Monday, August 29, 2022

கந்தரனுபூதி - வளை பட்ட கை - பாகம் 3

       

 கந்தரனுபூதி -  வளை பட்ட கை - பாகம் 3


பாடல் 


வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/3.html


(Pl click the above link to continue reading) 


வளைபட்ட கைம் = வளையல் அணிந்த கைகள் 


மாதொடு = கொண்ட பெண்கள் 


மக்கள் = மக்கள் 


எனும் = என்ற 


தளைபட்டு  = விலங்கில் அகப்பட்டு 


அழியத் = அழிவது 


தகுமோ? தகுமோ? = சரியா, சரியா ?


கிளைபட்டு எழு = கிளை கிளையாக கிளம்பும் 


சூர் உரமும் = சூர பத்மனின் உறுதியும் 


கிரியும், = (மாயா) மலையும் 


தொளைபட்டு = துளைத்து 


உருவத் = உருவிக் கொண்டு வெளியில் செல்லும் 


தொடு வேலவனே. = வேலைத் தொடுத்தவனே 


அதாவது மனைவி மக்கள் என்ற பந்தத்தில் அகப்பட்டு அழிவது சரியா என்று முருகனைக் கேட்கிறார். 


இந்தப் பாடலில் உள்ள "தளைபட்டு அழிய" என்ற வார்த்தைகளை எடுத்துக் கொள்வோம். 


தளை படுதல், அழிதல் என்று இரண்டு இருக்கிறது. 


பெரிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், தலைவர்கள் போன்றோரை சிறையில் அடைத்தால் அவர்கள் என்ன செய்வார்கள். 


சிறையில் இருந்து கொண்டு படிப்பார்கள், எழுதுவார்கள். எத்தனையோ பெரிய பெரிய புத்தகங்கள், சிந்தனைகள் சிறைச் சாலையில் பிறந்ததுதான். 


சிறை என்று நினைத்தால், அது சிறை. .


எழுதக் கிடைத்த வாய்ப்பு என்று நினைத்தால், அது வாய்ப்பு. 


நான்கு சுவர்களும், சில பல கம்பிகளும், சில காவல்காரர்களும் சிறையை உண்டாக்கி விடாது. 


வீட்டிற்குள் இருந்து கொண்டே சிறையில் இருப்பது போல தனிமையில் வாடுபவர்கள் பலர்.


குடும்பம் சிறை அல்ல. அது ஆன்மீக வளர்சிக்கு ஒரு படிக்கல். அது புரியாவிட்டால் அது சிறைதான்.


எப்படி என்று பார்ப்போம். 


ஒரு சிறுவன் இருக்கிறான். வீட்டில் அம்மா ஏதோ பலகாரம் செய்கிறாள்.  அவனுக்கு அது பிடிக்கும். எடுத்து உண்கிறான். தம்பி தங்கைகளுக்கு வேண்டுமே என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைக்கிறான். 


சிறு பிள்ளை அப்படித்தான் நினைக்கும். 


வளர்ந்து பெரியவன் ஆகிறான். திருமணம் ஆகிறது. 


அதே பலகாரம் ஒரு உணவு விடுதியில் சாப்பிடுகிறான். "நல்லா இருக்கே...அவளுக்கு கொஞ்சம் வாங்கிக் கொண்டு போவோம்" என்று நினைக்கிறான். 


தன் மேல் மட்டும் இருந்த அன்பு, சற்று விரிந்து மனைவி மேலும் செல்கிறது. அவளுக்கு இந்த சேலை நன்றாக இருக்கும், அவளுக்கு இந்த உணவு பிடிக்கும் என்று அவளைப் பற்றி நினைக்கிறான். 


பின் சிறிது நாளில் பிள்ளை வருகிறது. 


பிள்ளை வளர்கிறது. 


அதே பலகாரம். ஒரே ஒரு துண்டுதான் இருக்கிறது. பிள்ளை ஓடி வருகிறான். "இங்க வாடா...இந்தா இதைச் சாப்பிட்டு பாரு" என்று தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று பிள்ளைக்குக் கொடுக்கிறான். பிள்ளையின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைக் கண்டு அவன் மகிழ்கிறான். 


அன்பு இன்னும் விரிகிறது. 


மனைவி, பிள்ளை, பேரப் பிள்ளை என்று அன்பு விரிந்து கொண்டே போகும். ஒரு காலகட்டத்தில், எந்தப் பிள்ளையைப் பார்த்தாலும் தன் பிள்ளையை பார்ப்பது போலவே இருக்கும். எந்த சின்னப் பிள்ளையைப் பார்த்தாலும் தன் பேரப் பிள்ளையை பார்ப்பது போல இருக்கும்.  தெருவில் ஒரு பிள்ளை கீழே விழுந்துவிட்டால் தன் பிள்ளை விழுந்தது போல ஒரு பதற்றம் வரும். 


அன்பு மேலும் விரிந்து குடும்பத்தைத் தாண்டி சமுதாயம் வரையில் பரவும். 


தனக்கு என்று இருந்ததை மனைவிக்கு, பிள்ளைக்கு, பேரப் பிள்ளைக்கு, மற்ற பிள்ளைகளுக்கு என்று கொடுக்கத் தோன்றும். அதில் இன்பமும் இருக்கும். 


துறவு என்றால் வேறு என்ன? துறப்பதில் இன்பம் காண முடியும். 


மனைவி மக்கள் மேல் அன்பு செலுத்தத் தொடங்கினால் அது மேலும் மேலும் விரிந்து துறவு, வீடு பேறு, இறைவன் வரை கொண்டு சேர்க்கும். 


அன்பு இல்லாவிட்டால் அது தளை தான். விலங்குதான். சுமைதான். 


