Friday, March 19, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - ஒழுக்கம்

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - ஒழுக்கம் 


அவற்றுள் "ஒழுக்கமாவது", அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று, அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.


ஒழுக்கம் என்றால் என்ன? 

ஒழுக்கம் என்பது வர்ணத்துக்கும், நிலைக்கும் சொல்லப்பட்ட விதி முறைகள். 

ஒரு சமுதயாத்தை எப்படி பிரிக்கலாம் என்று சிந்தித்த நம் முன்னோர், சமுதாயத்தின் வேலை என்ன? அதன் அடிப்படையில் பிரிக்கலாம் என்று நினைத்தார்கள். 

எந்த ஒரு சமுதாயத்துக்கும் அடிப்படை உற்பத்தி. அது தமிழ் நாடாக இருக்கட்டும், இந்தியாவாக இருக்கட்டும், அமெரிக்காவாக இருக்கட்டும். எந்த நாட்டுக்கும், எந்த சமுதாயத்துக்கும் அடிப்படை உற்பத்தி.

உற்பத்தி என்றால் பொருள் (goods )மற்றும் சேவை (service). GST என்று வரி போடுகிறார்கள் அல்லவா? 

விவசாயி,சட்டி பானை செய்பவன், முடி திருத்துபவன், மருத்துவன், பொறியாளர் (engineer), விமானம் ஒட்டுபவன், இசை அமைப்பவன், வண்டி ஓட்டுபவன் என்று யாராக இருந்தாலும் இந்த உற்பத்தி என்ற துறைக்குள் வந்து விடுவான்.  உற்பத்தி அல்லது production . இது முதல் படி.  

சரி, உற்பத்தி செய்தாகி விட்டது. அடுத்து என்ன? ஒரு இடத்தில் உற்பத்தி செய்ததை அது தேவைப் படும் இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.  இது வியாபாரம் அல்லது distribution என்று  சொல்லப் படும்.இது இரண்டாவது படி. 

சரி உற்பத்தி செய்தாகிவிட்டது, விநியோகமும் செய்தாகி விட்டது. இரண்டு பிரிவு போதுமா என்றால் போதாது.   உற்பத்தி செய்வதில், விநியோகம் செய்வதில் நடை முறை சிக்கல்கள் வரும். சண்டை சச்சரவு வரும். போட்டி வரும். இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும். அதற்கு மேலாண்மை அல்லது administration என்று பெயர். சட்டம், ஒழுங்கு, நெறிப் படுத்துதல், சமரசம் செய்தல் என்று  பல இருக்கிறது. 

சரி,  production, distribution, and administration வந்தாகி விட்டது. போதுமா என்றால் போதாது. 

இந்த மூன்றையும் செம்மை படுத்தி, அவற்றை மேம்படுத்த வேண்டும். அதற்கு research and development என்று பெயர். 

இந்த நான்கையும் தான் வர்ணம் என்று குறிப்பிட்டார்கள். 

உற்பத்தி செய்பவன் - சூத்திரன் - அவன் தான் மூல காரணம். 
விநியோகம் செய்பவன் - வைசியன் 
மேலாண்மை செய்பவன் - சத்ரியன் 
சிந்தித்து, படித்து, மேம்பட்ட, உயர்ந்த வழிகளை ஆராய்பவன் - பிராமணன் என்று வைத்தார்கள். 

இது பிறப்பின் அடிப்படையில் வருவது அல்ல. செய்யும் தொழிலின் அடிப்படையில் வருவது. 

சரி, சமுதயாத்தை பிரித்தாகி விட்டது. 

தனி மனிதனை என்ன செய்வது?


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_19.html

(click the above link to continue reading)

தனி மனித வாழ்க்கையை நான்கு பகுதிகளாக பிரித்தார்கள். 

பிரமச்சரியம் - கற்கும் பருவம். மாணவப் பருவம். 
இல்லறம் - திருமணம் முடிந்து குடும்ப வாழ்க்கை 
வனப்ரஸ்தம் - இல்லறத்தில் இருந்து கொண்டு பற்றற்று இருப்பது 
சன்யாசம் - காட்டுக்குச் சென்று தவம் செய்வது 

இதைத்தான் நிலை என்கிறார் பரிமேலழகர். 



ஒரு graph ஷீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் X axis க்கு பதில் வருணம் என்று போட்டுக் கொள்ளுங்கள்.

அதில் Y axis க்கு பதில் ஆச்சிரமம் என்று போட்டுக் கொள்ளுங்கள்.

இப்போது வருணம் என்ற கோட்டை நான்காகப் பிரியுங்கள். அந்தணன், வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என்றும்.

