Friday, April 30, 2021

 நல்வழி - தீயவற்றை விடுத்து நல்லவற்றைச் செய்க 


நல்வழி என்பது ஔவையார் அருளிச் செய்த நூல். 


சில சமயம் வாழ்கை மிகவும் சிக்கலாகத் தோன்றும். என்ன இது வாழ்கை, ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது, நாம் ஒன்று நினைக்க வேறு ஒன்று நடக்கிறதே,இதுக்கெல்லாம் காரணம் என்ன, என்னதான் செய்வது என்று ஒரு வெறுப்பும் சலிப்பும் உண்டாகலாம். 



"இங்க வா, என் கிட்ட உக்காரு...உனக்கு என்ன குழப்பம், நான் சரி செய்து தருகிறேன்" ஆறுதலாக பேச யாராவது கிடைக்க மாட்டார்களா என்று ஏங்குவோம். 



அந்த ஏக்கத்தை போக்குவது இந்த நூல். சிக்கலான வாழ்கையை எளிமை படுத்தி காட்டுவது இந்த நூல். 



மிகப் பெரிய உண்மைகளை மிக மிக எளிய முறையில் அப்படி போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிற நூல். "அட இது இவ்வளவுதானா...இதுக்குத்தானா நான் இவ்வளவு குழம்பினேன் " என்று நம் குழப்பம் தீர்க்கும் நூல். 



அதில் இருந்து சில பாடல்கள். 



நமக்கு நாம் எதிர் பார்க்காத நேரத்தில் துன்பம் வருகிறது. எல்லாம் சரியாகச் செய்தாலும் எங்கோ தவறு நிகழ்ந்து விடுகிறது. என்ன செய்வது என்று குழம்பி என்ன செய்யலாம் என்று நூல்களைப் புரட்டினால் ஒவ்வொரு நூலும் ஒன்று சொல்கிறது. எதைப் படிப்பது, எதை விடுவது, எதை கடைப்பிடிப்பது என்று குழப்பம் இன்னும் கூடுகிறது. 



ஔவை மிக எளிதாக்கித் தருகிறாள் நமக்கு. 



"நாம் செய்யும் நன்மை தீமைகள் , புண்ணியமாகவும், பாவமாகவும் மாறி அடுத்த பிறவியில் நமக்கு இன்ப துன்பங்களாக வந்து சேரும். 


இப்போது துன்பம் வருகிறதா, அது முன் செய்த பாவம். 



இப்போது இன்பம் வருகிறதா, அது முன் செய்த புண்ணியம். 



இனி வரும் நாட்களில் இன்பம் வேண்டுமா, புண்ணியம் செயுங்கள. 


பாவம் செய்தால், இனி வரும் நாட்களில் துன்பம் வரும். 


உலகில் உள்ள அத்தனை சமய நூல்களும் சொல்வது இந்த ஒரு உண்மையைத்தான் "தீமையை விட்டு நல்லதை செய்யுங்கள்". அவ்வளவுதான். 


பாடல் 



புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்

ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்

தீதொழிய நன்மை செயல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_49.html


please click the above link to continue reading



புண்ணியம்ஆம் = புண்ணியம் ஆகும் 


பாவம்போம் = பாவம் போகும் 


போனநாட் செய்தஅவை = முன்பு செய்த அவை 


மண்ணில் பிறந்தார்க்கு = மண்ணில் பிறந்தவர்களுக்கு 


வைத்தபொருள் = கிடைத்தவை எல்லாம் 


எண்ணுங்கால் = யோசித்துப் பார்த்தால் 


ஈதொழிய வேறில்லை = இதைத் தவிர வேறு இல்லை 


எச்சமயத் தோர் = எந்த சமயத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் 


சொல்லுந் = சொல்லுவது 


தீதொழிய = தீய செயல்களை விடுத்து 


நன்மை செயல். = நன்மை தரும் செயல்களை செய்வது ஒன்றைத்தான் 




திருக்குறள் - நீத்தார் பெருமை - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - நீத்தார் பெருமை - ஒரு முன்னோட்டம் 


பாயிரவியலில் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு என்ற முதல் இரண்டு அதிகாரங்களை இது வரை சிந்தித்தோம். 


அடுத்தது நீத்தார் பெருமை. 


நீத்தார் என்றால் யார்?


அனைத்தையும் நீத்தார், துறந்தவர். அனைத்து பற்றையும் விட்டவர். 