இந்த மனைவி மக்கள் என்பது எப்போது தளை ஆகும்? அன்பு இல்லாவிட்டால். அன்பு இல்லாவிட்டால் அருள் பிறக்காது. அருள் இல்லாவிட்ட்டால் துறவு நிகழாது. பற்று விடாவிட்டால் இறை அனுபவம் நிகழாது. 


இப்படியே நான் கிடந்து அழியத் தகுமோ என்று அருணகிரிநாதர் கேட்பது, அன்பில்லாமல் கிடந்து அழிவது சரியா என்று கேட்கிறார். 


தளைதான். ஆனால், அதனால் அழிய வேண்டியது இல்லை. அந்த அன்பு பெருக அவனருள் வேண்டும் என்று முருகனை வேண்டுகிறார். 



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


)


 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


4. வளை பட்ட கை - பாகம் 1 & 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html


)


Sunday, August 28, 2022

திருவாசகம் - திரு அம்மானை - கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

     

திருவாசகம் - திரு அம்மானை  -   கல்லைப் பிசைந்து கனி ஆக்கி



முதலில் பாடலைப் படித்து விடுங்கள். பொருள் எல்லாம் அப்புறம் பார்க்கலாம். படிக்கும் போதே மனதை உருக்கும். பொருளைத் தாண்டி நேரே உணர்வைத் தொடும் பாடல்கள். 




பாடல் 


கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை,

வல்லாளன், தென்னன், பெருந்துறையான், பிச்சு ஏற்றி,

கல்லைப் பிசைந்து கனி ஆக்கி, தன் கருணை

வெள்ளத்து அழுத்தி, வினை கடிந்த வேதியனை,

தில்லை நகர் புக்கு, சிற்றம்பலம் மன்னும்

ஒல்லை விடையானை பாடுதும் காண்; அம்மானாய்!


வாழ்வின் ஓட்டத்தில் மனம் இறுகி விடுகிறது. துன்பங்கள், வெறுப்பு, கவலை, பயம், ஏமாற்றம், ஆசை எல்லாம் சேர்ந்து நம்மை அலைகழித்து நம் மனதை கல் போல ஆக்கி விடுகின்றன. 


எதை நம்புவது, ,யாரை நம்புவது என்று பயம். எல்லாவற்றிலும் ஒரு சந்தேகம். விடை காண முடியாத குழப்பங்கள். 


படித்து தெரிந்து கொள்ளலாம் என்றால் அதற்கு நேரம் கிடைப்பது இல்லை. 


என்னதான் செய்வது. திருவிழாவில் பெற்றோரைத் தொலைத்த பிள்ளை போல் கலங்கி நிற்கிறோம். 


அப்படித்தான் நின்றார் மணிவாசகர். இறைவன் எனக்கு அருள் செய்தான் என்கிறார். 


எப்படி?


"கல்வி அறிவு ஒன்றும் இல்லாத, நாயினும் கீழான என்னை, அவன் மேல் பைத்தியம் பிடிக்க வைத்து, கல் போன்ற என் மனதை கனி போல் மேன்மையாக்கி, அதை பிசைந்து, அவனுடைய கருணை வெள்ளத்தில் ஆழ்த்தி, என் முன் வினைகளை தடுத்து, என்னை ஆட்கொண்டான்" 


என்கிறார். 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


(pl click the above link to continue reading)




கல்லா மனத்துக்  = கல்வி அறிவு இல்லாத மனமுடைய 


கடைப்பட்ட = கீழான, தாழ்ந்த 


நாயேனை, = நாய் போன்றவனை 


வல்லாளன் = வலிமை மிக்கவன் 


தென்னன் = தென்னாடு உடையவன் 


பெருந்துறையான் = திருபெருந்துறையில் உறைபவன் 


பிச்சு ஏற்றி, = பித்தம் பிடிக்க வைத்து 


கல்லைப் பிசைந்து = கல் போன்ற என் மனதை பிசைந்து 


கனி ஆக்கி = கனி போல அதை மேன்மையாக்கி 


தன் கருணை = அவனுடைய கருணை என்ற


வெள்ளத்து அழுத்தி = வெள்ளத்தில் அழுத்தி , 


வினை கடிந்த = என்னுடைய வினைகளை அறுத்து 


வேதியனை, = வேதத்தின் தலைவனை 


தில்லை நகர் புக்கு = சிதம்பரத்தில் நுழைந்து 


சிற்றம்பலம் மன்னும் = சித்ற்றம்பலத்தில் நிலைத்து நிற்கும் 


ஒல்லை விடையானை  = விடை என்றால் எருது. ஒல்லை என்றால் விரைந்து. விரைந்து வரும் எருதின் மேல் அமர்ந்தவனை 


பாடுதும் காண்; அம்மானாய்! = அம்மானை பாட்டில் பாடுவோம் 


மணிவாசகர் அடிக்கடி தன்னை 'நாய்' என்று குறைத்துச் சொல்லுவார். நாய் நன்றி உள்ள பிராணிதானே. அதில் என்ன கேவலம்? 


அது அல்ல. 


நாம் எவ்வளவோ படிக்கிறோம். உயர்ந்த நூல்களை வாசிக்கிறோம். பெரியவர்கள் சொல்வதைக் கேட்கிறோம். அப்புறம் என்ன செய்கிறோம்? அதில் சொன்னபடி செய்வது இல்லை. மறுபடியும் மறுபடியும் நம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறோம். படித்ததால் ஒரு பலனும் இல்லை. 


நாயும் அப்படித்தான். எவ்வளவு தான் அதை கழுவி, குளிப்பாட்டி, உயர்ந்த உணவுகளை கொடுத்தாலும், சந்தர்பம் வந்தால் தெருவுக்கு ஓடும், கண்டதிலும் வாய் வைக்கும், இன்னொரு நாயைக் கண்டால் குலைக்கும். 