ஆசிரமம் என்ற கோட்டை நான்காகப் பிரியுங்கள் - பிரமச்சாரியம், கிரகச்சாரம், வானப்ரஸ்தம் மற்றும் துறவறம்

ஒவ்வொரு மனிதனும் இந்த 4 x 4 கட்டத்திருக்குள் ஏதோ ஒரு கட்டத்தில் இருந்தே ஆக வேண்டும்.

ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு கடமை உண்டு.

தனி மனிதனாக அவனுக்கு சில கடமைகள் உண்டு.

ஒரு சமுதாயத்தின் அங்கமாக அவனுக்கு சில கடமைகள் உண்டு.

சமுதாயக் கடமை - சூத்திரனாகவோ, வைசியனாகவோ,  கஷத்ரியனாகவோ,அந்தனனாகவோ அவனுக்கு சில கடமைகள் உண்டு.

அது போல தனி மனிதனாக பிரமச்சாரியாக, இல்லறத்தில் , வான பிரச்த்தத்தில், துறவறத்தில் அவனுக்கு சில கடமைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த இரண்டு கூறுகளைத்தான் பரிமேல் அழகர் இங்கே கூறுகிறார்:


அந்தணர் முதலிய வருணத்தார், - இது சமுதாயக் கடமை 

தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று = இது தனி மனிதக் கடமை 

அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல். = அவரவர்க்கு ஓதிய அறங்கள் என்று கூறவில்லை. அவ்வவற்றிற்கு என்று கூறுகிறார். ஏன் ? மேலே கூறிய 4 x 4 கட்டத்திற்கு என்று வகுத்த அறங்கள். எனவே  அவ்வவற்றிற்கு என்று கூறினார். 

இது ஒழுக்கம்.

இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, அது வேறு விஷயம். இது வள்ளுவர் வகுத்துக் கொண்ட வழி. இந்த வழியில் தான் பின்னால் வரும் குறள்கள் நிற்கும். 

அறத்தின் முதல் கூறு ஒழுக்கம். 

அடுத்து என்ன ? 

Thursday, March 18, 2021

தேவாரம் - அவ்வினைக்கு இவ்வினை

 தேவாரம் - அவ்வினைக்கு இவ்வினை 


எல்லாம் வினைப் பயன் என்று நாம் நினைக்கிறோம். நல்லதோ, கெட்டதோ எல்லாம் விதிப்படித்தான் நடக்கும். நல்லது செய்து இருந்தால் நல்லது வரும். அல்லது செய்து இருந்தால் துன்பம் வரும். இதில் நம் கையில் என்ன இருக்கிறது. விதியை நம்மால் மீற முடியுமா? 


ஊழிற் பெருந்தக்க யாவுள என்பார் வள்ளுவர்.


நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை, மைந்த விதியின் பிழை என்பார் கம்பர். 


அப்படி என்றால் நம் கையில் ஒன்றும் இல்லையா. நாம் சும்மா இருக்க வேண்டியது தானா. ஒரு முயற்சியும் செய்ய வேண்டாமா? 


திருஞான சம்பந்தர் சொல்கிறார். "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வினையை மாற்றலாம்" என்று கூறுவதோடு நில்லாமல், அதற்கு வழியும் காட்டுகிறார். 


"முன்பு செய்த வினைகளுக்கு ஏற்ப இப்போது நமக்கு இன்ப துன்பமாகிய வினைகள் வருகிறது என்று சொல்லிக் கொண்டு சும்மா இருக்கிறீர்களே. இது உங்களுக்கு ஒரு ஊனம் இல்லையா. இறைவனை வழிபடுங்கள். அப்படி செய்தால் நாம் முன் செய்த வினைகள் நம்மை தீண்டாது. இது திருநீலகண்டத்தின் மீது ஆணை" என்று சத்தியமிட்டு கூறுகிறார். 


பாடல் 


அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!

உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?

கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.!


பொருள் 



click the above link to continue reading

அவ்வினைக்கு = முன்பு செய்த வினைகளுக்கு 


இவ்வினை ஆம் = இப்போது நடக்கும் வினைகள் (இன்ப துன்பங்கள்) 


என்று சொல்லும் அஃது அறிவீர்! = என்று சொல்லக் கேட்டு இருகிறீர்கள் 


உய்வினை = இதில் இருந்து தப்பிக்கும் வழியினை 


நாடாது இருப்பதும் = கண்டு பிடிக்காமல் இருப்பதும் 


உம்தமக்கு = உங்களுக்கு 


 ஊனம் அன்றே? = ஒரு குறை இல்லையா ?


கைவினை செய்து = கைகளால் தொழுது 


எம்பிரான் = எம்மை விட்டு எப்போதும் பிரியாதவன் 


கழல் போற்றுதும் = திருவடிகளை போற்றுங்கள் 


நாம் அடியோம் = நாம் இறை அடியவர்கள் 


செய்வினை = செய்த வினை 


வந்து = நம்மிடம் வந்து 


எமைத் தீண்டப்பெறா = நம்மை தீண்டாது 


திருநீலகண்டம்.! = திருநீலகண்டத்தின் மேல் ஆணை 


திருஞான சம்பந்தர் ஞானப் பால் உண்டு ஞானம் பெற்றவர். இறைவன் மேல் ஆணையிட்டு சொல்கிறார். 


