Wednesday, October 6, 2021

கம்ப இராமாயணம் - தசரதன் ஏன் இறந்தான் ?

 கம்ப இராமாயணம் - தசரதன் ஏன் இறந்தான் ?


தசரதன் ஏன் இறந்தான்? 


இராமனைப் பிரிந்த துக்கத்தால் இறந்தானா? அவனுக்கு ஏற்கனவே ஒரு சாபம் இருந்தது.  பிள்ளையை பிரிந்த சோகத்தில் நீ இறப்பாய் என்ற சாபம். அந்த சாபம் பலித்து தசரதன் இறந்தானா?


தசரதன் இறப்பதற்கு சற்று முன் போவோம். 


கண்ணாடியில் ஒரு நரை முடியை பார்க்கிறான் தசரதன். வயது ஆகி விட்டது, பொறுப்பை இராமனிடம் தந்து விட்டு, கானகம் சென்று வீடு பேறு அடைய முயலும் நேரம் வந்து விட்டது என்று உணர்ந்து, உடனேயே மந்திரி சபையை கூட்டி, இராமனுக்கு அரசு என்று அறிவிக்கிறான். 


அது நடந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்?


இராமன் முடி சூட்டி இருப்பான். தசரன் கானகம் போய் இருப்பான். பிரிவு நிகழ்ந்து இருக்கும். சாபத்தின் காரணமாக தசரதன் இறந்திருப்பான். 


மாறாக, என்ன நிகழ்ந்தது? 


இராமன் கானகம் போக வேண்டும் என்று கைகேயி வரம் வேண்டினாள். நல்லதா போச்சு நு தசரதனும் இராமன் உடன் கானகம் போய் இருக்கலாம். பிரிவு எங்கே வந்தது? தசரதன் மகிழ்ந்து இருக்க வேண்டும். உயிர் போய் இருக்காது. 


பின் ஏன்  தசரதன் இறந்தான்? 


அதற்கு பதிலை வாலியின் வாயிலாக கம்பன் சொல்கிறான். 


தசரதன் இறந்தது பிரிவினால் அல்ல, மூத்த மகனுக்கு பட்டம் தரவேண்டும் என்ற நீதியை, முறையை மீறியதற்காக. தான் தவறு இழைத்து விட்டேன் என்று உணர்ந்து உயிரை விட்டான். நீதிக்காக, நெறிக்காக உயிரையும் கொடுத்த அந்த தசரத சக்ரவர்த்தியின் மகனா என்று வாலி இராமனைப் பார்த்து கேட்கிறான். 



பாடல் 


வாய்மையும் மரபும் காத்து

    மன் உயிர் துறந்த வள்ளல்

தூயவன் மைந்தனே! நீ

    பரதன் முன் தோன்றினாயே;

தீமைதான் பிறரைக் காத்துத்

    தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ?

தாய்மையும் அன்றி நட்பும்

    தருமமும் தழுவி நின்றாய்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_6.html


(Please click the above link to continue reading)



வாய்மையும் = உண்மையையும் 


 மரபும் = அரச மரபும் 


 காத்து = காத்து, காவல் செய்து 


மன் உயிர் = நிலைத்து நிற்கும் உயிரை 


துறந்த வள்ளல் = கொடுத்த வள்ளல் 


தூயவன்  மைந்தனே!  = தூயவனான தசரதனின் மகனே 


நீ = நீ 


பரதன் முன் தோன்றினாயே; = பரதன் முன் பிறந்தாயே 


தீமைதான் பிறரைக் காத்துத்  = பிறரை தீமை செய்யாமல் தடுத்து 


தான் செய்தால் = தான் தீங்கு செய்தால் 


தீங்கு அன்று ஆமோ? = அது தீமை இல்லை என்று ஆகுமா? 


தாய்மையும்  அன்றி = தாய்மையும் இல்லாமல் 


 நட்பும்  தருமமும் = நட்பும் தருமமும் 


தழுவி நின்றாய். = கொண்டு நின்றாய் 


சட்டம், தர்மம் இவற்றில் இருந்து வழுவியதால், அதற்கு பயந்து உயிரை விட்டான் தசரதன். 




1 comment:

  1. இதுவரை சிந்திக்காத புதிய கோணமாக இருக்கிறது.

    ReplyDelete