நம் உரிமையாளன் நமக்கு எவ்வளவு நல்லது செய்து இருக்கிறான். எப்படி சிறந்த உணவை நமக்கு தந்திருக்கிறான். நான் இந்த தெருவோரம் இருக்கும் அசிங்கத்தை உண்ணலாமா என்று அது நினைக்காது. அதன் இயற்கை அது. 


எனவேதான், அந்த குணம் பற்றி தன்னை நாய் என்று குறைத்துச் சொல்லுவார். 


இராமன் மிதிலைக்கு வருகிறான். ஊருக்கு வெளியில் உள்ள கோட்டையில் உள்ள கொடிகள் எல்லாம் இராமனைப் பார்த்து "பாற்கடலை விட்டு இலக்குமி இங்கு வந்து இருக்கிறாள்...நீ சீக்கிரம் வா" என்று அழைப்பது போல கை நீட்டி அழைப்பது போல காற்றில் அசைந்தன என்பார் கம்பர். 


"ஒல்லை வா" 

‘மை அறு மலரின் நீங்கி  யான் செய் மா தவத்தின் வந்து.

செய்யவள் இருந்தாள்’ என்று செழு மணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக் கடி நகர். கமலச் செங் கண்

ஐயனை. ‘ஒல்லை வா’ என்று    அழைப்பது போன்றது அம்மா!



"ஒல்லை விடையானை பாடுதும் காண் அம்மானாய்" 


"கல்லா மனத்து" என்பதை கல்வி அறிவு இல்லாத மனம் என்பதை விட கல் போன்ற மனம் என்று பொருள் சொல்வது சிறப்பாக இருக்கும். 


"நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக" என்பார் அருணகிரிநாதர். 


இறைவனை அடைய கல்வி ஒரு தடை. 


"கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்" என்று மணிவாசகரே பாடி இருக்கிறார். எனவே, கல்வி அறிவு இல்லாமல் இருப்பது ஒரு தடை இல்லை.


அறுபத்து மூன்று நாயன்மார்களில் இறைவனை வெகு சீக்கிரத்தில், ஆறே நாளில் அடைந்தவர் கல்வி அறிவு சற்றும் இல்லாத கண்ணப்ப நாயனார்.



வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லன்; மாது சொன்ன

சூளால் இளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து

நாலாரில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்; நானினிச் சென்று

ஆளாவது எப்படியோதிருக்காளத்தி அப்பனுக்கே


என்பார் பட்டினத்தார். 


"திருநீல கண்டத்தின் மேல் ஆணை, எம்மைத் தொடாதே" என்று சொன்னதால், கட்டிய மனைவியை தொடாமல் இருந்த திருநீலகண்ட நாயனார் ஒரு குயவர். 


"கல்வி எனும் பல் கடல் பிழைத்தும்" என்பார் மணிவாசகர். 


முதலில் சொன்னது போல் பொருள், உரை எல்லாம் விட்டு விடுங்கள் . 


பாடலைப் படித்துப் பாருங்கள். 


மனதை ஏதோ செய்யும். 


அப்படி எல்லாம் ஒன்றும் செய்யவில்லையே என்றால், இன்னும் காலம் வரவில்லை என்று அர்த்தம். 


வரும். 






(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி



Friday, August 26, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - அது சாலும்

      

 திருக்குறள் - அழுக்காறாமை -  அது சாலும் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 163: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து


)


நமக்கு துன்பம் எப்படி வருகிறது?


இயற்கை உபாதையால் வரலாம் - நோய், விபத்து, பொருளாதார சீர்குலைவு, போன்றவற்றால் நிகழலாம். 


அல்லது 


பகைவர்களால், எதிரிகளால், நமக்கு வேண்டாதவர்களால் நிகழலாம்.


இயற்கையை நாம் ஒன்றும் செய்ய முடியாது. மழை பெய்யும், பெய்யாமல் போகும், வெள்ளம் வரும், நில நடுக்கம் வரும்...அதை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.  எனவே, அதை விட்டு விடுவோம். 


இந்த எதிரிகள், பகைவர்கள் ..இவர்களை நாம் ஏதாவது செய்ய முடியும்.


முதலில், பகை வராமல் பார்த்துக் கொள்ளலாம். 


வந்துவிட்டால், சமாதானம் செய்து கொள்ளலாம்  அல்லது சண்டை போட்டு எதிரியின் வலிமையை ஒடுக்கலாம். 


நமக்கு எதிரியே இல்லை, பகையே இல்லை என்று வைத்துக் கொண்டால், நமக்கு துன்பமே வராதுதானே?


இல்லை என்கிறார் வள்ளுவர். 


"உனக்கு எதிரி இல்லாவிட்டால் கூட, பொறாமை என்ற ஒரு குணம் உனக்குள் இருந்தால், எதிரி செய்யும் அத்தனை துன்பத்தையும் அது தரும்" என்கிறார். 





பாடல் 


அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடுஈன் பது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_26.html


(Pl click the above link to continue reading)


அழுக்காறு = பொறாமை 


உடையார்க்கு = உள்ளவர்களுக்கு 


அதுசாலும் = அது போதும் 


ஒன்னார் = பகைவர் 


வழுக்கியும் = இல்லாவிட்டாலும் 


 கேடுஈன் பது = கேட்டினை தருவதற்கு 


பகைவன் என்ன செய்வான் ?


நம் செல்வதையும் நம்மையும் பிரித்து விடுவான். 


எப்படி?


ஒன்று, நம்மிடம் உள்ள செல்வத்தை திருடிக் கொள்ளலாம், ,அல்லது அடித்துப் பறிக்கலாம்.


அல்லது, நம்மை சிறை செய்து உள்ளே தள்ளிவிடலாம்.


எப்படியும் நமக்கு உள்ள இன்பங்களை அனுபவிக்க முடியாமல் செய்து விடுவான். தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பான். நிம்மதியாக இருக்க விடமாட்டான். 