பழைய வினைகள் தீர வேண்டும் என்ன்றால் என்ன செய்ய வேண்டும் என்று. 


(இப்படி பத்துப் பாடல்கள் இருக்கின்றன. விரைந்து அவை அனைத்தையும் படித்து விடுங்கள்) 

இதையே மணிவாசகரும் "பழ வினைகள் பாறும் வண்ணம்" என்பார். பழைய வினைகள் அற்றுப் போகும் படி அவன் எனக்கு அருளினான் என்கிறார். 


முத்திநெறி அறியாத

    மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப்

    பழவினைகள் பாறும்வண்ணஞ்

சித்தமலம் அறுவித்துச்

    சிவமாக்கி எனை ஆண்ட

அத்தன்எனக் கருளியவா

    றார்பெறுவார் அச்சோவே


எனவே, விதி என்று சோர்ந்து இருந்து விடாதீர்கள். 


பழைய வினைகளை சுட்டெரிக்க ஞான சம்பந்தரும், மணி வாசகரும் வழி சொல்லித் தந்து இருக்கிறார்கள். 


திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - வர்ணமும், நிலையும் - பாகம் 1

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - வர்ணமும், நிலையும்  -  பாகம் 1 


அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.


இதில் "அந்தணர் முதலிய வர்ணத்தார்" என்றும் "பிரமச்சரிய முதலிய நிலகைளில் இருந்தும்" என்று பரிமேலழகர் எழுதுகிறார். 


அவர் முதலிய என்று கூறியதால், வேறு பலவும் இருக்கின்றன என்று நமக்குப் புலனாகிறது. அவை என்னென்ன என்று சிந்திப்போம். 


ஒரு சமுதயாத்தில் பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள், உடல் ஊனமுற்றோர் என்று பலவிதமான மக்கள் இருக்கிறார்கள். 


ஒரு சமுதாயம் சீராக செயல் பட வேண்டும் என்றால் அதற்கு சில சட்ட திட்டங்கள் வேண்டும், ஒழுங்கு முறை வேண்டும். யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று விட்டு விட்டால், அது நாடாக இருக்காது. காடாகி விடும். 


சட்டம் இயற்றுவது என்றால், மக்களை தொகுக்க வேண்டும். ஒன்று பட்ட ஒரு குழுவுக்கு ஒரு    சட்டம் சொல்லலாம். எல்லாருக்கும் ஒரு சட்டம் என்று போட முடியாது. 


ஏன் முடியாது? அப்படி போட்டால் என்ன? எதற்காக மக்களை பிரிக்க வேண்டும் என்ற கேள்வி எழும். 


சரி, சில சட்டங்களை அப்படி போட்டுப் பார்ப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_18.html

(click the above link to read further)


"எல்லோரும் உழைத்து சாப்பிட வேண்டும் " என்று ஒரு சட்டம் போடுவோம். 

அது சரிதானே?


அப்படி என்றால் சிறு பிள்ளைகள் என்ன செய்யும்? வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பெண்கள் என்ன செய்வார்கள், வயதானவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களை விலக்க வேண்டும். 


சரி, எத்தனை பேரை விலக்குவது? அப்படி விலக்குவது என்று வந்து விட்டால், அவர்களை ஒரு குழுவாக செய்ய வேண்டும். எனவே, இந்தச் சட்டம் எல்லோருக்கும் பொருந்தாது, ஒரு சிலருக்கு மட்டும் தான் பொருந்தும். 


சரி, இன்னொரு சட்டம் போடுவோம். 


"எல்லோரும் திருமணம் செய்து கொண்டு தான் வாழ வேண்டும்"


சரி. நல்ல சட்டம் தான். நான்கு வயது பையன் எனக்கும் திருமணம் செய்து வை என்று கேட்டால் என்ன செய்வது?


"கொலை செய்வதும், அதை தூண்டுவதும் குற்றம்" என்று ஒரு சட்டம் போட்டால்,  நீதிபதிகள் தூக்கு தண்டனை விதிக்கிறார்கள். கொலை செய்யச் சொல்லி ஆணை இடுகிறார்கள். அவர்களை என்ன செய்வது? மருத்துவர் சிகிச்சை பலன் இன்றி நோயாளி இறந்து போகிறான். மருத்துவர் நோயாளியை கொன்று விட்டார் என்று சொல்ல முடியுமா? 


எனவே, விதி செய்வது என்றால் ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு, தொகுதிக்குத் தான் விதி செய்ய முடியும். 


