Saturday, October 16, 2021

திருக்குறள் - அடைக்கும் தாழ்

 திருக்குறள் - அடைக்கும் தாழ் 


அழுவது என்பது ஒரு பலகீனம் என்று ஒரு எண்ணம் பரவலாக உண்டு. 


ஆண் என்றால் எது வந்தாலும் அழக் கூடாது. பெண் என்றால் எதற்கு எடுத்தாலும் அழலாம் என்று ஒரு கோட்பாடு நம் மத்தியில் உலவுகிறது. 


சிறு வயதில் பையன்கள் அழுதால், "என்னடா இது பொம்பள புள்ளை மாதிரி அழுகிற" என்று கேலி பேசுவார்கள். அப்படி சொல்லி சொல்லி ஆண்கள் அழக் கூடாது. அது ஆண்மைக்கு அழகு அல்ல என்று செய்து விட்டோம். அப்படி சொல்லி சொல்லி வளர்த்து அவர்களை முரடர்களாக்கி விட்டோம். 


கண்ணீர் என்பது உணர்வின் வெளிப்பாடு. அது துக்கத்தில் வரும், அளவு கடந்த மகிழ்ச்சியில் வரும், எதிர் பாராத ஆச்சரியத்தில் வரும், மிக இனிமையான இசையைக் கேட்டால் வரும், பக்தியில் வரும், பிறர் துன்பம் கண்டு வரும். 


வள்ளுவர் கூறுகிறார், "கண்ணீர் அன்பின் வெளிப்பாடு. அன்பு கொண்டவர்களுக்கு ஒரு துன்பம் வந்தால், உடனே நம் கண்ணில் நீர் வரும். ஐயோ பாவம் அவன்/அவள் எப்படி இதை தங்குகிரானோ/ளோ என்று மனதின் அடியில் இருந்து ஒரு கேவல் பிறக்கும். அதில் இருந்து வரும் கண்ணீர் , மனதில் உள்ள அன்பை காட்டிவிடும். அதை அடைத்து வைக்க முடியாது" என்கிறார். 


பாடல் 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_16.html


(Please click the above link to continue reading)



அன்பிற்கும் உண்டோ  = அன்பிற்கு உண்டா 


அடைக்கும்தாழ் = அடைத்து வைக்கும் தாழ்பாள் (இல்லை) 


ஆர்வலர் = மிகுந்த அன்பு கொண்டவர் 


புன் = துன்பம் கண்டு பிறக்கும் 


கணீர் = கண்ணீர் 


பூசல் தரும் = ஆராவரம் தரும். அறிவிக்கும் 


ஒருவர் மேல் செலுத்தும் அன்பு அதிகமானால் அதற்கு ஆர்வம் என்று பெயர். 


"அன்பீனும் ஆர்வம் உடைமை அது ஈனும் நண்பெனும் நாடாச் சிறப்பு " - குறள் 


அளவு கடந்த அன்பு. தாய்க்கு பிள்ளை மேல் உள்ள அன்பு போல, சில அழ்ந்த நட்பு போல்...ஆர்வம் உண்டானால் அதற்கு ஆர்வம் என்று பெயர். 


யார் மேல் ஆர்வம் உள்ளதோ, அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால், நமக்கு கண்ணீர் வரும். அதை அடைத்து வைக்க முடியாது. 


உண்மையான அன்புக்கு அடையாளம், கண்ணீர். 


அன்பின் அடையாளம் கூறப்பட்டது. 


மேலும் சிந்திப்போம். 




1 comment:

  1. புன் கணீர் என்றால், "நம் முகத்தில் உள்ள கண்" (அதாவது அகக்கண் அல்ல) என்று பொருள் என்று எண்ணியிருந்தேன்.

    "அன்பு அகத்தில் இருக்கிறது, அனால் புறத்தில் இருக்கும் கண்ணின் நீரில் அறிவிப்பு வந்து விடும்" என்று எண்ணியிருந்தேன். அது ஒருக்கால் தவறு போலும்.

    நன்றி.

    ReplyDelete