அவர் விட்டு விட்டுப் போகட்டும். நாம் ஏன் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்? அதற்கும் அற நூலுக்கும் என்ன சம்பந்தம்? 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_30.html


(please click the above link to continue reading)


முதலாவது, அறங்கள் இயற்கையில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை யாரவது கண்டு சொன்னால் தான் மக்களுக்குப் புரியும். உதாரணமாக, மழை பெய்கிறது. பயிர் விளைகிறது. நாம் உண்கிறோம். இது எல்லோரும் காணக் கூடியது. இதன் பின்னால் மறைந்து கிடக்கும் இரகசியம் என்ன? மழைதான் உலகில் அறம் வாழத் தேவையான ஒன்று என்பது. அறத்துக்கும் மழைக்கும் உள்ள தொடர்பு எளிதாகத் தெரியாது. அதை கண்டு சொல்ல ஒரு  ஆள் வேண்டும். அது யார்?


இரண்டாவது, நான் ஒரு நிறுவனத்தில் ஒரு பெரிய பதவியில் இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அரசாங்கம் நிதி நிலை அறிக்கையை பார்லிமெண்டில் சமர்ப்பிக்கிறது. அதில் உள்ள ஓரிரு விடயங்கள் சரி அல்ல என்று நான் நினைக்கிறேன். ஒரு செய்தி நிறுவனம் என்னை அணுகி என்னுடைய பார்வையில் அந்த நிதி  நிலை அறிக்கை எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். நான் உண்மையைச் சொல்வேனா? சொன்னால், என் நிறுவனத்துக்கு வர வேண்டிய சலுகைகள் வராமல் போய் விடுமோ என்று அஞ்சுவேன் அல்லவா? நான் ஏதோ சொல்லப் போக அதனால் என் நிறுவனத்துக்கு தீங்கு வரலாம் என்ற அச்சம் இருக்கும் அல்லவா? எனவே, நான் என்ன சொல்வேன்...."அருமையான நிதி அறிக்கை, மிகத் தேவையான ஒன்று ...அற்புதம்" என்று சொல்லி விடுவேன். அது உண்மை அல்ல.


அது மக்களுக்கும் தெரியும். எவ்வளவு நல்ல அறிக்கையாக இருந்தாலும், எதிர் கட்சிகள் குறை சொல்லும். ஆளும் கட்சி மிக நல்ல அறிக்கை என்று சொல்லும். காரணம், பயம், பற்று, ஆசை போன்றவை. 


எனவே, ஒன்றின் மேல் பற்று இருந்தால், அது சார்ந்து தான் சொல்ல முடியும். 


என் பிள்ளை என்ன தவறு செய்தாலும், அதை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். காரணம் பிள்ளை மேல் உள்ள பற்று. 


பற்று உள்ளவன், உண்மையே சொன்னாலும், உலகம் என்ன நினைக்கும்? அவனுக்கு அதில் ஏதோ ஒரு பற்று இருக்கிறது. அதனால்தான் அப்படிச் சொல்கிறான் என்று அவன் சொல்வதை நம்பாது. 


அப்படி என்றால் உண்மையை உள்ள படியே யாரால் சொல்ல முடியும்? எதிலும் பற்று இல்லாதவனால்தான் உண்மையை உள்ளபடியே சொல்ல முடியும். 


அந்த உண்மையால் யாருக்கு நல்லது, யாருக்கு கெடுதல் என்று அவன் கவலைப் பட மாட்டான். 


அவன் சொன்னால் அதில் உண்மை இருக்கும் என்று உலகம் நம்பும். 


இவ்வளவு போலிச் சாமியார்கள் இருந்தும், மக்கள் சாமியார்கள் பின் ஏன் போகிறார்கள் என்றால், அவன் அனைத்தும் துறந்தவன். அவன் சொல்வதில் உண்மை இருக்கும் என்ற நம்பிக்கையில் போகிறார்கள். ஆயிரத்தில் ஒருவனாவது உண்மைத் துறவி இருக்கமாட்டானா என்ற நம்பிக்கையில் போகிறார்கள். 


