டுப் போட்டாலும்,  அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்  என்று அடம் பிடிப்பது ஒரு வகை கலாச்சாரம், பண்பாடு. 


அது சரி அல்ல, பதவி ஒன்றும் பெரிய விடயம் அல்ல. அதை விட பெரிய விடயங்கள் உலகில் இருக்கின்றன  என்று காட்டியது நம் கலாச்சாரம். 

ஏதோ அந்த நாட்டில் எல்லோரும் பதவி ஆசை பிடித்தவர்கள் என்று சொல்ல வரவில்லை. அதே போல் நம் நாட்டில் யாருக்குமே பதவி ஆசை இல்லை என்றும் சொல்ல வரவில்லை. 

நம் நாட்டின் உரை கல் எது என்று காண்பிப்பதுதான் என் வேலை. எதை நாம் பெரிதாக  கொண்டாடுகிறோம்? எது நமக்கு உயர்ந்தது ? எது நமது அளவு கோல் என்று காட்ட முயற்சி செய்கிறேன். 


இராமனுக்கு முடி சூட்டுவது என்று தசரத சக்கரவர்த்தி முடிவு செய்துவிட்டார். எல்லோருக்கும் அறிவித்தாகி விட்டது.  மனைவியிடம் அதைச் சொல்லப் போகிறார்.  போன இடத்தில், கைகேயி அந்த முடிவை மாற்றி, இராமனுக்கு செல்ல வேண்டிய  அரசை பரதனுக்கு என்று மாற்றுகிறாள். 


தெரிந்த கதை தான். 


வந்த அரசை விட மனம் வருமா? சின்ன பதவியா, விட்டு விட. ஆழி சூழ் உலகம்  அனைத்துக்கும் அதிபதி என்ற பட்டம். அதை விட மனம் வருமா?  வந்த பதவியை விடுங்கள். ஒரு பதவி உயர்வு வரவில்லை என்றால் எவ்வளவு கவலை வருகிறது. 

"உனக்கு அரசு கிடையாது. காட்டுக்குப் போ" என்று விரட்டி விடுகிறாள். 


இராமன் நினைத்து இருந்தால், கைகேயி தூக்கி சிறையில் போட்டு இருக்கலாம். யாரும் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டார்கள். 

அல்லது 

"சரி என்ன செய்ய. நம் விதி" என்று வருத்தத்துடன் ஏற்றுக் கொண்டு இருக்கலாம்.  அதுவும் இல்லை. 


அப்போது பூத்த செந்தாமரை போல மலர்ச்சியாக இருந்ததாம் இராமனின் முகம். ஒரு வாட்டம் இல்லை. ஒரு கவலை இல்லை. 


அப்பா, அம்மா சொல்லுக்கு முன்னால், பதவி ஒரு தூசு என்று நினைப்பது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. 

அம்மா சொன்னால், காட்டுக்குக் கூட சிரித்த முகத்தோடு போகலாம் என்று இராமன் காட்டினான். ஒரு வேளை இராமன், "நான் ஏன் போக வேண்டும். சரியான காரணம் சொல்லுங்கள். வேண்டுமானால், அரசை இரண்டாக பிரித்து நான் ஒரு பக்கம் ஆள்கிறேன், பரதன் ஒரு பக்கம் ஆளட்டும் " என்று வாதம் பண்ணி இருக்கலாம். பண்ணி இருந்தால் கூட குற்றம் சொல்ல முடியாது. 

இன்று, இளைய தலைமுறையினர், அவர்களின் பெற்றோர்களை பார்த்து  கேட்கிறார்கள் "உனக்கு என்ன தெரியும்?" என்று. 


இராமன் கேட்டு இருக்கலாம். "அம்மா, நீ சும்மா ஒரு. உனக்கு ஒண்ணும் தெரியாது. இந்த அரசியல் எல்லாம் உனக்கு ஒண்ணும் புரியாது. வாய மூடிக்கிட்டு பேசாம இரு" என்று சொல்லி இருக்கலாம். அது உண்மையும் கூட. கைகேயிக்கு   என்ன தெரியும்? பிள்ளை பெற்றாள் , வளர்த்தாள். அரசியல் அறிவு அவளுக்கு உண்டா?