பொறாமையும் அதையே செய்யும்.


நம்மிடம் ஆயிரம் சிறப்புகள் இருக்கும், பணம் இருக்கும், ஆரோக்கியம் இருக்கும், நட்பு, சுற்றம் எல்லாம் இருக்கும். இருந்தும், அடுத்தவனுக்கு நம்மை விட ஏதோ ஒன்று கூட இருந்து விட்டால் நம் சிறப்பு ஒன்றும் தெரியாது. 


என் மனைவி அழகுதான். என்று அடுத்தவன் மனனவி என் மனைவியை விட அழகாக இருக்கிறாள் என்று நினைக்கத் தலைப் பட்டேனோ, அன்றில் இருந்து என் மனைவியின் அழகு என் கண்ணுக்குத் தெரியாது. "எனக்குன்னு வந்து வாச்சுதே" நு எரிச்சல் படத் தோன்றும். 


யார் என்ன செய்தார்கள்? 


யாரும், ஒன்றும் செய்ய வில்லை. என் பொறாமை என் நிம்மதியை குலைத்து விடுகிறது. 


இங்கு உரையில் ஒரு நுட்பம் செய்கிறார் பரிமேலழகர் 


அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடுஈன் பது


என்பதில் "அதுசாலும்" என்று இருக்கிறது. 


பரிமேலழகர் "அதுவே சாலும்" என்று ஒரு ஏகாரத்தை சேர்க்கிறார். 


உன்னிடம் ஆயிரம் நல்ல குணங்கள் இருக்கலாம், ஆனால் பொறாமை என்ற ஒரு தீக்குணம் இருந்தால் அது ஒன்றே போதும், உனக்கு பகைவர்கள் செய்யும் தீங்கு அதனையும் அதுவே கொண்டு வரும் என்கிறார். 


"அதுவே" என்பதில் உள்ள ஏகாரம் பிரி நிலை ஏகாரம் என்று அழைக்கப்படும்.


பிரித்துக் காட்டுவதால். 


இராமன் நல்லவன் என்றால் இராமன் நல்லவன், மற்றவர்களும் நல்லவர்களாக இருக்கலாம் என்ற செய்தி அதில் அடங்கி இருக்கிறது. 


இராமனே நல்லவன் என்று சொன்னால். அவன் மட்டும்தான் நல்லவன் என்று அவனை மற்றவர்களில் இருந்து பிரித்துக் காட்டுவதால் அது பிரிநிலை ஏகாரம் என்று அழைக்கப்படும். .


தெரிநிலை தேற்றம் ஐயம் முற்று எண் சிறப்பு

எதிர்மறை எச்சம் வினா விழைவு ஒழியிசை

பிரிப்பு கழிவு ஆக்கம் இன்னன இடைப்பொருள்


என்பது நன்னூல் சூத்திரம் (421). இது "பிரிப்பு" என்பதன் கீழ் வருவது. 


நன்னூல் படிக்கலாம். ஆசைதான். காலம் போய்க் கொண்டே இருக்கிறதே. என்ன செய்ய? 


"இளமையில் கல்" என்று பாட்டி தெரியாமலா சொன்னாள்.



Wednesday, August 24, 2022

கந்தரனுபூதி - வளை பட்ட கை - பாகம் 2

      

 கந்தரனுபூதி -  வளை பட்ட கை - பாகம் 2 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html

 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


4. வளை பட்ட கை - 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html





)


பாடல் 


வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html


(Pl click the above link to continue reading) 


வளைபட்ட கைம் = வளையல் அணிந்த கைகள் 


மாதொடு = கொண்ட பெண்கள் 


மக்கள் = மக்கள் 


எனும் = என்ற 


தளைபட்டு  = விலங்கில் அகப்பட்டு 


அழியத் = அழிவது 


தகுமோ? தகுமோ? = சரியா, சரியா ?


கிளைபட்டு எழு = கிளை கிளையாக கிளம்பும் 


சூர் உரமும் = சூர பத்மனின் உறுதியும் 


கிரியும், = (மாயா) மலையும் 


தொளைபட்டு = துளைத்து 


உருவத் = உருவிக் கொண்டு வெளியில் செல்லும் 


தொடு வேலவனே. = வேலைத் தொடுத்தவனே 


அதாவது மனைவி மக்கள் என்ற பந்தத்தில் அகப்பட்டு அழிவது சரியா என்று முருகனைக் கேட்கிறார். 


நான் வாசித்தவரை, என் சிற்றறிவுக்கு எட்டிய வரை, உரை எழுதிய பெரியவர்கள் எல்லோரும் மேலே சொன்ன கருத்தை ஒட்டித்தான் எழுதி இருக்கிறார்கள். வேற்று கருத்துகள் இருப்பின் வாசகர்கள் பகிர்ந்து கொள்ளலாம். 


அருணகிரிநாதர் அனுபூதி பெற்ற மகான். 


மனைவி மற்றும் மக்களை ஒரு தளை (விலங்கு) என்று  சொல்லுவாரா? அப்படி பொருள் கொண்டால் என்ன செய்ய வேண்டும் ?ஒன்று திருமணம் செய்து கொள்ளக் கூடாது அல்லது திருமணம் ஏற்கனவே செய்திருந்தால் அதை விட்டு தப்பிக்க வேண்டும். 


திருமணம் ஆன ஆண்கள் எல்லோரும் அதை பின் பற்ற நினைத்தால் என்ன ஆகும்? 


அருணகிரியார் அப்படிச் சொல்லி இருப்பாரா? அதற்கு வேறு அர்த்தம் இருக்குமா என்று சிந்தித்தேன். 


