Saturday, March 1, 2014

இராமாயணம் - ஏசுவான் இயம்பலுற்றான்

இராமாயணம் - ஏசுவான் இயம்பலுற்றான்


சில சமயம் மருத்துவர் நமக்கு மருத்துவம் செய்யும் போது, நமக்கு வலி தோன்றும். பல் பிடுங்கும் போது, எலும்பை சரி செய்யும் போது, அறுவை சிகிச்சை செய்யும் போது நமக்கு வலி இருக்கும். ஊசி குத்தும் போது வலிக்கும். வலிக்கும் போது மருத்துவர் மேல் கோபம் வரும். இருந்தாலும், அவர் நம் நன்மைக்கு செய்கிறார் என்ற நினைக்கும் போது அவர் மேல் அன்பும் பிறக்கும்.

வாளால் அறுத்து சுடினும் மருந்த்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் என்று பிரபந்தம் பேசுமே அது போல.

இராமன், வாலியை மறைந்து நின்று கொன்றான். இராமன் எய்த அம்பை வெளியே இழுத்து, அதில் "இராமன்"  என்ற பெயர் இருக்கக் கண்டான்.

நேரில் பார்க்கிறான். இராமன் நடந்து வருகிறான். அப்படி வந்தவனை " எண்ணுற்றாய்! என் செய்தாய்" என்று கேள்வி மேல் கேட்க ஆரம்பிக்கிறான்.

அந்த ஆரம்பத்தை கம்பன் சொல்லுகிறான்...."ஏசுவான் இயம்பலுற்றான்" என்றான்.

ஏசுதல் என்றால் திட்டுதல்.

அது என்ன இயம்புதல் ? ஏசுவான் , இயம்புவான் என்று இரண்டு சொல் போடுவானேன் ?

இயம்புதல் என்றால் பாராட்டுதல், போற்றுதல்,துதித்தல் என்று அர்த்தம்.

ஒரு புறம் போற்றுதல், மறு புறம் திட்டுகிறான்.

"ஐயோ, வலிக்குதே, உயிர் போகுதே " என்று ஒரு நோயாளி கத்துவதை பார்க்கும் போது என்னவோ மருத்துவர் அந்த நோயாளியை துன்பப் படுத்துவது போலத் தெரியும். அங்கு என்ன நடக்கிறது என்று முழுவதுமாக தெரிந்தவர்களுக்குத் தான் உண்மை புரியும்.  சிகிச்சை நடக்கிறது என்று தெரியாதவர்களுக்கு, ஏதோ தவறு நடப்பது மாதிரித்தான் தெரியும்.

பாடல்

கண்ணுற்றான் வாலி, நீலக் கார்
      முகில் கமலம் பூத்து,
மண் உற்று, வரி வில்
      ஏந்தி, வருவதே போலும் மாலை;
புண் உற்றது அனையசோரி
      பொறியொடும் பொடிப்ப, நோக்கி,
'எண்ணுற்றாய்! என் செய்தாய்!'
      என்று ஏசுவான் இயம்பலுற்றான்:

பொருள்

கண்ணுற்றான் வாலி = மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை கண்டான் வாலி

நீலக் = நீல நிற வானத்தில்  

கார் முகில் = கரிய மேகம் 

கமலம் பூத்து = தாமரை பூத்து

மண் உற்று = மண்ணில் வந்து

வரி வில் ஏந்தி = வில் ஏந்தி

வருவதே போலும் = வந்ததைப் போல

மாலை = திருமாலை

புண் உற்றது அனைய = உடம்பில் புண் ஏற்பட்டதைப் போல 

 சோரி = இரத்தம் பொங்கி வழிந்து

பொறியொடும் பொடிப்ப = கண்ணில் இருந்து பொறி பறக்க

நோக்கி = நோக்கி

'எண்ணுற்றாய்! = எண்ணத்தில் + உற்றாய் = எண்ணத்தில் நிறைந்தவனே 

என் செய்தாய்! = என்ன செய்து விட்டாய்

என்று = என்று

ஏசுவான் = திட்டுவான்

இயம்பலுற்றான் = போற்றி, துதித்து, சொல்லத் தொடங்கினான்.


1 comment:

  1. இயம்புவது என்றால் சும்மா "சொல்வது" என்ற பொருள் அல்லவா? "துதிப்பது" என்ற பொருள் உண்டு என்பதை இப்போதுதான் அறிந்தேன்.

    ReplyDelete