இராமன் அதெல்லாம் பேசவே இல்லை.  அம்மா சொன்னா கேக்கணும். அவ்வளவுதான். அவள் எனக்கு கெடுதல் செய்ய மாட்டாள் என்று ஆழமாக நம்பினான்.  


பாடல் 


இப்பொழுது எம் அனோரால்

    இயம்புதற்கு எளிதே! யாரும்

செப்ப(அ)ரும் குணத்து இராமன்

    திருமுகச் செவ்வி நோக்கில்

ஒப்பதே முன்பு; பின்பு அவ்

    வாசகம் உணரக் கேட்ட

அப்பொழுது அலர்ந்த செந்தா

    மரையினை வென்றது அம்மா!


பொருள் 

click the link below to continue reading

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_10.html


இப்பொழுது = இப்போது 

எம் அனோரால் = எம் போன்ற கவிஞர்களுக்கு 

இயம்புதற்கு = சொல்வதற்கு 

எளிதே! = எளிதான காரியமா? இல்லை 

யாரும் = யாராலும் 

செப்ப = சொல்ல 

(அ)ரும் = முடியாத அருமையான 

குணத்து இராமன் = குணங்களை கொண்ட இராமன் 

திருமுகச் = திரு முகத்தின் 

செவ்வி  = அழகைப் 

நோக்கில் = பார்த்தால் 

ஒப்பதே = ஒரே மாதிரி இருந்தது 

முன்பு; பின்பு = முன்னும்,பின்னும் 

அவ் வாசகம் = கைகேயி சொன்ன வாசகம்  

உணரக் கேட்ட = உணர்ந்து, கேட்ட 

அப்பொழுது  = அந்தக் கணத்தில் 

அலர்ந்த = மலர்ந்த 

செந்தாமரையினை  = சிவந்த தாமரை மலரை 

வென்றது = விட அழகாக இருந்ததது 

அம்மா! = அம்மா என்பது வியப்புச் சொல் 


கைகேயி சொல்வதற்கு முன்னும், பின்னும் இராமனின் முகம் சிவந்த தாமரை மலர் அப்போதுதான் மலர்ந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்ததாம்.


இந்திய கலாச்சாரம் பெரிய கலாச்சாரமா என்று கேட்கும் குழந்தைகளுக்கு இராமாயணம்  சொல்லுங்கள். 


தாமரை போல் இருந்தது என்ற  உதாரணத்தின் பின்னால் போய் விடக் கூடாது. கருத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும். அதை எடுத்துச் சொல்ல வேண்டும். 


பதவி  போனால், வேலை போனால் நடுங்காமல் இருக்க முடியுமா? 

எப்படி வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் என்று. 



Saturday, January 9, 2021

திருக்குறள் - செய்வன

 திருக்குறள் - செய்வன 

பெரும்பாலும் திருக்குறள் படிக்கும் போது, அறத்துப் பால் படிப்போம். ஒரே அறவுரையாக இருக்கும். சரி கொஞ்சம் மனதை இலகுவாக்குவோம் என்று இன்பத்துப் பால் படிப்போம். நடுவில் உள்ள பொருள் பால் போவதற்கு நேரம் கிடைப்பதில்லை. 


பொருள் பாலில், பொருள் சம்பாதிப்பது மட்டும் அல்ல, ஒரு நல்ல குடிமகனாக, சமுதாயத்தில் ஒரு நல்ல அங்கத்தினனாக இருப்பது என்பது பற்றி எல்லாம் வள்ளுவர் சொல்லி இருக்கிறார். 

ஒரு செயலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு அதிகாரம். அது எந்த செயலாக வேண்டுமானாலும் இருக்கட்டும். 

"தெரிந்து செயல் வகை" 


அதில் ஒரு குறள். 


செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்


பொருள் 

click to continue


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_9.html


செய்தக்க அல்ல = செய்வதற்கு தகுதி இல்லாதவற்றை 

செயக்கெடும் = செய்தால், கெடுதல் விளையும் 

செய்தக்க = செய்யத் தகுந்தவற்றை 

செய்யாமை யானும் கெடும் = செய்யாவிட்டாலும் கெடுதல் வரும் 


எது செய்யக் கூடாதோ, அதைச் செய்தால் கெடுதல் வரும். 


