Sunday, October 10, 2021

கம்ப இராமாயணம் - அவதார நோக்கம்

கம்ப இராமாயணம் - அவதார நோக்கம்


எனக்கு இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக உண்டு.


இராம அவதாரத்தின் நோக்கம் என்ன? இராவணனை அழிப்பது. 


இராவணனை ஏன் அழிக்க வேண்டும் ?  ஏன் என்றால் அவன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். தேவர்களை சிறை பிடித்தான். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தான். 


இராவணன் தேவர்களை துன்பம் செய்ததாக நேரடி தகவல் இல்லை. அவ்வப்போது தேவர்கள் இராமனுக்கு உதவி செய்கிறார்கள். முடிந்த வரை மலர் மாரி பொழிகிறார்கள். 


சரி, இராவணன் தேவர்களை துன்பம் செய்தான் என்றே இருக்கட்டும். அவன் தண்டிக்கப்பட வேண்டியவன் என்றே இருக்கட்டும்.  


அவன், அதற்காக தண்டிக்கப் பட்டானா? 


இல்லை. ...


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_10.html

(please click the above link to continue reading)



இராவணன் தண்டிக்கப்பட்டது பிறன் மனைவியை நயந்த குற்றதுக்குகாக. தேவர்களை துன்பம் செய்ததற்காக அல்ல.


கடைசிவரையில், வீடணனும், கும்பகர்ணனும் சொல்கிறார்கள் ..."சீதையை விட்டுவிடு...இராமன் மன்னித்து விடுவான்" என்று. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். இராமன் கருணை உள்ளவன். அடைக்கலம் என்று வந்தால் ஏற்றுக் கொள்வான் என்றுதான் சொல்கிறார்கள். 


ஒரு வேளை இராவணன் மனம் மாறி சீதையை விட்டு இருந்தால், இராமன் மன்னித்து இருப்பான். எல்லோரும் நிம்மதியாக் இருந்து இருப்பார்கள். 


தேவர்கள் கதி? 


மற்ற அரக்கர்கள் கதையை பார்ப்போம். அவர்கள் எல்லோரும் தேவர்களுக்கு துன்பம் செய்தார்கள். அவதாரம் நிகழ்ந்தது. அவர்கள் கொல்லப் பட்டார்கள். 


சூரபத்மன் தேவர்களை படாதபாடு படுத்தினான். முருகன் அவதாரம் நிகழ்ந்தது. போர் நடந்தது. அவன் கொல்லப் பட்டான். 


இரணியன் கதி அதே. தூணில் இருந்து நரசிம்மம் வெளிப்பட்டு அவனை கொன்றது. 


கம்சன் கதியும் அதே. 


முப்புரம் எரி செய்த சிவன் செய்ததும் அதே.


ஆனால் இராமயணத்தில் மட்டும், இராவணன் கொல்லப் பட்டது பிறன் மனை நோக்கிய  அறப் பிழையினால். தேவர்களை கொடுமை படுத்திய பிழையினால் அல்ல. 


அப்படி இருக்க, அவதார நோக்கம் என்பது பிறன் நோக்கும் கயவர்களை தண்டிப்பது என்றுதான் இருக்க வேண்டும். 


வாலி, சுக்ரீவனின் மனைவியை நயந்தான். கொல்லப் பட்டான். பின், சுக்ரீவன் வாலியின் மனைவியை நயந்தான் என்று வான்மீகம் சொல்வதாகச் சொல்கிறார்கள். கம்பனில் அப்படி இல்லை. 


இராவணன், இராமனின் மனைவியை நயந்தான், கொல்லப் பட்டான். 


இதில் தேவர்கள் எங்கே வந்தார்கள் ? 


கைகேயிக்கு தெரியுமா, இராவணன், சீதை மேல் காமம் கொள்வான் என்று? தெரிந்தே செய்திருந்தால், அவள் முதலில் தண்டிக்கப் பட்டிருக்க வேண்டும். ஒரு பெண்ணின் கற்பை வைத்து சூதாடுவதா?


இராவணனை கொல்வதற்கு இராமனுக்கு ஒரு காரணமும் இல்லை. ஒரு வேளை இராமனுக்கு பட்டம் கட்டி இருந்தால், அவன் பாட்டுக்கு நாட்டை ஆண்டு கொண்டு இருந்திருப்பான்.