மூன்றாவதாக, இல்லறத்தில் ஈடு பட்டவன் எந்நேரமும் அதிலேயே அவன் கவனம் இருக்கும். மனைவி, மக்கள், பொருள் சேர்ப்பது, அவற்றை பாதுகாப்பது, விருத்தி செய்வது, அதை அனுபவிப்பது, தானம் செய்வது என்பதிலேயே அவன் காலம் போய் விடுகிறது. (அவள் காலமும் தான்). அதைத் தாண்டி அவர்களால் சிந்திக்க முடியாது. சிந்திக்க நேரம் இருக்காது. வினை, கர்மம், யோகம், வீடு பேறு போன்றவற்றை பற்றி சிந்திக்க, அதை அடையும் முயற்சிகள் செய்ய இல்லறம் ஒரு தடை. அந்தத் தடை இல்லாதவனால் தான் அது பற்றி சிந்திக்க முடியும். அதற்கான வழிகளை ஆராய முடியும். ஆராய்ந்து தான் கண்டவற்றை பிறருக்கு சொல்ல முடியும். 


எனவே, இல்லறம், அதன் மூலம் துறவறம், அதன் மூலம் வீடு பேறு என்று போக வேண்டும் என்றால், அந்த வழியில் சென்றவர்கள், நீத்தார் பற்றியும் அவர்கள் பெருமை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். 


எனவே இந்த அதிகாரம். 


திருவள்ளுவர் இரண்டு விதமான துறவு பற்றி பேசுகிறார். 


ஒன்று முற்றும் துறந்தவன், 


இன்னொன்று துறவு நோக்கி முயல்பவன்.  நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் துறவிகள்தான். ஏதோ ஒன்றை நாம் துறந்துதான் இருப்போம். மனைவிக்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக நாம் சில இன்பங்களை துறந்துதான் இருக்கிறோம். ஆனால், அது முழுமையான துறவு அல்ல. ஒரு படி ஏறி இருக்கிறோம். இன்னும் சிலர் , மேலும் சில படிகள் ஏறி இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் முழுமையான துறவு அல்ல. 


ஒன்றை துறப்பதே எவ்வளவு கடினமாக இருக்கிறது. 


காலையில் எழுந்தவுடன் காப்பி குடிக்க வேண்டும். அதை விட முடிகிறதா. ஒரு நாள் குடிக்க முடியவில்லை  என்றால் எப்படி இருக்கிறது.   ஒரு வேளை உணவை துறக்க முடிகிறதா? வருடத்தில் ஒரு நாள் இரவு தூக்கத்தை விட முடிகிறதா? 


ஒன்றை விடுவதே இவ்வளவு கடினம் என்றால், அனைத்தையும் விடுவது எவ்வளவு கடினமாக இருக்கும். அப்படி ஒருவன் அனைத்தையும் விட்டு விட்டான் என்றால், அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும். 


அவன் என்னதான் சொல்கிறான் என்று கேட்க வேண்டாமா? 


அறம் நிலைக்க வேண்டும் என்றால், எது அறம் என்று தெரிய வேண்டும். 


அந்த அறங்களை எடுத்துச் சொல்பவன் நீத்தார் என்று சொல்லப் படுகின்ற முற்றும் துறந்தவன். 


அவன் சொல்வதில் பிழை இருக்காதா? அவன் பிழை விட மாட்டானா என்றால் மாட்டான் என்கிறார் வள்ளுவர். அதற்கு காரணமும் தருகிறார். 


அவற்றை எல்லாம் பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


பரிமேலழகர் வழி காட்ட அவர் கைப் பிடித்து அடுத்த அதிகாரத்துக்குள் நுழைவோம். 


Thursday, April 29, 2021

கம்ப இராமாயாணம் - நினைவும் செய்கையும் மறந்து

 கம்ப இராமாயாணம் - நினைவும் செய்கையும் மறந்து 


ஒரு நொடிப் பொழுதில் இந்திரசித்து பிரமாஸ்திரத்தை இலக்குவன் மேல் எய்து விட்டான். 


அருகில் இருந்த அனுமன் திகைத்தான். இது, யார் இப்படி செய்தது...வந்தவன் இந்திரனா, அவனை அந்த வெள்ளை யானையோடு சேர்த்து எடுத்து எறிந்து விடுகிறேன் பார் என்று வந்தான்...வந்த மாத்திரத்தில் வில்லில் இருந்து புறப்பட்ட ஆயிரம்  கடுமையான  அம்புகள் தைக்க நினைவும், செய்கையும் மறந்து போய் நிலத்தில் சோர்ந்து விழுந்து விட்டான்.


பாடல் 


அனுமன், 'இந்திரன் வந்தவன் என்கொல், 

   ஈது அமைந்தான்? 