எதைச்  செய்ய வேண்டுமோ, அதை செய்யாமல் விட்டாலும் கெடுதல் வரும். 


புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு.  


சிந்திப்போம். 


செய்ய வேண்டியவற்றை செய்யாவிட்டால் என்ன கெடுதல் வந்து விடும்? அதனால் வர  வேண்டிய பலன் கிடைக்காமல் போகலாம். கெடுதல் எப்படி வரும்?

ஒவ்வொரு வருடமும், உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று சோதனை செய்ய வேண்டும். (annual medical check up ). அதைச் செய்தால், நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் ஏதாவது இருந்தால், அதை உடனே கண்டு பிடித்து, மருந்து சாப்பிட்டு  குணப் படுத்திக் கொள்ளலாம். ஆண்டு மருத்துவ சோதனை செய்யாமல் விட்டால், நோய் முற்றி , பின்னாளில் எந்த மருந்துக்கும் சரியாகாமல்  துன்பப் பட நேரிடும். 


செய்ய வேண்டியதை, செய்யாமல் விட்டால் வரும் கெடுதல். 

உடற் பயிற்சி செய்ய வேண்டும். அதை செய்யாவிட்டால் கெடுதல் வருமா இல்லையா?


இளமையில் படிக்க வேண்டும். படிக்காவிட்டால்? 

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். செய்ய வேண்டியவற்றை  செய்யாமல் விட்டால்  துன்பம் வரும். 


இதில் முக்கியமான செய்தி என்ன என்றால், செய்ய வேண்டியது எது என்று நமக்குத் தெரியாமல்  இருப்பதுதான். 


பிள்ளைகளை கட்டிக் கொடுத்து, அதுக எல்லாம் செட்டில் ஆகிருச்சு. இனி என்ன இருக்கு செய்ய வேண்டியது என்று   சிலர் நினைக்கலாம். 

படிச்சோம், வேலைக்குப் போனோம்...சம்பாதித்தோம் , இனி என்ன செய்ய வேண்டியது இருக்கிறது , என்று சிலர் நினைக்கலாம். 

குடும்பம் ஒழுங்கா போய்கிட்டு இருக்கு. இதுல என்ன செய்ய வேண்டி இருக்கு என்று கேள்வி எழலாம். 

அதற்கு பதில் சொல்ல முடியும். இருந்தாலும், அவரவர்கள் சிந்தித்து முடிவுக்கு வருதலே நலம். 


அடுத்தது, செய்ய வேண்டாதவற்றை செய்தாலும் கெடுதல் வரும். 


புகை பிடிப்பது, மது அருந்துவது, அளவுக்கு அதிகமாக தூங்குவது, சோம்பேறியாக இருப்பது,  whatsapp ல் நேரத்தை செலவிடுவது,  facebook , youtube  என்று  நேரத்தை விரயம் பண்ணுவது,  கண்ட கண்ட சீரியல்களை பார்ப்பது, அரட்டை அடிப்பது  போன்ற செய்ய வேண்டாத காரியங்களை செய்தாலும் கெடுதல் வரும். 


இரண்டு பட்டியல் போடுங்கள்.


எதை எல்லாம் நிறுத்த வேண்டும் என்று ஒரு பட்டியல். 


எதை ஆரம்பிக்க வேண்டும்/ தொடர வேண்டும் என்று ஒரு பட்டியல். 


இந்தக் குறளை இன்னும் விரித்துச் சொல்லலாம்.  அவ்வளவு இருக்கிறது. இப்போதைக்கு இது போதும். 


பொருட்பாலில், ஒரு அதிகாரத்தில், ஒரு குறளில் இவ்வளவு இருக்கிறது. 


வேறு என்ன சொல்ல?




Tuesday, January 5, 2021

நளவெண்பா - இன் துணைமேல் வைத்து உறங்கும்

நளவெண்பா - இன் துணைமேல் வைத்து உறங்கும் 


அன்றில்  என்று ஒரு பறவை இருந்ததாம். இப்போது இல்லை. அந்தப் பறவை, தன் இணையை விட்டு பிரியவே பிரியாதாம். அவ்வளவு காதல். இரவு தூங்கும் போது கூட, இரண்டும் ஒன்றை ஒன்று கழுத்தை பின்னிக் கொண்டுதான் தூங்குமாம். 