முதலாவது, வளை பட்ட கை மாதொடு மக்கள் என்பது ஒரு ஆணின் பார்வையில் சொல்லப் பட்டது. அதையே ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து பார்த்தால் "கழல் பட்ட காலொடு மக்கள்" என்று சொல்லலாம். பெண்கள் தங்கள் கணவன்மாரை பிள்ளைகளை தளையாக நினைக்கலாம். அப்படி நினைத்து எல்லா பெண்களும் சன்யாசிகளாகி விட்டால் என்ன செய்வது? 


இரண்டாவது, பெண்கள் வேலைக்குப் போவது, பொருள் ஈட்டுவது என்பதெல்லாம் ஒரு நூற்றாண்டு கால சங்கதி. அதற்கு முன்னால் பெரும்பாலும் பெண்கள் வேலைக்குப் போவதில்லை. எனவே, அவர்கள் ஏதோ பாரம் போல ஒரு சித்திரம் தீட்டப் பட்டு இருக்கிறது. ஆண் தான் உழைக்கிறான், கஷ்டப்படுகிறான், பெண் சுகமாக வீட்டில் இருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்ற ஒரு தோற்றம் உருவாகிவிட்டது.   


அது சரி அல்ல. 


பெண் வேலைக்குப் போகவில்லை, யுத்தங்களில் ஈடு படவில்லை என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அவர்களின் இழப்பு மிக அதிகமானது. காதோரம் முதன் முதலில் ஒரு நரை முடி தோன்றியவுடன் பதறாத ஆண்கள் யார்? ஒரு முடிதான். அதை வெட்டி தூரப் போட்டுவிட்டாலும் மனம் கிடந்து குழம்பியதா இல்லையா?  பின் வெட்டி முடிக்க முடியவில்லை என்றால் சாயம் பூசுவது. தலை முடி கொட்டி வழுக்கை விழும் போது எவ்வளவு சங்கடம் வருகிறது. 


அதுவும் ஐம்பது வயதுக்கு மேல். 


இருபது வயதில் இளநரை வந்த வாலிபனைக் கேளுங்கள். வாழ்வே முடிந்துவிட்டது என்று சொல்லுவான். 


ஆனால், பெண்கள், மிக இளம் வயதில், பிள்ளை பெறும் பொழுது உடலின் கட்டுக் கோப்பை, இளமையை எவ்வளவு இழக்கிறார்கள். உடம்பில் அத்தனை பிடிமானங்களும் தளரும். தோல் தன் தன்மையை இழக்கும். இடுப்பு எலும்பு பிடி தளரும். மார்பகங்கள் கட்டு குலையும். 


ஒரு நரை முடிக்கே அந்தப் பதற்றம் என்றால், பெண்ணின் இழப்பை என்னென்று சொல்லுவது? சரி, ஒரு குழந்தையோடு முடியுமா என்றால் இல்லை. குடும்பக் கட்டுப்பாடு எல்லாம் இப்போதுதானே. காலம் காலமாக பிள்ளை பெற்றுக் கொண்டே இருந்தார்கள். எவ்வளவு இழக்க வேண்டி இருந்திருக்கும்? 


பிள்ளைகள் ஒரு தளை (விலங்கு) என்று சொல்வதானால் ஆண்களை விட பெண்கள்தான் அதை சொல்ல அருகதை உள்ளவர்கள். 


ஒரு புறம் பிள்ளைகளை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். இன்னொரு புறம் ஆணின் நாட்டம் அவள் பால் குறைய அவளுக்கு மன அழுத்தம் மேலும் அதிகமாகும். 


படிக்க முடியாது. 

வேலை பார்த்து சம்பாதிக்க முடியாது.

சாதித்து பேர் வாங்க முடியாது.

உடலை பேணி பாதுக்காக முடியாது.

செய்த வேலையையே வாழ்நாள் பூராவும் செய்து கொண்டிருக்க வேண்டும்



அவ்வளவு தியாகம் செய்யும் பெண்களை "வளை பட்ட கை மாதொடு மக்கள் எனும் தளை " என்று சொல்லுவது சரிதானா?


எப்படிப் பார்த்தாலும், அது சரியாக வரவில்லை. பின் அருணகிரியார் என்னதான் சொல்லி இருப்பார்?






இன்றைய பாடல் சற்று சிக்கலான பாடல். 


"மனைவி மக்கள் என்ற தளையில் (கை விலங்கு) பட்டு நான் அழிவது சரியா சரியா "


என்று அருணகிரிநாதர் கேட்கிறார். 


அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்ற பெரியவர்கள் பெண்களைப் பற்றி மிகக் கடுமையாக பாடியிருக்கிறார்கள். பெண்கள் ஏதோ பேய், பிசாசு போலவும், பிடித்தால் விடாது, மோக வலை, என்றெல்லம் பயமுறுத்தி இருக்கிறார்கள். 


எனக்கு இதில் மிக நீண்ட நாட்களாக ஒரு சங்கடம் உண்டு. 



பெண் என்பவள் மோசமானவளா? ஒரு ஆணின் ஆன்மீக முன்னேறத்திற்கு அவள் ஒரு தடையா?  அப்படி என்றால் பெண்ணின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒரு ஆண் தடையா? அப்படி யாரும் சொல்லி இருப்பதாகத் தெரியவில்லை. 


சரி, பெண் ஆன்மிக முன்னேறத்திற்கு ஒரு தடை என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். எந்தப் பெண்ணும் ஒரு ஆணை வலுக் கட்டாயாமாக திருமணம் செய்து கொள்வதில்லை. விலை மகளிர் கூட அவர்களே வலியச் சென்று எந்த ஆணையும் மயக்குவது இல்லை. ஆண்களே போய் அவர்கள் வலையில் விழுகிறார்கள்.  இன்பம் அனுபவிக்கிறார்கள்.பின் அந்தப் பெண்களை குறை கூறுகிறார்கள். இது எப்படிச் சரியாகும் ?