இனி என்? எற்றுவென் களிற்றினோடு 

   எடுத்து' என எழுந்தான்; 

தனுவின் ஆயிரம் கோடி வெங் கடுங் 

   கணை தைக்க, 

நினைவும் செய்கையும் மறந்துபோய், 

   நெடு நிலம் சேர்ந்தான். 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_44.html


(please click the above link to continue reading)



அனுமன்,= அனுமன் நினைத்தான் 


 'இந்திரன் வந்தவன் என்கொல் = இந்திரனா வந்தது  


ஈது அமைந்தான்?  = இப்படிச் செய்தவன் 


இனி என்? = இனி என்ன செய்வது 


எற்றுவென்  = தூக்கி எறிவேன் 


களிற்றினோடு  = யானையோடு 


எடுத்து' = எடுத்து 


என எழுந்தான்;  = என்று எழுந்தான் 


தனுவின் = வில்லின் 


ஆயிரம் கோடி  = ஆயிரம் கோடி 


வெங் கடுங்கணை தைக்க,  = வெம்மையான கொடிய அம்புகள் தைக்க 


நினைவும் = நினைவும் 


செய்கையும் = செய்கையும் 


மறந்துபோய்,  = மறந்து போய் 


நெடு நிலம் சேர்ந்தான்.  = நிலத்தில் வீழ்ந்தான் 


அப்பேற்பட்ட அனுமனையும் அந்த பிரம்மாஸ்திரம் சாய்த்தது.


இலக்குவன் விழுந்து விட்டான். 


அனுமனும் பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்து விட்டான். 


இனி போர் என்ன ஆகும் ?



திருக்குறள் - வான் சிறப்பு - நீர் இன்றி அமையாது உலகு

 திருக்குறள் - வான் சிறப்பு - நீர் இன்றி அமையாது உலகு 


நீர் இல்லாவிட்டால் இந்த உலகம் இல்லை. அது நமக்குத் தெரிகிறது. ரொம்ப தூரம் போக வேண்டாம், வீட்டில் ஒரு நாள் குழாயைத் திறக்கிறீர்கள், நீர் வரவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்படி இருக்கும் ? பதறிப் போய் விட மாட்டீர்கள். உடனே தொலை பேசியில் யார் யாரையெல்லாமோ கூப்பிட்டு தண்ணீர் வர வழி செய்வீர்கள் அல்லவா? வீட்டில் கை கால் கழுவ தண்ணீர் வராவிட்டால் இந்தப் பாடு என்றால் மழை பெய்யாவிட்டால் என்ன ஆகும். உணவு இல்லை. பசி. செடி கொடி தாவரங்கள் இல்லை. நாடே வறண்டு பாலைவனமாகி விடும் அல்லவா. அது தெரிகிறது. நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 


ஆனால், அவ்வளவு தெளிவாக தெரியாத இன்னொன்றும் இருக்கிறது. அதாவது, மழை இல்லை என்றால் உலகில் ஒழுக்கம் கெட்டு விடும் என்பது. உலகில் தர்மமும், அறமும், ஒழுக்கமும் நிலைத்து வாழ மழை தேவை. அது நேரடியாகத் தெரியாது. 


மழை இல்லாவிட்டால் உணவு இல்லை. உணவு இல்லாவிட்டால் பசி. பசி வர பத்தும் பறந்து போகும். அது என்ன பத்து 


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை 

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் 

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் 

பசி வந்திடப் பறந்து போம் 


என்று ஔவை கூறுகிறாள். 


பாடல் 


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_29.html


(please click the above link to continue reading)


நீர்இன்று = நீர் இன்றி 


அமையாது  = அமையாது, இருக்காது 


உலகெனின் = உலகு எனின் 


யார்யார்க்கும் = எவருக்கும் 


வான்இன்று = மழை இன்றி 


அமையாது ஒழுக்கு = ஒழுக்கம் இல்லை 


நீர் இன்றி அமையாது உலகு என்ற தொடரில் உலகு என்பதற்கு உலகியல் சார்ந்த இன்பங்கள், அது சார்ந்து வரும் வீடு பேறு போன்றவை என்று பரிமேலழகர் பொருள் கொள்கிறார். உலகம் என்றால் ஏதோ மலை, பாறை, மண் என்று சொல்லவில்லை. மழை இல்லாவிட்டாலும்  அவை இருக்கும். உலகியல் சார்ந்த இன்பங்களும் அறங்களும். 


எப்படி வானம் (மேகம்) இல்லாமல் மழை இல்லையோ, அது போல நீர் இல்லாமல் ஒழுக்கம் இல்லை. 