எப்படி இந்த சமுதயாத்தை பிரிப்பது? எப்படி பிரித்தால், சரியான படி சட்ட திட்டங்களை வகுக்க முடியும் என்று ஆராய்ந்து உண்டாகியது தான் வர்ணமும், நிலையும் . இதை வட மொழியில் வர்ணாசிரம தர்மம் என்று கூறுவார்கள். 


அது என்ன தர்மம்?



Wednesday, March 17, 2021

கம்ப இராமாயணம் - விதியின் வண்ணமே

கம்ப இராமாயணம் - விதியின் வண்ணமே 


திரும்பிப் பார்க்கிறோம். நாம் சாதித்தது எத்தனை. எவ்வளவு செல்வம் சேர்த்து இருக்கிறோம். எவ்வளவு படித்து இருக்கிறோம். எத்தனை காரியங்களை சாதித்து இருக்கிறோம். நம் அறிவின் மேல், நம் முயற்சியின் மேல், நமக்கு ஒரு பெருமை உண்டாகிறது. நான் எவ்வளவு திறமைசாலி, அறிவுள்ளவன், ஆற்றல் உள்ளவன் என்று பெருமிதத்தில் நெஞ்சு நிறைகிறது.


அது சரிதானா?


எல்லாம் நம் திறமை தானா? நம் அறிவுதானா? இப்படியே இன்னும் மீதி நாட்களும் போகும் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியுமா? 


நம்மை விட பெரிய அறிவாளிகள், திறமை சாலிகள் எல்லாம் மண்ணைக் கவ்வி இருக்கிறார்கள். வாழ்க்கை எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களை எல்லாம் சும்மா சருகு போல் தூக்கி வீசி விட்டுப் போய் இருக்கிறது. 


இராவணன் எவ்வளவு பெரிய ஆள். அறிவு, வீரம், பக்தி, பராகிரமம், ஆளுமை, என்று அனைத்திலும் உயர்ந்து நின்றவன். நீண்ட நெடிய ஆயுள். முன்னே எதிர் நிற்க பகை இல்லை.  அளவற்ற செல்வம். 


என்ன ஆயிற்று?


எது அவனைப் புரட்டிப் போட்டது? 


அவனுக்குத் தெரியாத அறமா? மாற்றான் மனைவியை நினைப்பது குற்றம் என்று அவனுக்குத் தெரியாதா? அவனுக்கு எவ்வளவு பேர் அறிவுரை சொன்னார்கள். கேட்டானா? இல்லையே. ஏன்?


எது அவன் அறிவை மறைத்தது? 


விதி. 


நம் தமிழ் இலக்கியம் விதியை ஆழமாக நம்பியது. நம் மதங்களும் விதியை நம்பின. 


இராவணன் கும்ப கர்ணனை எழுப்பி போருக்குப் போகச் சொல்கிறான். கும்பகர்ணனுக்கு தூக்க கலக்கம். எதுக்கு போர்? யாருடன் போர் என்று கேட்கிறான். 


எல்லாம் சொன்னவுடன், கும்பகர்ணன் வருந்திச் சொல்கிறான். 


"இராவணா, போர் வந்து விட்டதா? அதுவும் பொன் போன்ற சீதையை முன்னிட்டா இந்தப் போர்? கண்ணில் விஷம் கொண்ட பாம்பை போன்ற சீதையை நீ இன்னும் விடவில்லையா ? இது விதியின் செயல் அன்றி வேறு என்ன " என்கிறான். 


பாடல் 



 ‘கிட்டியதோ செரு? கிளர் பொன் சீதையைச்

சுட்டியதோ? முனம் சொன்ன சொற்களால்

திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை

விட்டிலையோ? இது விதியின் வண்ணமே!



பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_17.html

(click the above link to continue reading)


 ‘கிட்டியதோ செரு? = போர் கிடைத்ததா 

கிளர் = சிறந்த 

பொன் = பொன் போன்ற 

 சீதையைச் = சீதையை 

சுட்டியதோ? =  முன்னிறுத்தியா. அவள் பொருட்டா ?

முனம் சொன்ன சொற்களால் = முன்பு நானும், வீடணனும், மற்றவர்களும் சொன்ன அறிவுரைகளால் 


திட்டியின் = திட்டி = திருஷ்டி = பார்வை 


விடம் அன்ன = விஷம் போன்ற 


கற்பின் செல்வியை = கற்பின் செல்வியை 


விட்டிலையோ? = நீ இன்னமும் விட வில்லையா ?


இது விதியின் வண்ணமே! = இது விதியின் விளையாட்டே 


பாம்பு கடித்தால் தான் விஷம் ஏறும். திட்டி விடம் என்று ஒரு பாம்பு இருக்கிறது.  அது கடிக்க வேண்டாம். கண்ணில் இருந்து விஷத்தைக் கக்கும். ஆள் காலியாகி விடுவான். அது போல, சீதை தொட வேண்டாம். அவள் பார்வை உன்னை தகித்து விடும். 