இன்னும் ஒரு ப் படி மேலே போவோம். பெண் என்பவள் ஆணை சம்சார பந்தத்துக்குள் இழுப்பவள் என்று வைத்துக் கொண்டால், பெண்ணை தவிர்த்து விட முடியுமா? தவிர்த்து விட்டால் உலகம் இயங்குவது எப்படி ? எல்லா ஆண்களும் நான் பட்டினத்தார், அருணகிரிநாதர் சொன்னபடி நடக்கப் போகிறேன். பெண் என்பவள் நம்மை இந்த பிறவிப் பெருங்கடலுள் அழுத்தும் ஒரு சக்தி. அதில் இருந்து விட பட வேண்டும் என்று ஓடி விட்டால், இந்த உலகம் நின்று விடாதா? நானும் நீங்களும் பிறப்பது எப்படி? வினைகள் தீர்வது எப்படி? 


சரி, பெண்ணாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்ளலாம். பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களையும் சேர்த்து தளை , விலங்கு என்று எப்படிச் சொல்வது? 


பெண்டாட்டி பிள்ளை வேண்டாம் என்றால், இல்லறமே கூடாது என்று ஆகி விடும். 


இல்லறமல்லது நல்லறம் அன்று சொன்னது தவறா? 


மாதொரு பாகனாய் ஈசன் நின்றது தவறா? 


"பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே" என்ற தேவாரம் பிழையா? 



என் தாயும், தாரமும், தமக்கையும், மகளும் பெண். அவர்கள் எல்லோரும் மோசமானவர்களா? 


பெண் என்பவள் எவ்வளவு இனிமையானவள். 


பத்து மாதம் சுமந்து பெறுகிறாள்.


பாலூட்டி, சீராட்டி வளர்கிறாள். 


மனைவியாக எவ்வளவு இன்பம். ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் இவளைப் போல வேறு ஒன்று இல்லை என்று வள்ளுவர் ஜொள்ளு விட வைக்கிறார். 


மகளாக, எவ்வளவு இன்பம். பெண் பிள்ளையை பெற்றவர்களுக்குத் தான் தெரியும் அந்த சுகம். 


தமக்கையாக. 


நண்பியாக. 


ஒரு ஆணின் எல்லா காலத்திலும் பின்னி பிணைந்து இருக்கும் பெண்ணை எப்படி வெறுத்து ஒதுக்க முடியும்? 


அப்படியே ஒதுக்கினாலும் அது செய்நன்றி மறந்த குற்றமாகாதா? 


ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே. எந்த வழியில் செல்வது?


ஒன்று அருணகிரிநாதர் சொல்வது சரி என்று ஏற்றுக் கொண்டு, பெண்கள் வலையில் விழாமல் அல்லது விழுந்து விட்டால் தப்பிவிட முயற்சிக்கலாம். 


அல்லது, அவர் சொல்வது சரி அல்ல என்று மேலே போய் விடலாம். 


எது சரி? அல்லது இதற்கு வேறு விளக்கம் ஏதாவது இருக்குமா?  


சிந்திக்க வேண்டிய விடயம் தானே?


சிந்திப்போம்.....

திருவாசகம் - திரு அம்மானை - தாய்போல் தலையளித்திட்டு

    

 திருவாசகம் - திரு அம்மானை  -   தாய்போல் தலையளித்திட்டு


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி



அவனும் அவளும் அவ்வப்போது பார்த்துக் கொள்வார்கள். சில நேரம் ஒரு சின்ன புன்னகை.  ஒரு நாள் தைரியமாக அவன் அவளிடம் சென்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான். அவர்கள் அடிக்கடி சந்திக்கிறார்கள்.பேசி, சிரித்து மகிழ்கிறார்கள். முதன் முதலாக அவன் அவள் கரங்களைப் பற்றுகிறான். அவளுக்குள் நாணம் ஒரு புறம், சந்தோசம் மறுபுறம், இதயம் பட பட என்று அடித்துக் கொள்கிறது. ரோமம் எல்லாம் சிலிர்கிறது. யாரும் பார்த்து விடுவார்களோ என்ற பயம் ஒரு புறம். சற்று நெருங்கி அமர்கிறார்கள்.....


அந்த நேரத்தில் அவள் அனுபவித்த அந்த உணர்வை சொல் என்றால் எப்படிச் சொல்வாள். எல்லாம் தெரியும், இருந்தும் ஒன்றும் சொல்ல முடியாது. தன் அனுபவம் தான் இருந்தும் சொல்ல முடியாது. 


இறை அனுபவமும் அப்படித்தான். 


மாணிக்கவாசகர் தவிக்கிறார். என்ன என்று சொல்லுவது, எப்படிச் சொல்வது, கடல் போன்ற இன்பம். அதை எப்படி வார்த்தைகளுக்குள் அடக்குவது? 


பாடல் தேனாக உருகி வருகிறது....


இறைவன் திருக்கருனையை நினைத்து நினைத்து உருகுகிறார் 


"வானில் உள்ள மால், அயன், இந்திரன் முதலிய தேவர்கள் எல்லாம் உன்னை அடைய பாடு படுகிறார்கள். அவர்களுக்கு காட்சி தராமல், கீழான என்னை ஒரு தாய் போல் அன்பு செய்து ஆண்டு கொண்டாய். என் உரோமங்கள் சிலிர்கிறது. புது உயிர் பிறந்தது போல இருக்கிறது. தேன் போல இனிக்கிறது. அமுதம் போல் இருக்கிறது. உன் திருவடிகள் எவ்வளவு ஒளி பொருந்தி இருக்கிறது. அந்தத் திருவடிகளைப் பாடுங்கள் அம்மானை ஆடும் பெண்களே" என்கிறார். 


பாடலைப் படித்துப் பாருங்கள். அந்த உணர்வு ஓட்டம் புரியும். 