நாம் நினைக்கலாம், மழை இல்லாவிட்டால் என்ன, ஆறு, குளம், கிணறு, கண்மாய், என்று நீர் நிலைகள் இருக்கின்றனவே என்று. அவற்றிற்கும் நீர் மழையில் இருந்துதான் வர வேண்டும். ஊற்று நீர், ஆற்று நீர் எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான் வரும். அப்புறம் வறண்டு விடும். 


அமையாது ஒழுக்கு என்பதற்கு "எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது " என்று பொருள் கொள்கிறார்.  


எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவனுக்குச் சொன்ன ஒழுக்க நெறிகள் மழை இல்லாவிட்டால் அவனால் கடைபிடிக்க முடியாது போய் விடும் என்கிறார். 


எனவே உலகில் தர்மம் நிலைத்து நிற்க, அறம் செழித்துஓங்க, மழை இன்றி அமையாதது என்று கூறினார். 


மழையையும், அதன் மூலம் கிடைக்கும் நீரையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம். உடலை மட்டும் அல்ல, உயிருக்கு துணையான அறம், ஒழுக்கம் போன்றவற்றிற்கும் துணையாக இருப்பது மழை. 


இந்தக் குறளோடு வான் சிறப்பு என்ற அதிகாரம் முடிவடைகிறது.  


இருபது குறள் படித்து விட்டோம். 


அடுத்த அதிகாரம், நீத்தார் பெருமை. 


களைத்துப் போனால், கொஞ்சம் இடைவெளி விடுவோமா? வேறு ஏதாவது படித்துவிட்டு பின் மீண்டும் குறளுக்கு வரலாம். 


அல்லது அப்படியே தொடரலாமா?

Wednesday, April 28, 2021

கம்ப இராமாயணம் - யுத்தப் படலம் - பிரம்மாஸ்திரம்

 கம்ப இராமாயணம் - யுத்தப் படலம் - பிரம்மாஸ்திரம் 


அரசியல், இயற்கை, மனித மனங்களில் எழும் உணர்சிகளின் போராட்டம் இவற்றை யாரும் கற்பனை செய்ய முடியும். அதை எப்படி எழுத்தில் வடிக்கிறார்கள் என்பது அவரவர் திறமையை பொறுத்தது. 


ஆனால், போர் பற்றி எழுத முடியுமா?  போர் எப்படி நடக்கும், போர்க்களத்தில் என்ன நிகழும், அங்கு இருப்பவர் மன நிலை எப்படி இருக்கும் என்பதெல்லாம் நடை முறை வாழக்கையில் நாம் காணும் காட்சிகள் அன்று. அதை எப்படி கற்பனையில் எழுதுவது?  


இராமனுக்கும், இராவணனுக்கும் பெரிய போர் நடந்தது. முடிவில் இராமன் வென்றான் என்று சொல்லிவிட்டுப் போய் விடலாம். கம்பன் மிக விரிவாக யுத்த காண்டம் எழுதுகிறான். 


கதையோ தெரிந்த கதை. யார் இதை படிக்கப் போகிறார்கள்?  யுத்த காண்டம் பற்றி பெரிய இலக்கிய அரங்ககளோ, பட்டி மன்றமோ நடந்ததாய், நடப்பதாய் தெரியவில்லை. 


இருப்பினும், அதில் கம்பன் காட்டும் நுணுக்கங்கள், உணர்ச்சி போராட்டங்கள், போரின் உக்ரத்தை அவன் காட்டும் விதம், எல்லாம் அந்த போரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. 


கம்பன் காட்டும் போர்க் களங்கள் என்று தனியே ஒரு புத்தகம் எழுதலாம். அவ்வளவு விடயம் இருக்கிறது. 


இலக்குவன் மயங்கி விழுந்து கிடக்கிறான், இராமனைக் காணவில்லை, அந்த சமயத்தில் சீதையை போர் களத்துக்கு கொண்டு வந்து காண்பிக்கிறான் இராவணன். இனியாவது என் ஆசைக்கு இணங்கு. உன்னை காப்பாற்ற யாரும் இல்லை என்று. 

அது எப்படி நடந்தது, இராமன் எங்கே போனான், அனுமன் என்ன ஆனான், சுக்ரீவன், வீடணன் போன்றோர் என்ன ஆனார்கள், சீதை அந்த போர்க் களத்தை கண்டு என்ன ஆனாள் என்று ஆயிரம் கேள்விகளுக்கு பதிலை உள்ளடக்கியது யுத்த காண்டம். 


