Monday, November 4, 2013

கந்தர் அநுபூதி - அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ ?

கந்தர் அநுபூதி -  அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ ?


எல்லாவற்றையும் அறிவால் அறிந்து  கொள்ள முடியுமா ? எல்லாம் தர்க்கத்தில் அடங்குமா ? அறிவால் அறிய முடியாதது என்று ஒன்று இருக்குமா ? அப்படி ஒன்று இருக்கும் என்பதை அறிவு அறியுமா ?

அதை அறிந்து கொள்ள முடியும் என்றால் அப்படி அறிவது எது ? அறிவா ?

வெறும் அறிவை மட்டும் கொண்டு அறியமுடியாது அது. அவன் அருள் இன்றி அவனை அறிய முடியாது என்கிறார்  அருணகிரி நாதர்.

பாடல்

முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே. 13

சீர் பிரித்த பின்

முருகன், தனிவேல் முனி, நம் குரு .. என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,

இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே.


பொருள்

முருகன் = முருகன்

தனிவேல் முனி = தனித்துவமான வேலைக் கொண்ட முனிவன்

நம் குரு = அவன் நமது குரு. நமக்குத் சொல்லித் தரும் யாருமே குரு தான். என்னை கேட்டால் google  ம், விக்கி பீடியாவும் நமக்கு குருதான். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பார் அருணகிரி. குருவாய் வந்து ஆண்டு கொண்டார் மணிவாசகரை.

என்று = என்று


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ = அருளின் மூலமே அறிந்து கொள்ள முடியும். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்

மிகச் சிறிய பொருள்களை சாதாரண கண்ணால் காண முடியாது. நுண்ணோக்கி (microscope ) வேண்டும். தூரத்தில் உள்ள பொருள்களை அறிய தொலை நோக்கி வேண்டும். அவனை அறிய அவன் அருள் வேண்டும். அததை அறிய அதற்குரிய உபகரணங்கள் வேண்டும்.


உரு அன்று = அது உருவம் உள்ளது அன்று. அப்படி என்றால் படங்களும், சிலைகளும் காண்பிப்பது அவன் உருவை அன்று. அவனுக்கு உருவம் இல்லை.

அரு அன்று = உருவம் இல்லாதது அருவம். அது அருவமும் அன்று.

உளது அன்று = உள்ளது அன்று

இலது அன்று = இல்லாததும் அன்று



இருள் அன்று, ஒளி அன்று = இருளும் அன்று, ஒளியும் அன்று

என நின்றதுவே = என நின்றது.

அது என்ன உரு அன்று, அரு அன்று, ஒளி அன்று, இருள் அன்று ...ஒரே குழப்பமாக  இருக்கறதே...

ஒரு குழப்பமும் இல்லை...ரொம்ப எளிதானது....

நம் உடலில் இடம் வலம் என்று இரண்டு பகுதிகள் இருக்கிறது அல்லவா ? அதில் குழப்பம் இல்லையே .

வலது எங்கே முடிகிறது ? இடது எங்கே ஆரம்பிக்கிறது ?

கை எங்கே முடிகிறது , விரல் எங்கே ஆரம்பிக்கிறது ?

நம்மால் சொல்ல முடியாது.

பகல் எந்த நொடியில் முடிந்து இரவு எந்த நொடியில் ஆரம்பிக்கிறது ?

சொல்ல முடியாது.

ஏன் சொல்ல முடியாது ?

வாழ்வில் நாம் காணும் பிரிவுகள் எல்லாம் பிரிவுகளே அல்ல. முழுமையான ஒன்றின் தொடர்ச்சிதான். நம் வசதிக்கு நாம் ஒன்றிற்கு வலது என்றும் மற்றதற்கு  இடது என்றும் பெயர் இட்டிருக்கிறோம். உடல் ஒன்று தான்.

நீங்கள் வலதும் இல்லை, இடதும் இல்லை. முன்னும் இல்லை பின்னும் இல்லை. நீங்கள் ஒன்றுதான்.

அருவமும், உருவமும் ஏதோ ஒன்றின் இரண்டு  முனைகள்.ஒரு முனை அருவம். ஒரு முனை உருவம்.

இரண்டும் இல்லை. இரண்டும் தான்.

உருவமும், அருவமும் ஏதோ ஒன்றின் வெளிப்பாடு.

அது வரை புரிகிறது.

அதற்கு மேல் புரிய அவன் அருள் வேண்டும் என்கிறார் அருணகிரி....


என்ன செய்யலாம் ?




1 comment:

  1. என்ன ஒரு அருமையான எளிமையான விளக்கம் ! மிக கடினமான பாடல்களுக்கு கூட எப்படி இவ்வளவு அருமையாக விளக்கம் முடிகிறது!? AMAZING THE POEM AS WELL AS YOUR COMMENTARY!

    ReplyDelete