பாடல் 



வான் வந்த தேவர்களும், மால், அயனோடு, இந்திரனும்,

கான் நின்று வற்றியும், புற்று எழுந்தும், காண்பு அரிய

தான் வந்து, நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு,

ஊன் வந்து உரோமங்கள், உள்ளே உயிர்ப்பு எய்து

தேன் வந்து, அமுதின் தெளிவின் ஒளி வந்த,

வான் வந்த, வார் கழலே பாடுதும் காண்; அம்மானாய்!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


(pl click the above link to continue reading)




வான் வந்த தேவர்களும் = வானில் உள்ள தேவர்களும் 


மால் = திருமாலும் 


அயனோடு = பிரமன் 


இந்திரனும் = இந்திரனும் 


கான் நின்று = காட்டில் நின்று (தவம் செய்து) 


வற்றியும் = உடல் வற்றி மெலிந்தும் 


புற்று எழுந்தும் = அவர்களைச் சுற்றி புற்று எழுந்தும் 


காண்பு அரிய = காண முடியாத 


தான் வந்து = (அவன்) தானே வந்து 


நாயேனைத் = நாய் போல கீழான என்னை 


தாய்போல் = ஒரு தாயைப் போல 


தலையளித்திட்டு, = அன்பு செய்து 


ஊன் வந்து = என் உடலில் புகுந்து 


உரோமங்கள் = உரோமங்கள் 


உள்ளே உயிர்ப்பு எய்து = உயிர் பெற்று 


தேன் வந்து = தேனைப் போல 


அமுதின் = அமுதத்தின் 


தெளிவின் = தெளிவைப் போல 


ஒளி வந்த = ஒளி பொருந்திய 


வான் வந்த = வானில் இருந்து வந்த 


வார் கழலே = வெற்றித் திருவடிகளை 


பாடுதும் காண்; அம்மானாய்! = பாடுவோம் அம்மானைப் பெண்களே 




Tuesday, August 23, 2022

கந்தரனுபூதி - வளை பட்ட கை

     

 கந்தரனுபூதி -  வளை பட்ட கை 


(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html

 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html



)



வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?

கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,

தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.



இன்றைய பாடல் சற்று சிக்கலான பாடல். 


"மனைவி மக்கள் என்ற தளையில் (கை விலங்கு) பட்டு நான் அழிவது சரியா சரியா "


என்று அருணகிரிநாதர் கேட்கிறார். 


அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்ற பெரியவர்கள் பெண்களைப் பற்றி மிகக் கடுமையாக பாடியிருக்கிறார்கள். பெண்கள் ஏதோ பேய், பிசாசு போலவும், பிடித்தால் விடாது, மோக வலை, என்றெல்லம் பயமுறுத்தி இருக்கிறார்கள். 


எனக்கு இதில் மிக நீண்ட நாட்களாக ஒரு சங்கடம் உண்டு. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html


(Pl click the above link to continue reading) 



பெண் என்பவள் மோசமானவளா? ஒரு ஆணின் ஆன்மீக முன்னேறத்திற்கு அவள் ஒரு தடையா?  அப்படி என்றால் பெண்ணின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு ஒரு ஆண் தடையா? அப்படி யாரும் சொல்லி இருப்பதாகத் தெரியவில்லை. 


சரி, பெண் ஆன்மிக முன்னேறத்திற்கு ஒரு தடை என்றே ஒரு வாதத்துக்கு வைத்துக் கொள்வோம். எந்தப் பெண்ணும் ஒரு ஆணை வலுக் கட்டாயாமாக திருமணம் செய்து கொள்வதில்லை. விலை மகளிர் கூட அவர்களே வலியச் சென்று எந்த ஆணையும் மயக்குவது இல்லை. ஆண்களே போய் அவர்கள் வலையில் விழுகிறார்கள்.  இன்பம் அனுபவிக்கிறார்கள்.பின் அந்தப் பெண்களை குறை கூறுகிறார்கள். இது எப்படிச் சரியாகும் ?


இன்னும் ஒரு ப் படி மேலே போவோம். பெண் என்பவள் ஆணை சம்சார பந்தத்துக்குள் இழுப்பவள் என்று வைத்துக் கொண்டால், பெண்ணை தவிர்த்து விட முடியுமா? தவிர்த்து விட்டால் உலகம் இயங்குவது எப்படி ? எல்லா ஆண்களும் நான் பட்டினத்தார், அருணகிரிநாதர் சொன்னபடி நடக்கப் போகிறேன். பெண் என்பவள் நம்மை இந்த பிறவிப் பெருங்கடலுள் அழுத்தும் ஒரு சக்தி. அதில் இருந்து விட பட வேண்டும் என்று ஓடி விட்டால், இந்த உலகம் நின்று விடாதா? நானும் நீங்களும் பிறப்பது எப்படி? வினைகள் தீர்வது எப்படி? 


சரி, பெண்ணாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்ளலாம். பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களையும் சேர்த்து தளை , விலங்கு என்று எப்படிச் சொல்வது? 


பெண்டாட்டி பிள்ளை வேண்டாம் என்றால், இல்லறமே கூடாது என்று ஆகி விடும். 


இல்லறமல்லது நல்லறம் அன்று சொன்னது தவறா? 


மாதொரு பாகனாய் ஈசன் நின்றது தவறா? 


"பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே" என்ற தேவாரம் பிழையா? 



என் தாயும், தாரமும், தமக்கையும், மகளும் பெண். அவர்கள் எல்லோரும் மோசமானவர்களா? 


பெண் என்பவள் எவ்வளவு இனிமையானவள். 


பத்து மாதம் சுமந்து பெறுகிறாள்.


பாலூட்டி, சீராட்டி வளர்கிறாள். 