திருமாலாலும், சிவனாலும், பிரம்மனாலும் முடியாத காரியத்தை முடிக்க உன்னிடம் வருவோம் என்று தசரதனைப் பார்த்து கௌசிகன் கூறுகிறான். அந்த தசரதன், இராவணன் மேல் படை எடுக்கவில்லை. 


ஜனகன், இராவணன் மேல் படை எடுக்கவில்லை. 


இராமனுக்கு இராவணன் இருக்கும் இடம் கூடத் தெரியாது. சீதையை தேடும் போது இராவணன் இருக்கும் இடத்தில் இருந்ததை கண்டு பிடித்தார்கள். ஜடாயு சொன்னான். 


அவதார நோக்கம் இராவண வதை என்றால் எப்படி இருந்திருக்க வேண்டும்?


இராமன், இராவணனுக்கு தூது அனுப்பி, "நீ தேவர்களை விட வில்லை என்றால் உன்னை யுத்தத்தில் சந்திப்பேன்" என்று சொல்லி இருக்க வேண்டும். சண்டை போட்டு, இராவணனை கொன்று தேவர்களை சிறை மீட்டு இருக்க வேண்டும். 


அப்படி எல்லாம் ஒன்றும் நிகழவில்லை. 


அவதார நோக்கம் என்ன என்று சரியாக எனக்கு விளங்கவில்லை. 


உங்கள் கருத்து என்ன? தெரிந்து கொள்ள ஆவல். 





Saturday, October 9, 2021

திருக்குறள் - தன்னை விட அறிவான பிள்ளைகள்

 திருக்குறள் - தன்னை விட அறிவான பிள்ளைகள் 


தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையராக இருப்பது எந்த பெற்றோருக்கும் மகிழ்ச்சிதானே. என் பிள்ளை எவ்வளவு படித்து பெரிய ஆளாகி இருக்கிறான் என்று நினைத்து பெருமை படாத பெற்றோர் யார் இருக்கிறார்கள்? 


பாடல் 


தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_9.html


(Please click the above link to continue reading)



தம்மின் = தம்மைவிட 


தம் மக்கள் = தங்களுடைய பிள்ளைகள் 


அறிவுடைமை = அறிவு உள்ளவர்களாக இருப்பது 


மாநிலத்து = பெரிய உலகில் 


மன்னுயிர்க் கெல்லாம் = நிலைத்த உயிர்களுக்கெல்லாம் 


 இனிது = இனிமை பயப்பது 


இப்படித்தான் நாம் பொருள் கொள்வோம். 


இதற்கு பரிமேலழகர் உரையை படித்தால்தான் தெரியும் அதன் நுணுக்கம். இன்னொரு நூறு பிறவி எடுத்தால் கூட நம்மால் அந்த அளவுக்கு சிந்திக்க முடியுமா என்பது சந்தேகமே.


"அறிவுடமை" என்றால் என்ன? படித்து பட்டம் வாங்கி வருவதா? நிறைய பட்டம் வாங்குவது, மெடல் வாங்குவது போன்றவையா? அப்படிப் பார்த்தால் வருடத்துக்கு ஒரு பல்கலை கழகத்தில் ஒரு சில பேருக்குத்தான் கிடைக்கும். மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் வருத்தப் படுவார்களா?


அது ஒரு புறம் இருக்க, படித்து பட்டம் பெற்று விட்டால் போதுமா? 


பரிமேலழகர் சொல்கிறார் 


"ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை"


அறிவு வேறு, கல்வி வேறு.   


அறிவு என்பது இயற்கையாகவே இருப்பது. கல்வி என்பது படித்து வருவது. 


கல்வி, அறிவுடைமை என்று தனித் தனி அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். அது பற்றி பின்னால் மிக விரிவாக பார்க்க இருக்கிறோம். 


இயல்பான அறிவு இருக்க வேண்டும், அதோடு கூட கல்வியும் சேர வேண்டும். ஒன்று இருந்து மற்றது இல்லாவிட்டால் பலன் இல்லை. 


"மன்னுயிர்க்கு" ...


தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 

தமக்கு என்றும் இனிமை

என்று எழுதி இருக்க வேண்டும். 