இங்கே, இந்திரசித்து கண்ட போர்க்களம் பற்றி காணலாம். 


இந்திரசித்து பிரம்மாஸ்திரத்தை இலக்குவன் மேல் விடுகிறான். மாலை வேளையில், இரை தேடிப் போன பறவைகள் எல்லாம் மலையின் மேல் உள்ள தங்கள் கூட்டுக்கு மொத்தமாக வருவது போல, அந்த அஸ்திரம் இலக்குவன் மேனியை பற்றியது


பாடல் 


இன்ன காலையின் இலக்குவன்

    மேனிமேல் எய்தான்,

முன்னை நான்முகன் படைக்கலம்;

    இமைப்பதன் முன்னம்

பொன்னின் மால்வரைக் குரீஇ

    இனம் மொய்ப்பது போல,

பன்னல் ஆம் தரம் அல்லன

    சுடர்க்கணை பாய்ந்த.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_65.html


(click the above link to continue reading)


இன்ன காலையின் = அந்த நேரத்தில் (அது என்ன நேரம் என்றால் இன்னும் பல பாடல்கள் பின்னால் போக வேண்டி இருக்கும்.) 


இலக்குவன் = இலக்குவன் 


மேனிமேல் எய்தான், = உடம்பின் மேல் எய்தான் (யார் ? இந்திரசித்து)


முன்னை = முன்பு, ஆதி, பழம் பெருமை வாய்ந்த 


நான்முகன் படைக்கலம்; = பிரம்மாஸ்திரம் 


இமைப்பதன் முன்னம் = கண் இமைப்பதற்குள் 


பொன்னின் மால்வரைக் = பொன் போல ஒளி விடும் மலையின் மேல் 


குரீஇ  இனம் = பறவை இனங்கள் 


மொய்ப்பது போல, = மொய்ப்பது போல 


பன்னல் ஆம் தரம் அல்லன = சொல்லக் கூடிய தரத்தில் அல்ல 


சுடர்க்கணை பாய்ந்த. = சுடர் விடும் அந்த கணைகள் பாய்ந்த விதம் 


பிரம்மாஸ்த்திரத்துக்கு மேல் ஒரு அஸ்திரம் கிடையாது. அதை வெல்லும் படை எதுவும் இல்லை. 


அப்படி என்றால் என்ன ஆயிற்று? இலக்குவன் இறந்து போனானா? அவனோடு சென்ற படைகள் என்ன ஆயிற்று?


அந்த போர்களத்தை உங்கள் மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். அது எப்படி மேலும் மேலும் விரிகிறது என்று கம்பன் காட்ட காட்ட உங்கள் கற்பனையும் அதனூடே விரியும். அற்புதமான ஒரு அனுபவம்.



திருக்குறள் - வான் சிறப்பு - தானம் தவம் இரண்டும் தங்கா

 திருக்குறள் - வான் சிறப்பு - தானம் தவம் இரண்டும் தங்கா 


மழை பெய்யாவிட்டால், தானமும் தவமும் இந்த உலகில் இருந்து மறைந்து விடும்.


பாடல் 

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_28.html


(please click the above link to continue reading)



தானம் = தானம் 

தவம் = தவம் 

இரண்டும் = என்ற இரண்டும் 

தங்கா = தங்காது, மறைந்து விடும் 

வியன் உலகம் = பெரிய உலகில் 

வானம் = வானம், மேகம் 

வழங்கா தெனின் = தராவிட்டால், மழை பெய்யாவிட்டால் 


இனி, பரிமேலழகரின் உரையை காண்போம். 


தானம் என்றால் என்ன என்பதை மிகத் தெளிவாக, இரத்தின சுருக்கமாக சொல்கிறார் பரிமேலழகர். நம்மைக் கேட்டால் என்ன சொல்லுவோம், தானம் என்றால் மற்றவர்களுக்குத் தருவது என்று சொல்லுவோம். அல்லது வறியவர்களுக்கு உதவுவது என்போம், அல்லது பயன் கருதாமல் உதவி செய்வது என்று சொல்வோம். 


பரிமேலழகர் சொல்கிறார் 


"தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்"


தானம் என்றால் அறநெறியால் சம்பாதித்த பொருளை தகுந்தவர்களுக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தல் என்கிறார். 