நம் அறிவு என்று பெரிதாக நினைக்கக் கூடாது. 


தேவர்களையும், முனிவர்களையும், ஒன்பது கோள்களையும் ஆட்டிப் படைத்த இராவணனை விதி தூக்கிப் போட்டது என்றால் நாம் எம்மாத்திரம்?


இலக்கியங்கள் நமக்கு நம் எல்லைகளை அறிந்து கொள்ள உதவும். உலகியல் நிகழ்வுகளால் நாம் ரொம்பவும் அலைகழிக்கப் படாமல் இருக்க அவை உதவும். 


உதவட்டும். 


திருக்குறள் - உரைப்பாயிரம் - பாகம் 3

 திருக்குறள் - உரைப்பாயிரம் - பாகம் 3 


வாழ்வின் நோக்கம் என்ன ? (வீடு பேறு அடைவது)

அதை அடையும் வழி என்ன ? (அறம் பொருள் இன்பம் வீடு என்ற வழி)

அதில் வீடு பற்றி வள்ளுவர் ஏன் சொல்லவில்லை (அது சிந்தையும், சொல்லும் செல்லா இடத்தது என்பதாலும், துறவறம் நோக்கிய காரண வகையால் அறிந்து கொள்ளலாம் என்பதால்)


அதில் அறம் என்றால் என்ன (மனு முதலிய நூல்களில் விதித்தவற்றை செய்தாலும், விலக்கியவற்றை விலக்குதலும் ).


என்பது வரை முந்தைய மூன்று ப்ளாகுகளில் பார்த்தோம். 

இப்போது, அறம் , பொருள் இன்பம் என்ற மூன்றில் அறம் என்றால் என்ன என்று எடுத்துக் கொள்கிறார். 


"அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்."


அறத்துக்கு மூன்று கூறுகள். 


அதாவது, ஒழுக்கம், வழக்கு, தண்டனை என்பது. 


சரி, ஒழுக்கம் என்றால் என்ன என்று அடுத்து சொல்ல வருகிறார். 

எப்படி ஒரு ஆற்றோட்டம் போல அவர் எழுதுகிறார் என்று பாருங்கள். 

ஒவ்வொரு படியாக எடுத்து வைக்கிறார். எழுதினால் இப்படி எழுத வேண்டும். 


"அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்."


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/3.html

(click the above link to continue reading)


இரண்டு வார்த்தைகளை கவனியுங்கள் - ஒன்று "வருணத்தார்" , இன்னொன்று "நிலைகள்" 

அது என்ன வர்ணம், நிலை ?

இங்கு வர்ணாசிரம தர்மத்தை ஒரு வரியில் சொல்லி விட்டுப் போகிறார். மிகப் பெரிய விடயம். நிதானமாக விளங்குவோம். 

"அந்தணர் முதலிய வருணத்தார் " என்று கூறும் போது அந்தணர் தவிர வேறு வர்ணங்களும் இருக்கின்றன என்று நமக்குப் புரிகிறது. அவை என்னென்ன என்ற கேள்வி அடுத்தது வரும். 


"பிரமசரிய முதலிய நிலைகளினின்று" பிரமச்சரிய முதலிய நிலை என்றால் இன்னும் பல நிலைகள் இருக்கின்றது என்று அர்த்தம். அவை என்னென்ன? 


இந்த வர்ணம் + நிலை தான் வர்ணாசிரம தர்மம் என்று கூறப் பட்டது.  அது ஒரு ஒழுங்கு முறை. வாழ்கை நெறி. 


இன்று வர்ணாசிரம தர்மம் என்றால் ஏதோ ஒரு தீண்டத்தகாத வார்த்தை என்பது போல் ஆகிவிட்டது. 


"காய்த்தல் உவத்தில் இன்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கடன்". 

நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நம்மால் ஒத்துக் கொள்ள முடிகிறதோ இல்லையோ, அது என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொள்ளாமலேயே ஒன்று சரி அல்லது தவறு என்று எப்படி முடிவு செய்வது? 


இந்த வர்ணம் + நிலை பற்றி அடுத்த ப்ளாகில் சிந்திக்க இருக்கிறோம். 








Tuesday, March 16, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 2

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 2 

முதல் பாகத்திலே, கீழ்கண்ட பத்தியின் உரையை பார்த்தோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1.html

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.


இனி மேலே தொடருவோம்....


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/2.html


click the above link to continue reading



சரி, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் வீடு என்பதை சொல்லியோ, சிந்தித்தோ அறிந்து கொள்ள முடியாது என்பதால், அதை காரண வகையால் அன்றி இலக்கண வகையால் அறிய முடியாது என்பதால், முதல் மூன்றை எடுத்துக் கொள்கிறார். 