என் பிள்ளை அறிவுடையவனாக இருந்தால் பக்கத்து வீட்டு காரனுக்கு என்ன அதில் இன்பம்? 


பின் ஏன் மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் என்று எழுதினர்?


ஒரு பிள்ளை அறிவுடையவனாக இருந்தால், அது அந்தப் பிள்ளையின் பெற்றோருக்கு மட்டும் அல்ல, அனைத்து உயிர்களுக்கும் இன்பம் என்கிறார். 


எப்படி?


ஒரு அறிவியல் அறிஞர் ஒரு நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கிறார். அவருக்கு பேரும் புகழும் கிடைக்கிறது. அவருடைய பெற்றோர்கள் அதனால் பெருமை அடைவார்கள். சரி. அதோடு நிற்கிறதா? அந்த மருந்தினால் உலகில் உள்ள அத்தனை உயிர்களும் பயன் பெறுகின்றன அல்லவா? 



யாரோ கண்டு பிடித்த கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பயன் தருகிறது அல்லவா? உயிர்கள் எல்லாம் மகிழ்கின்றன அல்லவா?


யாரோ ஒரு இசை கலைஞன் பாடுகிறான். அவனுக்கு பேரும் புகழும் கிடைப்பது ஒரு புறம் என்றாலும், உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதைக் கேட்டு இன்புறுகிறார்கள் தானே. 


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 


நிலைத்து நிற்கும் உயிர்களுக்கு எல்லாம் என்கிறார்.  காரணம், ஒருவன் இப்போது ஏதோ ஒன்று கண்டு பிடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். து இப்போது உள்ள மக்களுக்கு மட்டும் அல்ல, இனி வரும் சந்ததிகளுக்கும் பயன் தரும் அல்லவா? பென்சிலின் என்ற மருந்து எப்போதோ கண்டு பிடிக்கப்பட்டது. இப்போதும் அது உயிர்களை காத்துக் கொண்டு இருக்கிறது அல்லவா?  


எப்போதோ எழுதிய குறள். இன்றும் நமக்கு இன்பம் தருகிறதா இல்லையா.  நிலைத்து நிற்கும் உயிர்களுக்கு எல்லாம் இன்பம் என்றார். 


அது மட்டும் அல்ல


"மாநிலத்து" என்றால், ஒருவன் அறிவுடையவனாக இருந்தால் அதன் பயன் அவன் பிறந்த ஊருக்கு மட்டும் அல்ல, உலகம் அனைத்துக்கும் பலன் தரும். யாரோ கண்டு பிடித்த கணணி (கம்ப்யூட்டர் ), உலகம் அனைத்துக்கும் பயன் தருகிறது அல்லவா?


எனவே, பெற்றோர்களை விட, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்பம் அடையும் என்கிறார். 


இப்படி எல்லாம் நம்மால் சிந்திக்கக் கூட முடியாது. 


"இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது"


என்று முடிக்கிறார் பரிமேலழகர். 


பிள்ளைகளைப் பெற்று, அவர்களை அறிவுடையவர்களாக ஆக்கி விட்டால், உலகம் இன்புறும். 


சரி, நம்மை விட நம் பிள்ளகைள் அறிவானவர்களாக இருந்தால் உலகம் இன்புறும்  அவர்கள் பிள்ளைகள், அவர்களை விட அறிவாளிகளாக இருப்பார்கள் அல்லவா? இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் பிள்ளைகள் அறிவுடையவர்காக இருந்தால், ஒரு பத்து தலைமுறையில் இந்த உலகம் எவ்வளவு சிறந்து இருக்கும்? 


"தம்மில் தம் மக்கள்". 


அப்பாவை விட மகன் 

மகனை விட பேரன் 


எவ்வளவு நீண்ட, ஆழமான சிந்தனை.


ஒன்றே முக்கால் அடியில். 



Friday, October 8, 2021

சிலப்பதிகாரம் - முறை இல் அரசன் வாழும் ஊர்

சிலப்பதிகாரம் - முறை இல் அரசன் வாழும் ஊர் 


தன் கணவன் திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு கொலையுண்ட செய்தியை கேட்கிறாள் கண்ணகி. அவளுக்குத் தெரியும் கோவலன் கள்வன் அல்ல என்று. 