அது மட்டும் அல்ல,

ஒரு கண் தூங்குமாம், இன்னொரு கண்ணால் தன் இணையை பார்த்துக் கொண்டே உறங்குமாம். தூக்கத்தில் கூட பிரிந்து இருக்க முடியாது அவைகளால். அப்படி ஒரு காதல். 


ஒரு நாள், ஒரு பெண் அன்றில் பறவை அழும் குரல் தமயந்திக்கு கேட்டதாம். 


ஏன்?


ஒரு வேளை ஆண் பறவை இரண்டு கண்ணையும் மூடி தூங்கி இருக்குமோ? அப்படிப்பட்ட  இரவு. எப்போதுமே முழுவதும் தூங்காத அன்றில் பறவை கூட அன்று தூங்கி விட்டதாம். 


அன்றில் தூங்கிய போதும், தமயந்தி தூங்கவில்லை. நளன் நினைப்பு அவளை தூங்க விடாமல்  பண்ணுகிறது. 


புகழேந்தியின் கற்பனை. 


பாடல் 


அன்றில் ஒருகண் துயின்றொருகண் ஆர்வத்தால்

இன்துணைமேல் வைத்துறங்கும் என்னுஞ்சொல் - இன்று

தவிர்ந்ததே போலரற்றிச் சாம்புகின்ற போதே

அவிழ்ந்ததே கண்ணீர் அவட்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_5.html


click the above link to continue reading


அன்றில் = அன்றில் பறவை 

ஒருகண் = ஒரு கண் 

துயின்றொருகண்  = துயின்று (தூங்கி) இன்னொரு கண் 

ஆர்வத்தால் = ஆர்வத்தால் 

இன்துணைமேல் = இனிய துணை மேல் 

வைத்துறங்கும் = வைத்து உறங்கும் 

என்னுஞ்சொல் = என்ற சொல் 

இன்று = இன்று 

தவிர்ந்ததே = தவறாகிப் போனதே 

போலரற்றிச் = என்பது போல் அரற்றி 

சாம்புகின்ற போதே = வருந்துகின்ற போதே 

அவிழ்ந்ததே = அவிழ்ந்ததே 

கண்ணீர் = கண்ணீர் 

அவட்கு. = அவளுக்கு 


கூந்தல் அவிழ்ந்தது என்று கூறுவது போல, கண்ணீர் அவிழ்ந்ததாம். துளி துளியாக வரவில்லை. மொத்தமாக அப்படியே வந்ததாம் தமயந்திக்கு. 


கொஞ்சும் தமிழ்.  இனிமையான கற்பனை.  



Sunday, January 3, 2021

கம்ப இராமாயணம் - கரு நாயிறு போல்பவர்

 கம்ப இராமாயணம் - கரு நாயிறு போல்பவர்


"இத்தனை நாள் என்னோடு ஒன்றாக இருந்தாயே என் மனமே. ஒரு நாள் கூட என்னை விட்டு நீ பிரிந்தது இல்லை. என்னோடு சேர்ந்து என் இன்ப துன்பங்களை அனுபவித்தாய். ஆனால், நேத்து வந்த இராமனைப் பார்த்தவுடன், என்னை விட்டு விட்டு அவன் பின்னால் போய் விட்டாய். இனி அவன் எப்ப வருவானோ, அப்ப அவனோடு தான் நீ வருவாய் போல் இருக்கிறது. உன்னைப் போல ஒரு நன்றி கெட்ட ஆளை நான் பார்த்ததே இல்லை"


என்று சீதை தன் மனதுக்குச் சொல்கிறாள். 


பாடல் 

கரு நாயிறு போல்பவர் காலொடு போய்.