அதில் 


அறம் என்றால் என்ன என்று சிந்திக்கத் தலைப்படுகிறார் பரிமேலழகர். 


தர்மம், நியதி, அறம், ஒழுங்கு, சட்டம் என்பதற்கு யாராலாவது சரியான விளக்கம் கூற முடியுமா?  


இதுதான் அறம் என்று சுட்டி கூற முடியுமா?


கீழ்க் கோர்டில் சொன்னதை மேல் கோர்ட் மறுக்கிறது. எது அறம் என்பதில் எவ்வளவு குழப்பம் இருக்கிறது. 


மது அருந்தலாமா? அது அறம் இல்லை என்றால், இன்னொரு மதத்ததில், அந்த மதத்தின் இறைவனே மக்களுக்கு மதுவும் மீனும் கொடுத்ததார் என்று வருகிறது. அவர்கள் எல்லோரும் அறம் வழுவியவர்களா?


மாமிசம் உண்ணலாமா கூடாதா? 


பலதார மணம் சரியா தவறா? 


விவாகரத்து சரியா தவறா? 


அறம் என்பதை எப்படி அறுதியிட்டு கூறுவது?


ஒரே வரியில் சொல்லி விட்டுப் போகிறார் பரிமேலழகர். அவருடைய அறிவின் ஆழத்துக்கு இந்த ஒரு வரி போதும். 


"அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். "


அறம் என்றால், மனு முதலிய நூல்களில் சொல்லப் பட்டவற்றை கடை பிடிப்பதும், அவை செய்யக் கூடாது என்று சொல்லியவற்றை செய்யாமல் இருப்பதும் என்கிறார். 


முக்கியமாக கவனிக்க வேண்டியது "முதலிய" என்ற சொல்லை. முதலிய என்றால் அது போன்ற உயர்ந்த நூல்களில் எது செய், அல்லது செய்யாதே என்று சொல்லி இருக்கிறதோ, அதை செய்வதும், செய்யாமல் விடுவதும் அறம் ஆகும். 


எனவே, அற வழியில் நடக்க வேண்டும் என்றால், முதலில் உயர்ந்த நூல்களை படிக்க வேண்டும். அவற்றுள் செய்யச் சொன்னவற்றை செய்ய வேண்டும். செய்யக் கூடாது என்று சொன்னவற்றை செய்யாமல் விட வேண்டும். 


மனு சாஸ்திரம் எல்லாம் காலத்துக்கு ஒவ்வாது. அதை எப்படி இப்போது கடை பிடிப்பது என்ற கேள்வி வரும். 


முதலில் அதை படிக்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். பின், அதற்கு பின் வந்த நூல்கள் அந்த அறத்தை எப்படி மாற்றி இருக்கின்றன என்று புரிந்து கொண்டு காலத்துக்கு ஏற்ப நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். 


கால மாற்றங்கள் வரும். நம் நூல்கள் அவற்றை அனுமதிக்கும். 


நீண்ட நாள் உள்ள ஒரு  பழக்கத்தை, ஒரு ஒழுக்கத்தை மாற்றலாமா என்றால் மாற்றலாம். ஆனால், யார் மாற்றுவது ?


கற்றறிந்த அறிஞ்ர்கள், ஒழுக்கத்தில் உயர்ந்த ஆன்றோர், முற்றும் துறந்த துறவோர் அவற்றை மாற்றலாம். அவர்களுக்கு அந்த உரிமை உண்டு. 


ஆனால், இப்போது என்ன நடக்கிறது, நமக்கு கீழே உள்ளவன் , நம்மை விட குறைவாக படித்தவன், ஒழுக்கக் குறைவு உள்ளவன் செய்வதைப் பார்த்து, அது தான் சரி என்று  நாம் பின்பற்றத் தொடங்கி விடுகிறோம்.  

 

உங்களை விட உயர்வானவர்களை நோக்குங்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள். 


அறத்துக்கு இரண்டு கூறு சொல்கிறார். 


ஒன்று செய்வது, இன்னொன்று செய்யாமல் விடுவது. 


செய்வது கடினம். செய்யாமல் இருப்பதில் என்ன கஷ்டம்?


கள்ளுண்ணாதே , திருடாதே, பொய் பேசாதே என்கிறார். 


பேசாமல் இருந்தால் போதும், பாதி அறம் வந்து விடும். பேசினால்தானே மெய்,பொய் என்று வரும். பேசாமல் இருந்து விட்டால் ? 

திருட்டு,பிறன் மனை விழைதல், கள் உண்ணுதல் என்ற அறப் பிழையும் வராது. 


மனு முதலிய நூல்களில் உள்ளது என்று சொல்லுவது எளிது. எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன? அதை எல்லாம் படித்து அதன் படி நடப்பது என்பது முடிகிற காரியமா?