இருந்தும், சூரியனைப் பார்த்துப் கேட்கிறாள்..."காய் கதிர் செல்வனே, கள்வனோ என் கணவன்" என்று. 


"உன் கணவன் கள்வன் அல்லன், இந்த ஊரை தீ தின்னும்" என்று ஒரு அசரீரி கேட்டது. 


‘கள்வனோ அல்லன்; கருங் கயல் கண் மாதராய்!

ஒள் எரி உண்ணும், இவ் ஊர்’ என்றது ஒரு குரல்.


கேட்டவுடன் எழுகிறாள் கண்ணகி. 


ஒரு பெண்ணின் முழு ஆளுமையை, அவள் கோபத்தை, யாருக்கும் அஞ்சாத அவள் துணிச்சலை, தன் கணவன் மேல் விழுந்த பழியை துடைக்க அவள் துடித்த துடிப்பை இளங்கோ கட்டுகிறார். 


மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள். உணர்சிகளோடு பின்னிச் செல்லும் கவிதை வரிகள். 


"உன் கணவன் கள்வன் அல்ல என்று சூரியன் சொன்னவுடன், அதன் பின் ஒரு கணம் கூட கண்ணகி தாமதம் செய்ய வில்லை. தன்னிடம் இருந்த மற்றொரு சிலம்பை ஒரு கையில் ஏந்திக் கொண்டு...முறை இல்லாத அரசன் வாழும் இந்த ஊரில் வாழும் பத்தினிப் பெண்களே, இது ஒன்று " என்று புறப்படுகிறாள்...



பாடல் 


என்றனன் வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி


நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி:


‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும்


நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்! ஈது ஒன்று:


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_8.html


(Please click the above link to continue reading)


என்றனன் வெய்யோன் = உன் கணவன் கள்வன் அல்லன் என்று கூறினான் பகலவன் 


இலங்கு ஈர் = அறுத்து செய்யப்பட்ட 


வளைத் தோளி = வளையல்களை அணிந்த தோள்களை உடைய கண்ணகி 


நின்றிலள் = நிற்கவில்லை 


நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி: = மீதம் இருந்த ஒரு சிலம்பை கையில் ஏந்தி 


‘முறை இல் அரசன் = முறை இல்லாத அரசன் 


தன் ஊர் = உள்ள ஊரில் 


இருந்து வாழும் = இருந்து வாழும் 


நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்!  = நிறையுடை பத்தினி பெண்களே  


ஈது ஒன்று: = இது ஒன்று, அதாவது அந்த இரண்டு சிலம்பில், இது ஒன்று 


என்று கூறி கிளம்புகிறாள். 




Wednesday, October 6, 2021

கம்ப இராமாயணம் - தசரதன் ஏன் இறந்தான் ?

 கம்ப இராமாயணம் - தசரதன் ஏன் இறந்தான் ?


தசரதன் ஏன் இறந்தான்? 


இராமனைப் பிரிந்த துக்கத்தால் இறந்தானா? அவனுக்கு ஏற்கனவே ஒரு சாபம் இருந்தது.  பிள்ளையை பிரிந்த சோகத்தில் நீ இறப்பாய் என்ற சாபம். அந்த சாபம் பலித்து தசரதன் இறந்தானா?


தசரதன் இறப்பதற்கு சற்று முன் போவோம். 


கண்ணாடியில் ஒரு நரை முடியை பார்க்கிறான் தசரதன். வயது ஆகி விட்டது, பொறுப்பை இராமனிடம் தந்து விட்டு, கானகம் சென்று வீடு பேறு அடைய முயலும் நேரம் வந்து விட்டது என்று உணர்ந்து, உடனேயே மந்திரி சபையை கூட்டி, இராமனுக்கு அரசு என்று அறிவிக்கிறான். 


அது நடந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்?


இராமன் முடி சூட்டி இருப்பான். தசரன் கானகம் போய் இருப்பான். பிரிவு நிகழ்ந்து இருக்கும். சாபத்தின் காரணமாக தசரதன் இறந்திருப்பான். 


மாறாக, என்ன நிகழ்ந்தது? 