வரு நாள். அயலே வருவாய்;- மன்னே!-

பெரு நாள். உடனே. பிரியாது உழல்வாய்;

ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_3.html

click the above link to continue reading


கரு நாயிறு = கருமையான ஞாயிறு

போல்பவர் = போல அவர் 

 காலொடு போய். = திருவடிகளை பற்றிக் கொண்டு 

வரு நாள் = அவர் திரும்பி வருகின்ற நாள் 

அயலே வருவாய் = வெளியே சென்ற நீ வருவாய் 

மன்னே!- = என் மனமே 

பெரு நாள் = ரொம்ப நாள் 

உடனே = கூடவே இருந்து 

பிரியாது  = பிரியாமல் 

உழல்வாய்;  = என்னோடு சேர்ந்து சுற்றிக் கொண்டு இருந்தாய் 

ஒரு நாள் தரியாது = ஒரே நாளில் என்னோடு இல்லாமல் 

ஒழிவார் உளரோ? = விட்டு விட்டுப் போய் விட்டாய். அப்படி செய்பவர்கள் கூட இருக்கிறார்களா? 


ஜொள்ளு விடுறதுக்கு இவ்வளவு பில்ட் - அப்பா?




Saturday, January 2, 2021

கம்ப இராமாயணம் - கொடியாய் விடியாய்

 கம்ப இராமாயணம் - கொடியாய் விடியாய் 


தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பெண்கள் மிக நுணுக்கமானவர்கள். ஆண்களின் உணர்சிகள் என்னவோ கொஞ்சம் தான் இருக்கும் போல இருக்கிறது. கோபம், காமம், பசி, என்று மிக அழுத்தமான, அதீதமான உணர்சிகளாகவே இருக்கிறது. பெண்களின் உணர்வுகளும், அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் மிக நுணுக்கமாகவும், மென்மையாகவும் இருக்கிறது. 


பெரும்பாலும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.  விதி விலக்குகள் இருக்கலாம். 

 மேலும், ஆணுக்கு பெண் சரி என்று கொடி பிடித்துக் கொண்டு பெண்களின் அந்த மென்மை, நுண்மை எல்லாம் காற்றில் பறக்க விட்டுக் கொண்டு இருக்கிறார்கள் - சிலர். 


அது ஒரு பக்கம் இருக்கட்டும். 


இராமன் வில்லை முறித்து விட்டான். மறு நாள் சுயம்வரம். இருவரும் தவிக்கிறார்கள். 

இராமனின் தவிப்பு இருக்கட்டும். சீதையின் நிலை என்ன. பெண்ணுக்குள்ளும் இந்த தவிப்பு இருக்குமா? இருந்தால் எப்படி இருக்கும்? 


இரவு நேரம். தூக்கம் வரவில்லை. இந்த இரவோ முடிவதாகக் காணோம். நீண்டு கொண்டே போகிறது. சீதை , அந்த இரவைப் பார்த்துச் சொல்கிறாள்

"ஏய் இரவே, வலிமை இல்லாத ஒருவர் மேல் யாராவது சண்டை போட்டு அவர்கள் உயிரை எடுக்க நினைப்பார்களா? நீ ஏன் என் உயிரை இப்படி வதைக்கிறாய்?  இரு இரு...நீ என்னை இப்படி கஷ்டப் படுத்துறேல ... விடியட்டும், இராமன் வருவான், அவன்கிட்ட சொல்லி உன்னை என்ன பண்றேன் பாரு " 


பாடல் 

உரவு ஏதும் இலார் உயிர் ஈதும்” எனா.

கரவே புரிவார் உளரோ? கதிரோன்

வரவே. எனை ஆள் உடையான் வருமே!-

இரவே! - கொடியாய். விடியாய்’ எனுமால்.


பொருள் 

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_2.html

உரவு = வலிமை 

ஏதும் இலார் = எதுவும் இல்லாதவர்களை 

உயிர் ஈதும்” எனா. = உயிரை தருவோம் என்று எண்ணாமல் 

கரவே = வஞ்சித்து (அவர்கள் உயிரை )

புரிவார் உளரோ?  = பறிப்பவர்கள் யாராவது இருப்பார்களா ?

கதிரோன் வரவே = கதிரவன் வரட்டும் 


எனை ஆள் உடையான் வருமே!- = எனை ஆளும் உடமை பெற்றவன் வருவான் (இராமன்) 

இரவே! - = ஏய் இரவே 

கொடியாய். = கொடுமையான ஒன்றே 

விடியாய் = நீ விடியாமல் இருக்கிறாய் 


எனுமால். = என்று கூறினாள் 


கம்பன் ஒரு ஆண்.  ஒரு பெண் நினைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கூறுகிறான். 


அது சரித்தானா என்று பெண் வாசகிகள் கூறினால் நன்றாக இருக்கும். 