மனைவியாக எவ்வளவு இன்பம். ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் இவளைப் போல வேறு ஒன்று இல்லை என்று வள்ளுவர் ஜொள்ளு விட வைக்கிறார். 


மகளாக, எவ்வளவு இன்பம். பெண் பிள்ளையை பெற்றவர்களுக்குத் தான் தெரியும் அந்த சுகம். 


தமக்கையாக. 


நண்பியாக. 


ஒரு ஆணின் எல்லா காலத்திலும் பின்னி பிணைந்து இருக்கும் பெண்ணை எப்படி வெறுத்து ஒதுக்க முடியும்? 


அப்படியே ஒதுக்கினாலும் அது செய்நன்றி மறந்த குற்றமாகாதா? 


ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறதே. எந்த வழியில் செல்வது?


ஒன்று அருணகிரிநாதர் சொல்வது சரி என்று ஏற்றுக் கொண்டு, பெண்கள் வலையில் விழாமல் அல்லது விழுந்து விட்டால் தப்பிவிட முயற்சிக்கலாம். 


அல்லது, அவர் சொல்வது சரி அல்ல என்று மேலே போய் விடலாம். 


எது சரி? அல்லது இதற்கு வேறு விளக்கம் ஏதாவது இருக்குமா?  


சிந்திக்க வேண்டிய விடயம் தானே?


சிந்திப்போம்.....

Monday, August 22, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - அல்லவை செய்யார்

     

 திருக்குறள் - அழுக்காறாமை - அல்லவை செய்யார்


(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


)


பொறாமை கொள்ளாதே என்று வள்ளுவர் சொல்கிறார்.  பொறாமை கொண்டால் என்ன ஆகும்? இன்னும் சொல்லப் போனால், கொஞ்சம் பொறாமை இருந்தால் தானே மற்றவர்கள் போல் நாமும் உயர முடியும்? அப்படிப் பார்த்தால் பொறாமை நல்லதுதானே? என்று கூட நாம் நினைப்போம். 


அது சரியல்ல. பொறாமை கொண்டால் இம்மைக்கு மட்டும் அல்ல மறுமைக்கும் துன்பம் தொடரும். எனவே, பொறாமை கொள்ளக் கூடாது என்கிறார். 


கீழே உள்ள குறளுக்கு பரிமேலழகர் செய்த உரை வியக்கத் தக்கது. 



பாடல் 

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html


(Pl click the above link to continue reading)



அழுக்காற்றின் = அழுக்காறு, அதாவது பொறாமை காரணமாக 


அல்லவை செய்யார் = அறன் அல்லாதவற்றைச் செய்யார் 


இழுக்காற்றின் = தவறானவற்றின் 


ஏதம் = துக்கம், துன்பம் 


படுபாக்கு = உண்டாவது 


அறிந்து = அறிந்து 


பொறாமை கொள்வதால் வரும் துன்பத்தை அறிந்து அறன் அல்லாதவற்றை செய்யக் கூடாது என்பது பொதுப் பொருள். 


இதில் பரிமேலழகரின் நுணுக்கம் ஆச்சரியமானது.


பொறாமை கொள்வதால் வரும் துன்பங்களை அறிந்து அறன் அல்லாதவற்றை செய்ய மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர். யார் செய்ய மாட்டார்கள் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு பதில் சொல்கிறார் பரிமேலழகர்.


"அறிந்து" என்று கூறியதால், அறிவுள்ளவர்கள் என்று உரை செய்கிறார். பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்று யாருக்குத் தெரியும்? அறிவு உள்ளவர்களுக்குத் தான் தெரியும். அது தெரியாமல் இருந்தால், அவன் அறிவற்ற மூடன் என்று பொருள். பொறாமை கூட நல்லதுதான் என்று யாராவது சொன்னால், அவன் அறிவு அவ்வளவுதான் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். 


"ஏதம்" என்றால் துன்பம்.துக்கம். சில அறிவிலிகள் சொல்லக் கூடும் "துன்பப் பட்டால்தானே சுகம் அடைய முடியும். வேலை செய்வது துன்பம் தான். அதற்காக வேலை செய்யாமல் இருக்க முடியுமா? எனவே,முதலில் துன்பம் வந்தால் என்ன, பின்னால் இன்பம் வந்தால் சரிதான்" என்று கூறக் கூடும். பரிமேலழகர் கூறுகிறார் "இம்மைக்கும் மறுமைக்கும் துன்பம் தரும்" என்று. 


பொறாமை கொண்டால் ஒரு நாளும் இன்பம் வராது. எனவே பொறாமை கொள்வதில் அர்த்தமே இல்லை என்கிறார். 


நான் என மனதுக்குள் பொறாமை கொண்டால் யாருக்கு என்ன? நான் என்ன யார் பொருளையும் திருடுகிறேனா? மற்றவர்கள் மேல் வசை பாடுகிறேனா? ஒன்றும் இல்லையே. என் மனதுக்குள் பொறாமை எழுகிறது. அதில் யாருக்கு என்ன கெடுதல் என்று கேட்கலாம். 


"அல்லவை செய்யார்" என்பதற்கு பரிமேலழகர் "அறன் அல்லாதவற்றைச் செய்யார் என்கிறார். அறன் அல்லாதது எது என்றால் பிறருக்கு மன, மெய், மொழிகளால் தீங்கு செய்தலும், நினைத்தலும் ஆம் என்கிறார். 


யார் மேல் பொறாமை கொள்ளக் கூடாது என்றால் "கல்வியாலும், செல்வத்தாலும் உயர்ந்தவர்கள் மேல்" என்கிறார். 


எவ்வளவு நுணுக்கமான உரை. எவ்வளவு ஆழமாக சிந்தித்து எழுதி இருக்கிறார்கள். 


நம் சொத்தின் மதிப்பு தெரியாமல் இருக்கிறோம்.