இராமன் கானகம் போக வேண்டும் என்று கைகேயி வரம் வேண்டினாள். நல்லதா போச்சு நு தசரதனும் இராமன் உடன் கானகம் போய் இருக்கலாம். பிரிவு எங்கே வந்தது? தசரதன் மகிழ்ந்து இருக்க வேண்டும். உயிர் போய் இருக்காது. 


பின் ஏன்  தசரதன் இறந்தான்? 


அதற்கு பதிலை வாலியின் வாயிலாக கம்பன் சொல்கிறான். 


தசரதன் இறந்தது பிரிவினால் அல்ல, மூத்த மகனுக்கு பட்டம் தரவேண்டும் என்ற நீதியை, முறையை மீறியதற்காக. தான் தவறு இழைத்து விட்டேன் என்று உணர்ந்து உயிரை விட்டான். நீதிக்காக, நெறிக்காக உயிரையும் கொடுத்த அந்த தசரத சக்ரவர்த்தியின் மகனா என்று வாலி இராமனைப் பார்த்து கேட்கிறான். 



பாடல் 


வாய்மையும் மரபும் காத்து

    மன் உயிர் துறந்த வள்ளல்

தூயவன் மைந்தனே! நீ

    பரதன் முன் தோன்றினாயே;

தீமைதான் பிறரைக் காத்துத்

    தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ?

தாய்மையும் அன்றி நட்பும்

    தருமமும் தழுவி நின்றாய்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_6.html


(Please click the above link to continue reading)



வாய்மையும் = உண்மையையும் 


 மரபும் = அரச மரபும் 


 காத்து = காத்து, காவல் செய்து 


மன் உயிர் = நிலைத்து நிற்கும் உயிரை 


துறந்த வள்ளல் = கொடுத்த வள்ளல் 


தூயவன்  மைந்தனே!  = தூயவனான தசரதனின் மகனே 


நீ = நீ 


பரதன் முன் தோன்றினாயே; = பரதன் முன் பிறந்தாயே 


தீமைதான் பிறரைக் காத்துத்  = பிறரை தீமை செய்யாமல் தடுத்து 


தான் செய்தால் = தான் தீங்கு செய்தால் 


தீங்கு அன்று ஆமோ? = அது தீமை இல்லை என்று ஆகுமா? 


தாய்மையும்  அன்றி = தாய்மையும் இல்லாமல் 


 நட்பும்  தருமமும் = நட்பும் தருமமும் 


தழுவி நின்றாய். = கொண்டு நின்றாய் 


சட்டம், தர்மம் இவற்றில் இருந்து வழுவியதால், அதற்கு பயந்து உயிரை விட்டான் தசரதன். 




Tuesday, October 5, 2021

Monday, October 4, 2021

திருக்குறள் - எப்படி பிள்ளைகளை வளர்ப்பது ?

 திருக்குறள் - எப்படி பிள்ளைகளை வளர்ப்பது ?


எப்படி பிள்ளைகளை வளர்ப்பது என்று தெரியாமலேயே பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறோம். நாம் எப்படி வளர்ந்தோம் என்றும் தெரிவதில்லை. எது சரி, எது தவறு என்று தெரியாமலேயே பிள்ளைகளை வளர்க்கிறோம். 


ஏதோ பள்ளிக்கு அனுப்பினோம், கல்லூரிக்கு அனுப்பினோம், வேலை தேடிக் கொண்டார்கள், திருமணம் செய்து வைத்தோம்...அத்தோடு நம் வேலை தீர்ந்தது என்று பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கிறார்கள். 


வேறு சிலரோ, பிள்ளைக்கு அவ்வளவா படிப்பு வரல. என்ன பண்றது. கொஞ்சம் சொத்து சேர்த்து வைத்து விட்டுப் போவோம். நமக்குப் பின் பிள்ளை துன்பப் படாமல் இருக்கட்டும் என்று நினைப்பார்கள். 


பிள்ளை வளர்ப்பை எங்கு போய் படிப்பது ?


ஒரு வரியில் வள்ளுவர் சொல்லித் தருகிறார். 


"பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றால், அவர்கள் வளர்ந்த பின், கற்றறிந்த சான்றோர் அவையில் அவர்களுக்கு முதலிடம் கிடைக்க வேண்டும்...அப்படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் " என்கிறார். 