Friday, January 1, 2021

நாலடியார் - உரைப்பினும் நாய்குரைத் தற்று

நாலடியார் -  உரைப்பினும் நாய்குரைத் தற்று


பல பேருக்கு ஏதாவது கேள்வி கேட்க வேண்டும், வாதம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். அப்படி ஏதாவது கேள்வி கேட்டு, வாதம் பண்ணினால் தான் தங்கள் அறிவுத் திறன் வெளிப் படுவாதாக அவர்கள் நினைக்கிறார்கள். 


ஆனால் விளைவு என்னவோ அதற்கு நேர் எதிர் மாறாக இருக்கிறது. 


வாயைத் திறந்து ஏதாவது சொல்லி, தங்கள் அறியாமையை அவர்கள் வெளிப் படுத்துவார்கள். 

அவர் சொன்னது தப்பு, அது எப்படி சரியாக இருக்கும், இந்தக் காலத்துக்குப் பொருந்துமா, இது எல்லாம் நடை முறை சாத்தியம் அல்ல என்று தங்கள் மேதா விலாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுவார்கள். 


கேள்வி கேட்க வேண்டும். சிந்திக்க வேண்டும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. 


ஆனால், அந்தக் கேள்விகள் உள் நோக்கி இருக்க வேண்டும். எதிரில் இருப்பவனை மடக்கவோ, தன் அறிவை வெளிக் காட்டவோ இருக்கக் கூடாது. உண்மை தேடும் முயற்சியாக இருக்க வேண்டும். கேள்வியை வைத்துக் கொண்டு பதில் தேட வேண்டும். எல்லோரையும் கேள்வி கேட்டுக் கொண்டுத் திரியக் கூடாது. 


சிலருக்கு கேட்பதோடு அந்த தேவை நின்று விடும். பதில் பற்றி எந்தக் கவலையும் இல்லை. பதிலை அவர்கள் கேட்பது கூட கிடையாது. அல்லது என்ன பதில் சொன்னாலும்,  அவர்கள் கொண்ட எண்ணம் மாறவே மாறாது.  பின் எதற்கு கேட்பது. 


நாலாடியர் சொல்கிறது. 


ஒரு பெரிய அறிஞர்கள் கூடிய சபை. அதில் ஒரு ஓரத்தில் ஒரு நாய் படுத்துக் கிடந்தது. அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருந்தது. அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. என்னடா இது, நம்மை யாரும் கண்டு கொள்ளவே இல்லையே, ஏதாவது சொல்வோம், கேட்போம், அவர்களை மடக்குவோம், திணற அடிப்போம் என்று நினைத்து கேள்வி கேட்டது. 


"இந்த நாய் எங்கிருந்து வந்தது, அதை அடித்து விரட்டுங்கள் " என்று அடித்து விரட்டி விட்டார்கள். 


பேசாமல் வாய் மூடி இருந்தால், நிம்மதியாக இருந்து இருக்கலாம். குரைத்து , நான் நாய், இங்கே இருக்கிறேன் என்று தன்னைத் தானே காட்டிக் கொடுக்க வேண்டுமா?


பாடல் 


கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து

நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல

இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது

உரைப்பினும் நாய்குரைத் தற்று.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post.html

Please click the above link to continue reading



கல்லாது = படிக்காமலேயே 

நீண்ட ஒருவன் = வளர்ந்த ஒருவன் 

உலகத்து = உலகில் 

நல்லறி வாள ரிடைப்புக்கு = நல் + அறிவாளர் + இடை + புக்கு. அறிஞர்கள் மத்தியில் புகுந்து 

மெல்ல = மெல்ல 

இருப்பினும்  = இருந்தாலும் 

நாயிருந் தற்றே = நாய் இருந்தாற்போல 

இராஅது = இருக்க முடியாது 

உரைப்பினும் நாய்  = நாய் பேசினாலும் 

குரைத் தற்று. = அது நாய் குரைத்தது என்று தான் உலகம் கொள்ளும். 

அறிஞர்கள் முன் அமைதி காத்தல் நன்று. 


யார் அறிஞர் என்று தெரியாததால், எல்லோர் முன்னும், அமைதி காத்தல் நன்று.