முடியாது தான். அதனால் தான் வள்ளுவர், அவற்றை எல்லாம் தொகுத்து ஒரே புத்தகத்தில் தருகிறார். இதைப் படித்து அதன் படி நடந்தால் போதும். 


அறம் என்றால் என்ன என்று தேடி அலைய வேண்டாம். திருக்குறளில் எல்லா அறமும் இருக்கிறது. 


இதை மட்டும் பின் பற்றினால் போதும். 


எவ்வளவு பெரிய வேலையை செய்திருக்கிறார் வள்ளுவர்!


வாருங்கள் மேலும் படிப்போம். 




Monday, March 15, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 1

 திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 1 


நமக்கு வாழ்வில் சில குறிக்கோள் இருக்கும்.  அந்த இலக்கை அடைந்தால் நாம் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நாம் மனதுக்குள் குறித்துக் கொண்டு அந்த குறிக்கோளை நோக்கி நகர்வோம். 


பல குறிக்கோள்களை அடைந்தும் இருப்போம். நிம்மதியாக, மகிழ்வாக இருக்கிறோமா? 


"பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டால், அப்புறம் ஒரு பிரச்சனையும் இல்லை. நிம்மதியா அக்கடான்னு இருக்கலாம்" நு நினைப்போம். அப்படி நினைத்த எத்தனை பேர் நிம்மதியாக இருக்கிறார்கள் ?



பெண்ணுக்கு திருமணம் ஆன சில நாட்கள், மாதங்கள் சந்தோஷமாக இருக்கும். அப்புறம் ஏதாவது பூதம் கிளம்பும். 


எந்த ஒரு பொருளையோ, அனுபவத்தையோ நாம் அடைந்தால் சந்தோஷம் வரும் என்று நினைத்து அதை அடையும் தருவாயில், நம் நோக்கம் மாறிப் போய் விடுகிறது. 


மனம், அதை விட்டு விட்டு வேறொன்றின் பின் செல்லத் தலைப் படுகிறது. 


சரி, இப்படியே போய்க் கொண்டிருந்தால், அதற்கு என்னதான் முடிவு என்று ஆராய்ந்து, அதற்கு ஒரு விடையும் கண்டு பிடித்து விட்டார்கள். 


அது தான் வீடு பேறு அல்லது இறைவனின் திருவடி. அதை அடைந்த பின், அதற்கு மேல் ஒன்று இல்லை. 


அதற்கு கீழான அனைத்து இன்பங்களும் முடியக் கூடிய இன்பங்கள். தொடங்கியதில் இருந்து முடியாமல் இருந்து கொண்டே இருக்கும் இன்பம் என்று ஒன்று இருக்கிறதா? 


சரி, வீடு பேறு என்று சொல்லப்படும் அதை எப்படி அடைவது? 


ஒன்று இருக்கிறது என்று சொன்னால், அதை எப்படி அடைவது என்றும் சொல்ல வேண்டும் அல்லவா?


அதை அடைய நம் சான்றோர் வகுத்த வழி நான்கு


அதாவது - அறம்  பொருள், இன்பம், வீடு என்பன. 


இதைத்தான் வள்ளுவர் தொகுத்துக் கூறுகிறார். 


ஆனால், வீடு பற்றி சொல்லவில்லையே. அறம், பொருள், இன்பம் மூன்று தானே இருக்கிறது என்று கேட்டால், வீடு என்பது நம் சொல்லும் சிந்தனையும் செல்லாத  இடம் என்பதால், அதை நேரே சொல்ல முடியாது, அதற்கு வழி தான் காட்ட முடியம் என்பதால், வழி சொல்வதோடு வள்ளுவர் நிறுத்திக் கொள்கிறார். நீங்கள் அந்த வழியே போனால், "வீடு பேறு" வரும். 


இதை பரிமேலழகர் உரைப்பாயிரத்தில் எப்படி சொல்கிறார் என்று பாருங்கள். 


உரைப்பாயிரம் 

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1.html

click the above link to continue reading



அந்தக் கால தமிழ நடை. சற்று அடர்த்தியாக இருக்கும். 


ஒவ்வொரு பாகமாக படிப்போம். 


"இந்திரன் முதலிய இறையவர் பதங்களும்" = எவ்வளவு பெரிய செல்வம், பதவி, அதிகாரம் எதுவாக இருந்தாலும். இந்திர பதவியை விட பெரிய பதவி இருக்குமா? பஞ்ச பூதங்களும் இந்திரனின் ஆட்சிக்கு கட்டுப் பட்டவை.


"அந்தமில் இன்பத்து" = முடிவில்லாத இன்பம். எது முடிவில்லாது? ஸ்வர்கம், இந்திரப் பதவி போன்றவை என்றோ ஒரு நாள் முடியும். முடிந்த பின், மீண்டும் மனிதனாகவோ, விலங்காகவோ பிறக்க வேண்டும். முடிவில்லாத இன்பம் அடையவும்....