பாடல் 


தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_4.html


(please click the above link to continue reading)



தந்தை = தந்தை 


மகற்கு = மகனுக்கு 


ஆற்றும் நன்றி = செய்யும் உதவி 


அவையத்து = உலகில் 


முந்தி யிருப்பச் செயல் = மகனை முந்தி இருக்கும் படி செய்வது. 


அவையம் என்றால் உலகம். 


உலகில் பல தீயவர்கள், கொடியவர்கள், தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் போற்றும் பெரிய கொள்ளைக்காரனாக இருந்தால் பரவாயில்லையா?  டான் (Don), பாஸ் (Boss) என்று சொல்கிறார்களே அது ஒரு பெருமையா?


அவையம் என்பதற்கு பரிமேலழகர் சொல்கிறார் "கற்றார் அவையின்கண் ". படித்தவர்கள் நிறைந்த அவை என்கிறார். 


"முந்தி இருப்பச் செயல் " என்றால் என்ன? முதல் வரிசையில் இடம் போட்டு வைப்பதா?  


"அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல்"


என்கிறார். 


கற்று அறிந்தவர்கள் சபையில், அவர்களை விட அறிவில் மிகுந்தவனாக இருக்கும் படி செய்வது என்கிறார். 


ஏதோ பள்ளியில், கல்லூரியில் முதல் மாணவனாக வருவது அல்ல. 


கற்று அறிந்தவர்கள் உள்ள எந்த சபைக்கு சென்றாலும், அவர்களை விட இவன் அறிவில் மிகுந்தவனாக இருக்கும் படி செய்வது. 


எவ்வளவு பெரிய வேலை. 



"தந்தை மகற்குஆற்றும் நன்றி " என்ற தொடரில், 'நன்றி' என்ற சொல்லுக்கு 'உதவி' என்று பொருள் கொள்கிறார் பரிமேலழகர். 


தந்தை உதவி செய்ய வேண்டும். படிப்பது பிள்ளையின் கையில். 


பிள்ளை பெறுவதற்கு முன் , பிள்ளை பெற்றால் அவனை கல்வியில் உயர்ந்தவனாகச் செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டு, முடியும் என்றால் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும். 


ஒரு வரி. கால காலத்துக்குமான உபதேசம். 


பரிமேலழகர் அதோடு நிற்கவில்லை. 


பிள்ளைக்கு நாலு காசு சேர்த்து வைத்தால், அது உதவி இல்லையா? படிப்பு மட்டும்தானா உதவி என்று சிலர் கேட்கலாம். 



"பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து."


என்கிறார் பரிமேலழகர். 


பிள்ளையை நிறைய செல்வம் சேர்க்க சொல்லிக் கொடுத்தால், அது துன்பம் தருவது என்கிறார். 


பணம் சம்பாதிப்பது துன்பம். அதை பாதுகாப்பது துன்பம். முதலீடு செய்தால் பத்திரமாய் திரும்பி வர வேண்டுமே என்ற பயம்.வட்டி குறைந்தால் வருத்தம். வரும் வருமானத்துக்கு வரி போட்டால் துன்பம். மற்றவர்கள் அதிகம் சேர்த்து விட்டால், வரும் பொறாமை. 


"பொருளுடையான் ஆக்குதல் முதலாயின"


"முதலாயின" என்றதன் மூலம், பொருள், அதிகாரம், செல்வாக்கு, என்பன எல்லாம் துன்பம் தருவன என்கிறார். 


வியக்க வைக்கும் குறள். எவ்வளவு தெளிவான, ஆழமான குறள். 


படிப்போம். 


Sunday, October 3, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்டு இன்பக் கலவி எய்தி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்டு இன்பக் கலவி எய்தி 


இறைவன் எல்லாம் வல்லவன். அவனுக்கு எல்லாம் தெரியும் என்றாலும், அவன் மேல் பக்தி, பக்தி என்று கூட சொல்லமுடியாது, ஒரு காதல், கொள்ளும் பக்தர்கள், அவனுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்று பதறுவது, வைணவ இலக்கியத்தில் நாம் காணும் காட்சி. 