பல பேர் தவறான வழியில் பணம் சம்பாதித்து விட்டு, அதில் ஒரு சிறு பகுதியை கோவில் உண்டியலில் போடுவது, அறக் கட்டளைகளுக்கு தானம் தருவது, என்று செய்வதன் மூலம் தானத்தின் பலன் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. அற வழியில் சம்பாதித்த பொருளை தருவதுதான் தானம். 


அதுவும், தகுந்தவர்களுக்குத் தர வேண்டும். கண்டவனிடம் கொடுத்தால் அந்தப் பொருளை வைத்துக் கொண்டு அவன் மேலும் பல தீமைகளைச் செய்வான். பாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டும். 


மூன்றாவது, மகிழ்ச்சியோடு கொடுத்தல்.  இருட்டுப் பாதை, ஒத்தையடிப் பாதை, அக்கம் பக்கம் யாரும் இல்லை. தனியாகப் போகிறோம். ஒரு கள்ளன் வழி மறித்து கையில் உள்ளதை எல்லாம் கொடு என்று கேட்கிறான். "இந்தா என்னுடைய மோதிரம், கைக் கடிகாரம், பையில் உள்ள பணத்தை எல்லாம் உனக்கு தானம் தருகிறேன்" என்று கொடுப்பது தானம் ஆகாது. வருத்தத்தோடு கொடுப்பது தானம் ஆகாது. "அறம் செய்ய விரும்பு" என்றாள் ஔவை. விருப்பத்தோடு கொடுக்க வேண்டும். 


தானமும் தவமும் என்பதில் தானம் என்பது பற்றி கூறி விட்டார். 


தவம் என்றால் என்ன என்று அடுத்து கூறுகிறார். 


"தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. "


தவம் என்றால் மனம் புலன்கள் வழி போகாமால் இருக்க உணவை குறைத்து உண்பது போன்ற விரதங்களை மேற்கொள்வது. 


இதில் பரிமேலழகர் செய்யும் நுட்பம் இன்னொன்றும் உண்டு. 


"பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன"


அதாவது தானம் என்பது இல்லறத்தின் கூறு. தவம் என்பது துறவறத்தின் கூறு. 


அதாவது, மழை இல்லாவிட்டால், இல்லறம், துறவறம் என்ற இரண்டு அறங்களும் இல்லாமல் போய்விடும். 


அறம் இல்லாவிட்டால் பொருள் இல்லை. அறமும் பொருளும் இல்லாவிட்டால் இன்பமும் வீடும் இல்லை. 


எனவே, வீடு பேறு வரை கொண்டு செல்ல மழை அவசியம் என்று முடிவில் உள்ள வீடு பேற்றையும், தொடக்கத்தில் உள்ள மழையையும் ஒன்று சேர்கிறார் பரிமேலழகர். 


அவர் உரை இல்லாவிட்டால் இதெல்லாம் நமக்குப் புரிவது கடினம். 


என்னடா இது அற நூல், வீடு பேற்றுக்கு வழி சொல்லும் நூல் என்று சொல்லி விட்டு இப்படி மழையை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறாரே என்று நினைப்பவர்களுக்கு, மழை இல்லாமல் வீடு பேறு இல்லை, அறங்களும் இல்லை என்று சுட்டுகிறார். 


எவ்வளவு ஆழமான குறள், எவ்வளவு ஆழமான உரை. 





Tuesday, April 27, 2021

திருக்குறள் - வான் சிறப்பு - சிறப்பொடு பூசனை செல்லாது

திருக்குறள் - வான் சிறப்பு - சிறப்பொடு பூசனை செல்லாது 


இறை நம்பிக்கை உள்ளவர்கள் அன்றாடம் இறை வழிபாடு செய்வார்கள். பெரிதாக இல்லாவிட்டாலும், ஒரு விளக்கை ஏற்றி, நீர் விளாவி, ஒரு கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி வைத்து, இறைவன் மேல் ஓரிரண்டு தோத்திரம் சொல்லி  வழி படுவார்கள். 


வழிபடுவதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. அன்றாடம் அந்த முறையில் வழிபட முடியாது. அது வீட்டுக்கும் பொருந்தும், கோவில்களுக்கும் பொருந்தும். 


அன்றாட வழிப்பாட்டின் குறைகளை தீர்க்க, சில விஷேச நாட்களில் விரிவான பூசனைகள் செய்வார்கள்....திருவிழா, குடமுழுக்கு, போன்றவை. வீட்டில் கூட தீபாவளி, ஆயுத பூஜை, பொங்கல், போன்ற விசேட நாட்களில் சிறப்பான பூஜை செய்யப்படும். 