அழிவில் வீடும்  = அழிவற்ற வீடு பேறு. முதலில் இந்திரன் போன்ற தேவ பதவிகள், பின் அந்தம் இல்லாத இன்பம், பின் வீடு பேறு 


இந்த மூன்றையும் அடைய 


நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு = நெறி என்றால் வழி. எந்த வழியில், முறையில் சென்றால் அதை அடைய முடியுமோ. லாட்டரி சீட்டு அடித்தால் பணம் வரும். ஆனால் எல்லோருக்கும் அது அடிக்குமா? எனவே அது வழி அல்ல. குருட்டு அதிர்ஷ்டம். 


 உறுதியென = நிச்சயமானதென்று 


உயர்ந்தோரான் = பெரியவர்களால் 


எடுக்கப்பட்ட பொருள் நான்கு = சொல்லப் பட்ட பொருள்கள் நான்கு. 


அவை = அவையாவன 


 அறம், பொருள், இன்பம், வீடு என்பன. = அறம், பொருள், இன்பம் வீடு என்ற நான்குமாகும். 


அவற்றுள் = அந்த நான்கில் 


வீடென்பது = வீடு பேறு என்பது 


சிந்தையும் மொழியும் = நம் அறிவும், சொல்லும் 


செல்லா நிலைமைத்து ஆகலின் = செல்லாது என்று இருப்பதால் 


துறவறமாகிய = துறவறம் என்ற 


காரணவகையாற் = காரண வகை.  அது என்ன காரண வகை? நீங்கள் புதிதாக ஒரு இடத்துக்குப் போகிறீர்கள். விலாசம் இருக்கிறது. ஆனால் வழி தெரியவில்லை. அங்குள்ள ஒரு ஆளிடம் அந்த விலாசத்தை காட்டி, வழி கேட்கிறீர்கள். அவர், வழி சொல்கிறார். "இப்படியே நேரே போய், வலது புறம் திரும்பி...." என்று அடையாளங்கள் சொல்கிறார். 


நீங்கள், "அதெல்லாம் நம்ப முடியாது. அந்த விலாசம் உள்ள வீட்டை இங்கே கொண்டு வந்து காட்டு. அப்போதுதான் நம்புவேன்" என்று சொன்னால் எப்படி இருக்கும். 


அவர் சொன்ன வழியில் சென்று பார்க்க வேண்டும். அவர் சொல்வதை நம்ப வேண்டும். வேறு வழி இருக்கிறதா? உங்களுக்கோ தெரியாது. தெரிந்தவர் சொல்கிறார். அவர் சொல்வதை கேட்டு நடந்தால், நீங்கள் தேடிய இடம் வரும். 


அதைத்தான் "காரண வகை" என்று கூறினார். மத்தபடி நேரில் காட்ட முடியாது. 


கூறப்படுவதல்லது = அதைத் தவிர் வேறு வழியில் கூற முடியாது 


இலக்கணவகையாற் கூறப்படாமையின் = விளக்கிக் கூற முடியாது என்பதால் 


நூல்களாற் கூறப்படுவன = அனைத்து நூல்களிலும் கூறப் படுவது 


ஏனை மூன்றுமேயாம். = மற்ற மூன்றும் தான். அதாவது, அறம், பொருள் இன்பம் என்ற மூன்று மட்டுமே. 


வீடு பேறு பற்றிக் எந்த நூலாவது கூறினால், அது சரி அல்ல என்று புரிந்து கொள்ள முடியும். 


எனவே, வீடு பேறு அடைய, அறம், பொருள் , இன்பம் என்ற இந்த மூன்று மட்டும்தான் (வேறு எதுவம் கிடையாது) . எனவே, அந்த  மூன்றை வள்ளுவர் எடுத்துக் கொள்கிறார் என்கிறார் பரிமேலழகர். 


இப்போது மீண்டும் ஒரு முறை உரைப்பாயிரத்தின் முதல் பத்தியை படித்துப் பாருங்கள். 


"இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், 


அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், 


நெறியறிந்து 


எய்துதற்குரிய மாந்தர்க்கு 


உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. 


அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. 


அவற்றுள்


 வீடென்பது


 சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், 


துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது 


இலக்கணவகையாற் கூறப்படாமையின், 


நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்."


வள்ளுவர் இந்த மூன்றையும் சொன்னதினால், அவர் வீடு பேறு பற்றியும் சொல்லி இருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். 


இப்போது புரிகிறதா 


எதற்கு திருக்குறள் படிக்க வேண்டும் (வீடு பேறு அடைய) 

ஏன் அறம் , பொருள் இன்பம் என்று மட்டும் சொன்னார் 

என்பதெல்லாம் புரிந்து விட்டதா ?


மேலே படிப்போமா? அல்லது இவ்வளவே போதுமா ?