கணவன் பட்டாளத்தில் பெரிய வேலையில் இருப்பார். அவர் போகும் போது முன்னால் நாலு வண்டி, பின்னால் நாலு வண்டி பாதுகாப்புக்கு போகும். அவர் கண் அசைத்தால் பெரிய படையே நகரும். இருந்தும் அவர் வெளியே போய்விட்டு வரும் வரை, மனைவிக்கு கவலையாகத்தான் இருக்கும். அவருக்கு ஒண்ணும் ஆகி விடக் கூடாதே என்று. 


அது அன்பின் அடையாளம் . காதலின் வெளிப்பாடு. 


அதே அன்பை, அன்யோன்யத்தை, காதலை பிரபந்தத்தில் பல இடத்தில் காணலாம். இப்படி கூட அன்பு இருக்குமா என்று வியக்க வைக்கும் நம்மை. 


குலசேகர ஆழ்வார் நினைக்கிறார், 


"பெருமாளுக்கு ஏதாவது தீங்கு வந்து விடுமோ? எதற்கும் ஒரு முறை போய் பார்த்து விட்டு வந்து விடுவோம். ஹ்ம்ம்...அவர் கையில் கூரிய அம்புகள் இருக்கிறது, அதை செலுத்தும் பெரிய சாரங்கம் என்ற வில் இருக்கிறது.  அது போதுமா? அம்பு ஒரு தூரத்துக்குத் தான் போகும். அதற்கு அப்பால் ஏதாவது துன்பம் , தீங்கு வந்து விட்டால்? ...கையில சக்கரம் இருக்கு. அது எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகும். இது இரண்டும் போதுமா? அது போக கதையும் இருக்கு, அதுக்கும் மேல ஒரு வாளும் இருக்கு. ரொம்ப தூரம் போக வேண்டும் என்றால் அதுக்கு கருடன் இருக்கு. இது எல்லாம் என் பெருமாளை காப்பாற்றும். அவருக்கு ஒரு துன்பமும் வராது. அப்பாட, நிம்மதி" என்று நிம்மதி பெருமூச்சு விட்ட பின், சுற்றி வர பார்க்கிறார். 


அவர் இருக்கும் இடம் திருவரங்கம். எங்கு பார்த்தாலும் சோலை. வயல். பச்சை பசேல் என்று இருக்கிறது. நீர் வளம் நிரம்பி இருக்கிறது. வயக்காட்டில் உள்ள நீரில், மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. பெருமாள் அரவணையில் பள்ளி கொண்டிருக்கிறார். பார்க்க பார்க்க அவருக்கு ஆனந்தம் தாளவில்லை. அப்படியே ஓடிப் போய் கட்டி பிடித்துக் கொள்ள மாட்டோமா என்று மனம் காதலில் மிதக்கிறது. 


எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா என்று கிடைக்குமோ என்று ஏங்குகிறார். 


பாடல் 




கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்


காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக் கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப


சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்


மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post.html


(Please click the above link to continue reading)




கோலார்ந்த = கூரிய அம்புகள் உள்ள 


நெடுஞ்சார்ங்கம் = பெரிய சாரங்கம் என்ற வில் 


கூனற் சங்கம் = வளைந்த சங்கு 


கொலையாழி = சக்கரம் 


கொடுந்தண்டு = தண்டாயுதம் 


கொற்ற வொள்வாள் = வெல்லும் வாள் 


காலார்ந்த = காற்றில் 


கதிக்கருட னென்னும்  = வேகமாகச் செல்லும் கருடன் என்ற 


வென்றிக் கடும்பறவை = வெற்றி பெறும் சிறந்த பறவை 


யிவையனைத்தும் = இவை அனைத்தும் 


புறஞ்சூழ் காப்ப = சுற்றி இருந்து காவல் செய்ய 



சேலார்ந்த = மீன்கள் நிறைந்த 


நெடுங்கழனி = பெரிய கழனி 


சோலை = சோலைகள் 


சூழ்ந்த = சூழ்ந்த 


திருவரங்க தரவணையில் = திருவரங்கத்தில், பாம்பு அணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


மாலோனைக் = திருமாலை 


கண்டின்பக் கலவி யெய்தி = கண்டு இன்பக் கலவி எய்தி 


வல்வினையே னென்றுகொலோ = வலிய வினையை உடைய நான் என்றோ 


வாழும் நாளே = வாழும் நாளே