அன்றாடம் செய்யும் பூஜைக்கு நித்யம் என்று பெயர். 


சிறப்பான பூஜைக்கு நைமித்யம் என்று பெயர். 


இதைத் தமிழில் பூசனை, சிறப்பு என்ற சொற்களால் குறிப்பார்கள். 


மழை இல்லாவிட்டால், இந்த இரண்டு பூசனையும் நடக்காது என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_27.html


(click the above link to contitnue reading)


சிறப்பொடு  = சிறப்பானவற்றோடு 

பூசனை  = தினப்படி செய்யும் பூஜையும் 

செல்லாது = நடக்காது 

வானம் = வானம் (மழை) 

வறக்குமேல் = வறண்டு போனால் 

வானோர்க்கும் = வானில் உள்ள தேவர்களுக்கும் 

ஈண்டு = இங்கு 


இதில் பரிமேலழகர் சில நுட்பங்கள் சொல்கிறார். 


முதலாவது, "சிறப்பொடு பூசனை செல்லாது" என்ற தொடரில் செல்லாது என்பது ஒருமை. செல்லா என்று இருந்தால் பன்மை. சிறப்பு, பூசனை என்று இரண்டு இருப்பதால் அது பன்மைதானே வர வேண்டும். 


இலக்கணம் சலிப்பு தரும் என்று நினைப்பவர்கள் இதை விட்டு விடலாம். இது இல்லாமலும் பொருள் புரிந்து விடும். 


தமிழிலிலே வேற்றுமை உருபுகள் என்று ஒன்று உண்டு. அதில் மூன்றாம் வேற்றுமை உருபுகளாவன அன், ஆன், ஒடு, ஓடு என்பன. 


இதில் ஒடு என்ற வேற்றுமை உருபை மட்டும் பார்போம். 


மூன்றாம் வேற்றுமை உருபுக்கு உடனிகழ்ச்சி உருபு என்று ஒரு பெயர் உண்டு. கூடவே நிகழ்வது. 


இராமனோடு குகன் வந்தான் என்றால் இருவரும் ஒன்றாக வந்தார்கள் என்று அர்த்தம். 


பூவொடு சேர்ந்த நாரும் மணக்கும் என்றால் இரண்டும் ஒன்றாக மணக்கும் என்று பொருள். 


இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால், இராமன், குகன் என்று இரண்டு பேர் இருக்கிறார்கள். அப்படி என்றால் வந்தார்கள் என்ற பன்மை விகுதிதானே இருக்க வேண்டும். 


இராமனோடு குகன் வந்தார்கள் என்றல்லவா இருக்க வேண்டும். ஆனால் அப்படி சொல்வது தவறு என்று நமக்குத் தெரிகிறது அல்லவா?


இராமனோடு குகன் வந்தான் என்பது தான் சரி. காரணம், ஒடு என்ற உருபு வந்தால் ஒருமை முடிவுதான் வரும். 


தலைவரோடு தொண்டன் வந்தான். தலைவரோடு தொண்டன் வந்தார்கள் என்று கூறினால் பிழை. 


இங்கே, சிறப்போடு பூசனை என்று ஒடு உருபு வருவதால் செல்லாது என்ற ஒருமை விகுதி வந்தது. 


இரண்டாவது, ஏன் முதலில் சிறப்பைச் சொல்லி பின் பூசனையை சொன்னார் என்ற கேள்விக்கு பரிமேலழகர் உரை செய்யும் போது "சிறப்பு" என்பது பூசனையில் உள்ள குறைகளை நீக்க வந்ததால் அதை முதலில் கூறினார் என்றார். 


எதை முதலில் கூற வேண்டும், எதை பின்னால் கூற வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். 


நாயோடு இராமன் வந்தான் என்று சொல்லக் கூடாது. 


இராமனோடு நாய் வந்தது என்று கூற வேண்டும். 


எது உயர்வோ அதை முதலில் சொல்ல வேண்டும் என்பது மரபு. 


மழை இல்லாவிட்டால், மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் மட்டும் அல்ல, கடவுள்களுக்கு நடக்கும் பூஜையும் நடக்காது என்கிறார். 


தேவர்களுக்கு செல்ல வேண்டிய அவிர் பாகம் போன்றவை சென்று சேராது. அவர்களும் வருந்துவார்கள் என்று கூறுகிறார்.